புதிய சவாரிக்கான அறிவிப்பு ஒன்று அந்த ஓட்டுனரின் ஸ்மார்ட் தொலைபேசிக்கு வருகிறது, அதில் வாடிக்கையாளரை எங்கு பிக் அப் செய்ய வேண்டும் எங்கு இறக்க வேண்டும் என்பன போன்ற விவரங்கள அடங்கியுள்ளன. சவாரியின் விவரங்களை பார்த்தபின், இதை ஏற்கலாமா வேண்டாமா என்று யோசிக்கிறார். காரணம், வாடிக்கையாளர் பயணம் செய்யப்போகும் தூரம் 1.5 கி.மீ. ஆனால் நமது ஓட்டுநர் தற்போது இருக்கும் இடத்திற்கும் வாடிக்கையாளர் வசிக்கும் குடியிருப்பிற்கும் (அபார்ட்மென்ட்) இடைப்பட்ட தூரமோ 5 கி.மீ. ஆட்டோக்களில் உள்ளது போல குறைந்தபட்ச கட்டண நிர்ணயம் எதுவும் ஓலா, உபேர் சேவைகளுக்கு இல்லை. ஓலா-வின் ‘அதி உயர் மென்பொருள் தொழில்நுட்பம்’ வாடிக்கையாளர் பயணம் செய்யும் தூரத்தை மட்டும் கணக்கிட்டு அதற்கு எவ்வளவு தொகை ஆகும் என்று முன்கூட்டியே வாடிக்கையாளருக்கு அனுப்பிவிடுகிறது. அந்த வாடிக்கையாளர் சென்னை சி.ஐ.டி நகரிலிருந்து தியாகராயர் நகருக்கு செல்ல வேண்டும். இதற்கான கட்டணம் ரூபாய் 65 தான்.
வேறு வழியின்றி நமது ஓட்டுநர் அந்த சவாரியை ஏற்கிறார். தரைப்படத்தில் (மேப்) 1.5 கி.மீ. என்று காட்டினாலும், வாடிக்கையாளர் இறங்க வேண்டிய இடமானது ‘யு’ டர்ன் செய்து வந்து சேர 2 கிலோ மீட்டரை தாண்டிவிடுகிறது. இந்தத் தொகையானது எரிபொருள் செலவு மற்றும் ஓலாவிற்கு கமிஷன் 20% + ஜி.எஸ்.டி 5% ஆகியவற்றிற்கே சரியாகிவிடுகிறது. மேற்படி ஓட்டுநருக்கான கூலி மற்றும் வாகனத்திற்கான தேய்மான செலவு ஆகிய இரண்டும் இலவச சேவையில் இணைந்து விடுகிறது. ஓட்டுனருக்கு அடுத்த சவாரியின் விவரங்கள் வந்து விட்டன, பிக் அப் செய்யும் இடம் ஆழ்வார்பேட்டை, தி. நகரில் இருந்து ஆழ்வார்பேட்டை கிட்டத்தட்ட 4 கிலோ மீட்டர். இருக்கும் இடத்தில் இருந்து பிக்அப் இடத்துக்கு செல்லும் தூரம் எப்போதுமே இலவச சேவை தான் என்கிற ஓலா, உபேர் பார்முலா அடிப்படையில் தினமும் பல கிலோமீட்டர்கள் வெற்று சவாரி (எம்ப்டி ரைட்) செய்தாக வேண்டும். “இந்த வெற்று சவாரி என்பது எங்களது ரத்தத்தை அட்டை போல் உறிஞ்சுவதற்கு சமம்” என்கின்றனர், ஓலா, உபேர் வாகன ஓட்டுனர்கள்.
பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், மற்றும் விமான நிலையங்களின் அருகில் டாக்சி ஸ்டான்ட்கள் என்ற பெயரில் சங்கம் அமைத்து தனி நபர்களால் வழங்கப்பட்டு வந்த வாடகை கார் சேவை துறையில் 1991-களுக்குப் பிறகு டிராவல்ஸ் என்ற பெயரில் கால் டாக்சி நிறுவனங்கள் தோன்றின. ஓட்டுனர்கள் சம்பளம் பெறும் தொழிலாளிகளாக மாறினர். கார் ஓட்டுனர்கள் வாடிக்கையாளர்களை பெறுவதற்கு இந்த பெரிய நிறுவனங்களில் இணைந்து கொள்வது அவசியம் என்ற நிலைமை ஏற்பட்டது.
1990-களுக்குப் பிறகு ஏற்பட்ட வாகன உற்பத்தி பெருக்கம், நடுத்தர வர்க்கத்தினரையும் வங்கிகளில் கடன் பெற்றாவது சொந்தமாக கார் வாங்க வைத்தது. வாகன சந்தையின் அடுத்த கட்ட விரிவாக்கமாக இந்த கால் டாக்சி நிறுவனங்கள் வளர்ச்சியடைந்தன. தமிழ்நாட்டில் குறிப்பாக சென்னையில் ஃபாஸ்ட் டிராக் (Fast Track), என்.டி.எல் (NTL) போன்ற கால் டாக்சி நிறுவனங்கள் உருவெடுத்தன. முன்பு மிகச் சிலரால் பயன்படுத்தப்பட்டு வந்த, ஆடம்பரம் என்று பலரால் தவிர்க்கப்பட்டு வந்த இந்த கால் டாக்சி பயன்பாடு நடுத்தர வர்க்கத்தின் புதிய நுகர்வு பொருளாக உருவெடுத்தது. எத்திசை திரும்பினாலும் இச்சேவை நிறுவனங்களின் தொலைபேசி எண்கள் தொல்லை கொடுத்ததை மறந்திருக்க மாட்டீர்கள்.
2008-க்கு பிறகு நகர்ப்புற வேலையில்லா ரிசர்வ் பட்டாளத்தில் இணைந்த இளைஞர்களில் பலர் யாரிடமும் கைகட்டி வேலை பார்க்க வேண்டியதில்லை என்ற நினைப்பில் கார் ஓட்டும் தொழிலில் இணைந்து கொண்டார்கள். வங்கிக் கடன் பெற்று கார் வாங்கி கால் டாக்சி நிறுவனங்களுடன் தங்களது கார்களை இணைத்து கொண்டனர். ஆரம்ப காலத்தில் கிடைத்த வருமானத்தில் வங்கிக் கடன் தவணை கட்டியது போக, கணிசமாக மிச்சப்படுத்த முடிந்ததாக கூறுகின்றனர்.
2012–13-க்குப் பிறகு தகவல் தொழிநுட்ப வளர்ச்சி புதிய புதிய பயன்பாடுகளை ஸ்மார்ட் போன் களுக்குள் புகுத்தியது; பாஸ்ட் ட்ராக் போன்ற கால்டாக்ஸி நிறுவனங்கள் பின்னுக்கு தள்ளப்பட்டன அல்லது ஒழித்து கட்டப்பட்டன. புதிய பன்னாட்டு, டிஜிட்டல் ஏகபோகங்கள் களத்தில் இறங்கின.
பல ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு, நவீன தொழில்நுட்பம், மென்பொருள் வலிமை பெற்றிருந்த புதிய நிறுவனங்களும் ஓட்டுனர்களை இழுக்க வேண்டியிருந்தது. ஓலா, உபேர் போன்ற நிறுவனங்கள், ஓட்டுனர்களை தம் பக்கம் இழுப்பதற்கு முக்கிய காரணமாய் இருந்தது, இந்த நிறுவனங்கள் வழங்கிய ஊக்கத்தொகை (Incentive) தான். இந்தத் தொகையை பயன்படுத்திதான் மேலே சொன்ன வெற்று சவாரி செலவுகளை ஓட்டுனர்கள் ஈடுகட்டினார்கள். பழைய கால்டாக்சி நிறுவனங்களில் மாதாந்திர முறையில் தான் ஊதியம் பெற்று வந்தனர், ஆனால் ஓலா, உபேர் வாராந்திர முறையில் ஊதியம் வழங்கின. இப்படியாக ஒளிமயமான எதிர்காலம் இருப்பதாக நம்பி ஆயிரக்கணக்கான ஓட்டுனர்கள் இதில் வந்து இணைந்தனர். பலர் மேலும் வங்கிக் கடன் மூலம் கூடுதல் கார்கள் வாங்கி இந்த நிறுவனங்களுடன் இணைத்துக் கொண்டனர். வாராந்திர சம்பளத்தை நம்பி பல ஓட்டுனர்கள், அவசர செலவுகளுக்காகவும், திருமண செலவிற்காகவும், பைனான்ஸ் கடைகளில் வட்டிக்கு கடன் பெற்றுள்ளனர். அதற்கு வாரா வாரம் வட்டி கட்டும் பழக்கத்தையும் ஏற்படுத்திக் கொண்டனர்.
நாட்கள் ஆக ஆக ஓலா, உபேர் நிறுவனங்கள் வாடிக்கையாளர்களை கவரும் பொருட்டு, டீசல் விலையேற்றத்தை கொஞ்சம் கூட பொருட்படுத்தாமல் கட்டணத்தை குறைத்து கொண்டே சென்றன. அதுமட்டுமில்லாமல் ஊக்கத்தொகை பெறுவதற்கான புதிய நிபந்தனைகளை விதித்தன. ஊக்கத்தொகை பெற வேண்டும் என்பதற்காக பல ஓட்டுனர்கள் தொடர்ந்து 24 மணி நேரம் கூட வாகனம் ஓட்டி இருக்கின்றனர்.
இப்போது நிலைமை மிகவும் மோசம் அடைந்துள்ளது, இக்கட்டுரையின் ஆரம்பத்தில் குறிப்பிட்டுள்ளது போல் ஓட்டுனர்களின் நிலை இரத்தக்கண்ணீர் வடிக்கும் அளவிற்கு உச்சத்தை எட்டியுள்ளது. டீசல் விலை, வாகன தேய்மானம், 10,000 கி.மீ-க்கு ஒரு முறை சர்வீஸ், ஓட்டுவதற்கான கூலி, இதன் படி கட்டணம் நிர்ணயிங்கள் என்று நிர்வாகத்திடம் எடுத்து சென்றால் , ‘எங்கள் நிறுவனத்தின் விதிப்படி நாங்கள் இந்த விலை தான் நிர்ணயிப்போம், விருப்பமிருந்தால் இருங்கள் இல்லை என்றால் தாராளமாக வெளியேறலாம்’ என்று கூறுவதாக சொல்கின்றனர் நமது ஓட்டுனர்கள். இதை நம்பி கடன் வாங்கியிருக்கிறோம், பழைய கால் டாக்சி நிறுவனங்களுக்கும் திரும்பி போக முடியாது என்று புலி வாலை பிடித்த கதையாக தவிக்கின்றனர்.
கடனில் வாங்கிய வாகனத்தை லீசுக்கு விட்டவர்களுக்கு தினசரி ரூபாய் 500 வழங்கப்படுகிறது, ஆனால் வாகனத்தில் ஏதேனும் பழுது ஏற்பட்டால் செலவு; ஒரு மாதத்திற்குள் பத்தாயிரம் கிலோ மீட்டர்களுக்கு மேல் ஓட்டப்பட்டு விடுவதால் சர்வீஸ் செலவு (ரூ.10,000 முதல் 15,000 வரை) என்று வரும் பணம் எல்லாம் செலவாகி விடுகிறது. இந்த நிலையில் வங்கிக் கடனை கார் ஓட்டி சம்பாதிக்கும் பணத்தில்தான் கட்ட வேண்டும். இந்த கொடூர சுரண்டலை எப்படி முடிவுக்கு கொண்டு வருவது என்று திக்குத்தெரியாமல் தவிக்கின்றனர்.
“பலமுறை போராட்டம் நடத்தியும் அரசும் இந்த பிரச்சினைக்கு செவி சாய்க்கவில்லை, இத்தொழிலை விடவும் முடியவில்லை, நடத்தவும் முடியாமல் திணறி கொண்டிருக்கிறோம்” என்கின்றனர். “போராட்டத்தை தலைமை ஏற்று நடத்தும் சிலர் நிறுவனத்திடம் விலை போய் விடுவதாகவும், எங்களுக்கான ஒரு சரியான தொழிற்சங்கம் இருந்தால் கண்டிப்பாக இந்த பிரச்சினையை தீர்க்க முடியும்” என்கின்றனர் தொழிலாளர்கள். வரலாறு நமக்கு கற்றுக்கொடுத்த பாடம் அதுதானே?
– ராஜதுரை
புதிய தொழிலாளி (நவம்பர்-டிசம்பர்’18)