உழைக்கும் வர்க்கம் ஆட்சியதிகாரத்தை கைப்பற்றிய ரசிய சோசலிச புரட்சியின் நினைவு நாளை பு.ஜ.தொ.மு – ஐ.டி ஊழியர்கள் பிரிவின் சார்பாக இந்த வாரம் நாம் கொண்டாடுகிறோம். 1917-ம் ஆண்டு நவம்பர் மாதம் 7-ம் தேதி (பழைய ரசிய முறைப்படி அக்டோபர் 25) தொழிலாளி வர்க்கம், விவசாயிகளுடன் கூட்டணி அமைத்து முதலாளித்துவ அரசை தூக்கி எறிந்து ஒரு உழைக்கும் வர்க்க அரசை நிறுவியது.
82 ஆண்டுகள் நீடித்த சோவியத் யூனியன் பொருளாதார, அரசியல், கலாச்சார துறைகளில் மகத்தான சாதனைகளை படைத்தது. சோவியத் சோசலிச குடியரசுகளின் ஒன்றியம் அரசியல் ரீதியான சில முக்கியமான தவறுகளின் காரணமாக வீழ்ச்சியை எதிர்கொண்டாலும், அது உலகெங்கிலும் உள்ள உழைக்கும் மக்களின் வாழ்வில் பல்வேறு முக்கியமான மாற்றங்களை கொண்டு வந்தது.
சோவியத் குடியரசுகளில் உழைக்கும் மக்கள் வென்றெடுத்த உரிமைகள் சில
- அனைவருக்கும் கல்வி
- பெண் விடுதலை
- அனைத்து விதமாக மத ஒடுக்குமுறைகள் ஒழிப்பு (உதாரணமாக மத்திய ஆசிய குடியரசுகளில் பெண்கள் பர்தா அணியும் முறையிலிருந்து விடுவிக்கப்பட்டு நவீன கல்வி வழங்கப்பட்டனர். மதம் தனிநபர் அளவில் இருக்கும்படி மட்டுப்படுத்தப்பட்டது).
- அனைவருக்கும் தரமான மருத்துவ வசதி
- அறிவியல் தொழில்நுட்பத்தில் மகத்தான முன்னேற்றம் (உதாரணம் : விண்வெளி பயணம், மருத்துவத் துறை முதலியன)
- தொழிலாளர்களுக்கு வரையறுக்கப்பட்ட வேலை நேரம், பணி பாதுகாப்பு, பணியிட பாதுகாப்பு போன்றவை உறுதி செய்யப்பட்டன. தொழிற்சாலைகள் தொழிலாளர் சோவியத்துகளால் நிர்வகிக்கப்பட்டன.
- விவசாயத்தில் நவீன தொழில்நுட்பம் விவசாயிகளின் கட்டுப்பாட்டின் கீழ் புகுத்தப்பட்டது.
- பெரும்பான்மை உழைக்கும் மக்களுக்கு உண்மையான ஜனநாயகம்
அனைத்து தேசிய இனங்களும் தத்தமது மொழியையும், முற்போக்கு கலாச்சாரத்தையும் வளர்ப்பதற்கான முழு உரிமை.
சோவியத் புரட்சி ரசியாவில் மட்டுமின்றி உலகெங்கிலும் உழைக்கும் வர்க்க இயக்கங்களை வலுப்படுத்தியது. இந்தியாவில் 1917-க்குப் பிறகு தொழிலாளர் வர்க்கப் போராட்டங்கள் தீவிரமடைந்தன. 1926-ல் தொழிற்சங்க சட்டம் நிறைவேற்றப்பட்டது. தொழிலாளர்களின் நலன்களை பாதுகாப்பதற்கும், விவசாயிகளின் நல வாழ்வை உறுதி செய்வதற்கும் பல நடவடிக்கைகள் எடுக்கும்படி ஆளும் வர்க்கங்கள் கட்டாயப்படுத்தப்பட்டன. மறுகாலனியாக்க நடவடிக்கைகளின் கீழ் இந்த உரிமைகள் தொடர்ந்து தாக்கப்பட்டு நீர்த்துப் போகச் செய்யப்பட்டாலும் இன்றும் அவற்றை குறைந்தபட்ச அளவிலாவது பயன்படுத்தி வருகிறோம்.
யு.எஸ்.எஸ்.ஆர்-ன் உருவாக்கத்தை சாதித்த நவம்பர் புரட்சியின் 101-வது ஆண்டு நிறைவை கொண்டாடும் விதமாக இந்த வாரம் முழுவதும் நமது இணையதளத்திலும் ஃபேஸ்புக் பக்கத்திலும் பதிவுகள், மீம்ஸ்கள், கட்டுரைகள் வெளியிடப்படும்.
சோசலிசம் தொடர்பாக உங்கள் கருத்துக்கள், கேள்விகள், கட்டுரைகளை வரவேற்கிறோம். அவற்றை பின்னூட்டத்தில் பகிருங்கள் அல்லது combatlayoff@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
#November7 #SocialistSolutions #SovietAchievements
#நவம்பர்7 #சோசலிசதீர்வுகள் #சோவியத் சாதனைகள்