மார்ச் 11-ஆம் தேதி அதிகாலையில் மும்பை நகருக்குள் புகுந்தது, செங்கடல் ஒன்று. ஆம், மகாராஷ்டிராவின் நாசிக் நகரிலிருந்து புறப்பட்ட 30,000-க்கும் மேற்பட்ட விவசாயிகளது பேரணி மகாராஷ்டிராவின் சட்டமன்றத்தை முற்றுகையிடும் நோக்கில் மும்பை நகருக்குள் புகுந்தது. விவாசாயத்துக்கு வாங்கிய கடனை ரத்து செய் என்கிற முழக்கத்துடன் வலம் வந்த இந்த விவசாயிகள் பேரணி வழிநெடுக பல்லாயிரக்கணக்கான மக்களது ஆதரவோடு அசுர பலம் பெற்றது.

விவாசாயத்துக்கு வாங்கிய கடனை ரத்து செய் என்கிற முழக்கத்துடன் வலம் வந்த இந்த விவசாயிகள் பேரணி வழிநெடுக பல்லாயிரக்கணக்கான மக்களது ஆதரவோடு அசுர பலம் பெற்றது.
இந்த பேரணியில் வந்த விவசாயிகள் எவரும் பண்ணைகளோ, மிட்டாமிராசுகளோ அல்ல. சிறு நிலங்களுக்கு சொந்தக்காரர்கள். சொந்த பிழைப்புக்காக விவசாயம் தவிர வேறெதையும் அறியாதவர்கள். அந்த சிறு விவசாயத்துக்காக வங்கிகளில் சில ஆயிரங்கள் கடன் வாங்கி, திருப்பிக் கட்ட முடியாமல் ஜப்தி உள்ளிட்ட கொடுமைகளுக்கு ஆளானவர்கள். சுமார் 180 கிலோமீட்டர் தூரத்தை தேய்ந்த செருப்புகூட இல்லாமல் வெற்றுக்காலிலேயே கடந்தவர்கள். வெற்றுக்காலில் நடந்ததால் வெடித்துப்போன கால்களுக்கு மருத்துவம் பார்க்கக்கூட வசதி இல்லாதவர்கள்.
விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும்; சுவாமிநாதன் குழு பரிந்துரைகளை அமலாக்க வேண்டும், பல ஆண்டுகள் அனுபோகத்தில் இருக்கும் வனநிலங்களை சம்பந்தப்பட்ட விவசாயிக்கு மாற்றித் தரவேண்டும். விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதாரவிலையை வழங்க வேண்டும் போன்றவைதான் இவர்களது கோரிக்கைகள்.
விஜய் மல்லையா முதல் நீரவ் மோடி வரை பல்லாயிரம் கோடிகளை கடன் வாங்கிவிட்டு கம்பி நீட்டிய கார்ப்பரேட்டுகளை கவுரமாக நடத்துகின்ற அரசு, அற்பக்கடனை முறையாக தள்ளுபடி செய்யுங்கள் என்று கோரிய விவசாயிகளை எதிரியாகப் பார்த்தது. பல்லாயிரக்கணக்கான விவசாய நிலங்களையும், வனப்பகுதியையும் கார்ப்பரேட் முதலாளிகளுக்கு வாரிக்கொடுக்கின்ற அரசுதான், சொற்ப விஸ்தீரண நிலத்தை பாரம்பரிய விவசாயிக்கு உடமையாக்க மறுத்ததுடன், அவர்களை கிரிமினல்கள் போல நடத்தியது. டப்பா உணவுகளை கட்டுப்பாடின்றி இறக்குமதி செய்யவும், கொள்ளை இலாபத்துக்கு விற்கவும் அனுமதிக்கின்ற அரசுதான், கண்ணீரும், செந்நீரும் சிந்தி வளர்த்த விளைபொருளுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயிக்க மறுத்தது.

சுமார் 180 கிலோமீட்டர் தூரத்தை தேய்ந்த செருப்புகூட இல்லாமல் வெற்றுக்காலிலேயே கடந்தவர்கள். வெற்றுக்காலில் நடந்ததால் வெடித்துப்போன கால்களுக்கு மருத்துவம் பார்க்கக்கூட வசதி இல்லாதவர்கள்.
விவசாயிகளை விவசாயத்தை விட்டே விரட்ட வேண்டும் என்று கங்கணம் கட்டித் திரிகின்ற ஆளும் வர்க்கம் விவசாயிகள் பேரணியால் என்ன நடந்துவிடும் என்று இறுமாப்புடன் இருந்தது. ஆனால் நிலைகுலையா விவசாய பெருமக்கள் தங்களது உறுதிமிக்க செங்கொடி பேரணியால் மும்பை நகரை குலுக்கியவுடன் ஆளும் வர்க்கம் பதறிக் கொண்டு விழித்தெழுந்தது. விவசாயிகளது கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக எழுத்துபூர்வமாக உறுதியளித்தது, மகாராஷ்டிர அரசு.
இந்த வெற்றி பல செய்திகளைச் சொல்லுகிறது. ஏறக்குறைய இதே கோரிக்கைகளை முன்வைத்துதான் அய்யாக்கண்ணு என்பவர் தலைமையிலான விவசாயிகள் சங்கம் தலைநகர் டெல்லியில் பல நாட்கள், பல கட்டங்களாக போராட்டங்களை நடத்தியது. நிர்வாணப் போராட்டம் முதல் மலம் தின்னும் போராட்டம் வரை நீண்டன. பிரதமர் எங்களைச் சந்தித்து கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்பதே இவர்களது கோரிக்கையாக இருந்தது. இந்த கோரிக்கைகளை நிறைவேற்ற மக்களைச் சார்ந்தோ, பரந்துபட்ட விவசாயிகளை அணிதிரட்டியோ போராட்ட வியூங்களை அமைக்கவில்லை. தங்களது கோரிக்கை தனிப்பட்ட கோரிக்கை என்கிற வகையில் தான் முன்னெடுத்தனர். அதனால் தான் கடைசிவரை அய்யாக்கண்ணு குழுவினரால் வெற்றி பெற முடியவில்லை.
ஒரு தத்துவம் மக்களை பற்றிக் கொள்ளும்போது அது பெளதீக சக்தியாகிவிடுகிறது என்றார் பேராசான் காரல் மார்க்ஸ், மகத்தான ரசியப் புரட்சி முதல் சீனப்புரட்சி வரை மார்க்சின் கூற்றை நிரூபித்த உதாரணங்கள் ஏராளம். நமது சமகாலத்து அனுபவமாக ஜல்லிக்கட்டு போராட்டமும், நாசிக் விவசாயிகள் செம்படை பேரணியும் இருக்கின்றன. ஜல்லிக்கட்டு போராட்டத்தில் உடைந்தவை மண்டைகள். நாசிக் மும்பை பேரணியில் வெடித்து சிவந்தன, விவசாயிகளது கால்கள். ஆனாலும், இவையெல்லாம் பெருந்திரளான மக்களைச் சார்ந்தும், அணிதிரட்டியும் நடத்தப்பட்டன. அதனால், பெருந்திரளான மக்களுக்கு நம்பிக்கையை தருவதாகவும் அமைந்துவிட்டன. இன்று வெடித்த கால்கள் நாளை வெடிக்கப்போகின்ற மக்கள் எழுச்சிக்கு துவக்கமே!
நன்றி : புதிய தொழிலாளி – மார்ச் 2018