போக்கு வரத்து தொழிலாளர்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து வேளச்சேரி, டைடல் பார்க், எஸ்.ஆர்.பி, சோழிங்கநல்லூர், எல்காட், மேடவாக்கம் ஆகிய பகுதிகளில் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி – ஐ.டி ஊழியர்கள் பிரிவு சார்பாக போஸ்டர் ஒட்டப்பட்டது.
போக்குவரத்துத் தொழிலாளர்களின் போராட்டம் வெல்லட்டும்!
உழைக்கும் மக்களே!
- அரசின் வஞ்சகத்தால் வாழ்வுரிமை இழந்து போராடுகின்ற போக்குவரத்துத் தொழிலாளர்களின் போராட்டம் சரியானதே!
- அரசின் செயல்பாடுகள் போக்குவரத்துத் துறையை தனியார்மயமாக்குவதன் ஒரு பகுதி! கட்டண உயர்வை திணிப்பதற்கான சதி!
நமக்கு எதிரி போக்குவரத்துத் தொழிலாளர்கள் அல்ல, தகுதியிழந்த அரசு இயந்திரம்தான்!
- ஊழல், பென்சன் பணம் கொள்ளை, அதிகார முறைகேடுகளில் ஈடுபட்ட அதிகாரிகள் – அமைச்சர்களை செருப்பால் அடித்து விரட்டுவோம்!
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
இந்தப் போராட்டம் தொடர்பாக வாட்ஸ்-ஆப்பில் வந்த சில செய்திகள் கீழே
போக்குவரத்து தொழிலாளர்களின் நெஞ்சுரம் பாராட்டத்தக்கது
உயர்நீதி மன்றத்தின் ஒருதலைப் பட்சமான தலையீட்டினை துச்சமென மதித்து தமிழக வரலாற்றில் புதிய அத்தியாயம் படைத்து வருகின்றனர்.
இந்த சமயத்தில் தொழிற்சங்கத் தலைவர் சக்கரைச் செட்டியார் (கல்வியாளர் வே.வசந்திதேவி அவர்களின் தாத்தா) நினைவுக்கு வருகிறார். அன்றைய ஆங்கிலேய நீதிமன்றம் தொழிலாளர்களை வேலை நிறுத்தத்தை தூண்டினார் என்று அவருக்கு பெரும் பொருள் அபராதம் விதித்தது. அவர் சொன்னார் : “தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைக்காக வேலை நிறுத்தம் செய்தது தவறு என்றால் அக்காரியத்தை எத்துனை முறை வேண்டுமானாலும் செய்வேன். அபராதம் கட்ட என்னிடம் ஒன்றுமில்லை. வேண்டுமானால் எனது வேட்டி சட்டையை எடுத்துக் கொள்ளுங்கள். லங்கோடு (கோவணம் போன்ற உள்ளாடை) உடன் வெளியே போகிறேன்” என்றார்.
நீதிபதி அதிர்ந்து போனார்.
ஊதியம் போதவில்லை என்றால் வேறு வேலைக்கு போ என்று நீதிமன்றம் உத்தரவிடுவது ஒரு வகை வருணாசிரம தர்மம்தான் (!) (கோவலனின் தலையை) “கொன்று கொணர்க” என்று பாண்டிய நெடுஞ்செழியன் உத்தரவிட்டதற்கும் செவிலியர், 108 ஓட்டுநர், அரசு ஊழியர், போக்கு வரத்து ஊழியர் போராட்டங்களுக்கு நீதிமன்றங்கள் தடை விதிப்பதற்கும் ஒரு வித்தியாசமும் இல்லை.
……. போன்ற தொழிலாளர்களின் போராட்டங்களை ஒடுக்குவதற்கான நீதிமன்ற முயற்சிகள் இனியும் தொடரக்கூடாது. வலிமை மிக்க அதிகார சக்திகளிடமிருந்து நலிந்தவர்கள் காக்கப்படுவார்கள் என்ற நம்பிக்கை தளர்கிறது. வேறு வேலைக்குப் போ என்றால் தொழிலாளர் சட்டங்கள் எல்லாம் பொருளற்றுப் போய் விட்டனவா என்ற அச்சம் எழுகிறது.
இந்த சமயத்தில் பொதுமக்கள் தங்களது ஆதரவினை போராடும் போக்குவரத்து தொழிலாளருக்குத் தெரிவிக்க வேண்டும். அவர்களிடம் அரசு பிடித்தம் செய்து செலவு செய்து விட்ட 7000 கோடி ரூபாயை திருப்பித் தர வேண்டும் என்பதற்காக மட்டுமல்ல.
- சென்னை 2015 பெருமழையில் தனியார் வாகனங்களெல்லாம் பதுங்கிக் கொண்ட போது “சிங்கிள் டீ” கூட சாப்பிடாமல் அரசு பேருந்தை ஓட்டினார்களே!
அதற்காக. - பண்டிகை , விழாக் காலங்களில் குடும்பத்துடன் களிக்காது பேருந்தை ஓட்டுகிறார்களே!
அதற்காக .
தனியார் பேருந்துகள் இன்று 20 ரூபாய் கட்டணத்திற்கு 100 ரூபாய் என கொள்ளை என செய்தி வருகிறது. தனியார்மயத்தின் கோர முகமே இதுதான்!
- சில பத்தாண்டுகளுக்கு முன்பு குஜராத் பிளேக் கொள்ளை நோயால் பாதிக்கப்பட்டிருந்த போது அச்சத்தில் மக்கள் நகரை விட்டு வெளியேற முற்பட்ட போது தனியார் பேருந்துகள் விமானக் கட்டணம் அளவுக்கு பீதியடைந்த மக்களிடம் வசூலித்தன.
- என்ரான் மின் நிறுவனம் மகாரஷ்டிரா மின் நிறுவனத்தை ஓட்டாண்டி ஆக்கிவிட்டு வெளியேறியது.
- ஒரிசா புயல் பாதிப்பில் மின் கம்பங்கள் சாய்ந்த போது இது பற்றி எல்லாம் ஒப்பந்தத்தில் சொல்லவில்லை என்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு துரோகம் செய்தது.
ஆனால், சமீபத்திய ஒக்கி புயல் பாதிப்பை சரி செய்து மின் விநியோகத்தை சீர் செய்ய தமிழக மின்சார ஊழியர் அனைவரும் குமரியில் பணி செய்தனர்.
தமிழகமே சென்னையில் வேலை செய்கிறது. அத்தொழிலாளர்கள் பண்டிகைக் காலங்களில் ஊர் திரும்பும்போது தனியார் பேருந்துகள் பகற்கொள்ளை அடித்தன. பொதுமக்களின் முறையீட்டிற்கு பின்னர் இன்று அரசு பேருந்துகள் பண்டிகைக் காலங்களில் நியாயமான, உரிய கட்டணத்தில் அவர்களை சொந்த ஊர் சேர்க்கின்றன.
இத்தகைய பொதுத் துறைகள் வாழ வேண்டும். அதன் ஊழியர்களுக்கு நியாயமான ஊதியம் வழங்கப்பட வேண்டும்.
பொதுத் துறை வாழ்ந்தால் லட்சம் பேர் வாழ்வர். தனியார் துறை ஆதிக்கம் என்றால் ஒரு சிலரே செல்வத்தைக் குவிப்பர்.
நேற்றைய news 18 தொலைக்காட்சி விவாதத்தின் போது பத்திரிகையாளர் அய்யநாதன் சொன்னார்..
போக்குவரத்து தொழிலாளர்களின் போராட்டத்தை தமிழக அரசு கையாளும் முறை சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. 2.57% ஊதியஉயர்வுக்கு வெறும் O.13% தான் பாக்கி உள்ளது. இதைச் செய்யாமல் பொங்கல் நேரத்தில் தொழிலாளர்களை போராட்டத்துக்கு தள்ளுவது அரசுப் பேருந்தின் மீது மக்களின் அதிருப்தியை ஏற்படுத்தி தனியார்மயத்துக்கு வழி வகுப்பதற்கே என்றார்.
1945-ல் பம்பாய் கப்பல் படை எழுச்சி . ஆங்கிலேயர் உத்தரவுக்கு கட்டுப்பட மறுத்தனர் இந்திய கப்பல் படை தொழிலாளர்கள். ஆங்கிலேயர்கள் நடுக்கடலிலேயே கப்பலை நிறுத்தி அவர்களுக்கு அன்ன ஆகாரம் வழங்காமல் பட்டினி போட்டனர். பம்பாய் மக்கள் ஆங்கிலேயருக்கு தெரியாமல் கடலில் நீந்திப்போய் அவர்களுக்கு உணவளித்தனர்.
இதனால் தான் சர்ச்சில் சொன்னார் : “நாம் வெடிகுண்டின் மீது அமர்ந்திருக்கிறோம். இனியும் இந்தியாவுக்கு சுதந்திரம் அளிப்பதை தள்ளிப் போட முடியாது” என்று.
போக்குவரத்து தொழிலாளர்கள் நமது சொந்த சகோதரர்கள். மெரினா / சல்லிக்கட்டுப் புரட்சியில் தமிழகமே ஒரு கோரிக்கைக்காக ஒரு மனிதனாக எழுந்தது. அது பண்பாட்டுப் புரட்சி. போக்குவரத்து தொழிலாளர்களின் போராட்டத்திற்கும் தமிழ்ச் சமூகம் தமது சகோதரத்துவ உணர்வை, ஒருமைப் பாட்டை காண்பிக்க வேண்டும்.
அவர்களின் நியாயமான போராட்டம் காயடிக்கப்படக் கூடாது.