முந்தைய ஆண்டுகளைப்போலவே தான் கடந்த 2018 ம் ஆண்டும் நம்மை கடந்து சென்றிருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். குறிப்பாக உலகின் மிகப்பெரிய ‘ஜனநாயக நாடு’ என்று உலக நாடுகளால் ‘கண்டறியப்பட்ட’ நம் இந்தியத் திருநாட்டின் இந்த அரசு, அரசாங்கம், அரசமைப்பு என்பது நம் மக்களுக்கு மேலும் மேலும் உபத்திரவத்தை கொடுத்துக்கொண்டிருக்கிறதே ஒழிய, அவை எந்த பலன்களையும் மக்களுக்கு ஏற்படுத்தவில்லை என்பதை வழக்கம்போல் நமக்கு உணர்த்தியுள்ளது என்பதுதான்.
ஆண்மையற்றவன் தன் மீதான குறையை மறைப்பதற்காக, தான் கட்டிய மனைவியை சித்ரவதை செய்வதன் மூலம் அப்பெண்ணின் வாயை அடைப்பது போல, ஆள அருகதை இழந்த இந்த முதலாளித்துவ அரசமைப்பானது தான் தோற்றுவிட்டோம் என்பதை மறைக்க அன்றாடம் மக்களை அடக்கி ஒடுக்கி வருகிறது என்பதை கடந்த 2018-ம் ஆண்டு மேலும் உக்கிரப்படுத்தி தூத்துக்குடி ஸ்டெர்லைட் என்ற கார்ப்பரேட்டிற்கு 14 பேரின் உயிரைக்கொன்று தனது விசுவாசத்தை பறைசாற்றியது ஒரு சிறிய உதாரணம்.
அரசின் அடக்குமுறைகள் தொடர்ந்தாலும் உழைக்கும் மக்களின் போராட்டங்களும் தொடர்கின்றன, அதேபோல சில முக்கிய நிகழ்வுகளும் சம்பவங்களும் பேரிடர்களும் வரலாற்றில் இடம்பெற்றுவிட்டன என்பதையும் குறிப்பிட வேண்டும்.
- பல்வேறு மாநிலங்களை சேர்ந்த தொழிற்சங்கங்கள் (IFTU, NTUI , All ECLC W & E U) ஒன்றிணைந்து நமது புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி (NDLF) தலைமையில் சென்னையில் நடத்தப்பட்ட ‘காண்டிராக்ட் முறைக்கு முடிவு கட்டு ! முதலாளித்துவத்துக்கு சவக்குழி வெட்டு’ கருத்தரங்கமும் மாநாடும் குறிப்பிடத்தக்கது.
- பல்வேறு மாநிலங்களில் நிகழ்த்தப்பட்ட ‘சாதிய ஆணவ படுகொலைகள்’. அதை கண்டும், காணாதது போல கடந்து செல்லும் வேறு சாதி அல்லது உயர் சாதி என்ற கொடிய விஷ கருத்தை தன்னுள்ளே சுமந்து திரியும் அதே மனித இனம்.
- சமூக வலைத்தளங்களில் பணியிடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் வக்கிரங்களுக்கு எதிராக டத்தப்பட்ட ‘MeToo ‘ இயக்கம்..
- ஹீலர் பாஸ்கர் வகையறாக்களின் வழியை பின்பற்றி வீட்டிலேயே தன் மனைவிக்கு பிரசவம் பார்த்து உயிரை பலிக்கடா ஆக்கிய முட்டாள்தனம் நிறைந்த துயர சம்பவங்கள்.
- அரசுப்பேருந்து ஊழியர்களுக்கு கிடைக்கவேண்டிய ஊதியம் மற்றும் பென்ஷன் போன்றவற்றை கபளீகரம் செய்ததை ஈடுகட்ட, பேருந்து கட்டணத்தை உயர்த்தி மக்களின் மேல் மேலும் சுமையை ஏற்றியது.
- ‘வரி விதித்தால் விலை குறையும்’ என்ற புதிய அறிவியல் கோட்பாட்டை கண்டுபிடித்து அதனை GST மூலம் நிறைவேற்றி காட்டிய மத்திய அரசு.
- கேரள வெள்ளத்தால் ஏற்பட்ட மக்களின் துயரம். உதவி செய்தமைக்காக கேரள அரசிற்கு மத்திய அரசால் அனுப்பிய ‘Bill ‘ தொகை, அதைவிட துயரம்.
- இவை எல்லாவற்றையும் விட தஞ்சை, புதுகை, திருவாரூர் மாவட்டங்களில் ‘கஜா’ புயல் ஏற்படுத்திய பேரிடர். கிட்டத்தட்ட ஒன்றரை மாதங்கள் இருட்டில் அவதியுற்ற மக்கள், நிவாரணம் வரவை நோக்கி காத்திருக்கிறார்கள் – 16 வயதினிலே படத்தில் சப்பாணிக்காக காத்துக்கொண்டிருக்கும் மயிலை போல.
- தூசான், ராயல் என்ஃபீல்ட், யமஹா நிறுவன ஊழியர்களின் உறுதிமிக்க போராட்டங்களின் வெற்றி வரலாறு.
ஐ. டி. துறையில் நடந்து வரும் சட்டவிரோத கட்டாய பணி நீக்கத்திற்கு எதிரான நமது பு. ஜ. தொ. மு. ஐ. டி. ஊழியர்கள் பிரிவு நடத்தி வரும் சட்ட போராட்டங்களும், சங்கத்தின் தலைவர் சியாம் எழுதி நமது சங்கத்தால் வெளியிடப்பட்ட “ஐ. டி. ஊழியர்களின் வாழ்க்கை: ஜாலியா? பிரச்சினையா?” புத்தகமும் குறிப்பிடத்தக்கது.
கடந்த கால நிகழ்வுகளையும் சம்பவங்களையும் அனுபவங்களாக எடுத்துக்கொண்டு இனிவரும் காலங்களில் நமது பணிகளை தொடர்ந்து செய்து வருவோம்.
புதிய 2019 வருடத்தில் நமது சங்கத்திற்கான முதல் மாதாந்திர கூட்டம் வரும் சனிக்கிழமை (26 – ஜனவரி – 2019 ) அன்று நடைபெற இருக்கின்றது, அவ்விதம் சங்க உறுப்பினர்களும் ஐ. டி. ஊழியர்களும் BPO ஊழியர்களும் தவறாது கலந்து கொண்டு விவாதத்தை செழுமைப் படுத்தி சங்கத்தின் வளர்ச்சிக்கு உதவுங்கள்.
இந்த மாதம் நாம் விவாதிக்கவிருக்கும் தலைப்புக்கள் அல்லது நிகழ்ச்சி நிரல்
தேதி: 26-Jan-2019
நேரம்: 4 PM
இடம்: பெரும்பாக்கம்
- ‘நாம் அளிக்கும் வாக்குகளும் அவர்கள் கொடுக்கும் வாக்குறுதிகளும்!’
பன்றி தொழுவமும் வர இருக்கும் பாராளுமன்ற தேர்தலும் – விவாதம். - ஜனவரி 8,9 தேதிகளில் நடந்த அகில இந்திய தொழிலாளர் வேலை நிறுத்தம் அனுபவம் படிப்பினை.
- சங்க அறிக்கை வாசிப்பும் சங்க செயல்பாடுகள் பற்றிய விவாதமும்.
இப்படிக்கு
ராஜதுரை, பொருளாளர்,
பு.ஜ.தொ.மு – ஐ.டி ஊழியர்கள் பிரிவு