விவசாயம் : உற்பத்தியிலும் போராட்டம், டெல்லியிலும் போராட்டம், தமிழ் நாட்டிலும் போராட்டம்

செய்தி : அமெரிக்க தூதரக அலுவலகம் முன்பு அய்யாக்கண்ணு தலைமையில் பிச்சை எடுக்கும் போராட்டம்

கோப்புப் படம்

காவிரி நதி நீர் வாரியம் அமைப்பது, நதிகளை இணைப்பது, கடன் தள்ளுபடி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் 28-வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர் தமிழக விவசாயிகள்.

ஆகஸ்ட் 12-ம் தேதி ஜந்தர் மந்தர் பகுதியிலிருந்து வெளியேறிய போராட்டக்காரர்கள் அமெரிக்க தூதரக அலுவலகத்துக்குச் சென்று அங்கு கையில் தட்டு ஏந்தி பிச்சை எடுக்கும் போராட்டம் நடத்தினார்கள். அய்யாக்கண்ணுவின் செல்ஃபோன் சிக்னல் மூலம் அவர்கள் இருக்கும் இடத்தை அறிந்த போலீசார் விரைந்து வந்து போராடும் விவசாயிகளை ஜந்தர் மந்தருக்கு திரும்பி அழைத்துச் சென்றனர்.

“பிரதமர் மோடி அமெரிக்காவுக்குச் சென்று உதவிகள் கேட்கிறார். ஆனால் எங்களைச் சந்தித்து குறைகளை கேட்கவில்லை. அதனால் நாங்கள் அமெரிக்காவிடம் உதவி கேட்கவே அமெரிக்க தூதரகத்துக்குச் சென்றோம். உதவி செய்யாவிட்டால் பிச்சையாவது போடுங்கள் எனக் கேட்டோம்” என்றார் போராட்டக் குழு தலைவர் அய்யாக்கண்ணு.

கருத்து : பிரதமர் மோடி அமெரிக்காவுக்குச் செல்வது அமெரிக்க கார்ப்பரேட்டுகளுக்கு இருக்கும் குறைகளை கேட்டு அவற்றை தீர்த்து வைப்பதற்கு. அந்த கார்ப்பரேட்டுகளுக்கு இரையாக்கப்படவிருக்கும் இந்திய விவசாயிகளிடம் குறை கேட்பதில் மோடிக்கு என்ன அக்கறை இருக்க முடியும்?

அய்யாக்கண்ணு குழுவினர் நம் நாட்டை கொள்ளையடிக்கும் அமெரிக்காவிடம் போய் பிச்சை கேட்பதால் என்ன கிடைக்கும்?

செய்தி : ஆகஸ்ட் 11 நிலவரப்படி பயிர் சாகுபடி பரப்பளவு 0.69% அதிகரிப்பு

நாட்டின் நெல் உற்பத்தியில் பெரும்பகுதி பங்கு விளையும் தென்மேற்கு பருவமழையை சார்ந்து நடைபெறும் நடப்பு ஜூன்-அக்டோபர் காரிஃப் பருவத்தில் பயிர் சாகுபடி பரப்பளவு 0.69% உயர்ந்துள்ளது. ஆகஸ்ட் 11 அன்று சாகுபடி பரப்பளவு 23.59 கோடி ஏக்கராக இருந்தது. இது சென்ற ஆண்டின் இதே நாளில் இருந்த 23.42 கோடி ஏக்கரை விட 0.6% அதிகமாகும். (வட கிழக்கு பருவமழையை சார்ந்து நடைபெறும் ராபி பருவத்தில் கோதுமை அதிகமாக சாகுபடி செய்யப்படுகிறது.)

பல்வேறு பயிர்கள் பயிரிடப்படும் பரப்பளவு விபரம் பின்வருமாறு

நெல் – 8 கோடி ஏக்கர்
கரும்பு – 1.24 கோடி ஏக்கர்
பருத்தி – 2.93 கோடி ஏக்கர்
துவரை, உளுந்து உள்ளிட்ட பருப்பு வகைகள் – 3 கோடி ஏக்கர்
சிறு தானியங்கள் – 4.18 கோடி ஏக்கர்
எண்ணெய் வித்துக்கள் – 3.85 கோடி ஏக்கர்
சணல் – 17.62 லட்சம் ஏக்கர்

நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 60%-க்கும் மேற்பட்டவர்கள் ஈடுபடும் விவசாயத் துறையின் பங்களிப்பு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 15% அளவிற்கே உள்ளது.

கருத்து : விவசாயிகளுக்கு விளைச்சல் பொய்த்தாலும் வேதனை, விளைத்து கொட்டினாலும் சோதனை என்று கிடுக்கிப் பிடி போடுகிறது கார்ப்பரேட் கால்பிடி அரசு. இந்நிலையில் விவசாயிகளின் பிரச்சனைகளை தீர்ப்பதற்கான போராட்டங்களுக்கு  ஆதாரமாக பயன்படுத்த வேண்டும்.

செய்தி : பெட்ரோலிய ரசாயன மண்டலத்துக்கு எதிர்ப்பு – காவிரி டெல்டா மாவட்டங்களில் 29-ம் தேதி முழு அடைப்புப் போராட்டம்

கடலூர் – நாகை மாவட்டங்களைச் சேர்ந்த 47 கிராமங்களில் உள்ள 47,000 ஏக்கர் விளை நிலங்களை பெட்ரோலிய ரசாயன மண்டலம் அமைப்பதற்காக கையகப்படுத்த திட்டமிட்டுள்ளன மத்திய மாநில அரசுகள். இதனால் கிராமங்களில் மக்கள் வாழ முடியாது, மீன் வளம் பாதித்து மீனவர்களும் கடும் பாதிப்புக்கு ஆளாவர்கள்.

பெட்ரோலிய ரசாயன மண்டலமாக அறிவித்ததை மத்திய, மாநில அரசுகள் திரும்பப் பெறக் கோரியும், பாதுகாக்கப்பட்ட வேளாண்மை மண்டலமாக அறிவிக்க வலியிறுத்தியும் தஞ்சை, நாகை, திருவாரூர், கடலூர் ஆகிய 4 மாவட்டங்களில் முழு அடைப்புப் போராட்டம் நடத்தப்படும் என்று விவசாய ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர் பாண்டியன் கூறியிருக்கிறார்.

கருத்து : விவசாயிகளையும் விவசாய நிலத்தையும் அழிக்க வரும் அரசுகளிடம் போய் கோரிக்கை வைப்பதில் என்ன பலன் கிடைக்கும்?

– நளன்

More from New Democrats

Permanent link to this article: http://new-democrats.com/ta/news-and-views-14082017/

Leave a Reply

Your email address will not be published.

%d bloggers like this:
Read more:
டாலர்-ரூபாய், அமெரிக்கா-இந்தியா பற்றி இந்துத்துவ பிதற்றல்கள்

பல அரை உண்மைகளை, அண்டப் புளுகுகளோடு கலந்து ஒரு செய்தி வாட்ஸ்-அப் மற்றும் சமூக வலைத்தளங்களில் உலவுகிறது. உண்மை என்ன என்பதை விளக்கும் பதிவு.

போக்குவரத்துத் தொழிலாளர்களின் போராட்டம் சரியானதே! : பு.ஜ.தொ.மு

நமக்கு எதிரி போக்குவரத்துத் தொழிலாளர்கள் அல்ல! தகுதியிழந்த அரசு இயந்திரம்தான்! ஊழல், பென்சன் பணம் கொள்ளை, அதிகார முறைகேடுகளில் ஈடுபட்ட அதிகாரிகள் – அமைச்சர்களை செருப்பால் அடித்து...

Close