இந்தப் பதிவு நமது சங்கத்தின் ஆதரவாளர் ஒருவர் அனுப்பியது.
தமிழகத்துக்கும் உழைக்கும் மக்களுக்கும் எதிரான “நீட்” தேர்வை எதிர்த்து போராடி இறுதியில் உயிரிழந்த அனிதாவுக்காக தமிழகமெங்கும் மாணவர்களும், இளைஞர்களும், பொது மக்களும் கொதித்து போயிருக்கும் நிலையில் “சில கேள்விகளும் பல பதில்களும்” என்ற தலைப்பில் “நீட்” தேர்விற்கு ஆதரவாக ஒரு வாட்ஸ் ஆப் பதிவு உலாவுதை கண்டோம். (அந்த வாட்ஸ் ஆப் பதிவு இறுதியில் தரப்பட்டுள்ளது).
இந்த வாட்ஸ்-ஆப் பதிவை உலாவ விட்ட பா.ஜ.க-ஆர்.எஸ்.எஸ் ஆதரவாளர்களின் பொய் பிரச்சாரத்தை அம்பலப்படுத்துவோம்.
பொய் 1 : “நீட்” தேர்வில் அனிதா குறைவான மதிப்பெண் எடுத்து உள்ளார். (எனவே அவருக்கு திறமையில்லை)
எங்கள் வீட்டு பிள்ளைகள் படித்த மாநில பாடத் திட்டத்தில் கேள்வி கேட்கப்படவில்லை என்பது முதல் பிரச்சனை. உங்கள் வீட்டு பிள்ளைகள் மத்திய பாடத்திட்டதில் படித்து உள்ளார்கள். அவர்கள் எல்லாம் அவ்வளவு பெரிய அப்பாடக்கர்னா தமிழக மாநில பாடத்திட்டதில் தேர்வு நடத்த சொல்லி எங்க வீட்டு பிள்ளைகளுடன் போட்டி போட வேண்டியதுதானே.
தான் படிக்கும் பாடத்திட்டதில் நடத்தப்படும் தேர்வுக்கே பல லட்சம் செலவழித்து, பல வருசம் கோச்சிங் போயியும் பல தகிடுதத்தம் செய்து பாசாகும் நீங்கள் குண்டு பல்பு வெளிச்சத்தில் பட்டினியுடன் படித்து மதிப்பெண் எடுக்கும் எங்க வீட்டு பிள்ளைகளை எகாத்தாளமாய் பேசுகிறீர்களே. உங்களை எதைக் கொன்டு அடிக்க?
மேலும், சரியான விடையை தேர்வு செய் என்ற தேர்வு முறையே மோசடியானது. அது திறமையையோ அறிவையோ சோதிப்பது இல்லை என்கிறோம் நாங்கள். அதனால்தான், நுழைவுத் தேர்வையே ரத்து செய்து விட்டு +2 மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ, பொறியியல் கல்லூரி சேர்க்கையை நடத்துகிறோம்.
இந்த “நீட்” தேர்வு மூலம், ஐ.ஐ.டி நுழைவுத் தேர்வுக்கு தயாரிப்பதற்கு ராஜஸ்தான் கோட்டா முதல் ஹைதராபாத் வரை நூற்றுக்கணக்கான தனியார் பயிற்சி நிலையங்களில் நடைபெறும் ரூ 22,000 கோடி வணிகத்தை இன்னும் விரிவாக்கி கல்வியை கடைச்சரக்காக்குவதுதான் உங்கள் நோக்கம்.
11, 12-ல் படிக்கிற பாடத்தை ஒழுங்காக படித்து தேர்வில் மதிப்பெண் பெற்று அந்த மதிப்பெண்ணின் அடிப்படையில் உயர்கல்வியில் சேர மாணவர்களை ஊக்குவிக்க வேண்டும் என்பது எங்கள் நோக்கம்.
பொய் 2 : தனியார் கல்லுரிகள் கொள்ளை அடிக்கும் போது ஏன் இந்த அரசியல் கட்சிகள் கேட்கவில்லை

கல்வி தனியார் மயத்தை தொடர்ந்து எதிர்த்து வருகின்றன புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி போன்ற புரட்சிகர மாணவர் அமைப்புகள். அவர்கள் இன்று தனியார் கல்விக் கொள்ளையை காரணம் காட்டி திணிக்கப்படும் “நீட்” தேர்வை எதிர்த்து கல்வியை மக்களே கைப்பற்றுவோம் என்று போராடுகிறார்கள்
ஏதோ பா.ஜ.க கல்விக் கொள்ளைக்கு எதிரான கட்சி மாதிரி காட்டி கொள்ளும் நரி தந்திரத்தை பாருங்கள்.
ஊழல் குற்றச்சாட்டுகளால் அம்பலப்பட்டுப் போன இந்திய மருத்துவ கவுன்சிலுக்குப் பதிலாக வேறொரு அமைப்பை உருவாக்கும் வரை, அதன் நடவடிக்கைகளைக் கண்காணிப்பதற்காக உச்சநீதி மன்ற முன்னாள் நீதிபதி லோதாவின் தலைமையில் மூன்று பேர் கொண்ட கமிட்டியையும் அமைத்திருக்கிறது.
இந்தக் கமிட்டி சமீபத்தில் இந்திய மருத்துவ கவுன்சில் அங்கீகாரம் அளிக்க மறுத்த 26 தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு, மாணவர்களைச் சேர்த்துக் கொள்வதற்கு அனுமதி அளித்திருக்கிறது. இந்தக் கல்லூரிகளுள் உ.பி. மாநிலத்தில் அமைந்துள்ள சரசுவதி மருத்துவக் கல்லூரி, ம.பி.யில் அமைந்துள்ள சாக்ஷி மருத்துவக் கல்லூரி ஆகிய இரண்டும் இந்திய மருத்துவ கவுன்சில் சுட்டிக் காட்டிய குறைபாடுகளை எங்கள் கல்லூரி சரி செய்யவில்லை என அவர்களே ஒப்புக்கொண்டுள்ள நிலையில், அவற்றுக்கும் சேர்த்து அங்கீகாரம் அளித்த கூத்தையும் நடத்தியிருக்கிறது, லோதா கமிட்டி.
நாட்டின் மருத்துவர் தேவையை ஈடுசெய்யும் நல்லெண்ணத்தில்தான் இந்த அங்கீகாரத்தை அளித்திருப்பதாகக் கூறி, தனது அயோக்கியத்தனத்திற்குப் பட்டுக்குஞ்சமும் கட்டிவிட்டது.
ஏன் அடுத்த மாநிலத்திற்கு போகணும், தற்போது பா.ஜ.க-வுக்கு சொம்பு தூக்கும் கிருஷ்ணாசாமி தனியார் மருத்துவக் கல்லூரி தொடங்கப் போவது கல்வி சேவைக்கா? லாபம் சம்பாரிக்கவா அவர் நீட்டுக்கு ஆதரவாக பேசுவதன் நோக்கம் லாபம் பார்க்கத்தானே!
முன்னதாக எஸ்.ஆர்.எம் பச்சமுத்து, ஏ.சி சண்முகம் என்று வரிசையாக தனியார் கல்வி முதலாளிகளோடு கூட்டு சேர்ந்து தேர்தலுக்கு நிதியும், தேர்தலில் ஓட்டுகளையும் பொறுக்கும் பா.ஜ.கதான் தனியார் மயத்தைப் பற்றி இப்போது பேசுகிறது.
“கடந்த ஆண்டு 10 இலட்ச ரூபாயாக இருந்த எஸ்.ஆர்.எம். மருத்துவக் கல்லூரியின் ஆண்டு கல்விக் கட்டணம் நீட் தேர்வுக்குப் பிறகு 21 இலட்சமாகவும்; சிறீராமச்சந்திரா மருத்துவப் பல்கலைக்கழகம் மற்றும் செட்டிநாடு மருத்துவக் கல்லூரிகளில் ஆண்டு கல்விக் கட்டணம் 15 இலட்ச ரூபாயாக அதிகரித்துள்ளதென்றும், இதற்கு அப்பால், ஒரு இலட்ச ரூபாய் முதல் மூன்று இலட்ச ரூபாய் வரை பிற கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட்டிருப்பதாகவும்; இவற்றுக்கும் மேலே ஒவ்வொரு கல்லூரியும் தனது தரத்திற்கு ஏற்ப 40 இலட்ச ரூபாய் முதல் 85 இலட்ச ரூபாய் வரையிலும் நன்கொடை வசூலிப்பதாகவும்” டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழ் செய்தி வெளியிட்டிருக்கிறது.
இந்திய மருத்துவ கவுன்சிலைக் கலைத்துவிட்டு, அதனிடத்தில் தேசிய மருத்துவ கமிசனை அமைக்க வேண்டும் எனப் பரிந்துரைத்துள்ள நிதி ஆயோக், தனது பரிந்துரையில், ”இலாபம் கிடைத்தால்தான் கல்லூரிகள் தொடங்க தனியார் முன்வருவார்கள். அதனால், தனியார் மருத்துவக் கல்லூரிகளின் கல்விக் கட்டணத்திற்கு அரசு கட்டுப்பாடுகள் விதிக்கக் கூடாது. கட்டுப்பாடுகளை நீக்கிவிட்டால், மாணவர் சேர்க்கையில் மோசடிகளுக்கு இடமிருக்காது” எனக் கூறியிருக்கிறது. தனியார் மருத்துவக் கல்லூரிகளின் சட்டவிரோத நன்கொடையை ஒழிப்பதற்கு அதனைச் சட்டபூர்வமாக்குவதுதான் வழி என்பதுதான் இந்தப் பரிந்துரையின் பொருள்.
இப்போது நீட் தேர்வை அமுல் படுத்த சொன்ன மருத்துவ கவுன்சில் அதிகாரியின் லட்சணத்தை பார்ப்போம்
கேத்தன் தேசாய் ஏற்கனவே மருத்துவ கவுன்சில் தலைராக இருந்த பொழுது ஊழல் செய்து மாட்டி கொன்டவர். 2010-ல் அவர் வீட்டில் இருந்து 500 கிலோ தங்கம் கைப்பற்றப்பட்டது. கணக்கில் வராத சொத்து மதிப்பு ரூ 2500 கோடி.
2016–17-ம் ஆண்டுக்கான உலக மருத்துவக் கழகத் தலைவராக கேதன் தேசாய் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். அவர் மீது சி.பி.ஐ. போட்டிருக்கும் கிரிமினல் வழக்கு ரத்து செய்யப்பட்டு விட்டதாகப் பொய் சொல்லி, தேசாயை இந்தப் பதவிக்கு முன் மொழிந்திருக்கிறது இந்திய மருத்துவ கவுன்சில். இந்த அசிங்கமான உண்மையை ராய்ட்டர் நிறுவனம் அம்பலப்படுத்தியிருக்கிறது.
ராய்ட்டர் புலனாய்வு தேவைப்படாத வேறொரு உண்மையும் இருக்கிறது. 2013-ல் கேதன் தேசாய்க்கு குஜராத்தில் மறுவாழ்வு தரப்பட்டபோது, அங்கே முதல்வராக இருந்தவர் திருவாளர் மோடி. தேசாய்க்கு சர்வதேச கவுரவம் வழங்கப்பட்டிருக்கும் இந்த தருணத்தில், பிரதமராக இருப்பவரும் திருவாளர் மோடிதான்.
தகுதி வாழ்க, திறமை வாழ்க, நல்லொழுக்கம் வாழ்க, நீட் வாழ்க! பாரத் மாதா கி ஜெய்!
பொய் 3 : புதிய தலைமுறை சேனல் எஸ்.ஆர்.எம் கல்விக் கொள்ளையை காட்டுமா?
இன்று பொது மக்களிடையே சமூக ஊடகங்கள் மூலம் விழிப்புணர்வு வந்து “நீட்”டுக்கு எதிராக போராடுகிறார்கள். வேறு வழி இல்லாமல் கார்ப்பரேட் ஊடகங்கள் அதை ஓரளவேனும் வெளிப்படுத்துகிறார்கள். அதைப் பார்தது இவர்களுக்கு கோபம் வருகிறது.
ஏன் எஸ்.ஆர்.எம் பச்சமுத்து கல்வி கொள்ளையன் என இப்போதுதான் தெரியுமா? பா.ஜ.க அவருடன் தேர்தல் கூட்டனி வைத்து கூடி குலாவிய போது தெரியாதா? மோடியை சிறந்த நிர்வாகி என புகழ்ந்த போது தெரியாதா? அவர் போட்டுக் கொடுத்த மேடையில் ஏறி தேர்தல் பிரச்சாரம் செய்த போது தெரியாதா?
(இந்த இடத்தில் கவன் படம் நினைவுக்கு வந்தால் நீங்கள் விழித்து கொண்டிருக்கிறீர்கள் என அர்த்தம்)
பொய் 4: எஸ்.ஆர்.எம் கல்வி நிறுவனம் ஏன் “நீட்”டுக்கு எதிராக உச்ச நீதிமன்றம் போக வேண்டும்? ஏனென்றால் நீட் கல்வி கொள்ளையர்களுக்கு எதிரானது என வாதம் செய்கிறார்
பதில். அது தான் எங்களுக்கு புரியமாட்டேங்குது, இந்தியா முழுவதும் உள்ள எல்லா கல்வி கொள்ளையனும் நீட்டை ஆதரிக்கும் போது இவன் ஏன் வித்தியாசமா நடந்தான் என்று. ஒரு வேளை உங்கள் பிக் பாஸ் மோடி எஸ்.ஆர்.எம்-க்கு கொடுத்த ஸ்பெஷல் டாஸ்க்காக கூட இருக்கலாம். இதன் முலம் கல்வி கொள்ளையர்களுக்கு எதிரானதாக நீட்டை காட்ட முடியும் அல்லவா!

எஸ்.ஆர்.எம் பச்சமுத்து கல்வி கொள்ளையன் என இப்போதுதான் தெரியுமா? பா.ஜ.க அவருடன் தேர்தல் கூட்டனி வைத்து கூடி குலாவிய போது தெரியாதா?
உயர்கல்வியை தனியார்மயமாக்க வேண்டும் என்ற கொள்கையை ஏற்றுக் கொண்டு மருத்துவத்தில் மட்டுமின்றி அனைத்துத் துறைகளிலும் அமல்படுத்தி வரும் மோடியின் ஆதரவாளர்கள்தான் இன்றைக்கு தனியார் கொள்ளையை பற்றி பேசுகிறார்கள்.
கல்வி மட்டுமில்லை, ரேசன் கடை கூட அரசு நடத்தக் கூடாது, தனியாரிடம் மக்கள் வாங்கிக் கொள்ள வேண்டும் என்று பேசுபவர்கள் இவர்கள்.
மாறாக, கல்வி தனியார் மயத்தை தொடர்ந்து எதிர்த்து வருகின்றன புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி போன்ற புரட்சிகர மாணவர் அமைப்புகள். அவர்கள் இன்று தனியார் கல்விக் கொள்ளையை காரணம் காட்டி திணிக்கப்படும் “நீட்” தேர்வை எதிர்த்து கல்வியை மக்களே கைப்பற்றுவோம் என்று போராடுகிறார்கள்.
5. பொய்: நீட் தேர்வு இட ஒதுக்கீடு உள்ளிட்ட சலுகைகளைப் பறித்துவிடவில்லை
பெயரளவில் இட ஒதுக்கீட்டை பறித்து விடவில்லைதான்.
ஆனால், அந்த இட ஒதுக்கீட்டை இனி யார் அனுபவிப்பார்கள் என்பதுதான் முக்கியமான கேள்வி. நீட் தேர்விற்கு முன்னதாகவே, கல்வி தனியார்மயம் மூலம் அரசுப் பள்ளிகளில் படித்த கிராமப்புற ஏழை மாணவர்கள் தமிழக மருத்துவக் கல்லூரிகளில் சேரும் வாய்ப்பு பறிபோய்விட்டது. கடந்த பத்தாண்டுகளில் வெறும் இருநூற்று சொச்சம் அரசுப் பள்ளி மாணவர்கள்தான் அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்திருப்பதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இந்த அவலத்தை நீட் தேர்வின் மூலம் நடைபெறும் மாணவர் சேர்க்கை மேலும் தீவிரப்படுத்தும்.
குறிப்பாக, சி.பி.எஸ்.இ. பள்ளிகளிலும், ரூ 40,000, 50,000 கொடுத்து தனியார் பயிற்சிப் பள்ளிகளிலும் சேர வாய்ப்புள்ள நல்ல வசதி படைத்த பார்ப்பன, பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட சாதிகளைச் சேர்ந்த மாணவர்கள் மட்டுமே இனி தமிழகத்தில் மருத்துவராக முடியும்.
நீட் தேர்வானது, மருத்துவக் கல்வி பயிலும் வாய்ப்பைப் பணக்கார வீட்டு வாரிசுகளின் தனியுரிமையாக்குகிறது. பணக்கார மாணவர்களுக்கு நூறு சதவீத இட ஒதுக்கீடு என்ற புதிய சமூக நீதியை மருத்துவக் கல்வியில் புகுத்துகிறது. மருத்துவக் கல்லூரிகளின் கட்டணக் கொள்ளையைத் தடுப்பதாக கூறிக்கொண்டு வழங்கப்பட்ட தீர்ப்பு அதற்கு நேர் எதிரான விளைவையே அளித்திருக்கிறது. இந்த பணக்கார வாரிசுகளும், பார்ப்பன – ஆதிக்க சாதி மேட்டுக்குடியினரும் மருத்துவர்களாகி அரசு மருத்துவமனைகளில் சேர்ந்து ஏழைகளுக்குச் சேவை செய்யப்போவதில்லை. அமெரிக்காவுக்குப் பறப்பது எப்படி என்பதுதான் அவர்களது கவலையாக இருக்கும்.
பொய் 6: பிற மாநிலங்கள் நீட்டை எதிற்க்காத போது நீங்கள் ஏன் எதிர்க்கிறீர்கள்?

“எங்களுக்கு ரோசம் இருக்கு. எதிர்கால தலைமுறை மீது அக்கறை இருக்கிறது. அதனால் தான் நாங்கள் ஆரம்பத்தில் இருந்தே உங்களை எதிர்த்தோம்”
எங்களுக்கு ரோசம் இருக்கு. எதிர்கால தலைமுறை மீது அக்கறை இருக்கிறது. அதனால் தான் நாங்கள் ஆரம்பத்தில் இருந்தே உங்களை எதிர்த்தோம்.
அன்றைக்கு இந்தி எதிர்ப்பு போராட்டம் நடத்திய போது ஏன் இது என்று தெரியாமல் வேடிக்கை பார்த்த எங்க கர்நாடகா, கேரளா பங்காளிங்க இப்ப நாங்கள் செய்தது சரிதான் என உணர்ந்து தார் அடிச்சி இந்தியை அழிக்கிறாங்க.
இப்ப “நீட்”டில் உன் யோக்கியதை என்ன? அனைத்து இந்தியாவிற்கும் ஒரே தேர்வு எனக் கூறி பின் வடநாட்டு மாணவர்க்கு எளிமையான கேள்விதாளும், தென்நாட்டு மாணவர்களுக்கு கடினமான கேள்வித் தாளும் தந்த நோக்கம் என்ன?
“நீட்”டினால் வட இந்திய மாணவர்களின் எண்ணிக்கையும் தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில் அதிகரிக்கும். தமிழகத்திலுள்ள ரயில்வே அலுவலகங்களிலும், மைய அரசின் அலுவலகங்களிலும் வட இந்திய ஊழியர்களின் எண்ணிக்கை பெருத்துள்ளதைப் போன்ற நிலையைக் கூடிய விரைவிலேயே அரசு மருத்துவக் கல்லூரிகளிலும், அரசு மருத்துவமனைகளிலும் தமிழக மக்கள் காணக் கூடும்.
“நீட்” தேர்வும், முதுகலை மருத்துவப் படிப்புகளில் தமிழக அரசு மருத்துவர்களுக்கு அளிக்கப்பட்டுவந்த இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டிருப்பதும் தமிழக அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்களின், சிறப்பு மருத்துவர்களின் பற்றாக்குறைக்கு இட்டுச் சென்று, ஏழை நோயாளிகளின் உயிர் வாழும் உரிமையைப் பறிக்கும் நிலையை உருவாக்கும். தரமான, தகுதியான மருத்துவர்கள் என்பது இறுதியில் ஏழை மாணவர்களுக்கும் ஏழை நோயாளிகளுக்கும் அமைகிறது.
அரைப் பொய் 7: அரசியல் கட்சிகள் “நீட்”டை எதிக்க காரணம் தனியார் கல்வி நிறுவனத்தின் மூலம் கிடைக்கும் லாபம்
உங்கள் மோடி யோக்கியர் என்றால் அனைத்து தனியார் கல்வி நிறுவனங்களையும் அரசுடமை ஆக்க வேண்டியதுதானே!
உலக வங்கியின் உத்தரவுக்கு கட்டுப்பட்டு அனைத்து கல்வி நிறுவனங்களையும் தனியார்கையில் ஒப்படைப்பேன் என காட் ஒப்பந்ததில் காட்டிய இடத்தில் எல்லாம் கை எழுத்து போட்டு வந்த மோடியை பக்கத்தில் வைத்துக் கொண்டு நீங்கள் எல்லாம் தனியார் கல்வி கொள்ளை பத்தியும் அரசியல் கட்சி யோக்கியதை பத்தியும் பேசவே கூடாது
நீங்கள் நடத்தும் “நீட்” தேர்வே ஊழல் செய்யத்தான். மத்திய பிரதேசத்தில் பா.ஜ.க நடத்திய “வியாபம்” ஊழல் ஊரறிந்து சிரித்த உண்மை.
“நீட்”டில் நடந்த ஊழலை பற்றி படியுங்கள்.
அரைப்பொ ய் 8 : கல்வித் துறையில் என்ன செய்ய வேண்டும் என ஆலோசனை

நீட் தேர்வு, தமிழகத்திலுள்ள மருத்துவக் கல்லூரிகளுக்கு, குறிப்பாக அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு மாணவர்களைச் சேர்க்கும் உரிமையைத் தமிழக அரசிடமிருந்து தட்டிப் பறிக்கிறது என்பதுதான் மையமானது
அவர் சொல்லும் யோசனை என்னவெண்றால் அரசுப் பள்ளியே தனியார் கோச்சிங் கிளாஸ் நடத்தணுமாம். அதாவது “கோச்சிங் கான்ராக்ட்” என்று அம்பிகள் அரசுப் பணத்தை லவுட்டிக் கொன்டு போக திட்டம் போட்டு தருகிறார்.
சி.பி.எஸ்.இ. பள்ளிகள் நீட் தேர்வுக்கான தனிப்பயிற்சி வகுப்புகளை நடத்தக் கூடாதென விதி இருப்பதாகக் கூறப்படுகிறது. சி.பி.எஸ்.இ. நிர்வாகம் அதனைக் கண்டுகொள்ளவில்லை. நீட் தேர்வு பயிற்சிக்கு ரூ 40,000, ரூ 50,000 எனக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மொத்தத்தில், நீட் தேர்வு கல்விக் கொள்ளையை ஒழிக்கவில்லை. மாறாக, அதனைச் சட்டபூர்வமாக்கியிருப்பதோடு, கொள்ளைக்கு புதிய வழிகளையும் திறந்துவிட்டிருக்கிறது.
தமிழகத்தில் நீட் தேர்வு பத்தாம்பசலித்தனமாகவும் முட்டாள்தனமாகவும் எதிர்க்கப்படுவது போலக் கற்பிதம் செய்துகொண்டு, ‘தமிழக மாணவர்களின் திறமையைக் குறைத்து மதிப்பிடக்கூடாது, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பாடங்களை முறையாக நடத்தினால் தமிழக மாணவர்கள் நீட் தேர்வை ஊதித் தள்ளிவிடுவார்கள், தமிழகப் பாடத்திட்டத்தை சி.பி.எஸ்.இ.-க்கு இணையாகத் தரம் உயர்த்த வேண்டும்’ என்றெல்லாம் நீட் தேர்விற்கு ஆதரவாகப் பல்வேறு வாதங்கள் முன்வைக்கப்படுகின்றன.
நீட் தேர்வை எதிர்ப்பதற்குத் தமிழக மாணவர்களின் திறமையோ, தமிழக பாடத் திட்டத்தின் தரமோ முதன்மையான காரணமல்ல. நீட் தேர்வு, தமிழகத்திலுள்ள மருத்துவக் கல்லூரிகளுக்கு, குறிப்பாக அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு மாணவர்களைச் சேர்க்கும் உரிமையைத் தமிழக அரசிடமிருந்து தட்டிப் பறிக்கிறது என்பதுதான் மையமானது. இந்த அநீதியை மிகவும் நைச்சியமான வழியில் மைய அரசும், நீதிமன்றங்களும் செய்கின்றன.
‘மாநில பாடத்திட்டம் தரமற்றது, மாநில அரசு நடத்தும் தேர்வுகள் தரமற்றவை; மைய பாடத்திட்டம், தேசியத் தேர்வுகள் என்றால் தரமானது; மாநில அரசு நிர்வாகம் ஊழல்மயமானது, சி.பி.ஐ. போன்ற மைய அரசின் அமைப்புகள் அப்பழுக்கற்றவை; மாநிலக் கட்சிகள், குறிப்பாக திராவிடக் கட்சிகள் ஊழலும், முறைகேடுகளும் நிரம்பியவை, தேசியக் கட்சிகள் நேர்மையானவை’ என்றவாறு ஒரு பொய்யை தமிழகப் பார்ப்பனக் கும்பல் தொடர்ந்து கட்டமைத்து வருகிறது. அதன் நீட்சிதான் நீட் தேர்வுத் திணிப்பு.
பொய் 9 : நீதிமன்றம் எதோ மக்கள் நலனுக்காக “நீட்”டை அமுல்படுத்தியது
“நீட்” விசயத்தில் நீதிமன்றத்தின் யோக்கியதை என்ன என்று பார்ப்போம்
ஒரு வழக்கை விசாரித்து முடிப்பதற்கு முன்பே தீர்ப்புக் கூறுவது முறைகேடு. நீட் தேர்வு வழக்கில் இம்முறைகேட்டினைத் துணிந்து செய்திருக்கிறது, உச்சநீதி மன்றம். நீட் தேர்வு தேவையா என்பது குறித்து நடந்த வழக்கை விசாரித்த அல்தாமஸ் கபீர் தலைமையில் அமைக்கப்பட்ட அமர்வு, இத்தேர்வு தேவையில்லை எனப் பெரும்பான்மையின் அடிப்படையில் தீர்ப்புக் கொடுத்தது.
இத்தீர்ப்பை எதிர்த்து மைய அரசு வழக்கு போட்டது. உச்ச நீதிமன்றம் அதனை இன்னும் விசாரிக்கவே இல்லை. இருப்பினும் அதற்குள் நீட் தேர்வை அமல்படுத்துவது என்ற முந்தைய உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிரான முடிவு அமல்படுத்தப்படுகிறது. நீட் தேர்வு சரியா, தவறா என்பது இனிமேல்தான் விசாரிக்கப்படும்.
உதாரணமாக, குமாரசாமியின் 5+3=9 என்ற தீர்ப்பின் மூலம் ஊழல் குற்றவாளி ஜெயலலிதாவை விடுதலை செய்து அவர் முதலமைச்சரும் ஆக அனுமதித்து விட்டு உச்சநீதிமன்றம் அந்த மேல்முறையீட்டை விசாரித்தது போன்றது இது.
இதில் காட்டிய அவசரத்திற்க்கு காரனம் மாணவர் நலனா அல்லது தனியார் மருத்துவ கல்லூரிகள் கொள்ளைக்கான நலனா? அல்லது “ஏக இந்தியா” என்ற ஆர்.எஸ்.எஸ் கனவுக்கும், “ஒற்றை கல்விச் சந்தை” என்ற பன்னாட்டு கல்வி முதலாளிகளின் ஆணைக்கும் பாதை சமைக்கும் ஆசையா?
பொய் 10 : இந்திய மாணவர்களை வெளிநாட்டு கல்வி நிறுவனங்கள் கொள்ளை அடிப்பதா? இங்கே மருத்துவ கல்லூரிகள் திறந்தவர்கள் கதி என்னாவது என்ற அறச்சீற்றம் காரனமாக நீதிமன்றம் உத்தரவிட்டு மருத்துவ கவுன்சில் கொண்டு வந்தஉ அதை காங்கிரஸ் வேறு வழி இல்லாமல் ஏற்றது.
தனியார் மருத்துவக் கல்லூரிகள் கட்டணக் கொள்ளை அடித்தால் அவர்களை தடுத்து நிறுத்தவோ, நிர்வாகத்தை அரசே எடுத்து நடத்த வேண்டும் என்று உத்தரவிடவோ வக்கில்லாத நீதிமன்றம், புற்றுநோய்க்கு மண் பற்று போடும் விதமாக “நீட்” தேர்வு மூலமாக தரத்தை உயர்த்துவதாக உத்தரவிட்டிருக்கிறது.
============
இது வெறும் தேர்வு பற்றிய பிரச்சனை அல்ல நம் கையில் இருந்து கல்வியை பறிக்கும் பிரச்சனை. கல்வியை பறித்து, பன்னாட்டு கார்ப்பரேட்டுகளுக்கு காணிக்கையாக்க உலக வங்கி திட்டம் தீட்டி கொடுக்கிறது. அதற்கு இந்த நாட்டின் ஓட்டுக்கட்சிகளும், அதிகாரிகளையும் கொண்ட அரசு கட்டமைப்பு உதவுகிறது.
நாம் ஏன் நமது கல்வி உரிமையை இழக்க வேண்டும். இந்த மருத்துவக் கல்லூரிகள் நம் வரிப்பணத்தில், நமது நிலத்தில், நமது உழைப்பில் கட்டப்பட்டவை. இதில் நம் வீட்டு பிள்ளைகள் படிக்க முடியாது என்றால் மருத்துவக் கல்லூரிகளை கைப்பற்றும் போராட்டத்தை கூட மேற்கொள்வோம்.
மக்கள் நாமே அதிகாரத்தை கையில் எடுப்போம்.
– மகேந்திரன்
வாட்ஸ்-ஆப் பதிவு
சில கேள்விகள் பல பதில்கள் …..
1. பன்னிரெண்டாம் வகுப்பு பொது தேர்வில் 1176 மதிப்பெண் பெற்ற அனிதா நீட் தேர்வில் பெற்ற மதிப்பெண் எவ்வளவு தெரியுமா?
+2 ல 1200 க்கு 1176 அதாவது 96% மதிப்பெண் எடுக்க முடிந்தவரால், நீட் தேர்வில் எடுக்க முடிந்தது வெறும் 86 மதிப்பெண்கள் தான். அதுவும் 720 க்கு.
ஏன் இந்த நிலை? இத்தனைக்கும் 55% கேள்விகள் +1 பாடத்திலும், 45% +2 பாடத்திலும் கேட்கப்படும் என்று முன்னரே அறிவித்து இருந்த நிலையில் எப்படி இவ்வளவு குறைவான மதிப்பெண்ணை தான் இவர் பெற்றார்?! காரணம் இவர் படித்தது அரசு பள்ளி இல்ல..
Raja vignesh என்ற தனியார் பள்ளி. தமிழ்நாட்டில் எத்தனை தனியார் பள்ளில +1 பாடம் நடத்துறாங்க..? உங்கள் சிந்தனைக்கே விட்டுறேன்.
2. இன்று அவரது சாவில் அரசியல் பண்ணும் கட்சிகள் Psg, meenakshi, SRM மெடிக்கல் காலேஜ்கள் கோடி கணக்கில் மெடிக்கல் சீட்டை விற்ற போது ஏன் வாய் திறக்கல?
தமிழ்நாட்டு அரசியல் கட்சிகள் எம்புட்டு நேர்மைனா விஜயகாந்த் மச்சானுக்கு ஒரு மெடிக்கல் காலேஜ் இருக்கு, பச்சமுத்து காலேஜ் தான் SRM னு சொல்லி தெரிய வேண்டியதில்லை. ராமதாஸ் சொந்தமா மெடிக்கல் காலேஜ் இருக்கு. Dr. MGR University ல பெரும் பங்கு யாருதுனு ஒங்களுக்கு தெரியும். இதுல என்னடா ஒரு கட்சி மட்டும் வரலயே. அவனுக அம்புட்டு யோக்கியனா இல்ல மறைக்குற நீ அயோக்கியனானு கோபப்பட வேண்டாம்.. ஜெகத் ரட்சகன் தொடங்கிய மெடிக்கல் காலேஜ் இல்லாத தி.மு.க முக்கிய புள்ளிகள் யார் இருக்கா??!
3. இப்போது கூப்பாடு போடுற தமிழக ‘அற நெறி’ ஊடகங்கள் அப்போது ஏன் கள்ள மெளனம் சாதித்தன?
கோவை Psg College ல டொனேஷன் மட்டுமே ரூ 75 லட்சம் வாங்குனாங்க.. Meenakshi College ல ரூ 60 லட்சம், SRM சொல்லவே வேணாம் உங்களுக்கே தெரியும். அப்ப ஏன் எந்த ஊடகமும் இதை பொது விவாதத்திற்கு எடுக்கல. அட உண்டியல் கட்சின்னு சொல்ற கம்யூனிஸ்ட் கூட மெளன விரதம் இருந்தார்களே ஏன்? Cheque வாங்கிட்டாங்களா..? அதுசரி பச்சமுத்து நடத்துற SRM medical college ன் பகல் கொள்ளையை அவரது மகன் நடத்துற PuthiyathalaimuraiTV வெளிச்சம் போட்டு காட்டும் என நினைத்தால்.. நாம் தான் குருடர்கள்.
(இந்த இடத்தில் ஒங்களுக்கு தனி ஒருவன் படம் நினைவுக்கு வந்தால்.. உண்மையை உணர தொடங்கி விட்டது உங்க மனது)
4. மாணவர்கள் நீட் தேர்வை எதிர்த்தது சரின்னு வச்சுக்குவோம். ஆனா SRM போன்ற கல்லூரிகள் உச்சநீதிமன்றம் வரை சென்று எதிர்க்க காரணம்?
சரி மாணவர்கள் எதிர்த்தார்கள் ரைட்டு. இந்த SRM ஏன் உச்சநீதிமன்றம் வரை சென்று போராடினான்?? மன்னிக்கவும் அவன் போராடியது நீட் தேர்வை எதிர்த்து இல்ல. நீட் தேர்வு மூலம் அட்மிஷன் நடந்தா தன் management quota seats எப்படி அதிக விலைக்கு விற்பது..! அதனால் அவனுக்கு மட்டும் விலக்கு கேட்டு போராடினான். இதே போன்று மத்த கல்லூரிகள் ஒன்று சேர்ந்து மறைமுகமாக நீட் தேர்வை தடுக்க பெரிய லாபி செய்து தோற்றார்கள் என்பதே உண்மை. ஏன்?? பின்ன கோடி கணக்கில் விற்ற management seats களை இன்று நீட் மூலம் மாணவன் படிக்க முடிந்தால் அவனுக பொழப்பு என்னாவுறது..
5. உண்மையில் அனைத்து சாதியையும் உள்ளடக்கிய சமூக நீதி.. இந்த நீட் தேர்வால் நசுக்கப்பட்டுள்ளதா?
இதுதான் அடுத்த திட்டமிட்டு பரப்பப்படும் பொய். ஒரு சின்ன உதாரணம்.. கடந்த வருடம் medical seat பெற்ற sc மாணவர்கள் 94. இந்த வருடம் 135 இதுல எங்க தாழ்த்தப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிராக நீட் இருக்கு??!
அடுத்த வாதம் OC category ல போன வருடம் 168 ஆனா இந்த முறை 515. இவனுக எப்படி எல்லாம் மக்களை முட்டாளாக்கிறார்கள் என்பதற்கு இது ஒரு மிக சிறந்த உதாரணம். அதாவது அந்த 515 பேரும் brahmins or upper (forward) caste னு காட்ட முற்படுறாங்க. ஆனா உண்மையில் அதுல 36 பேர் sc, 201 பேர் BC, 179 MBC. இதுபோக மீதி 99 பேர்ல தான் brahmin, chettiar உட்பட ஏனைய unreserved and upper castes வற்ராங்க. இதுல எங்க சமூக நீதிக்கு குல்லா போடப்பட்டது..
6. நீட் தேர்வில் பிற மாநிலங்களின் நிலைப்பாடு என்ன? அங்கு ஏன் நீட் எதிரா ஒரு போராட்டமும் இல்ல??
தமிழ்னு வெறும் அரசியல் கோஷம் போட்ட நாம் இந்தியை எதிர்த்தோம் ஆனா ஆங்கிலத்துக்கு அடிமையானோம். இது சிலரது அரசியலுக்கு மட்டும் தான் பயன்பட்டது. ஆனா கேரளா உட்பட எந்த மாநிலமும் இந்தியை எதிர்க்கல. நம்மில் எத்தனை பேருக்கு நவோதயா, இ-கல் வித்யாலயா பற்றி தெரியும். தரமான சி.பி.எஸ்.இ கல்வியை மிக குறைந்த செலவில் அளிக்கும் மத்திய அரசு கல்வி நிறுவனத்தை ஏன் தமிழ்நாடு மட்டும் ஏற்கல?? அப்ப திமுக கட்சிக்காரர்கள் மட்டும் சி.பி.எஸ்.இ பள்ளி நடத்தலாமா?? உங்க சிந்தனைக்கே விட்டுறேன்.
7. நீட் தேர்வில் அரசியல் செய்யும் கட்சிகளின் உண்மை நோக்கம் என்ன?
நீட் தேர்வு வந்தால் தங்கள் உறவினர், கட்சிக்காரர், நன்கொடை வழங்கும் பெரு முதலாளிகள் பாதிக்கப்படுவார்கள் என்பதற்காக தான் முழு மூச்சாக தமிழக கட்சிகள் எதிர்க்கின்றன. உதாரணம், Psg medical college-ல மு.க. ஸ்டாலினுக்கு என்று தனி கோட்டாவே உண்டு, புதுவை ஜிப்மர்ல வைகோவுக்கு ஒரு சீட் உண்டு ஆனா சில லட்சங்கள் செலவோடு.
8. அடுத்து கல்வித்துறை செய்ய வேண்டியது என்ன?
இந்த முறையாவது அரையாண்டு, பொது தேர்வு விடுமுறையில் தனியார் பயிற்சி நிறுவனங்களோடு கூட்டு முறையில் short term crash course அறிமுகம் செய்து ஏழை அரசு பள்ளி மாணவர்கள், மாநில பாடத்திட்ட மாணவருக்கு உதவணும்.
9.நீட் தேர்வை கட்டாயமாக்கிய உச்சநீதிமன்றத்தை ஏன் யாரும் கேள்வி கேட்கல அல்லது கேட்க முடியல?
10. நீட் தேர்வு என்ற ஒரு பிரச்சனை எப்போது, எதனால், யாரால் முளைத்தது?
9 & 10. இந்தியாவில் மருத்துவ சீட் கிடைக்காத மாணவர்கள் மலேசியா, தாய்லாந்து, ரஷ்யா போன்ற நாடுகள்ல இங்க management quota ல செலவு பண்றத விட குறைந்த செலவில் படித்துவிட்டு MCI தேர்வு எழுதி டாக்குடராவது ஏற்புடையதா?? இதனால மருத்துவ தரம் எப்படி இருக்கும். அப்படின்னு சாட்டையடி கொடுத்த பின் தான் வேற வழியின்றி காங்கிரஸ் அரசு நீட் வரைவை உருவாக்கியது.
அதை செயல்படுத்தியது பா.ஜ.க அரசு. இதனால தான் உச்சநீதிமன்றத்தை கேள்வி கேட்க முடியாது. ஏன்னா அது எடுத்த நடவடிக்கை மிகச் சரி.. கட்டுக்கடங்காத management fees, donation இதுல படித்து வர்றவன் எப்படி சேவை மனப்பான்மையோடு இருப்பான்?
இதுக்கு மேலயும் மோடி ஒழிக, நீட் வேண்டாம் என்றால்.. தயக்கமின்றி சொல்வேன் நீங்களும் சந்தர்ப்பவாதி தான்
நன்றி லெஷ்மணன்…