மெதுவாக, உறுதியாக, மலர்ந்து விரிகின்றது பு.ஜ.தொ.மு – ஐ.டி ஊழியர்கள் பிரிவு

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி – ஐ.டி ஊழியர்கள் பிரிவின் ஜூலை மாத சங்கக் கூட்டம் 19-08-2017 சனிக்கிழமை மாலை 4 மணி முதல் 8 மணி வரை பெரும்பாக்கத்தில் நடைபெற்றது.

சங்கத்தின் செயலாளர் திரு சுகேந்திரன் வரவேற்புரை நிகழ்த்தி கூட்டத்தின் நிகழ்ச்சி நிரலை ஒருங்கிணைத்து நடத்தினார்.

விப்ரோ 2K மனு

முதலில் சங்கத்தின் தலைவர் திரு ஷியாம் சுந்தர் விப்ரோவுக்கு எதிராக சென்னை தொழிலாளர் துணை ஆணையர் அலுவலகத்தில் நமது சங்கம் தாக்கல் செய்துள்ள தொழில் தாவா மனு பற்றிய விபரங்களை விளக்கினார்.

விப்ரோ ஊழியர்கள்

4 சமரச பேச்சு வார்த்தைகளிலும் 10-15 விப்ரோ ஊழியர்கள் தொழிலாளர் துறை அலுவகத்திற்கு வந்திருந்தனர்.

இந்த மனு தாக்கல் செய்த பிறகு நடந்த 4 சமரச பேச்சு வார்த்தைகளிலும் 10-15 விப்ரோ ஊழியர்கள் தொழிலாளர் துறை அலுவகத்திற்கு வந்திருந்தனர். விப்ரோ நிர்வாகத்தின் சார்பில் ஆகஸ்ட் 10 அன்று நடந்த கூட்டத்தின் போது தகவல் தெரிந்து போக வந்ததாகச் சொல்லி ஒரு வழக்கறிஞர் வந்திருந்தார். 17-ம் தேதி நடந்த கூட்டத்தின் போது விப்ரோ நிர்வாகத்திலிருந்து வந்திருந்த அதிகாரிகள், “மனுவில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிப்பதற்கு கூடுதல் நேரம் தேவை” என்று ஒரு கடிதத்தை கொடுத்து விட்டு போய் விட்டிருந்தனர், சமரச பேச்சுவார்த்தைக்கு காத்திருக்கவில்லை. அதைத் தொடர்ந்து அடுத்த சந்திப்பு ஆகஸ்ட் 31-ம் தேதி அன்று என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மனுவில் நாம் வைத்துள்ள கோரிக்கைகள்

 1. 100-க்கும் மேற்பட்ட விப்ரோ ஊழியர்கள் நிர்வாகத்தால் வேலை எதுவும் கொடுக்கப்படாமல் பல மாதங்களாக காத்திருக்க வைக்கப்படுகிறார்கள். இது தகவல் தொழில் நுட்பத்துறையில் பெஞ்ச் என்று அழைக்கப்படுகிறது. இது ஊழியர்களின் பணிச் சூழலை (conditions of labour) மாற்றுவதாக உள்ளது.
  மேலும், இந்த ஊழியர்கள் தனிமைப்படுத்தப்பட்டு, ராஜினாமா கடிதம் தரச் சொல்லி மனித வள மேம்பாட்டுத் துறை அதிகாரிகளால் தொடர்ந்து நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள். இந்தப் போக்கு அனைத்து ஊழியர்களுக்கும் பணி பாதுகாப்பு (employment) இல்லாத சூழ்நிலையை ஏற்படுத்தி மிகப் பெரிய மன உளைச்சலை ஏற்படுத்துகின்றது.
  நிர்வாகம் இந்தப் போக்கினை கைவிட்டு உடனடியாக பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கு புராஜக்ட் வழங்க வேண்டும்.
 2. இப்படி பெஞ்சில் உட்கார வைக்கப்பட்ட ஊழியர்களுக்கு அவர்களின் சம்பளத்தில் 10 முதல் 20 சதவீதம் வரை பிடித்தம் செய்யப்படுகிறது. இது ஊழியர்களின் பணி விதிகளை (terms of employment) மாற்றுவதாக உள்ளது. நிர்வாகம் உடனடியாக இந்த ஊழியர்களுக்கு புராஜக்ட் ஒதுக்கி முழுச் சம்பளத்தையும் வழங்க வேண்டும்.
 3. பல தொழிலாளர்கள் நிர்வாகத்தால் மிரட்டப்பட்டு தாமாகவே ராஜினாமா செய்ய கட்டாயப்படுத்தப்பட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர். இவர்கள் தமது ராஜினாமாவை திரும்பப் பெறுவதாக சொல்லியும் நிர்வாகம் ஏற்றுக் கொள்ளாமல் வேலையை விட்டு நீக்கியுள்ளது. இது ஒரு நியாயமற்ற தொழில் நடவடிக்கை (unfair labour practice) ஆகும். நிர்வாகம் கட்டாயப்படுத்தி வேலையை விட்டு நீக்கியவர்களை உடனடியாக திரும்ப சேர்த்துக் கொள்ள வேண்டும்.
 4. எமது சங்கத்தை ஆதரித்து தொழிலாளர்கள் பிரச்சனைகள் குறித்து பேச்சு வார்த்தை நடத்த வேண்டும்.

இவ்வாறு யூனியன் மூலமாக சட்டரீதியாக எதிர்கொள்ள ஆரம்பித்த பிறகு அந்த மனுவில் தங்களை இணைத்துக் கொண்டுள்ள ஊழியர்கள் புராஜக்ட் கொடுக்காமல் பெஞ்சில் உட்கார வைக்கப்படுவது, variable pay வெட்டப்படுவது, ராஜினாமா செய்யும்படி எச்.ஆர் அதிகாரிகளால் மிரட்டப்படுவது போன்றவற்றை மன உறுதியுடன் தைரியமாக கையாண்டு வருகின்றனர்.

விவசாயிகளுக்கு ஆதரவாக நடத்தப்பட்ட பிரச்சாரம்

இந்த மனு தொடர்பாக விப்ரோ நிர்வாகத்தின் தவறான அணுகுமுறைகளையையும், கொள்கைகளையும் விரிவாக ஆவணப்படுத்துவதற்கு வல்லுனர்களின்  உதவி நாடப்பட்டது. அது போன்று தேவைப்படும் போது உதவியை பெற வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. இது தொடர்பான முடிவுகளை சங்கத்தின் நிர்வாகக் குழுவில் வைத்து விவாதித்து எடுக்க வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டது.

மேலும், பெங்களூரு, ஹைதராபாத் போன்ற நகரங்களில் இருந்து நம்மை தொடர்பு கொண்ட ஐ.டி ஊழியர்களுக்கு சரியாக வழிகாட்டுவதை பு.ஜ.தொ.மு உறுதி செய்ய வேண்டும். நம்மால் எவ்வளவு சாத்தியம் என்பதை தெளிவுபடுத்தி விட வேண்டும்.

எம்ஃபசிஸ் ஊழியரின் 2A மனுவின் மீதான சமரச பேச்சு வார்த்தை முறிவு

வேலை நீக்கம் செய்யப்பட்ட எம்ஃபசிஸ் ஊழியர் நிறுவனத்துக்கு எதிராக தாக்கல் செய்த 2A மனு மீதான சமரச பேச்சுவார்த்தைக்கு நிர்வாகம் வராத நிலையில் பேச்சு வார்த்தை முறிவு என்று கடிதம் பெறப்பட்டிருக்கிறது. அடுத்த கட்டமாக தொழிலாளர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வது பற்றி சங்கத்தின் சட்ட ஆலோசகரிடம் பேச வேண்டும்.

செயலாளர் சுகேந்திரன் விவசாயிகள் பிரச்சனை தொடர்பாக பிரச்சாரம் செய்ய முடிவெடுத்தது குறித்தும் விவசாயிகளின் தற்போதைய நிலைமை பற்றியும் சுருக்கமாக விளக்கினார்.

சங்கத்தின் சார்பில் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து 10,000 துண்டறிக்கைகள், 1,000 போஸ்டர் அச்சிட்டு குழுக்களாக பிரிந்து பிரச்சாரம் செய்யப்பட்டது. ஆர்.எம்,சி, டைடல் பார்க், சோழிங்க நல்லூர், சிறுச்சேரி, டி.எல்.எஃப், மெப்ஸ் ஆகிய பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. அதிகாலையில் போஸ்டர் ஒட்டுவது, காலை, மாலை பிரசுர வினியோகம் என்று தீவிரமாக வேலை செய்யப்பட்டது.

ஐ.டி ஊழியர்கள் மத்தியில் இதைக் கொண்டு சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்ட அனைத்து உறுப்பினர்களுக்கும் பிற நண்பர்களுக்கும் சங்கத்தின் சார்பில் தன் நன்றியை தெரிவித்து கொண்டார்.

சங்கத்தை விரிவுபடுத்தி வலுப்படுத்துவது

 • சங்கத்தின் பெயரை பிரபலப்படுத்தி உறுப்பினர் சேர்க்கையை அதிகரிக்க இந்த மாதம் துண்டறிக்கை, போஸ்டர் பிரச்சாரம் நடத்துவதாக முடிவு செய்யப்பட்டது.
 • அதனுடன் உள்ளூர் நாளிதழ்களில் நமது சங்க நடவடிக்கைகள் தொடர்பான செய்திகளை வெளியிடுவது, தட்ஸ் தமிழ் போன்ற செய்தி தளங்களுக்கு செய்திகளை அனுப்பி வைப்பது என்று முடிவு செய்வது அதற்கான பொறுப்பை ரவிசங்கர், தமிழ்செல்வன் ஆகியோர் ஏற்றுக் கொண்டனர். சங்கத்தின் தலைவர் சியாம் வழிகாட்டலை பெற்றுக் கொள்ள வேண்டும்.
 • நமது இணையதளத்தில் சங்கத் தலைவர் சியாம் எழுதும் கட்டுரைத் தொடரை இன்னும் அதிகமான பேரிடம் கொண்டு போய் சேர்க்க தளத்தின் முகப்பில் தமிழ் பகுதிக்கான இணைப்பை சேர்க்க வேண்டும்.
 • பிரபலமான பத்திரிகைகளிலும், இணைய தளங்களிலும் அதை வெளியிடுவதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.

செயற்கை நுண்ணறிவு

தொடர்ந்து நடந்து வரும் அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியின் சமீபத்திய கட்டம் செயற்கை நுண்ணறிவு எனப்படும் மீப்பெரும் தரவுகளிலிருந்து எந்திரங்களுக்கு முடிவெடுப்பதை கற்றுக் கொடுக்கும் தொழில்நுட்பம். சமூக வலைத்தளங்கள், இணையத்துடன் இணைக்கப்பட்ட கருவிகள் மற்றும் பிற மின்னணு தரவுகளை இணைத்து முடிவுகளை வந்தடைவதற்கான தொழில்நுட்பமும் கணினி கொள்ளளவும் உருவாக்கப்பட்டுள்ளது.

மாதம் ஒரு தொழில்நுட்ப தலைப்பின் கீழ் பேசுவது என்ற அடிப்படையில் சங்க உறுப்பினர் செல்வா, செயற்கை நுண்ணறிவு பற்றி உரை நிகழ்த்தினார்.

இது மென்பொருள் துறையிலும் மருத்துவம், சட்டம் போன்ற துறைகளிலும் பெருத்த மாற்றங்களை உருவாக்கி வருகிறது. மேலும், பல்வேறு நாடுகளின் அரசுகள் இந்தத் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி குடிமக்கள் தொடர்பான தரவுகளை திரட்டி கண்காணிப்பதற்கும் கட்டுப்படுத்துவதற்கும் திட்டமிட்டு அமல்படுத்தி வருகின்றன.

தொழில்நுட்ப முன்னேற்றங்கள் அனைத்தும் முதலாளிகளின் லாப நோக்கத்துக்கும், மக்களை ஒடுக்குவதற்கும் பயன்படுவது வரை அவை மனித குலத்தின் முன்னேற்றத்துக்கு பயன்படப் போவதில்லை.

செயற்கை நுண்ணறிவு தொடர்பான புதிய கலாச்சாரம் வெளியீடு உறுப்பினர்களிடையே வினியோகிக்கப்பட்டது. இந்த வெளியீட்டின் பிரதிகளை பெற விரும்புவோர் சங்கத்தின் செயலாளரை தொடர்பு கொள்ளவும்.

கோவை பு.ஜ.தொ.மு – ஐ.டி ஊழியர்கள் பிரிவு நடவடிக்கைகள்

கோவைக்கு சென்று சி.டி.எஸ் ஊழியர்களை சந்தித்து அவர்களது சமரச பேச்சு வார்த்தை கூட்டத்தில் கலந்து கொண்ட அனுபவத்தை சங்க உறுப்பினர் ஹரிகரன் விளக்கினார்.

அங்கு பெஞ்ச்-ல் வைக்கப்பட்ட 6 சி.டி.எஸ் ஊழியர்கள் பு.ஜ.தொ.மு-வில் இணைந்து சங்கத்தின் வழிகாட்டலின்படி தொழிலாளர் அலுவலகத்தில் புகார் கொடுத்த பிறகு நிர்வாகத்துடன் பேச்சு வார்த்தை நடத்தி அனைவருக்கும் புராஜக்ட் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. மேலும், கட்டாய ராஜினாமா பெறப்பட்டு வேலை நீக்கம் செய்யப்பட்ட 2 ஊழியர்களின் 2A மனு மீதான விசாரணை நடந்து வருகிறது.

மேலும், கோவையில் சங்கத்தை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் பற்றியும் விவாதித்து திட்டமிடப்பட்டது.

பெங்களூரு ஐ.டி ஊழியர்கள் குழுவின் ஆர்ப்பாட்டம் பற்றி

பெங்களூரு ஐ.டி ஊழியர்கள் குழு நடத்திய ஆர்ப்பாட்டத்தில் சங்க துணைத்தலைவர் காசிராஜனுடன் சென்று கலந்து கொண்ட அனுபவத்தை பு.ஜ.தொ.மு-வின் குமார் விளக்கினார்.

பெங்களூரு குழுவின் தலைமை பொறுப்பில் இருக்கும் குமாரசாமியின் உரையைத் தொடர்ந்து நமது துணைத்தலைவர் காசிராஜன் சங்கத்தின் சார்பில் ஆற்றிய உரை

ஆர்ப்பாட்டத்தில் பெங்களூரு குழுவின் தலைமை பொறுப்பில் இருக்கும் குமாரசாமியின் உரையைத் தொடர்ந்து நமது துணைத்தலைவர் காசிராஜன் சங்கத்தின் சார்பில் ஆற்றிய உரை நல்ல தாக்கத்தை ஏற்படுத்தியது.

தொடர்ந்து விப்ரோ ஊழியர்கள் தொழில் தாவா சட்டத்தின் பிரிவு 2K-ன் கீழ் மனு தாக்கல் செய்வது பற்றி விவாதிக்கப்பட்டது.

குழு செயல்பாட்டில் முன்னணியில் இருக்கும் உறுப்பினர்களின் கூட்டமும் நடத்தப்பட்டது. அதில் குழுவை விரிவுபடுத்தி முறையான தொழிற்சங்கமாக பதிவு செய்ய வைப்பதற்கான முயற்சிகள் திட்டமிடப்பட்டன.

****

இதைத் தொடர்ந்து சங்கத்தின் வரவு-செலவு கணக்கு பொருளாளர் ராஜதுரையால் வாசிக்கப்பட்டது. சங்கத்துக்கு பிரத்யோகமாக வங்கிக் கணக்கு ஆரம்பிப்பது என்று முடிவு செய்யப்பட்டது. எந்த வரவு, செலவையும் பொருளாளர் மூலம் கணக்கு வைத்து கறாராக அறிக்கை தயாரிப்பது என்று முடிவு செய்யப்பட்டது.

இறுதியாக செயலாளர் சுகேந்திரனின் நன்றியுரையுடன் கூட்டம் முடிவடைந்தது.

பு.ஜ.தொ.மு-வின் உறுதியான அரசியல் அடித்தளத்துடனும் அமைப்பு அனுபவத்துடனும் தகவல் தொழில்நுட்பத் துறை ஊழியர்களை சங்கமாக திரட்டும் பு.ஜ.தொ.மு – ஐ.டி ஊழியர்கள் பிரிவின் தொடரும் பயணத்தில் இந்தக் கூட்டம் ஒரு தொகுப்பாக்கும் நிகழ்வாக அமைந்தது.

– தொகுப்பு : ஹரிகரன்

Permanent link to this article: http://new-democrats.com/ta/ndlf-it-employees-wing-monthly-meeting-august-2017/

Leave a Reply

Your email address will not be published.

%d bloggers like this:
Read more:
70 குழந்தைகளை பலிவாங்கிய உ.பி. பா.ஜ.க அரசின் கிரிமினல் அலட்சியமும் ஊழலும்

"மருத்துவமனை அதிகாரிகள் இந்த பிரச்சினையைப் பற்றி முதலமைச்சரிடம் கூறியதாகவும் அதற்கு அவர் அமைச்சர் தாண்டனை ஒரு முறை ஏறிட்டு பார்த்து விட்டு அமைதியாகி விட்டதாகவும் எங்களுக்கு தெரிய...

முதலாளித்துவ குப்பை மனிதன், இயற்கை அழிவு – மீம்ஸ்

முதலாளித்துவம் திணிக்கும் நுகர்வு கலாச்சார குப்பை...இயற்கையை சூறையாடும் பேராசையை வளர்ககிறது.

Close