விவசாய அழிவு : நீரோவின் விருந்தினர்களாக இருக்கிறோமா?

நீரோவின் விருந்தினர்கள் – ஆவணப்படம் அறிமுகம்

‘The Hindu’ நாளிதழின் கிராமப்புற விவகாரங்களுக்கான ஆசிரியர் ஆக பணியாற்றிய P.சாய்நாத் மற்றும் தீபா பாட்டியா ஆகியோரால் 2010-ம் ஆண்டு வெளியிடப்பட்ட ஆங்கில ஆவணப்படம் ‘Nero’s Guests’.

மகாராஷ்டிராவின் விதர்பா பகுதியில் நடைபெற்ற பருத்தி விவசாயிகள் தற்கொலைகள் பற்றியும் இந்திய விவசாயம் 1995-2010-க்கு இடையிலான 15 ஆண்டுகளில் சிக்க வைக்கப்பட்டிருந்த கடும் நெருக்கடி பற்றியும் இந்த படம் பேசுகிறது. விவசாயப் பொருளாதாரம் இன்னும் தீவிரமான நெருக்கடியை எதிர்கொண்டிருக்கும் இந்த நேரத்தில், 7 ஆண்டுகளுக்கு முன்பு வெளியிடப்பட்ட இந்த ஆவணப்படத்தில் பேசப்படும் விஷயங்கள் இன்றும் நாட்டின் பல பகுதிகளுக்கு, குறிப்பாக தமிழ்நாட்டுக்கு இந்த ஆண்டு பொருந்துவதாக உள்ளது. தமிழ்கத்தில் கடந்த மூன்று மாதங்களில் 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் விவசாய அழிவால் உயிரிழந்துள்ள நிலையில் இந்த ஆவணப்படம் சொல்லும் செய்திகள் இன்னும் அதிகப் பொருத்தப்பாடுடையதாக உள்ளது.

இந்தியாவில் இன்றும் 60 சதவீத மக்கள் விவசாய வேலைகளை நம்பி இருக்கின்றனர் என்ற அறிமுகத்துடன் ஆரம்பமாகிறது ஆவணப்படம். 83.6 கோடி மக்கள் அரை டாலருக்கும் குறைவான செலவில்தான் தங்கள் ஒரு நாள் வாழ்க்கையை ஓட்டுகின்றனர் என்பதும் தெரிவிக்கப்படுகிறது. 1997-க்கும் 2005-க்கும் இடையில் விவசாய அழிவு, கடன் சுமை காரணமாக 2 லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். ஆனால், ஊடகங்கள் “ஒளிரும் இந்தியா” வை பேஜ்-3 நிகழ்ச்சிகளில் காட்டுவதற்கு பெருமளவு பத்திரிகையாளர்களை வேலைக்கு அமர்த்தியிருந்தனார். விவசாயம் குறித்தோ, இந்தியாவின் வறுமை குறித்தோ செய்தி சேகரிப்பதற்காக முழுநேரமாக பத்திரிகையாளர்களை நியமிப்பது அரிதாகவே இருந்தது.

அந்த காலகட்டத்தில் சாய்நாத், தி ஹிந்து ஆங்கிலப் பத்திரிகையின் கிராமப்புற விவகாரங்களுக்கான ஆசிரியர் ஆக பணியாற்றி வந்தார். அலைஅலையாக விதர்பா கிராமங்களை தாக்கிய தற்கொலைகள் தொடர்பான விபரங்களை திரட்டி, பாதிக்கப்பட்ட விவசாய குடும்பங்களை நேரில் சந்தித்து, அது தொடர்பான ரிப்போர்ட்கள் ஹிந்து நாளிதழில் வெளியிடப்பட்டன. அவர் சந்தித்த விவசாய குடும்பங்களின் நிலைமையை ஆவணப்படுத்துவதோடு மட்டுமின்றி இந்தியாவின் பொருளாதாரக் கொள்கைகள் பற்றிய விரிவான ஆய்வுகளையும் செய்து பல இடங்களில் உரையாற்றி, இந்தப் பிரச்சனையை உலகத்தின் கவனத்துக்குக் கொண்டு வந்தார்.

அகன்று விரிந்த, நவீன விளக்குகள் பொருத்தப்பட்ட நெடுஞ்சாலைகளில் பயணித்து, அடுத்து குறுகலான ஊரக சாலைக்குள் திணறி, சாலையே இல்லாத கரடுமுரடான பாதையில் நம்மை அழைத்துச் சென்று தற்கொலை செய்து கொண்ட ஒரு விவசாயியின் குடும்பத்தை அறிமுகப்படுத்துகிறது, படம். தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த சேகராவ் தத்தா தோம்ப்ரே என்ற அந்த விவசாயியின் மகன் பேசுவதைக் கேட்கிறோம்.

வங்கியில் வாங்கிய ரூ 50,000 கடனை அடிக்கை முடியாமல் தோம்ப்ரே தற்கொலை செய்து கொண்டுள்ளார். மூத்த மகன் தந்தையின் மரணத்தை ஒட்டி படிப்பை முடிக்காமல் குடும்பப் பொறுப்பை ஏற்றுக் கொண்டுள்ளான். இரண்டாவது மகனுக்கு கல்லூரி கட்டணம் செலுத்த முடியாமல் படிப்பு தடைபட்டு நிற்கிறது.

இவ்வாறு குடும்பத் தலைவரின் மரணத்தால் இளம் வயதிலேயே குடும்பப் பொறுப்பை சுமக்க நேரிடும் இளைஞர்களின் கண்களில் தெரியும் இயலாமையையும், எதிர்காலம் பற்றிய பயத்தையும், நிலையின்மை பற்றிய குழப்பத்தையும், திகைப்பையும் பார்க்கிறோம்.

காசி விசுவேஸ்வரர் “progress farmer of the year” விருது பெற்ற விவசாயி. “விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வது முட்டாள்தனம் கடின உழைப்பின் மூலம் நமது வாழ்க்கையை நாமே வளப்படுத்திக் கொள்ளலாம். விவசாயம் நமது இரத்தத்திலேயே கலந்தது” என்று பிற விவசாயிகளுக்கு அறிவுரை சொல்பவர், 2004-ம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.

1998-ல் வாரத்துக்கு ஒரு தற்கொலை நிகழ்ந்தது, 2002-ல் ஒரு நாளைக்கு ஒன்று என்று அதிகரித்திருக்கிறது. அடுத்த ஓரிரு ஆண்டுகளில் ஒரு மாவட்டத்தில் ஒரே நாளில் 2-3 தற்கொலைகள் என்ற அதிர்ச்சியூட்டும் எண்ணிக்கையை எட்டியிருந்தது.

“ஒளிரும் இந்தியா” வோ “பார்ட்டி” கொண்டாடுவதில் மூழ்கியிருந்தது. மும்பையின் ஐந்து நட்சத்திர விடுதிகளில் மேட்டுக்குடி ஆடை வடிவமைப்பாளர்கள் பேஷன் ஷோக்கள் நடத்திக் கொண்டிருந்தனார். அது பற்றி செய்தி வெளியிட நூற்றுக் கணக்கான பத்திரிகையாளர்கள் குவிந்திருந்தனர். மாநிலமெங்கும் பல மணிநேரம் மின்வெட்டு. ஆனால், மும்பையின் ஆடம்பர சொகுசு ஹோட்டல்களுக்கும், மல்டிபிளெக்சுகளுக்கும் 24 மணி நேர மின்சாரம் வழங்கப்பட்டு வந்தது. விதர்பாவில் ஒரு நாளைக்கு 8 மணி நேரம் மின்வெட்டு இருந்தாலும், மின்-மயானம், பிரேத பரிசோதனை கூடங்களுக்கு மின்வெட்டிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டிருந்தது. ஏனென்றால், அவை 24 மணி நேரமும் இடைவிடாமல் தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் உடலை பரிசோதனை செய்ய வேண்டியிருந்தது.

இந்த தற்கொலைகளுக்கு அதற்கு முந்தைய 20 ஆண்டுகளாக அமல்படுத்தப்பட்டு வந்த தனியார் மய-தாராள மய – உலகமய பொருளாதாரக் கொள்கைள்தான் காரணம் என்பதை ஆதாரங்களுடனும் உதாரணங்களுடனும் விளக்குகிறார் சாய்நாத். பன்னாட்டு நிறுவனங்களின் பகாசுர கரங்களுக்கு திறந்து விடப்பட்ட இந்திய விவசாயிகளின் வாழ்க்கை கற்பனை செய்ய முடியாத அளவுக்கு கொடூரமாக நசுக்கப்பட்டு வருகிறது. பன்னாட்டு நிறுவனங்களுக்கும் அவர்களுக்கு தரகு வேலை பார்க்கும் இந்திய கார்ப்பரேட்டுகளுக்கும் சேவை செய்யும் இந்திய அரசோ விவசாய பொருளாதாரத்தின் ஒவ்வொரு அம்சத்தையும் அவர்களின் இலாப வேட்டைக்கு இரையாக்கியிருக்கிறது. இந்தியாவை ‘வல்லரசாக்கியே தீருவது’ என்று ‘தேச வெறியுடன்’ கதறிக் கொண்டிருக்கும் மேல்தட்டு மேல்சாதி இந்தியர்களும், ஊடகங்களும் இந்தியாவின் ஏழைகளின் பிரச்சனை குறித்து காட்டும் அலட்சியம் மனிதத்தன்மை அற்றது.

ரோம் நகரம் தீப்பற்றி எரிந்த போது நீரோ மன்னன் பிடில் வாசித்தான் என்று கேள்விப்பட்டிருப்போம். அது தொடர்பாக பதிவு செய்யப்பட்டுள்ள வரலாற்று சம்பவத்தை விவரிக்கிறார் சாய்நாத். ரோம் எரியும் போது, அந்நகரின் அறிவாளிகளுக்கும், கவிஞர்களுக்கும், மேட்டுக்குடியினருக்கும் தனது தோட்டத்தில் மாபெரும் விருந்து அளித்திருக்கிறான் நீரோ மன்னன். அந்த இரவு விருந்துக்கு வெளிச்சம் கொடுப்பதற்காக சிறையில் அடைக்கப்பட்டிருந்த பலரை வரிசையாக கம்பங்களில் கட்டி எரிக்க ஏற்பாடு செய்தான் என்று ரோம வரலாற்றை பதிவு செய்த டேசிட்டஸ் கூறுவதாக குறிப்பிடும் சாய்நாத் பெரும்பான்மை இந்திய உழைக்கும் மக்களின் வாழ்வு அழிவின் விளிம்பில் நிற்கும் போது விருந்து கொண்டாட்டங்களில் ஈடுபடும் நீரோவின் விருந்தினர்களாக இருக்கப் போகிறோமா நாம் என்ற கேள்வியை எழுப்புகிறார்.

தவறாமல் இந்த ஆவணப்படத்தை பாருங்கள்! நண்பர்களிடம் விவாதியுங்கள்! விவசாயிகள் வாழ்வையும் நாட்டையும் காப்பாற்ற என்ன செய்வது என்று சிந்தியுங்கள்.

– மணி

 

Permanent link to this article: http://new-democrats.com/ta/neros-guests-documentary-intro/

Leave a Reply

Your email address will not be published.

Optimization WordPress Plugins & Solutions by W3 EDGE
%d bloggers like this:
Read more:
ராட்சசன் : சைக்கோ சமூக வெறுப்புக்கு மருந்து என்ன?

ராட்சசன் படத்தில் சைக்கோவாக இருப்பவர்கள் அதிகாரத்தில் இருப்பவர்கள் அல்லது சொத்து, வசதி இருப்பவர்கள்தான். ராபர்ட் ஆகட்டும், இன்பராஜ் ஆகட்டும், இமைக்கா நொடிகள் படத்தில் வில்லன் ஆகட்டும் இவர்கள்...

பிப்ரவரி மாத சங்கக் கூட்டம்

சங்க உறுப்பினர்களே, நண்பர்களே, நமது சங்கத்தின் மாதாந்திர கூட்டம் வரும் சனிக்கிழமை 17.02.2018 அன்று மாலை 3 மணியளவில் நடைபெறுகின்றது. இன்றைய சூழலில் நமது துறையில் புதிய...

Close