கிரெடிட் கார்ட் கொள்ளை, block chain, குறும்பட இயக்கம் – NDLF ஐ.டி சங்கக் கூட்டம்

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி – ஐ.டி ஊழியர்கள் பிரிவின் செயற்குழு கூட்டம் மதியம் அக்டோபர் 29, 2017 அன்று மாலை 3 மணி முதல் 4 மணி வரையிலும், அதைத் தொடர்ந்து மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை பொதுக்குழு கூட்டமும் நடைபெற்றன.

சங்க நிர்வாகிகளும், செயற்குழு உறுப்பினர்களும், பிற சங்க உறுப்பினர்களும் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

கடன் அட்டைக் கடனில் நாம் கட்டும் கந்து வட்டி, சிறு வணிகர்களை அழிக்கும் ஜி.எஸ்.டி வரி விதிப்பு, சிறப்புப் பொருளாதார மண்டல வரிச்சலுகைகளில் குளித்த ஐ.டி நிறுவனங்கள் போன்ற அரசியல் விஷயங்கள் விவாதிக்கப்பட்டன.

கந்து வட்டி கடன் அட்டை

கடன் அட்டையில் கடன் வாங்கியவர் குறிப்பிட்ட தேதியில் கடனை முழுமையாக திருப்பிச் செலுத்தத் தவறினால் நிலுவைத் தொகைக்கு 100-க்கு ரூ 3.5 என்ற வீதத்தில் வட்டி வசூலிக்கப்படுகிறது. அந்நிலையில் புதிதாக அட்டையை பயன்படுத்தும் ஒவ்வொரு தொகைக்கும் உடனடியாக இந்த 3.5 வட்டி வசூலிக்கப்பட்டு விடுகிறது. இது போக தாமதமாக பணம் செலுத்தினால் அபராதத் தொகை, சேவைக் கட்டணம் என்று உண்மை வட்டி கந்து வட்டி வீதத்தை விட பல மடங்கு அதிகமாக உள்ளது. இது தெரியாமல் பலர் கடன் அட்டையை பயன்படுத்தி பணத்தை பறி கொடுத்துக் கொண்டிருக்கின்றனர்.

கடன் அட்டை பயன்பாட்டை ஊக்குவிப்பதற்காக வெகுமதி புள்ளிகள் வழங்குகின்றன வங்கிகள். எச்.எஸ்.பி.சி, ஸ்டேண்டர்ட் சார்ட் போன்ற வங்கிகள் கிளைகள் வைத்திருப்பதை விட பெரும் எண்ணிக்கையில் கடன் அட்டை வினியோகித்தே சம்பாதித்து வருகின்றன.

கடன் அட்டையை பயன்படுத்தி பொருட்களையோ, சேவைகளையோ ஒருவர் வாங்கும் போது வணிகருக்கு 1.5% பிடித்துக் கொண்டுதான் பணத்தைக் கொடுக்கிறது வங்கி. இப்படி எல்லா பக்கங்களிலும் சம்பாதிக்கின்றன வங்கிகள்.

வட்டிக்கு கடன் வாங்கும் போது கவனிக்க வேண்டிய ஒன்று

வங்கியில் கடன் வாங்கும் போது வட்டி குறைந்து போகும் அடிப்படையிலானதா, மொத்த வட்டியா என்று பிரித்து புரிந்து கொள்ள வேண்டும். கார் லோன் 12% வட்டி என்று கவர்ச்சியான அறிவிப்பை பார்த்து கடன் வாங்கினால், 1 வருடத்துக்கு ஆண்டுக்கு 12% வீதம் கணக்கு போட்டு அதை 12-ஆல் வகுத்து மாதாந்திர தவணை வசூலித்து விடுவார்கள். ஏற்கனவே கட்டிய அசல் தொகைக்கும் சேர்த்து கடைசி வரை வட்டி கட்டுவதால். இது உண்மையில் 22% வட்டியாகி விடும்.

இதை புரிந்து கொள்ளாமல் பலர் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை இழக்கிறார்கள்.

ஜி.எஸ்.டி மூலம் சிறுதொழில்களை அழித்து கார்ப்பரேட்டுகளை கொழுக்க வைக்கும் அரசு

இந்நிலையில் ஜி.எஸ்.டி வரி விதிப்பின் மூலம், விற்பனையில் 18% அரசுக்கு செலுத்த வேண்டி வருகிறது. அதுவும் ஆண்டுக்கு ஒரு முறை கட்ட வேண்டியிருந்த வரித் தொகை இப்போது மாதா மாதம் செலுத்தப்பட வேண்டியுள்ளது. லாபத்தின் மீது வரி விதித்தால் கூட சுமை தெரியாது, கடை வாடகை, ஊழியர்கள் சம்பளம், மின்கட்டணம் செலுத்தி வணிகம் செய்யும் சிறு வணிகர்கள் நேரடியாக தமது விற்பனை வருவாயில் 18% செலுத்துவது அவர்களை முடக்கி அழிவை நோக்கி செலுத்துகிறது.

ஆனால், அரசோ இப்படி திரட்டிய வரி வருவாயிலிருந்து பொதுத்துறை வங்கிகளுக்கு ரூ 2.2 லட்சம் கோடி புதிதாக பணம் கொடுக்கிறது. ஏற்கனவே கடன் வாங்கி நாமம் போட்ட கார்ப்பரேட்டுகளுக்கு புதிதாக கடன் கொடுப்பதை இப்படி உறுதி செய்கிறதாம்.

ஐ.டி நிறுவனங்களைப் பொறுத்தவரையில் சிறப்புப் பொருளாதார மண்டலம் என்ற பெயரில் 10 ஆண்டுகளாக வரியே கட்டவில்லை. சத்யம் நிறுவன முதலாளி ராமலிங்க ராஜூ அந்த வசதியை பயன்படுத்திக் கொண்டு செயற்கையாக லாபத்தை உயர்த்திக் காட்டி பங்கு விலையை உயர்த்திக் கொண்டார். தன் வசம் இருந்த 55% பங்குகளை அதிக விலையில் விற்று பணமாக்கிக் கொண்டார்.

இது தாக்குப் பிடிக்க முடியாத நிலை வந்த போது இந்த மோசடியை தானே முன் வந்து அறிவித்தார். பங்கு விலை சுமார் ரூ 600-லிருந்து ஒரே நாளில் ரூ 6-க்கு வீழ்ச்சியடைந்தது. ராஜூ பல ஆயிரம் கோடி சுருட்டிக் கொண்டு விட்டார். ஏமாறுவது சிறு சேமிப்பாளர்களும், பொதுமக்களும்தான்.

block chain பற்றிய உரை

இதைத் தொடர்ந்து block chain பற்றிய தொழில்நுட்ப உரையை சங்க உறுப்பினர் அறிவுச்செல்வன் நடத்தினார்.

வங்கி பரிவர்த்தனைகள் ஒரு மையக் கணினி மூலம் கட்டுப்படுத்தப்படும் போது அந்தக் கணினிக்குள் திருட்டுத்தனமாக நுழைந்து பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுகிறது. இதற்கு மாற்றாக, பல கணினிகள் பரிவர்த்தனை விபரங்களை பராமரிக்கும் distributed ledger முறை block chain தொழில்நுட்பத்துக்கு ஒரு உதாரணம் என்பதை மாதிரி நடைமுறையுடன் விளக்கினார்.

சடோசி என்ற புனைபெயரில் அறிமுகப்படுத்திக் கொண்ட இன்றுவரை அடையாளம் தெரியாத ஒருவரால் இந்தத் தொழில்நுட்ப வரைவு 2008-ல் வெளியிடப்பட்டது. இது கணினிகளுக்கிடையேயான வலைப்பின்னல் அடிப்படையில் இயங்குகிறது. இது cryptography அடிப்படையில், public-key/private-key பயன்படுத்தி அடையாளத்தை பாதுகாக்கவும், மோசடியை தடுக்கவும் தேவையான நடைமுறைகள் அமல்படுத்தியுள்ளது. இந்த வலைப்பின்னல் சிக்கலின்றி தொடங்கி போகப் போக சிக்கல் அதிகமானதாக மாறுகிறது. தங்களு கணினி திறனை பயன்படுத்தி இந்த வலைப்பின்னலுக்கான கணக்கிடுதலை செய்பவர்கள் புதிய ஊக்கத் தொகையை ஈட்ட முடிகிறது. மற்றவர்கள் வெறும் பங்காற்பாளராகசெயல்படலாம்.

இந்தத் தொழில்நுட்பம் பிட்-காயின் போன்ற மின்னணு நாணயத்துக்கு மட்டுமின்றி, வங்கிகளின் பாதுகாப்பு நடைமுறைக்கும் அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்திய ஸ்டேட் வங்கி பிற வங்கிகளுடன் இணைந்து ரகசியமாக, வாடிக்கையாளர் விபரங்களை சரிபார்ப்பதற்காக இத்தகைய வலைப்பின்னலை உருவாக்கியிருப்பதாக அறிவித்துள்ளது.

லினக்ஸ், ஃபயர்ஃபாக், இணைய மென்பொருட்கள், ஆண்ட்ராய்ட் போன்ற நூற்றுக் கணக்கான பலனுள்ள மென்பொருட்களை போலவே block chain தொழில்நுட்பமும் சுதந்திர/கட்டற்ற மென்பொருள் முறையில் உலகெங்கிலும் உள்ள தொழில்நுட்ப தொழிலாளர்கள் ஒத்துழைத்து உருவாக்கப்பட்டிருக்கிறது. அரசு என்ற மத்தியத்துவப்படுத்தப்பட்ட அமைப்பு இல்லாமல் தனிநபர்கள் தமது நடவடிக்கைகளை தாமே ஒழுங்குபடுத்திக் கொள்வது என்ற அடிப்படையில் செயல்படும் மின்னணு அராஜகவாதிகள் பலர் இந்தத் திட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கின்றனர். ஆனால், அத்தகைய எந்தக் கட்டுப்பாடும் இல்லாத தனிநபர் சுதந்திரம் என்பது ஒரு கனவுதான் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
என்று விளக்கினார்.

உறுப்பினர் சேர்க்கை, குறும்பட இயக்கம், அனைத்திந்திய ஐ.டி ஊழியர் கருத்தரங்கு

எச்.ஆர் அச்சுறுத்தல்களும் ஐ.டி நிறுவனங்களுக்கு எதிரான வழக்குகளும்

எச்.ஆர் அச்சுறுத்தல்களும் ஐ.டி நிறுவனங்களுக்கு எதிரான வழக்குகளும்

தொடர்ந்து உறுப்பினர் சேர்க்கை இயக்கத்துக்கான நடவடிக்கைகள் சங்கத்தின் செயலாளர் விளக்கினார். போஸ்டர் இயக்கம் நடத்துவது பற்றி அவர் குறிப்பிட்டார். சங்க துணைத் தலைவர் காசிராஜன் குறும்பட இயக்கத்தில் தேர்ந்தெடுக்கப்படும் படங்களை திரையிட இடங்களை முடிவு செய்யும் நிலையில் இருப்பதாகவும், அனைத்து உறுப்பினர்களும் தங்களால் முடிந்த அளவுக்கு குறும்படங்களை தயாரித்து இந்த இயக்கத்தை வெற்றிகரமாக முன்னெடுத்து செல்ல வேண்டும் என்றும் தெரிவித்தார். இதன் மூலம் ஐ.டி துறையில் தொழிற்சங்கத்தின் தேவை பற்றியும், ஐ.டி ஊழியர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த முடியும் என்று அவர் கருத்து தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் தமிழ் செல்வன் ஐ.டி ஊழியர்களுக்கான அகில இந்திய கருத்தரங்கு ஒன்றை நடத்துவதற்கான முன்மொழிவை வாசித்தார். அதை அனைத்து உறுப்பினர்களும் ஒரு மனதாக வரவேற்று அதை ஜனவரி மாதம் முதல் வாரத்தில் நடத்தலாம் என்றும், குறும்படங்கள் திரையிடலையும் அதனோடு இணைத்து செய்யலாம் என்று முடிவு செய்தனர். இந்த கருத்தரங்கை நடத்தும் பணிகளை ஒருங்கிணைக்க 8 பேர் கொண்ட ஒருங்கிணைப்பு குழு ஒன்று உருவாக்கப்பட்டது. அதன் ஒருங்கிணைப்பாளராக அம்சராஜ் பொறுப்பேற்றுக் கொண்டார்.

எச்.ஆர் அச்சுறுத்தல்களும் ஐ.டி நிறுவனங்களுக்கு எதிரான வழக்குகளும்

சங்கத்தின் துணைத்தலைவர் வாசுகி, 2 வருடங்களே பணி அனுபவம் கொண்ட ஒரு இளம் ஊழியர், எச்.ஆர் மிரட்டினால் தொழிற்சங்கம் மூலம் தொழிலாளர் துறையில் புகார் தெரிவிக்கலாம் என்று கூறிய அனுபவத்தை பகிர்ந்து கொண்டார்.

ரசியப் புரட்சியின் நூற்றாண்டு

ரசியப் புரட்சியின் நூற்றாண்டு

அடுத்ததாக, சங்கத்தலைவர் விப்ரோவுக்கு எதிரான 2K வழக்கு தொடர்பான தயாரிப்புகளை விளக்கினார். பல்வேறு நிறுவனங்களில் இருந்து வேலை நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் தாக்கல் செய்துள்ள 2A மனுக்களை ஒருங்கிணைக்கும் பொறுப்பை ஒருவர் எடுத்து அவர்களுக்கு சங்கத்தின் ஆதரவை அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அந்தப் பொறுப்பை செயற்குழு உறுப்பினர் ரவிசங்கர் ஏற்றுக் கொண்டார்.

அப்ரைசல் ரேட்டிங் அடிப்படையில் சம்பளத்தை குறைத்தது தொடர்பாக டி.சி.எஸ்-க்கு எதிரான சங்கத்தின் வழக்கை தொடர்ந்து நடத்துவது என்று ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. டி.சி.எஸ் பணி நியமன மோசடி பற்றிய வழக்கிலும் சமரச பேச்சு வார்த்தை முடிந்து தொழிலாளர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ய வேண்டும். அதற்கான செலவுகளை தான் ஏற்றுக் கொள்வதாக செயற்குழு உறுப்பினர் சரவணன் முன் வந்தார்.

தொடர்ந்து பொருளாளர் ராஜதுரை சங்கத்தின் வரவு செலவு கணக்கை வாசித்தார். சங்கத்தின் செயல்பாடுகளுக்கு நிதி திரட்டுவதன் அவசியத்தை வலியுறுத்தினார்

பேஸ்புக்கில் அனைத்து உறுப்பினர்களும் சங்கத்தின் பக்கத்தை பின்தொடர்ந்து பதிவுகளை பிரபலப்படுத்துமாறு காசிராஜன் கேட்டுக் கொண்டார்.

ரசியப் புரட்சியின் நூற்றாண்டு

இறுதியாக, பு.ஜ.தொ.மு சார்பாக நவம்பர் 7-ம் தேதி நடக்கவிருக்கும் ரசியப் புரட்சியின் 100-வது ஆண்டு நாள் பொதுக்கூட்டத்தில் அனைவரும் கலந்து கொள்ளும்படி பு.ஜ.தொ.மு சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டது. பு.ஜ.தொ.மு-வின் பிற கிளையைச் சேர்ந்தவர்களை சந்திப்பதோடு மட்டுமின்றி, 100 ஆண்டுகளுக்கு முன்பு பாட்டாளி வர்க்கத்தின் அதிகாரத்தை நிலைநாட்டி, உலகெங்கும் தொழிலாளர் உரிமைகளுக்கு வலு சேர்த்த ரசியப் புரட்சியின் முக்கியத்துவத்தை அங்கீகரிப்பதும் அவசியமாகும். சோவியத் யூனியன் நீடித்த சுமார் 70-க்கும் மேற்பட்ட ஆண்டுகளில் சோசலிச கட்டுமானத்தில் அனைத்து மக்களுக்கும் உணவு, கல்வி, மருத்துவம், உறுதி செய்யப்பட்டதும் நாம் கற்றுக் கொள்ள வேண்டிய முக்கியமான பாடமாகும். அது தற்காலிகமாக பின்னடைவை சந்தித்தாலும், முதலாளித்துவ உலகின் இன்றைய நெருக்கடிக்கு தீர்வு காண நாம் சோசலிசத்தை கற்க வேண்டியிருக்கிறது.

சங்கக் கூட்டத்தில் கலந்து கொண்ட உறுப்பினர்கள் ரசியப் புரட்சி தினத்தின் உணர்வோடு சங்க நடவடிக்கைகளை விரிவுபடுத்த உறுதி பூண்டுள்ளார்கள் என்று சொல்லலாம்.

More from New Democrats

Permanent link to this article: http://new-democrats.com/ta/ndlf-it-union-meeting-november-2017/

Leave a Reply

Your email address will not be published.

%d bloggers like this:
Read more:
இயற்கை பேரிடர் காலத்தில் நமது பணி பற்றி – ஒரு ஐ.டி ஊழியர்

நாம் வேலை செய்யும் துறைதான் நம்மை இணைக்கும் ஒரு பொதுவான அம்சமாக உள்ளது. ஐ.டி. துறையில் செயல்படும் ஒரு தொழிற்சங்கம் இது போன்ற பேரிடர் கால தன்னார்வலர்களை...

டி.சி.எஸ் வேலை நீக்கங்களுக்கு எதிராக

இந்தியாவின் முன்னணி தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களில் ஒன்றான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டி.சி.எஸ் - TCS), 25000-க்கும் அதிகமான ஊழியர்களை வேலைநீக்கம் செய்ய திட்டமிட்டு அமல்படுத்தி...

Close