- இயற்கை பேரிடர் காலத்தில் நமது பணி பற்றி – ஒரு ஐ.டி ஊழியர்
- கஜா புயல் நிவாரண பணியில் நாமும் இறங்க வேண்டும், ஏன்? – பு.ஜ.தொ.மு
- கஜா புயல் : வீடுகளை கட்டிக் கொடுத்தாலும் கூட வாழ்வதற்கு எந்த பொருட்களும் இல்லை!
- கஜா : அரசியலை புரிய வைப்பதே நீண்ட கால கடமை
- கஜா புயல் : ஒட்டு மொத்த அழிவு, எளிய மக்கள் மீது அதிக சுமை
- கஜா புயல் : யார் முறையான நிவாரணம் வழங்க முடியும்?
- கஜா புயல் நிவாரணப் பணி : எப்படி தயாரித்துக் கொள்ள வேண்டும்?
- கஜா புயல் : நிவாரணம் வழங்குவது லேசுப்பட்ட வேலை இல்லை!
கஜா புயல் சீற்றத்தினால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்ட மக்கள் தமது வாழ்க்கையை மீட்க போராடிக் கொண்டிருக்கும் சூழலில் இந்தப் பணியில் ஈடுபட்ட நமது சங்கத்தைச் சேர்ந்த ஐ.டி ஊழியர்கள் சிலரின் கருத்துக்களை ஒரு தொடராக வெளியிடுகிறோம்.
நான் ஒரு BPOவில் புரோஜக்ட் லீடராக வேலை பார்க்கிறேன். கடந்த இரண்டு ஆண்டுகளாக பு.ஜ.தொ.மு ஐ.டி ஊழியர்கள் சங்கத்தின் தொடர்பில் இருக்கிறேன். சமூக வலைத்தளங்களிலும் நண்பர்கள் வட்டத்திலும் சங்கம் குறித்துப் பேசுவேன்.
எனக்குச் சுற்றுச்சூழல் குறித்தும், அதனைப் பாதுகாப்பது, அதற்காக நேரம் செலவிடுவது ஆகியவற்றில் ஆர்வம் உண்டு. பல்வேறு சுற்றுச் சூழல் வட்டங்களில் நான் பங்கேற்றுள்ளேன். அவற்றில் எனக்கு நிறைய நண்பர்கள் இருக்கிறார்கள்.

ஐ.டி. துறையில் செயல்படும் ஒரு தொழிற்சங்கம் இது போன்ற பேரிடர் கால தன்னார்வலர்களை இணைக்கும் வேலையைச் செய்தால் அது சிறப்பானதாகவும் சரியானதாகவும் இருக்கும் என்று கருதுகிறேன்.
சென்னை வெள்ளத்தின் போதும், வர்தா புயல் சமயத்திலும் என்னால் ஆன உதவிகளை நண்பர்களுடன் இணைந்து செய்துள்ளேன்.
சென்னை வெள்ளத்தின் போது அரசு ஒட்டு மொத்தமாக செயலிழந்து நின்றபோது, மீட்புப் பணிகளிலும், நிவாரணப் பணிகளிலும் ஐ.டி துறையைச் சேர்ந்த பலர் ஈடுபட்டனர் என்பதை நீங்கள் அறிவீர்கள். சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி மீட்பையும், நிவாரணத்தையும் ஒருங்கிணைத்தது, இந்தியா முழுவதிலும், ஏன் பல்வேறு வெளிநாடுகளிலிருந்தும் நிவாரணப் பொருட்களை வாங்கி விநியோகம் செய்தது என்று களத்தில் நிற்காவிட்டாலும் பின்னால் நின்று உதவிய ஐ.டி. நண்பர்கள் ஏராளம்.
இவற்றிலிருந்து சில பாடங்களையும் கற்றுக் கொள்ள முடிந்தது. வெள்ளம் வந்த பிறகு தன்னெழுச்சியாக பலர் உதவ முன்வந்தனர். பல்வேறு குழுக்கள் தங்களால் இயன்றதைச் செய்தனர். ஆனால் இவை ஒருங்கிணைக்கப்படவில்லை. பல போலியான ஆட்கள் தோன்றி நன்கொடைகளை விழுங்கிக் கொண்டனர். சில இடங்களில் நிவாரணப் பொருட்களை உள்ளுர் ரவுடிகள் அரசியல்வாதிகள் பிடுங்கிக் கொண்டனர். ஏற்கெனவே உதவி பெற்றவர்களுக்கு மீண்டும் மீண்டும் உதவிகள் சென்றன. அதே சமயம் பாதிக்கப்பட்டவர்களில் பலருக்கு அது சென்றடையவே இல்லை. உதவ வேண்டும் என்ற எண்ணம் கொண்ட பலருக்கு எப்படி உதவுவது யாருடன் இணைந்து செயலாற்றுவது என்று தெரியவில்லை.
தற்போது கஜா புயலின் போதும் இதே நிலை மீண்டும் ஏற்பட்டுள்ளது.
இவற்றையெல்லாம் தொகுத்துப் பார்க்கும் போது, நாம் வேலை செய்யும் துறைதான் நம்மை இணைக்கும் ஒரு பொதுவான அம்சமாக உள்ளது. ஐ.டி. துறையில் செயல்படும் ஒரு தொழிற்சங்கம் இது போன்ற பேரிடர் கால தன்னார்வலர்களை இணைக்கும் வேலையைச் செய்தால் அது சிறப்பானதாகவும் சரியானதாகவும் இருக்கும் என்று கருதுகிறேன்.
அந்த வகையில் எனக்குத் தெரிந்து இந்தப் பணியைச் செய்ய சரியான சங்கம் நமது சங்கமாகத் தான் இருக்க முடியும்.
நமது சங்கம் சார்பில் இது போன்றதொரு குழுவை ஒருங்கினைத்தால் நான் நிச்சயம் எனது பங்களிப்பை கொடுப்பேன். இதன் மூலம் ஆயிரக்கணக்கான ஐ.டி. நண்பர்களை இணைக்க முடியும் என நான் நம்புகிறேன்.
– மதி