“7500 ரூபால வாடக கொடுப்பனா, சாப்டுவனா, பிள்ளகள படிக்க வப்பனா”

சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் தொடர்ந்து போராடி வருகிறார்கள் செவிலியர்கள்.  போராட்டத்தின் 3-வது நாளன்றுபு.ஜ.தொ.மு – ஐ.டி ஊழியர்கள் பிரிவு உறுப்பினர்கள் சிலர் வளாகத்துக்குள் சென்று செவிலியரை சந்தித்து உரையாடினார்கள். செவிலியர் போராட்டத்துக்கு ஐ.டி ஊழியர்கள் சார்பாக ஆதரவு தெரிவித்தார்கள். அந்த உரையாடலின் உரை வடிவத்தை இங்கு தருகிறோம்.

போராடும் செவிலியருக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் நடத்தும் பெண்கள் விடுதலை முன்னணி (கோப்புப் படம்)

NDLF – IT : நாங்க புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி – ஐ.டி சங்கத்தில இருந்து வர்றோம். எவ்வளவு நாட்களா இந்த போராட்டம் நடத்துறீங்க?

பெண் செவிலியர் : “திங்கட்கிழமையிலருந்து நடந்திட்ருக்கு, காலையில 4 – 5 மணிக்கெல்லாம் எல்லாரும் வந்தாச்சு. மொத்தம் நாங்க தமிழ்நாட்ல 9 ஆயிரத்து சொச்சம். ஆனா, போஸ்டிங்ல எடுத்தது 11 ஆயிரம். அதுல மத்தவங்கல்லாம் வேல வேணாம்னு சொல்லிட்டு போணவங்க இருக்காங்க. ஏன்னா, எங்களோட சம்பளம் வெறும் 7500 தான். அதுதான் எங்களோட “பே” யா பிக்ஸ் பண்ணது. ரெண்டு வருசத்துக்கப்புறம் எங்கள கண்டிப்பா ரெகுலர் பண்றோம் அப்டின்னு தான் கவர்மென்ட் சொன்னது. கன்சாலிடேட்டடா கவர்மன்ட் ஜாப். ரெண்டு வருசம் கழிச்சி பன்றாங்களே அப்டின்ற நம்பிக்கையிலதான் நாங்க வந்தோம். பாத்தீங்கன்னா எங்கள அதே சேலரியில தான் வச்சிருக்காங்க. கொடுக்கறது எங்களுக்கு 3 ஷிப்ட் டே டூட்டி. ஆனா எங்கள போடறதே கிடையாது.

ஃபுல்லா, 24 ஹவர் டூட்டி பாக்கறோம் நாங்க. காலைல மாத்தறதுக்கு ஆள் கிடையாது. ஃபெஸ்டிவல் ஹாலிடேஸ்னாலே கிடையாது. எல்லாத்துக்குமே நாங்க வர்றோம். ஃபுல்லாவும் டூட்டீஸ் பாக்றோம். எந்த லீவுமே எங்களுக்கு கொடுக்கறது கிடையாது.”

NDLF – IT : வாரத்துக்கு எத்தனை நாள் லீவு கிடைக்கும்?

பெண் செவிலியர் : “வீக்லி ஒரு நாள் லீவுனு உண்டு. ஆனா கிடைக்கிறது கிடையாது. ரேரா தான் எங்களுக்கு கிடைக்குதே.”

NDLF – IT : வாரத்துல ஏழு நாளும் வேலை செய்றீங்க.  இந்த போராட்டத்துக்கு காரணங்கள் என்னென்ன?

பெண் செவிலியர் : ஏழு நாளும் வேலை பண்ணனும். லீவு எடுக்கனும்னா எங்களுக்குள்ள அட்ஜஸ்ட்மண்ட் இருந்தாத்தான் நாங்க லீவ் எடுக்க முடியும். எங்களோட கோரிக்கை. நாங்க கண்டிப்பா ரெகுலர் ஆகனும். ரெகுலர் ஆகனும். டைம் டூ ஸ்கேல் பே. 101 அரசானைய இம்பளிமன்டேஷன் பண்ணனும். இதுதான் எங்களோட ஒட்டு மொத்த கோரிக்கையும்.

ஏழு நாள் வந்தாலும் எங்களுக்கு போதுமான ஊதியம் கிடையாது. எங்க வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டிருக்கு.

இப்ப டீச்சர்ஸ் மீதி எல்லா புரோஃபஷனுக்கும் உடரறப்ப அவங்களுக்கு அதே பே. ஈக்வல் பே கொடுக்ற. ஈக்வல் ஒர்க், ஈக்வல் பே. ஆனா, நாங்க அதே ஒர்க் தான் செய்றோம். ரெகலர் ஸ்டாஃப் என்ன ஒர்க் செய்றாங்களோ, அதேதான் நாங்க செய்றோம். ஆனா, எங்களுக்கு ஈக்வல் பே கிடைக்கறது கிடையாது.

அவங்க சொன்னபடி கான்ட்ராக்ட் பேசிஸ் 2 இயர்ஸ் முடிஞ்சிருச்சி. ஆனா, எங்களுக்கு அடுத்த ஸ்டெப் எதுவுமே எடுக்கவுமில்ல. அதனால நாங்க இப்ப ஆரம்பிச்சிருக்கிறது அதனாலதான். 191 ஜீ.ஓ படி எங்களுக்கு சேலரியும்..

எங்களுக்கு எந்த விடுப்பும் கிடையாது. கவர்மன்ட் ஹாலிடே லீவு, மெடிக்கல் லீவு, அப்படி எதுவுமே கிடையாது. மகப்பேறு விடுப்பு எடுத்தா கூட சம்பளம் கிடையாது. அதுலயே எங்களுக்கு லாஸ் ஆப் பே வந்துரும்.

NDLF – IT :  நீங்க ஒரு நாள் லீவ் எடுத்தாலும் ஊதியத்தை வெட்டிருவாங்களா?

பெண் செவிலியர் : வீக் ஆஃப்னு மாசத்ல நாலு நாள் நாங்க  எடுத்துக்கலாம். ஆனா, கொடுக்க மாட்டாங்க.

இப்ப டெங்கு வந்திருக்கு. நீ 24 மணி நேரம், எத்தன நாளு வேணா வேல செய்யி. அதுதான் அவங்க சொல்றது.

ஆளு இருந்தாதான் எடுக்க முடியும். நீதான் ஆஸ்பிட்டல் இன்சார்ஜ். ஹோல் இன்சார்ஜ். டாக்டர் இல்லனா, பாரு, பார்மசி இல்லனா, பாரு, லேப இல்லனா, பாரு, எல்லாத்தயும் பண்ணு, ஆனா, நான் சம்பளம் மட்டும் தரமாட்டேன்.

நாங்க ரெகுலர் ஆகனும். ரெகுலர் இல்ல, டைம் ஸ்கேல் பே. 191 ஜீவோ. இதுதான், இந்த அரசாணைய எங்களுக்கு கொடுங்க. அப்படீன்னுதான் நாங்க சொல்றோம். நாங்க மட்டுந்தான் எக்சாம் எழுதி, MRB அப்டின்னு ஒரு போர்டு எக்சாம் எழுதி, மெரிட்ல தான் வந்துருக்கோம் நாங்க. அதுல வந்த எங்களயே வெறும் கன்சாலிடேசன் பே ல வச்சிருக்காங்க.

கேட்டா, நான் எப்ப போடறேனோ அதுதான். அப்பதான். நீ தமிழ்நாடு கவர்மன்ட் ஸ்டாஃபே கிடையாது. நீங்க வந்து ஸ்கீம்ல வந்த ஸ்டாஃப். தமிழ்நாட்டோடு ஸ்டாஃபே கிடையாது.

நான் என்னிக்கி போடறேனோ, அது 10 வருசமானாலும் சரி. எத்தன வருசமானாலும் சரி. நான் எப்டி போடுவேன்? எனக்கு எப்ப வேகன்ட் வருதோ அப்பதான் போடுவேன். அது வரைக்கும் நீ இப்படிதான் இருக்கனும். இதுதான் அவங்க சொல்றது.

இடம் அதிகமா இருக்குது. ஆனா, அவங்க போடமாட்டேங்கறாங்க. அதுக்கான காரணம் என்ன? வேலையில்லைனா எதுக்கு இந்த 14 ஆயிரம் பேர போடனும்?

ஒட்டு மொத்த பேரயும் எடுத்திருக்காங்க. எடுத்திட்டு நான் போடமாட்டேன். உங்கள ரெகுலர் பே ல போடமாட்டேன். ஸ்கீம்ல தான். அதுவும் NRHM ஸ்கீம் அப்டீங்கற ஸ்கீம்லதான் போடுவேன் அப்டீன்னு சொல்றாங்க.”

ஒரு ஆண் செவிலியர் : தரமான மருத்துவம் கிடைக்கறதுக்காக அவ்ளோ, ஆயிரங் கணக்கான நர்ஸ்கள எடுத்திருக்காங்க. செவிலியர்கள எடுத்திருக்காங்க. ஆனா, செவிலியர்களுக்கு தரமான ஊதியம் இல்லாததனால எங்களது வாழ்வாதாரம் பாதிக்கப் படுது.

என்னோட நண்பர் ஒருவர் ஜாய்ன் பண்ணி மூணாவது மாசத்ல காசநோயால பாதிக்கப்பட்ருக்கார். பேசன்ட் கிட்ட இருந்து கிடைச்ச இன்பக்சன் அவருக்கு. ஊதியமும் கிடைக்கல. சரிவிகித உணவும் உண்ணமுடியல அவரால. அதனால அவருக்கு காசநோய் வந்திச்சி. அந்த காசநோய்க்கு மருத்துவ விடுப்போ, அரசாங்கத்திலருந்து எந்த விதமான சலுகையோ எதுவுமே கிடையாது. இப்படியெல்லாம், கொடுமைகள்லாம் நடக்குது. எந்தவிதமான சலுகையும் இல்லாம இருக்கு. அரசாங்கத்ல வேல பாத்துங்கூட.

NDLF – IT : உங்களோட கோரிக்கைகள் என்னென்ன?

பெண் செவிலியர் : எங்களோட கோரிக்கைகள் என்னன்னா, எங்கள நீங்க ரெகுலர் பன்னுங்கன்னு நாங்க கேக்கல. எங்களுக்கு கிடைக்க வேண்டிய ஞாயமான கோரிக்கையான 191 கவர்மன்ட் ஆர்டர இம்ப்ளிமன்ட் பண்ணனும். அதுமட்டும் போதும். அது பாத்தாலே எங்களோட ஊதியம் உயர்ந்துரும்.

அது இம்ப்ளிமென்ட் பன்றதால ஊதிய உயர்வு கிடைக்கும். மத்த அரசு ஊழியர்களுக்கு என்னென்ன சலுகைகள் இருக்கோ அதெல்லாம் எங்களுக்கும் கிடைக்கும். நாங்க ஆல்ரெடி கவர்மண்ட் எம்ப்ளாயிதான் மேடம். அரசாங்கம், மெடிக்கல் சர்வீஸ் ரெக்ரூட்மன்ட் போர்டு மூலமா எங்கள எடுத்துருக்காங்க. அப்டி எடுத்ததனால தான் நாங்க ஆல்ரெடி அரசாங்க ஊழியராதான் நாங்க நினைக்கறோம். ஆனா, அரசாங்கம் எங்கள என்ன சொல்றான். நீங்க அரசாங்க ஊழியர்கள் கிடையாது அப்டின்னு சொல்றாங்க. எங்களுக்கு அப்பாயின்மன்ட் கொடுத்தது அரசாங்கந்தான்.

வேறு ஒரு ஆண் செவிலியர் : அதே அரசாங்கம், அதே MRB மெடிக்கல் ரெக்ரூட்மன்ட் போர்டு மூலமா எடுத்த செவிலியர், கிராம சுகாதார செவிலியர்கள், மருத்துவர்கள் மற்றும் லேப் டெக்னீசியன் போன்ற எக்ஸ்ரே டெக்னீசியன் போன்ற ஏனைய பேராமெடிக்கல் அனைவருமே ரெகுலர் பே ஸ்கேல் கொண்டுவர்றாங்க. அதிலும் VHN எக்சாம் இல்லாமலே ஸ்டெரைட் ரெகுலர் பே கொடுத்தாங்க. ஒரு 2300 பேருக்கு. லாஸ்ட்டா. ஆனா, செவிலியர்கள், கடுமையான காம்படிடிவ் எக்சாம், ஒரு ரெக்ரூட்மன்ட் ரூல்ஸ், இத பேஸ் பண்ணி வந்திருக்காங்க. அவங்களுக்கு ஒரு நல்ல ஊதியம் கிடையாது. இது இண்டியாவிலேயே மிக மோசமான, தமிழ்நாட்ல மட்டுந்தான் இப்படி செவிலியர்களோட நிலம. விஜயபாஸ்கர் சொன்னது தவறான விசயம். மத்த ஸ்டேட்ல, எந்த ஸ்டேட்லயுமே இந்த சம்பளம் கிடையாது. குறைஞ்சபட்ச சம்பளமே இண்டியாவுல 20 ஆயிரம். செவிலியர்களுக்கே. அதுவும் தொகுப்பூதிய செவிலியர்களுக்கே. உச்ச நீதிமன்றமே சொல்லியிருக்கு 32 ஆயிரம் சம்பளம் குறைஞ்ச பட்சம் செவிலியர்களுக்கு வழங்க வேண்டும் என்று. இவர்கள் செவிலியர்கள் இத்தனாயிரம் பேர் எதுக்காக இத்தன நாளு இங்கவந்து போராடுறாங்கன்னா, அவங்களுக்குள்ள ஆதங்கத்த வெளிப்படுத்தறதுக்குதான். இல்லன்னா, நாங்க ஆண் செவிலியர்கள் இருக்கோம். இதுல, அறுநூறுக்கும் மேற்பட்ட ஆண் செவிலியர்களும் இருக்காங்க இதுல. ஏன்னா, எனக்கும் குழந்தை இருக்கு வைப் இருக்காங்க. நான் குடும்பத்த பாக்கனும். இத்தனக்கும் நான் ஒரு 150 கிமி தள்ளிதான் போஸ்டிங் கிடச்சிருக்கு. எனக்கு வீட்டு வாடகை இதயெல்லாம் பேஸ் பண்ணி நான் ஒரு நல்ல உணவு சாப்ட முடியுமா. பேமிலிய கேர் பண்ணிக்க முடியுமா.

NDLF – IT : நிச்சயமாக. 7500, அதுவும் இந்தகாலத்துல, எதுக்கும் பத்தாது!

ஆண் செவிலியர் : அதனோட ஆதங்கங்தான், இரண்டுவருசமா அவங்க கவர்மன்ட்டுக்கு உழைச்சிருக்காங்க. எங்களுக்கு ஒரு பலன் கிடைக்கல. அப்டீங்கற பட்சத்தில தான் இத்தனாயிரம் பேரு அவங்களோட ஆதங்கத்தில [இங்க வந்திருக்காங்க].

மருத்துவரும் அதே NRHM ல தான் வர்றாங்க. VHN மற்ற எல்லாமே NRHM கீழ தான் வர்றாங்க. மருத்துவர்களுக்கு, அதே போல எங்களுக்கு இருந்த ஜீவோ. 191 அவங்களுக்கு எப்டி அப்ளிகபள் ஆச்சோ, அதேபோல எங்களுக்கும் தகுதி இருக்கு. அதனாலதான் எங்களோட உரிமைய நாங்க கேக்கறோம். எல்லாரும் ஆதரவு கொடுத்திருக்காங்க. எங்களுடைய முதலமைச்சர் எங்களுடைய பத்தாயிரம் குடும்பங்களின் வாழ்வாதாரம் கருதி அவர் எங்களுக்கு உதவி செய்வார். எங்கள் குடும்பங்களுக்கு ஒளிவிளக்கு ஏற்றுவார் என்று நம்பிக்கையுடன் போராடிக் கொண்டிருக்கிறோம். எங்களுடைய போராட்டம் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை.

NDLF – IT : நிச்சயமாக வெற்றி பெறுங்க. அதுக்காகத் தான் எல்லா சங்கங்களும் உங்களுக்கு ஆதரவு தெரிவிக்கிறாங்க

ஆண் செவிலியர் : மாசமாசம் 7500 சம்பளம் வரும். என் சொந்த ஊரு திருநெல்வேலி பக்கம். என்னய மெட்ராசுல கொண்டு போட்றுக்காங்க. மெட்ராசுல வீட்டு வாடக குறைஞ்ச பட்சம், ஒரு சின்ன ரூமுக்கு 4500 ரூபா போகும். 4500 ரூபா நான் வாடக கொடுப்பனா, சாப்டுவனா, எம்பொண்டாட்டிக்கு அனுப்பவனா, என் பிள்ளகள படிக்கவப்பனா, நான் இதுல என்னல்லாம் பண்ண முடியும். நீங்களே சொல்லுங்க.

ஆண் செவிலியர்கள் மூலமா கவர்மன்ட்டுக்கு என்ன பெனிபிட்னு அந்த ஆஸ்பிட்டலுக்கு வாட்ச்மேன் போட வேண்டாம். ராத்திரி நேரம் ஆண் செவிலியர போட்டு விட்ருவாங்க.

NDLF – IT : இங்க இருக்கற எல்லாருமே கவர்மன்ட் ஆஸ்பிடல்ல ஒர்க் பன்ற செவிலியர்களா, பிரைவேட்டும் இருக்காங்களா.”

பெண் செவிலியர் : இங்க இருக்க அணைவரும் அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையம், நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில ஒர்க் பன்ற செவிலியர்கள் தான். அணைவரும் மெடிக்கல் சர்வீஸ் ரெக்ரூட்மன்ட் போர்டு மூலமாக அரசாங்கத்தால தேர்வு செய்யப்பட்டு அரசு மருத்துவமனையில் பணிபுரியும் செவிலியர்கள் தான்.

இங்க மூனு நாளா ஸ்டே பண்ணிட்ருக்கோம். பெண்களுக்கு சரியான கழிப்பறை வசதி செய்து தரப்படல. இரவு நேரங்கள் அவங்க வெளிய போகும் போது, டூட்டி முடிஞ்சி போகும் போது அவங்க கழிப்பறைகள பூட்டிறாங்க. பெண்கள் பாத்ரூம் போறதுக்கு ரொம்ப சிரமப்பட்டுட்டிருக்காங்க.

நைட் புல்லா, இரண்டு நாட்களா நைட்டு இங்க உக்காந்து இது மூணாவது நாளா இங்க இருக்கிறோம். சாப்பாடு கொஞ்சம் பேரு வெளிய வாங்கிட்டு வருவாங்க. ஆப்பிள், பிரெட்டு, கிடைக்கறத சாப்பிட்டுக்கிட்டு இருக்க வேண்டியதுதான்.

Permanent link to this article: http://new-democrats.com/ta/nurses-speak-to-ndlf-it-employees-wing-members/

Leave a Reply

Your email address will not be published.

%d bloggers like this:
Read more:
புதிய ஜனநாயகம் – ஜூன், ஜூலை 2020 – பி.டி.எஃப் டவுன்லோட்

இந்த இதழில் வெளியான கட்டுரைகள்: ஊரடங்கு, ஊரடங்குன்னு தொடர்ந்தோம்னா, நாசமாய்ப் போய்டுவோம்! இந்தியா – சீனா முறுகல் போக்கு: மோடி அரசின் சவடாலும் சரனாகதியும்! சுயசார்பு இந்தியா:...

தீக்குளிக்க வேண்டியது இசக்கி முத்து அல்ல, இந்த அரசுதான்

வங்கியிலோ, தனியாரிடமோ சாதாரண விவசாயிகளும், கூலி/சம்பளம் வாங்கி பிழைக்கும் உழைப்பாளர்களும் கடன் வாங்குவது என்பது தவிர்க்க முடியாமல் கந்து வட்டி வடிவத்தைத்தான் எடுக்கிறது.

Close