“நீட்” தேர்வு : NDLF தெருமுனைக் கூட்டம் – சில கருத்துக்கள்

வாட்ஸ் ஆப் குழுக்களில் வெளியான கருத்துக்கள்

  1. நீட் தேர்வு என்பது ஏதோ வந்துவிட்டது அடுத்து ஆகவேண்டியதை பார்ப்போம் என்று நகர்ந்துசெல்லும் விசயமல்ல. போராடி வீழ்த்த வேண்டிய பிரச்சினை. அதை முழுமையாக விவரிப்பது இப்போது எனது நோக்கமல்ல. அதை எதிர்க்கும் பல்வேறு தரப்பு மக்களுக்கும் நமது ஆதரவை தெரிவிக்கவேண்டும். அதற்கு என்ன செய்யலாம்? என்று சிந்திப்பதே என் நோக்கம். அதுபோல தனிநபர்களாக நமது எதிர்ப்பை தெரிவிக்கவும் முடியாது. அதற்காக முன்முயற்சியுடன் இயங்கும் பலரது உதவியில் இன்றைக்கு காவல்துறையுடன் போராடி அனுமதி வாங்கியுள்ளார்கள் நமது நண்பர்கள். வரும் வெள்ளிக்கிழமை சோழிங்கநல்லூரில் தெருமுனைக் கூட்டத்திற்காக அனுமதி வாங்கியுள்ளார்கள். நீட் எதிர்ப்பு சிந்தனை உள்ளவர்கள் அனைவரும் இதில் நம்மை இணைத்துக்கொள்ள வேண்டும். கல்வியை ஒட்டுமொத்தமாக சந்தைப்பொருளாக்க நினைக்கும் அரசுகளின் நோக்கத்திற்கு எதிராக தமிழகம் முழுக்கும் நடக்கும் பல்வேறு போராட்டங்களுக்கு வழு சேர்க்கும் விதமாக நமது ஒற்றுமை அமையவேண்டும். அனைவரும் கலந்துகொள்ளுங்கள்.
  2. *குழு நண்பர்களே* பல கெடுபிடிகளுக்கு பிறகு கூட்டத்திற்கு அனுமதி வாங்கி உள்ளோம்.
    அனிதா தற்கொலை கண்டித்தும் மற்றும் நீட் தேர்வை ரத்து செய்யும்படியும் சங்கம் சார்பாக பல இடங்களில் விடியற்காலையில் எழுந்து சென்று போஸ்டர் ஒட்டியுள்ளோம்.
    இன்று இல்லை என்றாலும் இன்னும் சில நாட்களில் கண்டிப்பாக இதற்கு பலன் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இதை செய்திருக்கிறோம். இவ்வளவு உழைப்பு செலுத்தியமைக்கு மரியாதை செலுத்தும் விதமாகவும் உங்களுக்கும் இந்த சமூகத்தில் ஏற்படும் அநீதிகளுக்கு பங்குண்டு என்பதால் அதற்காக நாம் ஒன்றினைந்து நமது எதிர்பை பதிவு செய்யுங்கள் மறக்காமல் கூட்டத்திற்கு வந்துவிடுங்கள் நண்பர்களுக்கும் சொல்லுங்கள் கூட்டத்திற்கு அழைத்து வாருங்கள்.
  3. நீட் பற்றி அனிதா

4. நம்மிடத்தில் தனியார்மயத்தை அமல்படுத்துவதற்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதத்தில் ஒன்றுதான் இந்த “நீட்”. இது எதோ மருத்துவர்களுக்கான பிரச்சனை என்று நினைக்கவேண்டாம்.

நம்முடைய வாழ்நாளில் மருத்துவமனைக்கு செல்லாமல் இருந்துவிட முடியுமா? நம் பிள்ளைகள்தான் மருத்துவம் படிக்க விரும்பாமல் இருந்துவிடுவார்களா?

நம்மையும் நம்மை சுற்றியுள்ளவர்களையும் அடிமைகளாக்கி, தகுதி இருந்தாலும் கொடுப்பதை ஏற்றுக்கொள் என்ற அநீதியை எதிர்த்து தமிழகம் முழுமையும் மிகப்பெரிய அளவில் போராட்டங்கள் நடந்து கொண்டிருக்கிறது. இந்தப் போராட்டங்களில் கலந்து கொள்ள முடியவில்லை என்றாலும் போராடுபர்கள் நமக்காகவும் வருங்கால தலைமுறைக்காகவும் பல இன்னல்களை தாண்டி போராடும் அந்த தியாகிகளுக்கு துணை நிற்கும் வகையில் இந்த கூட்டத்தில் உங்களையும் இணைத்துக்கொண்டு நாம் ஒற்றுமையாக சேர்ந்து குரல்கொடுப்போம்.

பலவித காரணங்கள் சொல்லி தவிர்க்க நினைப்பவர்கள் கொஞ்சம் அனிதாவை சிந்தித்து பாருங்கள். அவர்கள் கடைசியாக பேசிய உரையை கேட்டுப்பாருங்கள். நமக்காகத்தான் அவர் தற்கொலை ஆயுதத்தை பயன்படுத்தியிருக்கிறார் என்பது புரியும். மனிதம் உள்ள யாரும் அதை பார்த்து கண்கலங்காமல் இருக்க முடியாது.

ஐ.டி ஊழியர்கள் பெரும்பாலும் பேசுவார்கள் தவிர நடைமுறையில் இறங்கி செய்வதில்லை சுயநலவாதிகளாக இருக்கிறார்கள் என்பது பெரும்பான்மை கருத்து அப்படி ஒரு கருத்தை உடைத்தெறியும் வகையும் நாம் ஒன்றிணைந்து அதை பொய்யாக்க வேண்டும்.

நீட் என்ற அநீதியை எதிர்த்து ஐ.டி ஊழியர் சார்பாக நம்முடைய எதிர்ப்பை காட்டுவோம் மறக்காமல் கூட்டத்திற்கு வந்துவிடுங்கள் நண்பர்களே!

5. பொய்: மருத்துவ கவுன்சில் 2010-ம் ஆண்டே பாடத்திட்டத்தை வெளியிட்டு விட்டது. நாம் தான் பாடத்திட்டத்தை மேம்படுத்தவில்லை.

உண்மை: 2010-ம் ஆண்டே பாடத்திட்டம் அறிவிக்கப்பட்டாலும், மருத்துவ கவுன்சில் நீட் விதிமுறைகளை அறிவித்த உடனேயே தமிழ்நாடு உட்பட பல்வேறு மாநிலங்களும், தனியார் மருத்துவக் கல்லூரிகளும் உயர்நீதிமன்றம், உச்ச நீதிமன்றத்திற்கு சென்று தடையாணை வாங்கி விட்டன. ஒன்றல்ல, இரண்டல்ல 115 வழக்குகள் நீட் விதிமுறைகளை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்டன. பிறகு அனைத்து வழக்குகளும் உச்ச நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு உச்ச நீதிமன்றத்தால் விசாரிக்கப்பட்டது. நீட் தேர்வை எதிர்க்கும் ஒரு மாநிலம், நீதிமன்றத்தின் மூலம் தற்காலிக நிவாரணம் பெற்ற ஒரு மாநிலம், நிரந்தர தீர்வை உச்ச நீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பின் மூலம் எதிர்பார்த்திருக்கும் ஒரு மாநிலம் எதற்காக வெறும் ஒரு தன்னாட்சி பெற்ற அமைப்பின் பாடத்திட்டத்தை ஏற்று மாற்ற வேண்டும்?

பிறகு 2013-ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் நீட் தேர்வு அரசியலமைப்புச்சட்டத்திற்கே விரோதமானது என்று இறுதித் தீர்ப்பும் வழங்கி தமிழ்நாட்டிற்கு நியாயம் வழங்கி விட்டது. பிறகு எதற்கு 2010-ம் ஆண்டு மருத்துவ கவுன்சில் பூசாரிகள் நீட் வேண்டும் என்று பாடத்திட்டத்தை அறிவித்தவுடன் என்றவுடன் ஒரு மாநிலம் கிடுகிடுவென்று நடுங்கி பாடத்திட்டத்தை மாற்ற வேண்டுமா?

பொய்: நீட் தேர்வு சட்டத்தின் படியும், உச்ச நீதிமன்ற தீர்ப்பின் படியே நடத்தப்படுகிறது. எனவே நாம் மதிக்க வேண்டும்.

உண்மை: 2013-ம் ஆண்டிலேயே மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு நீட் அரசியலமைப்புச்சட்டத்திற்கு எதிரானது என்று தீர்ப்பளித்து விட்டது. இந்த அமர்வில் ஒருவர் மட்டும் (அனில் தவே) இந்த தீர்ப்பை ஏற்றுக்கொள்ளாமல் வேறுபட்ட தீர்ப்பை (dissenting view) அளிக்கிறார். பிறகு இந்த தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்படுகின்றன. இதற்கிடையில் இந்த தீர்ப்பை அளித்தவர்களில் ஒருவரான தலைமை நீதிபதி அல்தாமஸ் கபீர் ஓய்வு பெற்று விடுகிறார். பிறகு வேறு வேறு அமர்வுகளுக்கு மாற்றப்பட்டு இறுதியாக இதே போன்ற பிரச்சினையை விசாரிக்கும் ஒரு வழக்கு அரசமைப்புச்சட்ட அமர்வில் இருப்பதால் இந்த சீராய்வு மனுவும் ஐந்து நீதிபதிகள் அடங்கிய அந்த அரசமைப்புச்சட்ட அமர்விற்கு மாற்றப்படுகிறது.

அந்த அரசமைப்புச்சட்ட அமர்வு சீராய்வு மனுவினை சீராய்வு மனுக்களை விசாரிக்கும் அடிப்படை கோட்பாடுகளுக்கே எதிராக ஏப்ரல் 11, 2016-ல் மனுவினை அனுமதித்து 2013 தீர்ப்பினை திரும்ப பெற்று புதிதாக ஒரு அமர்வு திரும்பவும் விசாரிக்க வேண்டும் என்று உத்தரவிடுகிறது. [இந்த ஐந்து நீதிபதிகளுள் நமது மாநிலத்தை சேர்ந்த மாண்புமிகு பானுமதியும் ஒருவர்!] அந்த புதிய அமர்வு இன்னும் அமைக்கப்படவேயில்லை. ஒரே வேளை புதிய அமர்வு திரும்பவும் விரிவாக விவாதித்து நீட் தேவையில்லை என்று தீர்ப்பளித்தால் இது வரை நிகழ்ந்த அநியாயங்களுக்கும் அனிதாவின் படுகொலைக்கும் யார் பொறுப்பேற்பது?

ஏப்ரல் 11, 2016-ல் சீராய்வு மனு அனுமதிக்கப்பட்ட உடனேயே, சங்கல்ப் அறக்கட்டளை எனும் நிறுவனம் நீட் தேர்வுகளை நடத்துவதற்கு பொது நல வழக்கு தாக்கல் செய்கிறது. இருபது நாட்களுக்குள்ளாகவே உச்ச நீதிமன்றத்தில் ஏப்ரல் 28, 2016-ம் தேதியே நாடு முழுவதும் நீட் தேர்வுகளை நடத்துவதற்கு உத்தரவிடுகிறது. நன்றாக கவனியுங்கள். தலைமை நீதிபதி அமர்வில் 115 பேர் தாக்கல் செய்த வழக்குகளில் விரிவாக வாதம் செய்து அளிக்கப்பட்ட பெரும்பான்மை தீர்ப்பை அதில் முரண்பட்டு தீர்ப்பளித்த ஒருவரே மூத்த நீதிபதியாக இருந்து அதை திரும்ப பெறுகிறார்! எவ்வளவு நியாயம் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். எனவே, 2013-ல் புதைக்கப்பட்ட நீட் பூதம் கொல்லைபுற வழியாக 2016-ஆம் ஆண்டு உயிர்பெற்று வருகிறது. பிறகு ஜெயலலிதாவின் அழுத்தத்தால் அந்த ஆண்டு தமிழ்நாட்டிற்கு விதிவிலக்கு அளிக்கப்படுகிறது.

பொய்: நீட் தேர்வு விதிவிலக்கு சட்டத்திற்கு அனுமதி மறுத்தது உச்ச நீதிமன்றம் தான். பாஜக அரசிற்கும் இதற்கும் சம்பந்தமில்லை.

உண்மை: ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய் என்பது இது தான். நாம் நிரந்தர விதிவிலக்கு கேட்டு அனுப்பிய சட்டங்களுக்கு குடியரசுத்தலைவர் அனுமதி அளிக்கவில்லை. காரணம் பாஜக அரசு. அந்த சட்டத்திற்கு அப்போதே குடியரசுத்தலைவர் அனுமதி அளித்திருந்தால் உச்ச நீதிமன்றம் ஒன்றுமே செய்திருக்க முடியாது. பிறகு நிர்மலா சீதாராமனின் ஒரு வருட விதிவிலக்கு கோரினால் பரிசீலிப்போம் என்று சொல்லி அதற்கு அட்டர்னி ஜெனரல் சம்மதித்து மூன்று அமைச்சகங்கள் சம்மதித்த பிறகும் பிற அமைச்சகங்களின் அழுத்தத்தால் உச்ச நீதிமன்றத்தில் அட்டர்னி ஜெனரல் தனது நிலையை மாற்றிக் கொள்கிறார். எனவே, மத்திய அரசின் நிலைப்பாட்டை அடுத்தே உச்ச நீதிமன்றம் நளினி சிதம்பரத்தின் மனுவை அனுமதித்து நீட் தேர்வின் படி கவுன்சிலிங்கை நடத்துவதற்கு உத்தரவிடுகிறது. எனவே, முழுக்க முழுக்க நீட் நம் மீது திணிக்கப்பட்டதற்கு பாஜகவும் நமது கையாலாகாத அரசும் தான் காரணம்.

பொய்: மாநில அரசு கல்வித்தரத்தை மேம்படுத்தி இருந்தால் நீட் தேர்விற்கு பயப்படத்தேவையில்லை.

உண்மை: எத்தனை பேர் சி.பி.எஸ்ஈ-ல் படித்த மாணவர்கள் கோச்சிங் செல்லாமல் நீட் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள் என்பதை சொல்லுங்கள். பிரச்சினை சிபிஎஸ்ஈ யா மாநிலப் பாடத்திட்டமா என்பது கிடையாது. இங்கு நடந்து கொண்டிருப்பது காசிருப்பவனுக்கும் இல்லாதவனுக்குமான போராட்டம். காசிருப்பவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து கொண்டு இல்லாதவர்களை தரம் தரம் என்று மட்டம் தட்டுவது அயோக்கியத்தனம். நீட் தேர்வில் தகுதி 50% (percentile) தேர்ச்சி பெற்றிருந்தாலே ஒரு பணக்கார மாணவன் தனியார் மருத்துவ கல்லுரியில் காசு கட்டி மருத்துவராக முடியும். 50% மதிப்பெண் வாங்குபவன் தரமான மாணவன். மாநிலப்பாடத்திட்டத்தில் படித்து 199 வாங்குபவர்கள் தரமில்லாதவர்கள் என்று சொல்வதற்கு சமூக விரோதியாக இருந்தால் மட்டுமே முடியும்.

Permanent link to this article: http://new-democrats.com/ta/neet-ndlf-public-meeting-some-thoughts/

Leave a Reply

Your email address will not be published.

%d bloggers like this:
Read more:
வேதாரண்யம் அம்பேதகர் சிலை உடைப்பு : புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணியின் (ஐ.டி. ஊழியர்கள் பிரிவு) கண்டன அறிக்கை

வேதாரண்யம் பகுதியில் முக்குலத்தோர் புலிப்படை என்ற சாதிவெறி அமைப்பை சேர்ந்த, சமூகவிரோதிகள், அண்ணல் அம்பேத்கரின் சிலையை தகர்த்துள்ளனர். அத்துடன் அந்தக் காட்சியை காணொளியின் மூலம் சமூக வலைத்தளங்களில்...

புலம்பெயர் தொழிலாளர்களின் கண்ணியம் காக்கப்பட வேண்டும்.

உலகத் தரம் வாய்ந்த இந்த கட்டிடங்களை நமக்காக எழுப்பியவர்கள் யார்? பொருளாதாரத்தில் முன்னேறிய நாடுகளின் வசதிகளை மலிவு விலையில் நமக்காக ஏற்படுத்திக் கொடுத்தது யாருடைய உழைப்பு? நாம்...

Close