தூசான் முதல் யமஹா வரை: உரிமை பறிப்புக்கு எதிராக தொழிலாளர்களின் எழுச்சி!

செப்டம்பர் 2018 மாத இறுதியில் துவங்கிய யமஹா தொழிலாளர்கள் போராட்டம், ராயல் என்ஃபீல்ட் தொழிலாளர்கள் போராட்டம், எம்.எஸ்.ஐ ஆலைத் தொழிலாளர் போராட்டம், அதற்கு முன்னதாக தூசான் தொழிலாளர் போராட்டம் என்று சென்னையின் வாகன மற்றும் கனரக  தொழிற்துறை தொழிலாளர்கள் மத்தியில் கார்ப்பரேட் சுரண்டலுக்கு எதிரான வர்க்க கோபம் பீறிட்டு எழுந்து வருகிறது. உலகின் மிகப்பெரிய ஆட்டோமொபைல் தயாரிப்பு மையம் என்று அமெரிக்காவின் டெட்ராய்ட் நகரைச் சொல்வார்கள். சென்னையை அடுத்து ஒரகடம் -திருப்பெரும்புதூர் பகுதியில் இத்தகைய ஆட்டோமொபைல் தயாரிப்பு மையம் உருவான போது ஆசியாவின் டெட்ராய்ட் என்று அதை வர்ணித்தார்கள் .இந்த உற்பத்தி மையத்தில் களமிறங்கிய பன்னாட்டு கம்பெனிகளுக்கு வகை வகையான சலுகைகளை வாரிக்கொட்டியது அரசு.

வாரிசலுகைகள், உள்கட்டுமான வசதிகள், தொழிலாளர் மற்றும் தொழில்துறை சட்டங்களிலிருந்து விலக்கு போன்ற வசதிகளோடு துவங்கிய பன்னாட்டுக் கம்பெனிகளான யமஹா , ராயல் என்பீல்ட் போன்றவற்றில் தொழிலாளர்கள் தங்களது ஊரிமைகள் பற்றி கனவிலும் நினைத்துப் பார்க்கக்கூடாது என்று கண்ணும் கருத்துமாக கண்காணித்து வந்த போதிலும் தொழிலாளர்கள் தொழிற்சங்கம் அமைத்துவிட்டனர் .இதை இப்படியே விட்டு விட்டால் திருப்பெரும்புதூர் சிறப்பு பொருளாதார மண்டலத்தில் தொழிற்சங்க இயக்கம் வேரூன்றி விடும் என்கிற அச்சத்தோடும், பதைபதைப்போடும், வெறுப்போடும்  அடக்குமுறையை ஏவி உள்ளனர், முதலாளிகள். இந்த அடக்குமுறைகளையும் மீறித்தான் தொழிலாளர் போராட்டங்கள் வெடித்துக் கிளம்பியுள்ளன .

சென்னை- திருப்பெரும்புதூர் அருகில் உள்ள ஒரகடத்தில் வேலைநிறுத்தம் செய்து வரும் யமஹா தொழிலாளர்களின் போராட்டம் 20 நாட்களை தாண்டி விட்டது. “தொழிற்சங்க சட்டத்தை மதிக்க மாட்டோம்”, “தொழிற்தகராறு சட்டத்தை மதிக்க மாட்டோம்”, “தொழிலாளர் துறை ஆணையை மதிக்க மாட்டோம்”, “நீதிமன்ற சமரசத்தையும்  தூக்கி எறிவோம்” என்று திமிராக நடந்து கொள்கிறது, ஜப்பானின் யமஹா நிர்வாகம். .

ஒரகடம், ஸ்ரீபெரும்புதூர், திருமுடிவாக்கம் என்று உற்பத்தி மையங்களுக்காக பல ஆயிரம் கோடி ரூபாயில் சிப்காட்-சிறப்புப் பொருளாதார மண்டலங்கள், 4 வழி-6 வழி சாலைகள்-மேம்பாலங்கள், விமான நிலையங்கள், மெட்ரோ ரயில் என்று மக்களின் வரிப்பணத்தை அரசு கொட்டிக் கொடுத்திருக்கிறது. லட்சக்கணக்கான தொழிலாளர்கள் செங்கல்லையும், சிமெண்டையும் கட்டிடங்களாக எழுப்பியிருக்கிறார்கள், சாலையாக நீட்டியிருக்கிறார்கள்; தொழிற்சாலைகளில் உழைத்து கார்களையும், பைக்குகளையும் உற்பத்தி செய்கிறார்கள்.

இவ்வாறு தொழிலாளி வர்க்கம் மாட்டை வளர்த்து, தீனி போட்டு, பால் கறந்து, பாலை தயிராக்கி, தயிரை கடைந்து வெண்ணெய் எடுத்து, நெய்யாக உருக்கித் தருவதை ஊரான் வீட்டு நெய்யே என்று வழித்து நக்கும் முதலாளி வர்க்கம் உழைக்கும் தொழிலாளர்களை இழிவுபடுத்துகிறது; தொழிலாளர்களுக்குக் கொடுக்கும் வேலை வாய்ப்பு தாம் போட்ட பிச்சை என்பது போலவும் சங்கம் துவங்குவது போன்ற எந்த உரிமையும் தொழிலார்களுக்கு கிடையாது எனவும், இந்தியாவின் சட்டங்கள் எதுவும் தங்களை கட்டுப்படுத்தாது எனவும் திமிராக நடந்து கொள்கின்றன ,யமஹா உள்ளிட்ட பன்னாட்டுக் கம்பெனிகள். 

யமஹா நிர்வாகம் தொழிலாளர்கள் அமைத்த தொழிற்சங்கத்தை மதிக்காமல் கோரிக்கைகளை புறக்கணித்தது; தொழிலாளர் துறையிலிருந்து வந்த பேச்சுவார்த்தை அழைப்பை குப்பைக் கூடையில் வீசியது; தொழிற்சங்க நிர்வாகிகளை வேலை நீக்கம் செய்தது; அவர்கள் வீட்டுக்கு குண்டர்களை அனுப்பி மிரட்டியது; வேலை நிறுத்தம் செய்த தொழிலாளர்களை 200 மீட்டர் தொலைவுக்கு அப்பால் போய் விட வேண்டும் என்று உயர்நீதிமன்றத்தில் உத்தரவு பெற்றது; இறுதியில் நீதிமன்ற உத்தரவுக்கேற்ப அக்டோபர் 3-ம் தேதி வேலை நிறுத்தப் போராட்டத்தை முடித்துக் கொள்ள முன் வந்த தொழிலாளர்களை அடிமை கடிதத்தில் கையெழுத்து போடுமாறு கட்டாயப்படுத்தியிருக்கிறது.

ஆலை நிர்வாகங்களுக்கு எதிராக தொழிலாளர்கள் நீதிமன்றத்தை நாடும் போது, முதலில் தொழிலாளர் துறையில் முறையீடு செய்து விட்டுத்தான் வர வேண்டும் என்று கறார் காட்டும் உயர்நீதிமன்றம், தொழிலாளர் துறையின் பேச்சு வார்த்தை அழைப்பை மதிக்காமல் உயர்நீதிமன்றத்தை நேரடியாக அணுகிய நிர்வாகத்தை கண்டிக்க துப்பில்லாமல் தொழிலாளர் போராட்டத்துக்கு எதிராக உத்தரவு பிறப்பித்தது. சமரசமாக போக வேண்டும் என்று அதே உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவை நிர்வாகம் மதிக்காதபோதும் அதை கண்டு கொள்ளாமல் இருக்கிறது.

யமஹா தொழிலாளர் போராட்டத்துக்கு ‘பாதுகாப்பு கொடுக்க’ வந்திருக்கும் போலீசுக்கு யமஹா நிர்வாகமே தங்கும் வசதி செய்து கொடுத்து சாப்பாடு போட்டு பராமரிக்கிறது. நிர்வாகத்தின் உத்தரவுக்கிணங்க தொழிலாளர்களை கைது செய்து அடித்து துன்புறுத்துகிறது.

யமஹா ஆலையிலேயே வேலை செய்யும் ஒப்பந்தத் தொழிலாளர்கள் நேரடி உற்பத்தியில் ஈடுபட்டு ,வேலைநிறுத்த காலத்தில் உற்பத்தி இழப்பை ஈடுகட்ட வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்படுகின்றனர் .அவர்களது அரைகுறை ஓய்வு கூட பறிக்கப்பட்டுள்ளது. அவர்களும்  தொழிற்சங்க உரிமை மறுக்கப்பட்டு கடுமையாக சுரண்டப்படுகிறார்கள். “வேலை நிறுத்த பந்தல் பக்கம் போய் விடக்கூடாது, போனால் உங்களுக்கும் அதே நிலைமைதான்” என்று பிற தொழிற்சாலை தொழிலாளர்களை மிரட்டியிருப்பதாக யமஹா தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர். அதையும் மீறி, ஒப்பந்த தொழிலாளர்களில் ஒருபகுதியினர் போராடும் தொழிலாளர்களுக்கு ஆதரவாக இருக்கின்றனர். நிர்வாகம், நீதிமன்றம், போலீசு ஆகிய பல்முனை தாக்குதல்களையும் மீறி உறுதியான போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் யமஹா தொழிலாளர்கள். அரசு ஊழியர்கள் சம்மேளனம் உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கங்கள் இந்தப் போராட்டத்துக்கு நேரில் வந்தும், ஆர்ப்பாட்டங்கள் நடத்தியும், இணைய பிரச்சாரம் மூலமும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

இதே காலகட்டத்தில், அதிக விலையும், பந்தாவும் கொண்ட ராயல் என்பீல்ட் மோட்டார் சைக்கிள் தயாரிப்பு ஆலையிலும் வேலைநிறுத்தம் தீவிரமடைந்திருக்கிறது. தொழிற்சங்கம் துவங்க முயன்ற 4 முன்னணி தொழிலாளர்களை நிர்வாகம் வேலைநீக்கம் செய்ததே போராட்டம் வெடிப்பதற்கு காரணமாக இருந்தது. இலாபத்துக்கும் தொழிலாளர்களது உழைப்புக்கும் ஏற்ப போனஸ் வழங்காதது, அற்ப காரணங்களுக்காக வேலைநீக்கம் செய்வது, அத்தகைய சட்டவிரோத வேலைநீக்கங்களை மூடிமறைக்க ராஜினாமா கடிதம் வாங்கிக்கொள்வது, தொழிலாளர்களுக்கு என்ஜினீயர் என்று பெயர் சூட்டி, அவர்களது தொழிற்சங்க உரிமைகளை பறிப்பது, நீம் உள்ளிட்ட பல்வேறு பெயர்களில் பயற்சியாளர்களாக தொழிலாளர்களை பணியமர்த்திக்கொண்டு நீண்ட காலத்துக்கு அவர்களது பணிநிரந்தரத்தை மறுப்பது போன்ற காரணங்களுக்காக நீறுபூத்த நெருப்பாக இருந்த வர்க்கக்கோபம் இப்போது வேலைநிறுத்த போராட்டமாக வெடித்துள்ளது.

ஹூண்டாய் கார் தயாரிப்பு நிறுவனத்துக்கு உதிரிபாகங்கள் சப்ளை செய்கின்ற தென்கொரியாவின் மாயங் ஷீன் ஆட்டோமோடடிவ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் தொழிலாளர்களும் ஒரு மாதத்துக்கும் மேலாக தங்களது தொழிற்சங்க உரிமைகளை நிலைநாட்டும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் .

தொழிலாளர்களது போராட்டங்களை பொருளாதார போராட்டங்களாக சுருக்கிப் பார்க்கின்ற, அரசும், ஊடகங்களும், தற்போதைய போராட்டங்களில் காணப்படும் முக்கியத்துவம் வாய்ந்த அம்சத்தை மூடி மறைக்கின்றனர். ஒரு தொழிற்பேட்டை அல்லது தொழிற்பிராந்தியத்தில் ஒரே நேரத்தில் பல ஆலைகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவது தொழிலாளர்களது எழுச்சியை காட்டுகிறது. போராடுகின்ற தொழிலாளர்களது முதன்மையான முழக்கம் பணத்துக்காக எழுப்பப்படவில்லை. தங்களது தொழிற்சங்க உரிமையை தடுக்க நீ யார் என்று முதலாளித்துவ கோமான்களது முகத்தில் அறைந்து எழுகிறது, தொழிலாளர்களது கலகக்குரல்.

இந்த கலகக்குரல், யமஹா, என்பீல்ட், மயாங்ஷின் ஆலைகளையோடு நின்றுவிடக்கூடாது. மாறாக, ஒரு தொழிற்பேட்டையைத் தாண்டி நாட்டின் தொழில்துறை முழுவதும், நிரந்தரத் தொழிலாளர்களோடு நின்றுவிடாமல் காண்டிராக்ட் முதல் பயிற்சித் தொழிலாளி வரை அனைத்து தொழிலாளர்களோடும், தொழிலாளி வர்க்கத்தை தாண்டி, அனைத்து உழைக்கும் மக்களோடும் இரண்டறக் கலக்கும்போது, முதலாளித்துவத்தையும், அதற்கு அடிபணிந்து சேவை செய்யும் அரசையும் மண்டியிடச் செய்யும். இதுவே தொழிலாளி வர்க்கத்தின் நீண்டகால லட்சியமான சோசலிச சமூகத்தை நோக்கிய பாதையில் நம்மை முன்னேற்றிச் செல்லும்.

– பிரவீன்

புதிய தொழிலாளி (அக்டோபர்-நவம்பர்’18)

Permanent link to this article: http://new-democrats.com/ta/oragadam-yamaha-workers-strike-putho-oct18/

Leave a Reply

Your email address will not be published.

%d bloggers like this:
Read more:
பெரியார் : வதந்திகளும் உண்மைகளும் – வீடியோ

எச்.ராஜாவின் பேச்சுக்கு களத்தில் எழுந்த எதிர்ப்பைக் காட்டிலும் பெரும் அளவில் சமூக வலைதளங்களில் தமிழர்கள் கொத்தி எடுத்துவிட்டார்கள். பெரியாரின் கருத்துக்கள் மீம்ஸ்-களாகவும் ஸ்டேட்டஸ்-களாகவும் வலம் வந்தன.

டி.சி.எஸ் லாபம் : சம்பள உயர்வு இல்லை, புதிய ஊழியர்களுக்கு கணினி கூட இல்லை!

அமருவதற்கு நாற்காலி, கணினி கிடைப்பதற்கு சிலமணி நேரம் முன்பே வேலைக்கு வரவேண்டும் என்பார்கள். அவ்வாறு வந்தாலும் நடுவில் வெளியே சென்று வரும்போது அதை இன்னொருவர் எடுத்துக்கொள்வார். அவருடன்...

Close