அன்பார்ந்த சங்க உறுப்பினர்களே,
2017-ம் ஆண்டில், நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களின் உறுதிமிக்க செயல்பாடுகள் மூலமாகவும், சட்டப் போராட்டங்களின் வாயிலாகவும், ஐ. டி. ஊழியர்களின் உரிமைகளை நிலைநாட்டுவதில் NDLF IT Employees Wing குறிப்பிடத்தக்க வெற்றிகளை ஈட்டியது. துண்டறிக்கை, போஸ்டர், இணைய பிரச்சாரம், சங்கக் கூட்டங்கள், ஆர்ப்பாட்டம், அரசு அதிகாரிகளிடம் முறையிடல் ஆகியவற்றின் மூலம் பல்வேறு புதிய அனுபவங்களையும், படிப்பினைகளையும் நாம் கற்றுக் கொண்டோம். செய்த பணிகளில் இருந்த குறைபாடுகளையும் செய்யத் தவறியவற்றையும் பரிசீலித்து வரும் ஆண்டில் புதுப்பித்துக் கொள்ள உறுதி பூண்டுள்ளோம்.
ஐ.டி. ஊழியர்களின் பணி பாதுகாப்பு, வேலை நேரம், பணிச் சுமை போன்ற பிரச்சினைகளுக்காக மட்டுமின்றி ஐ.டி ஊழியர்கள் உள்ளிட்டு சமூகத்தின் அனைத்துத் தரப்பினரையும் பாதிக்கும் பல்வேறு அரசியல் பிரச்சினைகளுக்காகவும் நமது சங்கம் குரல் கொடுத்து வருகிறது.
குறிப்பாக விவசாயிகள் எதிர்கொள்ளும் நெருக்கடி பற்றி பிரச்சார இயக்கம் மேற்கொள்ளப்பட்டது. மேலும், மருத்துவ படிப்புக்கான சேர்க்கைக்கு நாடு தழுவிய அளவில் ‘நீட்’ நுழைவுத் தேர்வு என்ற அடக்குமுறையை எதிர்த்து மாணவி அனிதா மரணத்தைத் தழுவியதைத் தொடர்ந்து “நீட்”-ஐ எதிர்த்து கண்டன கூட்டம் நடத்தப்பட்டது. கூட்டத்தில் “நீட்” தேர்வின் பின்னால் உள்ள கார்ப்பரேட், இந்துத்துவ அரசியலையும், மோடி அரசின் சூழ்ச்சிகளையும், அதனால் நடுத்தர மற்றும் ஏழை மக்களுக்கு குறிப்பாக தமிழக மக்களுக்கு ஏற்படப்போகும் பாதிப்புகளையும் விளக்கி உரைகள் நிகழ்த்தப்பட்டன.
அது போல, நமது ஐ.டி. துறையில் ஊழியர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை மேலோட்டமாக பார்க்காமல், அவற்றின் பின் இருக்கும் கார்ப்பரேட்டுகளின் லாப நோக்கத்தை புரிந்து கொள்ளும்படியான விவாதங்கள் நடத்தப்பட்டன, பதிவுகள் வெளியிடப்பட்டன. தொழிலாளர் துறை, நீதிமன்றங்கள், அரசியல்வாதிகள் அடங்கிய இந்த அரசமைப்பு யாருடைய நலனுக்காக செயல்படுகிறது என்ற கேள்வி எழுப்ப வேண்டியதன் அவசியத்தை சென்ற ஆண்டு அனுபவங்கள் நமக்கு உணர்த்தின. உழைக்கும் மக்கள் நலனை பலி கொடுத்து கார்ப்பரேட்டுகளுக்கு சேவை செய்யும் அரசை கேள்விக்குள்ளாக்கி, நமது உரிமைகளை போராடி பெறுவதுதான் வழி என்று புரிய வைத்தன.
மேலும் மேலும் தீவிரமடைந்து வரும் பொருளாதார நெருக்கடியும், அரசியல் நிச்சயமின்மையும், அதனோடு கூட வரும் அரசு அடக்குமுறை, சாதி மத வெறி பிரிவினைகளும் இந்த ஆண்டை மேலும் சவாலானதாக ஆக்குகின்றன. இந்தச் சூழலில் 2018-ம் ஆண்டில் நமது சங்கத்தின் முதல் கூட்டம் வரும் ஜனவரி 20-ம் தேதி மாலை 3 மணியளவில் பெரும்பாக்கத்தில் நடைபெற உள்ளது.
அதில் கீழ்க்கண்ட தலைப்புகளிலும் சங்க நடவடிக்கைகளைப் பற்றியும் விவாதிக்க உள்ளோம். உறுப்பினர்கள் தவறாது கலந்துகொண்டு, சங்கத்தின் வளர்ச்சிக்காக தங்களது பங்களிப்புகளை செய்ய உளமாற முன்வர வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
- அரசு போக்குவரத்து ஊழியர்கள் போராட்டமும் – நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற முடியாமல் திவாலாகிப் போன அரசமைப்பும்
- வெரிசான் வேலைநீக்க நடவடிக்கை – நாம் செய்ய வேண்டியது என்ன?
- சென்ற மாத சங்க நடவடிக்கைகள்
இங்ஙனம்,
R. சுகேந்திரன், செயலாளர்.
NDLF IT Employees Wing