புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி – ஐ.டி ஊழியர்கள் பிரிவு மாதாந்திர சங்கக் கூட்டம் கடந்த 17-ம் தேதி சனிக்கிழமை மாலை நடந்தது. அதில் கட்டாய பணிநீக்கத்துக்கு எதிரான 2A வழக்குகள் பற்றிய விபரங்களும், 2K பிரிவின் கீழ் ஊழியர்கள் தங்கள் உரிமைகளை எப்படி பாதுகாத்துக் கொள்ளலாம் என்பது பற்றியும், நிறுவனத்தில் ஊழியர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் தொடர்பான கேள்வி பதில் விவாதமும் நடைபெற்றது.
- ஆட்குறைப்புக்கு எதிராக தொழில் தகராறு சட்டம் 1947 பிரிவு 2A-ன் கீழ் நீதிமன்றத்தில் வழக்கு தாக்குதல்
எம்ஃபசிஸ் நிறுவனத்தைச் சேர்ந்த ஊழியர் தொழிலாளர் துறையில் தாக்கல் செய்த தொழில் தாவாவில் சமரச பேச்சு வார்த்தை முறிவு அறிக்கை பெறப்பட்டு, அதன் அடிப்படையில் தொழிலாளர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. நீதிமன்றத்திலிருந்து நிறுவனத்துக்கு நோட்டிஸ் அனுப்பப்பட்டுள்ளது. - எச்.சி.எல் நிறுவனத்தைச் சேர்ந்த ஊழியரின் தொழிற்தாவா சமரச பேச்சு வார்த்தை முறிவைத் தொடர்ந்து அந்நிறுவனத்தின் மீதும் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
- விப்ரோவைச் சேர்ந்த 3 ஊழியர்கள் கட்டாய பணி நீக்கத்துக்கு எதிராக தாக்கல் செய்திருந்த மனுக்கள் மீது சமரச பேச்சு வார்த்தை முறிவு அறிக்கை பெறப்பட்டுள்ளது. தொடர்ந்து நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்வதற்கான தயாரிப்புகள் சங்க வழக்கறிஞர் மூலமாக செய்யப்பட்டு வருகின்றன.
இதைத் தொடர்ந்து புதிய உறுப்பினர்களுக்காக தொழில் தகராறு சட்டம், பிரிவு 2a (தனிப்பட்ட ஊழியர் தாக்கல் செய்யும் தொழில் தாவா), பிரிவு 2k (தொழிற்சங்கம் மூலமாக கூட்டாக தாக்கல் செய்யும் தொழில் தாவா) ஆகியவை பற்றியும் தொழிற்சங்கம் அமைப்பது சட்ட பூர்வமான உரிமை என்பதும் விளக்கப்பட்டது.
அதன் பிறகு உறுப்பினர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் விவாதிக்கப்பட்டது
கேள்வி: பிரபல ஐ.டி நிறுவனத்தில் வேலை பார்க்கிறேன். நான் எழுதிய நிரலை (code) பிற்காலத்தில் என்னுடைய படிப்பினைக்காகவும் மீண்டும் அதை பயன்படுத்திக் கொள்வதற்காகவும் என்னுடைய சொந்த மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பினேன். அதனால் நான் கம்பெனியின் கோட் ஆப் கண்டக்ட் (Code of conduct) மீறியுள்ளேன் என்று மிரட்டப்பட்டு, அது தொடர்பாக என்னிடம் எழுதி வாங்கியிருக்கிறா்கள். இதனால் வேலைக்கு பாதிப்பு வருமா?
பதில்: ஒரு ஊழியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றால் தவறின் தன்மை, தீவிரம் போன்ற விபரங்கள் முக்கியமானவை.
நிறுவனத்தின் கொள்கையை மீறியது மட்டுமே வேலையை விட்டு தூக்குவதற்கு போதுமான காரணமாக முடியாது. ஒரு ஊழியரை வேலை நீக்கம் செய்வதற்கு தெளிவாக வரையறுக்கப்பட்ட சட்ட நடைமுறைகள் உள்ளன. அவற்றைத்தான் பின்பற்ற வேண்டும்.
மேலும், ஊழியரின் செயல்பாட்டால் கம்பெனிக்கு என்ன இழப்பு ஏற்பட்டது என்பது முக்கியமானது. அவ்வாறு தீவிர பாதிப்பு ஏற்பட்டிருந்தால் அது தொடர்பான விளக்கம் கேட்டு ஊழியருக்கு நோட்டிஸ் கொடுப்பது, கமிட்டி மூலம் விசாரணை நடத்துவது என்று நடைமுறைகளுக்குப் பிறகுதான் நடவடிக்கை எடுக்க முடியும்.
அதிலும், எல்லா தவறுகளுக்கும் பணி நீக்கம் என்ற தண்டனை வழங்க முடியாது. (எல்லா குற்றங்களுக்கும் தூக்குத் தண்டனை வழங்கப்பட முடியாது என்பது போல).
எனவே, பயத்தை விட்டொழிக்க வேண்டும். எச்.ஆர், மேனேஜர் ஆகியோர் செய்யும் மிரட்டல்களை கேட்டு பயந்து விடாமல் நமது சட்ட உரிமைகளை புரிந்து கொள்ள வேண்டும்.
இந்த குறிப்பிட்ட விஷயத்தை பொறுத்தவரையில், நிரல் எழுதுபவருக்குத்தான் அதன் மீதான முதல் காப்புரிமை இருக்கிறது. அந்த உரிமையை நிறுவனத்துக்கு மாற்றிக் கொடுக்க வேண்டும் என்ற ஒப்பந்தத்தில் நிறுவனம் கையொப்பம் வாங்கி விடுகிறது. எனவே, ஒரு ஊழியர் தான் எழுதும் நிரலை தனது சொந்த தேவைக்காக நகல் எடுத்துக் கொள்வதை ஒரு சட்ட மீறலாக பார்க்க முடியாது. நிரலை எடுத்து போட்டியாளர் நிறுவனத்துக்கு கொடுத்ததாகவோ, வணிகரீதியில் பயன்படுத்தியதாகவோ குற்றம் சாட்டினால்தான் நிறுவனம் ஊழியர் மீது வழக்கு தொடுப்பதற்கான சாத்தியங்கள் உள்ளன.
மேலும், ஒருவேளை இதுபோன்ற செயல்பாடு தொடர்பாக ஊழியர் மீது வழக்கு தொடர்ந்தால் அது வாடிக்கையாளர்கள் மத்தியில் நிறுவனத்தின் பெயரை குலைத்து விடுவதற்கான வாய்ப்பும் இருக்கிறது.
எனவே, இது போன்ற செயல்களை காரணம் காட்டி ஊழியர்களை நிறுவனம் மிரட்டலாம், ஆனால் இதன் அடிப்படையில் வெளியேற்ற முயற்சி செய்தால் அதை எதிர்த்து சட்டப்படி போராட முடியும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
கேள்வி : 2017-2018 நிதியாண்டு தொடங்க உள்ளது. இப்போதே ஐ.டி ஊழியர்கள் மத்தியில் அப்ரைசல் பற்றிய பேச்சு தொடங்கிவிட்டது. ஒரு பிரபல ஐ.டி நிறுவனத்தில் நேர்மையாக வேலை செய்து கொண்டிருக்கும் ஊழியர்களை வெளியேற்ற முடிவு செய்து, அதற்காக அவர்கள் மீது புகார் எதையாவது உருவாக்கி குற்றம் சாட்ட முயற்சிப்பதாக தெரிய வருகிறது. அத்தகைய நிலைமையில் என்ன செய்வது?
அத்தகைய பொய் குற்றச்சாட்டுகளுக்கு பயப்பட தேவையில்லை. மேலே சொன்னது போல, நிர்வாகம் தனது விருப்பப்படி ஒரு ஊழியரை வேலையை விட்டு நீக்க முடியாது. முறையான சட்ட வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். இதை தெரிந்து கொண்டு பயப்படாமல் தைரியமாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
இறுதியாக சங்கத் தலைவர் ஷியாம் சுந்தர் வங்கிக் கடன் மோசடி பற்றி பேசினார். இது தொடர்பான விபரங்களை இந்தக் கட்டுரைகளில் படிக்கலாம்.
- முதலாளி மல்லையாவின் ஜேப்படியும், ஜேப்படி நீரவ் மோடியின் முதலாளித்துவமும் – மோடி அரசின் சாதனைகள்
- மக்கள் சேமிப்பை பங்குச் சந்தையில் போடும் தாராள மய கொள்கையை எதிர்ப்போம்
தொகுப்பு :
சுகேந்திரன், செயலாளர்
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி – ஐ.டி ஊழியர்கள் பிரிவு