கியூபாவின் புதிய அதிபரும்: தினமணியின் சோசலிச வெறுப்பும்

கியூபாவின் புதிய அதிபராக மிகயேல்-டியேஸ்-கனல் ஆட்சியில் அமர்ந்துள்ளார், அது குறித்து ஊடகங்களில் பல கட்டுரைகள், கருத்துக்கள் வலம் வருகின்றன. தமிழகத்தின் ‘நடுநிலை’ நாளிதழ் என்று போற்றப்படும் தினமணியின் ஆசிரியர் வைத்தியநாதன் தன் பங்கிற்கு ஒரு தலையங்கம் தீட்டியுள்ளார்.

மிகயேல்-டியேஸ்-கனல்

கியூபாவின் புதிய அதிபராக மிகயேல்-டியேஸ்-கனல் (அவரது மனைவியுடன்)

பிடல் காஸ்ட்ரோ, ராவுல் காஸ்ட்ரோ ஆகிய இருவரும் கியூபா விடுதலைபோராட்டத்தில் முன்னணியாளர்களாக திகழ்ந்தவர்கள். எனவே அந்த அடிப்படையில் 2006-ம் ஆண்டு பிடல் காஸ்ட்ரோ ஓய்வு பெற்ற பின் ராவுல் காஸ்ட்ரோ அந்நாட்டின் தலைவர் ஆக பொறுப்பேற்றார். ஆனால், இது குறித்து வைத்தி என்ன சொல்கிறார் தெரியுமா? ‘காஸ்ட்ரோ சகோதரர்களின் ஆட்சி முடிவுக்கு வந்திருக்கிறது” என்று வர்ணனை செய்து கியூபாவில் இந்தியா மற்றும் பிற ஆசிய நாடுகளின் வாரிசு அரசியலுக்கு நிகரான முறை கியூபாவில் இருந்தது போல் ஒரு பிம்பத்தை உண்டு பண்ணுகிறார்.

‘பாருங்கள் சோசலிசம் கியூபாவிலும் தோற்று போய்விட்டது’ என்று அறைந்து சொல்வதோடு அல்லாமல், அகமகிழ் கொண்டு தாண்டவமாடுகிறார். உண்மை என்ன?

15-ம் நூற்றாண்டின் இறுதியில் முதலாளித்துவ கொள்ளையன் கொடூரன் கொலம்பஸ் கியூபாவில் கால் பதிப்பதற்கு முன்னர் அப்பூமி பழங்குடி இனக்குழுக்களின் புராதான பொதுவுடைமை சமுதாயமாக இருந்தது. சுமார் 400 ஆண்டுகள் ஸ்பெயின் காலனிய நாடாக கருப்பின மக்களை அடிமைகளாக வைத்து கரும்பு, சர்க்கரை வர்த்தகம் நடத்தப்பட்டது. 20-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஆதிக்கத்தின் கீழ் கியூபா கொண்டு வரப்பட்டது. சுதந்திரம் கோரி போராடும் மக்கள் போராட்டங்களை ஒடுக்க அமெரிக்கா பலமுறை இராணுவ ரீதியாக தலையிட்டது.

அக்காலத்தில் விவசாயம், குறிப்பாக கரும்பு உற்பத்தி கியூபாவில் பிரதானமாக இருந்தது, ஆனால் அங்குள்ள விவசாய நிலங்களும், சர்க்கரை ஆலைகளும் அமெரிக்க முதலாளிகளின் உடைமையாக இருந்தன. அந்த அமெரிக்க எஜமானர்களின் கொடூர உழைப்பு சுரண்டலுக்கு உறுதுணையாகவும், நிகர லாபங்களுக்கு ஏதேனும் தடை (தொழிலாளர்களின் சம்பளஉயர்வு கோரிக்கை) ஏற்பட்டால் ‘தடி’ கொண்டு தகர்த்தெறிவதில் திறம்படவே செயல்பட்டு வந்தார், பாடிஸ்டா. பெரும்பான்மை உழைக்கும் மக்கள் கடுமையான துயரத்திலும் வறுமையிலும் இருந்து வந்தார்கள் என்பது கியூபாவின் வரலாற்றை படித்திருந்தால் புரியும்.

அமெரிக்க ஏகாதிபத்தியம், அந்த ஏகாதிபத்தியத்தின் அடியாள் பாடிஸ்டாவின் சர்வாதிகாரம் ஆகியவற்றுக்கு எதிரான ஆயுதம் தாங்கிய போராட்டம் பிடல், ராவுல், மற்றும் சேகுவேரா ஆகியோர்களின் தலைமையில்நடத்தப்பட்டு மக்களின் பேராதரவுடனும் பாடிஸ்டா அரசாங்கம் வீழ்த்தப்பட்டதும் அந்த விடுதலைக்கு பின் நிலங்கள் மற்றும் (அமெரிக்க முதலாளிகளின்) சர்க்கரை ஆலைகள் அனைத்தும்  நாட்டுடைமை   ஆக்கப்பட்டதும் அனைவரும் அறிந்ததே.

இப்படி நாட்டுடைமை ஆக்கப்பட்டது தான் அமெரிக்காவிற்கு ‘காண்டு’ ஆகிவிட்டது!!! அது சரி, அமெரிக்காவை சேர்ந்த சில பலமுதலாளிகளின் சொத்துக்கள் கியூபா என்ற ஒரு நாட்டில் உள்ளது, மக்களின் நலனுக்காக அவை நாட்டுடைமை  யாகிறது. இந்ததனிப்பட்ட நபர்களின் (அமெரிக்கமுதலாளிகளின்) சொத்துக்கள் பறிபோவதற்கு, ஏன் ஒரு (அமெரிக்க) அரசே கோபப்படுகிறது?

ஏன் என்றால் அமெரிக்க அரசு என்பதே சில பல முதலாளிகளின் கூட்டமைப்பு தானே ஒழிய வேறு எதுவும் இல்லை. எனவே, அது எப்படி கோபப்படாமல் இருக்கும். இப்பெரும் முதலையின் பல்வேறு பொருளாதார நெருக்கடிகளுக்கும், தொல்லைகளுக்கும், இம்சைகளுக்கும் மத்தியில் தம் நாட்டின் மக்களுக்கு சிறந்த கல்வியும், மருத்துவமும் முற்றிலும் இலவசமாக வழங்கி வந்தது கியூப குடியரசு.

பிடல் காஸ்ட்ரோவின் சோசலிச மற்றும் சர்வேதேச அரசியல் நிலைப்பாட்டில் சில விமர்சனங்கள் இருந்தாலும், கியூபாவை ஒரு மக்கள் நலன் அரசாகவே கட்டியமைத்தார். சோவியத் வீழ்ச்சிக்குபின் ஏற்பட்ட கடுமையான பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியிலும் அந்நாடு சோர்ந்து போய்விடவில்லை.

உலகத்துக்கே வல்லரசு என்று பீற்றிக் கொள்ளும் அமெரிக்காவில் தான் 1930-களில்ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியில், தன் நாட்டு மக்களை சோற்றுக்கு தெருவில் நிறுத்தியது, ‘கஞ்சித்தொட்டி’ திட்டத்தின் மூலம் மக்களை பிச்சையெடுக்க வைத்தது, அதே போல் 2008 பொருளாதார நெருக்கடியில் மக்களை வீடற்றவர்களாய் ஆக்கி மீண்டும் பொது வீதியில் தள்ளியது மட்டுமல்லாமல், வால் வீதி நோக்கி போராட வைத்தது.

முதலாளித்துவம் தான் முட்டுச்சந்தில் சிக்கி உழைக்கும் மக்களை பரிதவிக்க வைக்கும் என்பது அதன் இயக்கப்போக்கில் தவிர்க்க முடியாமல் நடக்க கூடிய ஒன்று.

ரவுல் காஸ்ட்ரோ, மிகயேல்-டியேஸ்-கனல்

ரவுல் காஸ்ட்ரோவும் மிகயேல்-டியேஸ்-கனலும்

ஆனால் சோசலிசம் என்பது உழைக்கும் மக்களை பொருளாதார ரீதியில் முன்னேற்றுவது, வளங்களை சமூக நலனுக்காக திட்டமிட்டு பயன்படுத்துவது. அவ்வகையில் தான் கியூபா செயல்பட்டது. பின் ஏன் பொருளாதார நெருக்கடி?

ஒரு விவசாயி தன் நிலத்தில் நெல் பயிரிடுகிறார், பக்கத்து தோட்டக்காரன் தன் தோட்டத்தில் கருவேல மரங்களை பயிரிட்டு அம்மரங்களின் நிழல் நெல் வயலில் பட்டு சூரிய ஒளியை தடுக்கிறது, ஆற்றிலிருந்தோ பிற விவசாயிகளின் பம்பு செட் மூலமோ நெல் வயலுக்கு வரக்கூடிய தண்ணீரையும் பக்கத்து தோட்ட விவசாயி திட்டமிட்டு தடுக்கிறான். நெல் பயிரிட்ட விவசாயியின் வயலில் இருக்கும் ஒரு கிணற்றிலும் தண்ணீர் மிகவும் ஆழத்தில்தான் இருக்கிறது. அது ஆழத்துக்கு சென்றதுக்கு காரணம், அருகாமை தோட்டத்தில் பயிரிடப்பட்டுள்ள அதிகம் தண்ணீரை உறிஞ்சக்கூடிய மரங்களான கருவேல மரமும், அந்த வகையை சேர்ந்த இன்னும் சில மரங்களும் தான். இருக்கும் அந்தத் தண்ணீரை வைத்து எதோ தன்னால் முடிந்த வரை அப்பயிர்களை கருகவிடாமல் காப்பாற்றி வருகிறார், நெல் விவசாயி.

இதைப்பார்க்கும் வைத்தியநாதன் நெல் தோட்டத்து நிலைமையை கண்டு ஏளனம் செய்கிறார், கொக்கரிக்கிறார், கும்மாளம் போடுகிறார். இறுதியாக அவ்விவசாயிக்கு ஒரு ஆலோசனையும் கூறுகிறார்: ‘பேசாமல் பக்கத்து தோட்டத்துக்காரனிடம் ஒத்து போங்கள், உங்கள் வயலில் கருவேல மரங்கள் நடுவதற்கு அவருக்கு இடம் கொடுங்கள், அதன் பின் உங்கள் தோட்டத்துக்கு அவர் தண்ணீர் கொடுப்பார்’ என்கிறார்

தினமணி வைத்தியநாதன்

கியூபாவின் பொருளாதார சிக்கலுக்கு தீர்வாக சோசலிச கொள்கைகளை விட்டுவிட்டு அமெரிக்காவிடம் அட்ஜஸ்ட்செய்துகொண்டு, அடிமை நாடுகளின் பட்டியலில் இணைத்து கொள்ளச் சொல்கிறார் வைத்தியநாதன்

அதாவது பக்கத்துக்கு தோட்டத்து விவசாயியின் அயோக்கியத்தனத்தை, அட்டூழியத்தை ஆதரிக்கிறார். பின் அது தான் தர்மம் என்றும், நீதி என்றும் பாராட்டு பாத்திரம் வழங்குகிறார். “அயோக்கியத்தனத்திற்கு அடிபணியுங்கள், அட்டூழியத்தை ஆதரியுங்கள் அப்போதுதான் நீங்கள் பிழைக்க முடியும்” என்று கியூபா குடியரசிற்கு ஆலோசனை சொல்கிறார்.

அதாவது, ஏகாதிபத்திய கொள்ளையால் சூழப்பட்ட நிலையில் மக்கள் நல அரசாக தாக்குப் பிடித்து வரும் கியூபாவின் பொருளாதார சிக்கலுக்கு தீர்வாக சோசலிச கொள்கைகளை விட்டுவிட்டு அமெரிக்காவிடம் அட்ஜஸ்ட்செய்துகொண்டு, அடிமை நாடுகளின் பட்டியலில் இணைத்து கொள்ளச் சொல்கிறார்.

அமெரிக்காவின் குடைநிழலில், ஐ.எம்.எஃப், உலக வங்கி, உலக வர்த்தகக் கழகம் ஆட்சியில் அடைக்கலம் புகுந்துள்ள ஆட்சியாளர்களைக் கொண்ட இந்தியா போன்ற அனைத்து நாடுகளிலும் எந்தவித பொருளாதார சிக்கலும் இல்லாமல், மாதம் மும்மாரி பொழிந்து நாடும் நாட்டு மக்களும் செல்வச்செழிப்பாக இருப்பது போல வரிந்து கட்டிக்கொண்டு சோசலிசத்தின் மீது தன் வெறுப்பை உமிழ்கிறார்.

பல ஆயிரம் ஆண்டுகளாய் ஒடுக்கப்பட்டு, உரிமைகள் மறுக்கப்பட்ட உழைக்கும் சாதி மக்கள் கல்வி மூலமும், வேலைவாய்ப்பின் மூலமும் பொருளாதார ரீதியில் ஓரளவு முன்னேற்றம் அடைந்ததை பார்ப்பனீயமும் ஆதிக்க சாதி கும்பலும் எப்படி வெறுப்போடு பார்ப்பார்களோ! அதற்கு இணையான பார்வையை சோசலிசத்திடம் காட்டுகிறார் ஆசிரியர்.

அதாவது மனு தர்மமும் முதலாளித்துவமுமே உலகின் சிறந்த சமுதாய அமைப்புகள், அவற்றை என்று நாமெல்லாம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்கிறார். ‘பார்ப்பனியத்தையும் முதலாளித்துவத்தையும் தத்துவார்த்த ரீதியில் எதிர்த்தாலும் அல்லது அவற்றை வீழ்த்தி அவற்றிலிருந்து உழைக்கும் மக்களை விடுதலை செய்ய முயன்றாலும் சரி, நாங்கள் விட மாட்டோம்’ என்று எச்சரிக்கை செய்கிறார்.

இந்த விஷமப்பிரச்சாரம் ‘நடுநிலை’ இதழ் வாசகர்களின் மூலம் பட்டி தொட்டி எங்கும் பரவ வேண்டும் என்று, வைரமுத்து ஆண்டாள் குறித்து பேசுவதற்கு மேடை அமைத்து தந்ததற்காக ‘ஜீயர்’ வாளிடம் மன்னிப்பு கேட்க காலில் விழுந்து மண்டியிட்டாரே, அது போல மண்டியிட்டு தம் இஷ்ட தெய்வங்களை வேண்டிக் கொள்ளவும் செய்திருப்பார்.

இந்த விஷம பரப்புரைக்கு நம் பதில் என்ன? அது, கியூபா மக்களைப் போன்று வரலாறு படைத்த புரட்சிகர வரலாற்றிலிருந்து பாடம் கற்றுக் கொண்டு பார்ப்பனீயத்தையும், முதலாளித்துவத்தையும் வேரோடும் வேரடி மண்ணோடும் வெட்டி எறிவதற்காக பணியாற்றுவதே நாம் வைத்திக்கு கொடுக்கும் சரியான பதிலாக இருக்கும்.

– ராஜதுரை

Permanent link to this article: http://new-democrats.com/ta/new-president-of-cuba-and-dinamani-socialist-hatred/

Leave a Reply

Your email address will not be published.

%d bloggers like this:
Read more:
கம்பளிப் புழுவா காண்ட்ராக்ட் தொழிலாளி?

காண்ட்ராக்ட் தொழிலாளியாக இருந்தால் அமர்த்து & துரத்து(hire­ &­ fire) என்கிற கொள்கைப்படி இஷ்டம் இருந்தால் கொடுக்கின்ற சம்பளத்துக்கு வேலை செய்; இல்லையென்றால் ஓடிப்போ என்று துரத்திவிட...

ஆந்திராவுக்குப் போன கார்ப்பரேட் முதலாளிகள்: காரணமென்ன?

அதிக லாப வீதத்தைத் தேடி ஓடும் ஓட்டத்தில், குறைவான கூலியில் அதிக நேரம் வேலை வாங்கி தொழிலாளர்களை சுரண்டுவதற்கான வசதி, ஓசியில் அல்லது மிகக் குறைந்த வாடகையில்...

Close