புதிய நவராத்திரி

இன்றைய நவீன பெண்கள் புதியமுறையில் நவராத்திரியை கொண்டாட ஆரம்பித்திருக்கிறோம். எங்கள் குடியிருப்பில் இருக்கும் பெண்கள் இந்த நவராத்திரியை புதுமையாகக் கொண்டாடினோம்.

பெண்கள் ஒன்றாகச் சேர்ந்து கூடிப் பேசும் நேரமே குறைவு. அதுவும் நவராத்திரியை உபயோகமாக செலுத்த வேண்டும் என்று எண்ணி சில கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டோம்.

பெண்கள் மனம் வைத்தால் புதியனவாக மாற்றுவோம். நவராத்திரியை கொண்டாடுவோம் – நீட்  தேர்வுக்கு போராடுவோம்.

இந்தமுறை நவராத்திரியை நான் சிறப்பாக கொண்டாடினேன்.  இம்முறை எங்கள் வீட்டுக் கொலுவில் “அம்பேத்கார் பொம்மையும், நீட் தேர்வுக்கெதிராக தன் இன்னுயிர் நீத்த அனிதாவை போன்ற ஒரு வரைபடமும்” சிறப்பான இடத்தைப் பிடித்தன. இவையிரண்டும் என் வீட்டிற்கு வந்த பெண்களின் கவனத்தை ஈர்த்தன. அதைப் பார்த்து சில பெண்கள் இது என்ன புதுமையாக வைத்திருக்கிறீர்கள் என்று கேட்டார்கள். அனிதா எதிர்கொண்ட இன்னல்களை என் வீட்டிற்கு வந்த பெண்களுடன் கலந்துரையாட இந்த நவராத்திரி உதவியாக அமைந்தது.

வீட்டிற்கு வந்த பெண்களுடன் வெட்டி பேச்சு பேசாமல் மற்றவர்களை பற்றி புறம் பேசாமல் சமூகத்தில் நடக்கும் பல பிரச்சினைகளை பற்றி பேச வாய்ப்பு கிடைத்தது.  புதிய கல்விக் கொள்கை பற்றி பேசினோம் அப்போது ஒரு பெண்மணி என் மகள் 5 வது படிக்கிறாள், அவளுக்கு கணக்கு சரியாக வரவில்லை அவள் எப்படி பாஸ் பண்ணுவது என்று தெரியவில்லை என்று கவலைப்பட்டு சொன்னார். அப்போது மற்றொரு பெண்மணி தமிழக அரசு மூன்று வருடம் விலக்கு அளித்து இருக்கிறார்கள் என்று கூறினார். அப்போது அந்தப் பெண் மூன்று வருடம் என்று கணக்கு வைத்துக் கொண்டால் என் மகள் 8ஆம் வகுப்பில் மாட்டிக் கொள்வாளோ !! அப்போது டியூஷன் வைத்து தான் ஆக வேண்டும்.  இது ஒரு கூடுதலான செலவு என்று சலிப்புடன் கூறினார்.  இன்னொரு பெண்மணி நாம் எவ்வளவோ பரவாயில்லை கிராமத்தில் படிக்கும் பெண்கள் மிகவும் சிரமப்படுவார்கள், பாதியில் கல்வியை நிறுத்தி விடுவார்கள், கல்யாணம் செய்து விடுவார்கள், வீட்டுவேலைகளை செய்ய சொல்லுவார்கள், பெண்கள் படிப்பு பாதியில் நின்று போய்விடும். இப்போதுதான் நாம் பெண்கள் முன்னேறிக் கொண்டிருக்கிறோம். இந்த புதிய கல்விக் கொள்கையின் மூலம் அதையும் தடுத்து விடுவார்களோ என்று  பேசிக்கொண்டோம்.

மற்றொருநாள் நீட் தேர்வைப் பற்றி விவாதித்துக் கொண்டிருந்தோம் அனிதா இறந்ததற்கு காரணம் நீட் தேர்வே தான்.  பணம் படைத்தவர்களுக்கு மட்டுமே மெடிக்கல் சீட் கிடைக்கும். ஏனென்றால் அவர்கள் கோச்சிங் சென்டர்க்கு சென்று பாஸ் ஆகி விடுவார்கள் என்று கூறினார். அப்போது மற்றொரு பெண்மணி இப்போது  புதிய டிரென்ட் ஆரம்பித்திருக்கிறார்கள், அதாவது பணம் செலவு செய்து ஆள்மாறாட்டம் செய்து நீட் தேர்வு எழுதி கொண்டிருக்கிறார்கள். இதைஇ கூறி முடிக்கும் முன், மற்றொரு பெண்மணி அம்பேத்கார் உருவத்தைப் பார்த்து இவர் இருந்திருந்தால் இதைப்போல் நடந்திருக்குமா? இப்போது இருக்கும் தலைவர்கள் யாரும் சரியில்லை, ஏழை மக்களுக்காக எதையும் செய்ய தயாராக இல்லை என்று கூறி முடித்தார்.

மற்றொருநாள் விவாதத்தில், குடிநீர் பிரச்சனைகள் பற்றி பேசினோம். மேலும் கைவினை  பொருட்களை வாங்க வேண்டும். இதனால் பல ஏழைகளின் வாழ்வாதாரத்திற்கு நாம் ஒரு விதத்தில்  உதவி செய்கிறோம். இன்னொரு பெண்மணி, ஒரு சுய தொழில் பெண்கள் குழு  இந்த மாதிரி மண் பொம்மைகளை செய்து விற்கிறார்கள், அவர்களிடம் வாங்கினால் அவர்களுக்கு நாம் உதவி செய்வது போல் இருக்கும் என்று கூறினார்.

தெருவோரம் விற்கும் பொம்மைகளை வாங்கினால் அவர்களுக்கு உதவிகரமாக இருக்கும் என்று, நான் ஒரு பெண்ணிடம் பொம்மை வாங்கச் சென்றேன், அப்போது அவர்  இந்த பத்து நாட்களுக்கு மட்டும் தான் இந்த தொழில் செய்ய முடியும், அதன் பிறகு பழையபடி நாங்கள் வீட்டு வேலை செய்ய சென்று விடுவேன்” என்று கூறினார். நவராத்திரியின் கடைசி நாள் பொறிகடலை, மஞ்சள், குங்குமம், மாவிலை எலுமிச்சம்பழம் இவைகளை வைத்து  என் கடையை  கொஞ்சம் மாற்றி அமைப்பேன். இதில் வரும் வருமானத்தை சேமித்து வைத்துதான் என் பிள்ளைகளுக்கு தீபாவளிக்கான புது துணிகள் வாங்குவேன் என்றும் கூறி தன் வாழ்நிலையை மிக எளிமையாகக் கூறினார்.

இன்னும் பல விவாதங்கள் நடந்தது. தெருமுனை டாஸ்மாக் பற்றியும், பெண்கள் பாலியல் வன்கொடுமை பற்றியும்  பேச வாய்ப்பு கிடைத்தது. இது மிகவும் ஆக்கப்பூர்வமான விவாதமாக இருந்தது.

என் வீட்டில், இந்த நவராத்திரியின் மூலம் நாங்கள்(பெண்கள்) வெற்றிலை,பாக்கு மட்டும் மாற்றவில்லை. எங்கள் எண்ணங்கள் மற்றும் கருத்துக்களையும் பகிர்ந்து கொண்டோம். இது எனக்கு  மற்றவர் மனதில் சிறிய விதைகளை விதைக்கும் ஒரு வாய்ப்பாக எனக்கு  அமைந்தது. அதனால் இந்த நவராத்திரி புதிய நவராத்திரியாக அமைந்தது.

பெண்களாகிய நாங்கள் நவராத்திரியை இப்போது சற்று மாற்றி அமைத்துக் கொண்டிருக்கிறோம். வரும் காலங்களில், நடைமுறையில் இன்னும் பல மாற்றங்கள் இருக்கும் என்ற நம்பிக்கையுடன் பயணிக்கிறேன்.

  • வாசுகி

Permanent link to this article: http://new-democrats.com/ta/navarathri-celebration-2019/

Leave a Reply

Your email address will not be published.

%d bloggers like this:
Read more:
ஆட்குறைப்பு அச்சுறுத்தலை எதிர்கொள்வது எப்படி – அனுபவங்கள்

சக ஊழியர்களுடன் இணைந்து பு.ஜ.தொ.மு (NDLF) ஐ.டி ஊழியர்கள் பிரிவில் சேர்ந்து சரியான முறையில் தொழிலாளர் துறையை அணுகிய ஊழியர்களுக்கு முழுமையாகவோ, பகுதியளவோ நிவாரணம் கிடைத்திருக்கிறது.

மருத்துவத் துறையை விழுங்கும் கார்ப்பரேட் கணினிகள்

நோயாளி மருந்துகளை ஒழுங்காக சாப்பிடுகிறாரா என்று கண்காணிப்பதற்கு ஏ.ஐ கியூர் (AiCure) என்ற செயலியை நேஷனல் ஹெல்த்கேர் இன்ஸ்டிட்யூட் உருவாக்கியிருக்கிறது. ஒரு ஸ்மார்ட் ஃபோனையும், கேமராவையும் பயன்படுத்தி...

Close