நெடுவாசல், விவசாயம், ஐ.டி பிரச்சனைகள் – ஐ.டி சங்கக் கூட்ட விவாதங்கள்

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி – ஐ.டி ஊழியர் பிரிவின் விவாதக் கூட்டம் மார்ச் 19, 2017 அன்று திருவான்மியூரில் நடந்தது. சங்க அமைப்பாளர் தோழர் கற்பகவிநாயகம் வந்திருந்த அனைவரையும் வரவேற்று கூட்டத்தை ஒருங்கிணைத்து நடத்தினார். பல்வேறு ஐ.டி நிறுவனங்களில் பணிபுரியும் சுமார் 25 பேர் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

கற்பக விநாயகம்

சங்க அமைப்பாளர் தோழர் கற்பகவிநாயகம் கூட்டத்தை ஒருங்கிணைத்து நடத்தினார் (கோப்புப் படம்)

முதலில் அமெரிக்காவில் டிரம்ப் நிர்வாகம், எச்1பி கட்டுப்பாடுகள் இவற்றை ஒட்டி ஐ.டி துறையில் வேலை வாய்ப்பிலும், பணி நிலைமைகளிலும் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் பற்றி விவாதிக்கப்பட்டது. வர்த்தக பாதுகாப்பு வாதம், ஆட்டமேஷன், புதிய தொழில்நுட்பங்கள் இவற்றால் இந்திய ஐ.டி துறைக்கு சவால்கள் ஏற்பட்டிருக்கின்றன என்பது கண்கூடாக தெரியும் ஒரு விஷயம். அவற்றை இந்தத் துறை எப்படி எதிர்கொள்கிறது? அவற்றின் சுமை யார் மீது சுமத்தப்படுகிறது? இது தொடர்பாக ஐ.டி அலுவலகங்களில் எப்படிப்பட்ட சூழல் நிலவுகிறது என்பது பற்றி கருத்துக்கள் பகிர்ந்து கொள்ளப்பட்டன.

‘புதிய தொழில்நுட்பங்களை கற்றுக் கொள்ள வேண்டும். அப்டேட் செய்து கொள்ள வேண்டும். சில ஆண்டுகளில் வேறு தொழிலுக்கு போவதற்கு நம்மை தயாரித்துக் கொள்ள வேண்டும்’ என்று தனித்தனியாக தீர்வு காணும்படியே நாம் சிந்திக்க பழக்கப்பட்டுள்ளோம்.

ஆனால், ஐ.டி நிறுவனங்கள் தமது லாபவீதத்தை தக்க வைத்துக் கொள்வதற்காக ஊழியர்கள் மீது சுமையை ஏற்றுவது, வேலையை விட்டு அனுப்புவது போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அவற்றை கூட்டாக எதிர்கொள்வதை தடுக்க ஊழியர்களை தனித்தனியாக பிரித்து ஊதிய உயர்வு கொடுப்பது, திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று அறிவுரை கூறுவது போன்ற நடைமுறைகளை பின்பற்றுகின்றன.

மருத்துவத் துறை, சட்டத் துறை, போக்குவரத்துத் துறை என பிற துறைகளிலும் தொழில்நுட்ப மாற்றங்கள் இருந்தாலும் அதை காரணம் காட்டி ஆட்குறைப்பு செய்வதில்லை. அந்த துறை ஊழியர்களைப் போன்று தொழிற்சங்கத்தில் இணைந்து கூட்டாக நிர்வாகத்தை எதிர்கொள்வதுதான் இதற்கு தீர்வு என்று பேசப்பட்டது.

நெடுவாசல் ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு எதிரான மக்கள் போராட்டம் பற்றியும் அதே போன்று தஞ்சாவூர் மாவட்டத்தில் மீத்தேன் எடுகுக்ம திட்டத்துக்கு எதிராக வேலை செய்த அவரது அனுபவத்தைப் பற்றியும் பு.ஜ.தொ.மு-வைச் சேர்ந்த பிரேம் குமார் உரையாற்றினார்.

நெடுவாசல் போராட்டம்

நெடுவாசல் விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாக.. (கோப்புப் படம்)

அவரது உரையிலிருந்து

===

நெடுவாசல் பிரச்சனை கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பாகவே தஞ்சை டெல்டாவில் ஆரம்பித்து விட்டது. அது தொடர்பாக நம்மாழ்வார் அமைப்பும், பு.ஜ.தொ.மு சார்பிலும் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.

ஓ.என்.ஜி.சி மேற்கொண்ட சோதனை பணிகள், அவர்கள் கொட்டிய எண்ணெய் கழிவுகள், அதனால் ஏற்பட்ட நிலம், நீர் பாதிப்புகள், எண்ணெய் சகதியில் தவறி விழுந்து இறந்த விலங்குகள், தவறி விழுந்தவர் ஒருவருக்கு இடுப்புக்குக் கீழ் வெந்து போனது போன்ற விபரங்கள் பரவலாக அறியப்படாத ஒன்று. தஞ்சை மாவட்டத்தில் எண்ணெய் குழாய், இயற்கை வாயு குழாய் கசிந்து தீவிபத்து ஏற்பட்டு ஒரு இளைஞர் உயிரிழந்தது, 2014-ம் ஆண்டில் ஆந்திராவில் நகரம் பகுதியில் மீத்தேன் வாயு கசிந்து 2 கிராமங்கள் முழுவதும் எரிந்து, 14 பேர் கொல்லப்பட்டது போன்ற செய்திகளை ஊடகங்கள் பெருமளவில் இருட்டடிப்பு செய்து விடுகின்றன.

மக்களிடம் ஆலோசனை கேட்பது என்ற நடைமுறையை கண்துடைப்பாக, தினசரியில் ஒரு மூலையில் சிறு செய்தியாக அறிவிப்பு வெளியிடுவது என்ற அளவில் நடக்கிறது.  அது போன்று ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த கருத்துக் கேட்பு கூட்டத்தில் கலந்து கொண்டு கேட்டால், ‘நாங்கள் மீத்தேன் எடுக்கவில்லை ஹைட்ரோகார்பன் எடுக்கிறோம் என்கிறார்கள். இயற்கை எரிவாயு என்கிறார்கள். உண்மையில் இயற்கை எரிவாயு என்பது 95% மீத்தேன். எஞ்சியது ஈத்தேன், புரோப்பேன். அவற்றை எரிய விட்டு விடுகிறார்கள். உண்மைக்கு புறம்பாக சொல்லி மக்களை ஏமாற்றப் பார்க்கிறார்கள்

ஓ.என்.ஜி.சி நிலம் வாங்கி அதில் கரும்பு பயிரிட்டு வந்திருக்கிறது. கிரேட் ஈஸ்டர்ன் நிறுவனத்துக்கு அதை கையகப்படுத்திக் கொடுத்து திடீரென்று ஒரு நாள் போர் போட்டு விட்டார்கள்.

இந்தப் பிரச்சனை தொடர்பாக 100 கிராமங்களில் கிராமக் கமிட்டிகள் அமைத்து கிராம சபைகளில் இந்தத் திட்டத்துக்கு எதிராக தீர்மானம் போட திட்டமிடப்பட்டது. அப்படி தீர்மானம் போட்டால் கிராம சபையை கலைத்து விடுவேன் என்று ஆட்சியர் மிரட்டியிருக்கிறார். இதிலிருந்தே ஆட்சியர் யார் பக்கம் என்று தெரிந்து விட்டது.

தீபாம்பாள்புரம் என்ற ஊரில் ஆழ்துளைகுழாய் இறக்கியிருப்பதாக மக்கள் முறையிட்ட போது, “மனு கொடுப்பது, நீதிமன்றத்துக்கு போவது எல்லாம் எதற்கு நேரடியாக சென்று பிடுங்கி போட்டு விடுங்கள்” என்று நம்மாழ்வார் வழி காட்டியிருக்கிறார்.

ஆட்சியர், நீதிமன்றம், கார்ப்பரேட்டுகள் யாரையும் நம்பி பயனில்லை. கிராமக் கமிட்டிகள் தாமே தமது நிலத்தையும், நீரையும் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திட்டமிட்டு தஞ்சாவூர் மாவட்டத்தில் இந்தத் திட்டம் தடுத்து நிறுத்தப்பட்டிருக்கிறது. கறிக்குழம்பு செய்யும் போது நாய் வீட்டைச் சுற்றிச் சுற்றி வருவது போல தஞ்சை டெல்டாவிலிருந்து இயற்கை எரிவாயு, நிலக்கரி, எடுப்பதற்காக அரசும் கார்ப்பரேட்டுகளும் திட்டமிட்டு முயற்சிக்கின்றனர். இப்போது புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் திட்டத்தை செயல்படுத்தியிருக்கின்றனர். அதை எதிர்த்து மக்கள் போராடுகின்றனர். இங்கு மட்டுமின்றி இந்தியா முழுவதும் இத்தகைய திட்டங்களை எதிர்த்து மக்கள் போராட்டம் நடந்து வருகிறது. போராட்டங்கள் ஊடகங்கள் இருட்டடிப்பு செய்கின்றன என்பதுதான் உண்மை.

==

இதை போலவே நெய்வேலி லிக்னைட் நிறுவனத்தின் விரிவாக்கமும் மக்களை பாதிக்கின்றது என்று சுட்டிக்காட்டப்பட்டது. திறந்த நிலை சுரங்கத்தின் மூலம் கரி எடுக்கிறார்கள். விளைநிலங்கள் பாதிக்கப்படுகின்றன, சுற்றுச் சூழல் பாதிக்கப்படுகிறது. இப்போது திட்டத்தை விரிவுபடுத்துகின்றனர், இது தொடர்பான விவாதங்கள் நடக்கவில்லை.

ஐ.டி ஊழியர்களிடம் நெடுவாசல் பிரச்சனை தொடர்பாக ஒன்றாக கூடி பேசலாம் என்று சொன்னால் கூட பயப்படுகிறார்கள் என்று சில உறுப்பினர்கள் கருத்து தெரிவித்தனர்.

அரசியல் பேசுவது அடிப்படை பேச்சுரிமை. சாப்பிட்ட உணவகம் பற்றி பேசுகிறோம், கிரிக்கெட் பேசுகிறோம், சினிமா பேசுகிறோம். ஆனால், மக்களை பாதிக்கும் பிரச்சனைகளை பற்றி பேசுவதற்கு ஏன் பயப்பட வேண்டும்.

நெடுவாசல் ஆதரவு தெரிவித்து ஐ.டி ஊழியர்கள்

நெடுவாசல் மக்களுக்கு ஆதரவாக ஐ.டி ஊழியர்கள்- போலீசின் இரட்டை முகம்

தொழிற்சங்கமாக நிறுவனத்தை எதிர்கொள்வதே பணியிடத்தில் இத்தகைய ஜனநாயகத்தை நிலைநாட்டுவதற்கான ஒரே வழி.

இது போன்ற பிரச்சனைகளின் போது ஐ.டி ஊழியர்கள் என்ன செய்ய வேண்டும் என்ற கேள்விக்கு மெப்ஸ் வளாகத்தில் பு.ஜ.தொமு சங்கத்தைச் சேர்ந்த ஐ.டி ஊழியர்கள் நடத்திய போராட்டத்தைப் பற்றி கற்பக விநாயகம் விளக்கினார். அதில் போலீஸ் எவ்வளவு தந்திரமாகவும், ஜனநாயக விரோதமாகவும் நடந்தது. “ஆர்ப்பாட்டம் நடக்கும் போது அனுமதி கேட்டிருந்தால் கொடுத்திருப்போமே” என்று ஏமாற்றி விட்டு பின்னர் போய் அனுமதி கேட்கும் போது “மெப்ஸ் அருகில் யாருக்குமே அனுமதி கொடுப்பதில்லை, கலெக்டர் எங்களுக்கு மெமோ கொடுத்து விடுவார்” என்றது, “மாற்று இடமாக தாம்பரம் சண்முகம் சாலையில் நடத்திக் கொள்ளுங்கள்” என்றது, அது தொடர்பாக எழுதிக் கொடுத்தால் “அதை எழும்பூர் கமிஷனர் அலுவலகத்தில் கொடுங்கள்” என்று சொன்னது என்று இழுத்தடித்தது பற்றி சொன்னார்.

போராட்டத்தில் கலந்து கொண்டால் நிறுவனத்தில் பிரச்சனைகள் ஏற்படுமா என்று விவாதிக்கப்பட்டது. வேலையை விட்டு நீக்குவது, பழிவாங்குவது போன்ற நடவடிக்கைகளை எண்ணி அஞ்சத் தேவையில்லை. எதேச்சதிகாரமாக ஒருவரை வேலையை விட்டு அனுப்பி விட முடியாது, சட்டரீதியான பாதுகாப்புகள் உள்ளன என்று கற்பக வினாயகம் விளக்கினார்.

standing order என்ற பெயரில் நிறுவன விதிகள் உருவாக்கப்பட வேண்டும். அதை மீறியதாக நிறுவனம் குற்றம் சாட்டினால் அது தொடர்பான எச்சரிக்கை கடிதம், குழு விசாரணை, ஊழியரின் கருத்து இவற்றின் அடிப்படையில்தான் நடவடிக்கை எடுக்க முடியும். அத்தகைய நடவடிக்கையையும் தொழிலாளர் துறைக்கு அனுப்பி அனுமதி பெற வேண்டும் என்ற வேலை நீக்க நடைமுறையை விளக்கினார். எச்.சி.எல் ஊழியர் 2 ஆண்டு சட்ட போராட்டத்துக்குப் பிறகு வேலையை திரும்பப் பெற்று 2 ஆண்டுகளுக்கான ஊதியம், பதவி உயர்வுகள், சம்பள உயர்வுகளும் வழங்கப்பட்டதையும் குறிப்பிட்டார்.

25 ஆண்டுகளாக உரிமைகள் கிடையாது, சட்டங்கள் பொருந்தாது, தனித்தனியாக யோசிக்க வேண்டும் என்று அடக்கி வைக்கப்பட்டிருக்கும் ஐ.டி ஊழியர்கள் பு.ஜ.தொ.முவின் முயற்சியின் மூலம் கடந்த 2 ஆண்டுகளாக தொழிற்சங்கமாக அணிதிரள ஆரம்பித்திருக்கிறார்கள். அனைத்து ஐ.டி ஊழியரகளும் சங்கமாக இணைந்து தாம் சந்திக்கும் சவால்களை எதிர்கொள்வதுதான் தீர்வு.

Permanent link to this article: http://new-democrats.com/ta/ndlf-it-wing-neduvasal-farmers-discussion/

Leave a Reply

Your email address will not be published.

%d bloggers like this:
Read more:
ஐ.டி அலுவலகங்களில் பெண்களுக்கான சட்ட உரிமை பற்றி…

சட்டம் இயற்றுவது என்றால் என்ன? சட்டமியற்றும் இடத்தில் இருப்பவர்கள் பற்றிய புரிதல் என்ன? சட்டத்தை நடைமுறைப்படுத்த போவது யார்? இப்படிப்பட்ட கேள்விகளுடன் தான் நாம் ஒவ்வொரு பிரச்சனையும்...

உழைக்கும் மக்கள், பசுக்கள், விவசாயிகள், ஐ.டி வாழ்க்கை

நாட்டின் பாதிக்கும் மேற்பட்ட உழைப்பாளர்களுக்கு வாழ்வு கொடுக்கும் விவசாயத்தை புறக்கணித்தது விஜயா போன்ற அடித்தட்டு மக்களின் வாழ்க்கையை நரகமாக்கியிருக்கிறது. கிடைத்த வேலை செய்து உயிர் வாழ முயற்சிப்பது,...

Close