செய்தியும் கண்ணோட்டமும் – பொன்னார், கிரண்பேடி சவடால்கள்

செய்தி : இலவசங்களை வாங்கியே தமிழக மக்களுக்கு பழக்கமாகிவிட்டது – மத்திய சாலை போக்குவரத்து மற்றும் கப்பல் துறை இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்.

கண்ணோட்டம் :

மக்கள் இலவசத்திற்கு அடிமையாகிவிட்டதாய் பொன்னார் சொல்வதன் பொருள், எல்லாவற்றையும் தனியாரிடம் ஒப்படைத்துவிட்டு அவர்களிடம் காசுகொடுத்து மக்கள் வாங்கி கொள்ளட்டும் என்பதுதான்.

மக்களின் உழைப்பில் கிடைத்த பணத்தை கொள்ளையடித்துவிட்டு எல்லா துறைகளும் நஷ்டத்தில் போவதாய் நாடகமாடுகின்றனர் அரசியல்வாதிகளும், அதிகாரிகளும். மக்களின் அடிப்படை தேவைகளை (தரமான கல்வி, மருத்துவம், தங்கும்வசதி, வேலை வாய்ப்புகள் வேலை) அனைவருக்கும் சமமாக, இலவசமாக வழங்குவது அரசின் கடமை. இதை ஒழுங்காக செய்ய துப்பு இல்லையென்றால் வரிவசூலிக்க எந்தவித உரிமையும் இந்த அரசுக்கு இல்லை என்பதை உழைக்கும் மக்களாகிய நாம் புரிந்து கொள்ளவேண்டும் .

அரசாங்கத்திற்கு வரும் வரிப்பணம் முழுவதும் மக்களின் உழைப்பில் சேர்ந்தது. அதிலிருந்துதான் அமைச்சர்களுக்கும், அதிகாரிகளுக்கும் ஊதியம் கொடுக்கப்படுகிறது. அது போதாதென்று கொள்ளையடித்து சொத்து சேர்த்துக்கொண்டு வெளிநாட்டில் நிலம், வெளிநாட்டு வங்கியில் பணம் குவித்துவிட்டு, கார்ப்பரேட்டுகளுடன் கூட்டு சேர்ந்து கமிஷன் வாங்கிக்கொண்டு, சொகுசு வாகனங்களில் சுற்றித் திரிந்து கொண்டு மானங்கெட்ட வாழ்க்கை வாழும் அமைச்சர்களுக்கும் அதிகாரிகளுக்கும் மக்களைப் பற்றி பேச தகுதியில்லை.

செய்தி :

மதுக் கடைகளை அகற்ற நடவடிக்கை எடுக்காவிட்டால் என்னிடம் வாருங்கள் – புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி

திருக்கனூர் அருகே சோரப்பட்டில் மக்கள், மாநில நெடுஞ்சாலையில் கள் மற்றும் சாராயக்கடையும், மதுக்கடையும் அகற்றப்படாமல் இருப்பதாகவும், அவற்றை அகற்ற உத்தரவிடும்படியும் ஆளுநர் கிரண்பேடியைக் கேட்டுக் கொண்டனர்.

இதற்கு கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர், “இரு சாராயக்கடைகளும் உச்சநீதி மன்றத்தின் உத்தரவுக்கு உட்பட்ட பகுதியில் வரவில்லை” என்று தெரிவித்தார்.

கிரண்பேடி, “மக்கள் எதிர்ப்பதால் அந்தக் கடைகளை அகற்றலாமே” என்று கேட்டபோது, “அது கலால் துறையின் பணி” என்று பதில் கூறினார் ஆணையர்.

பிறகு “சாராயம் மற்றும் மதுக்கடைகளை அகற்ற முறைப்படி கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் மற்றும் கலால்துறை துணை ஆணையரிடம் புகார் மனு கொடுங்கள். அதன்பிறகும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் என்னிடம் வாருங்கள்” என்று கூறியிருக்கிறார் கிரண் பேடி.

கண்ணோட்டம் :

மக்களுடைய தேவைகளை நிறைவேற்றவும், குறைகளைக் களையவும்தான் அதிகாரிகளும், அமைச்சர்களும் பதவியில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. ஆனால் உண்மையில் இதற்கு மாறாகத்தான் நடந்துகொண்டிருக்கிறது . மக்கள் தண்ணீர் பிரச்சனை, மருத்துவமனை வசதி குறைபாடு என்று பல்வேறு பிரச்சனைகளோடு வாழ்ந்து கொண்டிருப்பதை அமைச்சர்களும் அதிகாரிகளும் அறிவார்கள். இருந்தும் அவற்றை சரி செய்வதற்கு ஏன் முயற்சி எடுக்காமல், மக்களின் அன்றாட பிரச்சனைகளை பொருட்டாக எடுத்துக்கொள்ளாமல் சொகுசு வாகனங்களில் சோம்பேறிகளாக சுற்றித்திரிகிறார்கள்.

மக்கள் தங்கள் பிரச்சனைகளை மனுவாக எழுதி கொடுத்தால் அதை கழிப்பறை காகிதமாகக் கூட மதிப்பதில்லை. “மனுகொடுத்து விட்டு வெளிவந்தால் அடுத்த கணம் குப்பைத் தொட்டியில் வீசி எறிவதை எங்கண்ணால் பார்த்தேன்” என்கிறார் என் நண்பர் ஒருவர். அவர் சொல்வதுதான் நடைமுறை என்பதை யாரும் புரிந்து கொள்ள முடியும். “மதுக்கடைகள் வேண்டாம் , குடிக்க தண்ணீர் வேண்டும்” என எத்தனை முறை மனுவாக எழுதிக்கொடுத்தாலும் தீர்வு கிடைக்கவில்லை என்று மக்கள் அனுபவபூர்வமாக உணர்ந்திருக்கிறார்கள்.

இந்த நேரத்தில், ஏதோ தான் மக்களுக்காக நல்லது செய்வதுபோலவும் தன்னிடம் சொன்னால் கண்டிப்பாக தீர்வு உண்டு என்பது போல “என்னிடம் வந்து சொல்லுங்கள்” என்று சவடால் அடித்திருக்கிறார் கிரண்பேடி. கொஞ்ச நேரத்தில், “சம்பந்தப்பட்ட துறைக்கு மனுவாக கொடுங்கள், அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் என்னிடம் வாருங்கள்” வழக்கமான பல்லவியை பாடியிருக்கிறார்.

காங்கிரஸ் முதலமைச்சருக்கு குடைச்சல் கொடுப்பதை காவிகளும் அவர்களது கார்ப்பரேட் புரவலர்களும் அனுமதிப்பார்கள். ஆனால், மதுக்கடையை அகற்றுவதில் எல்லாம் கிரண் பேடியின் சவடாலுக்கு அனுமதி இல்லை. அது அவருக்கும் தெரியும்

தமிழகத்தின் பல்வேறு கிராமங்களில் மக்கள் செய்வது போல அதிகாரத்தை கையில் எடுத்து கடையை உடைத்து எறிவதுதான் மதுக்கடைகளை அகற்றுவதற்கான  ஒரே வழி.

– பிரகாஷ்

Permanent link to this article: http://new-democrats.com/ta/news-and-views-21-06-2017/

Leave a Reply

Your email address will not be published.

%d bloggers like this:
Read more:
இந்திய ஐ.டி-பி.பி.எம் துறை – புள்ளிவிபரம்

தகவல் ஆதாரம் Indian IT-BPM Industry FY16 Performance and FY17 Outlook (கணக்கீடுகளுக்கு பயன்படுத்தப்பட்ட நாணய மாற்று வீதம் 1$ = ரூ 67) படங்களைப்...

“நீட்”, உறுப்பினர் சேர்க்கை இயக்கம் : பு.ஜ.தொ.மு ஐ.டி சங்கக் கூட்டம்

நமது சங்கத்தின் மாதாந்திரக் கூட்டம் சனிக்கிழமை செப்டம்பர் 16, 2017 அன்று நடைபெறும். இடம் : பெரும்பாக்கம் நேரம் : மாலை 4 மணி முதல் 8...

Close