நாம் உருவாக்கும் கரோனா வைரஸ் – டெல்லி வன்முறை குறித்து அருந்ததி ராய்

டெல்லி வன்முறை குறித்து அருந்ததி ராய் உரை : “இதுதான் நாம் உருவாக்கும் கரோனா வைரஸ். நாம் நோய்மையுற்றவர்கள்.”

அன்பு நண்பர்களே, தோழர்களே, சக எழுத்தாளர்களே…

நாம் இங்கு இருக்கும் இடத்திலிருந்து ஒரு சிறிய பேருந்துப் பயணத்தில் அந்த இடத்தை அடைந்துவிடலாம். அந்த இடத்தில்தான் நான்கு நாட்களுக்கு முன்பு ஃபாசிச கும்பலின் ஆட்டம் நிகழ்த்தப்பட்டது. ஆளும் கட்சியின் ஆவேசப் பேச்சுக்களின் விளைவால், காவல்துறையினரின் ஆர்வமிக்கத் துணையுடன், 24 மணிநேரமும் உதவி செய்த டிவி ஊடகங்களின் ஆதரவுடன், தங்கள் வழியில் நீதிமன்றம் எந்தவகையிலும் குறுக்கிடாது என்ற நம்பிக்கையுடன் நடத்தப்பட்ட ஃபாசிச தாக்குதல் இது.

உழைக்கும் மக்கள் வசிக்கும் வட கிழக்கு தில்லியின் முஸ்லிம்கள்மீது தொடுக்கப்பட்ட ஆயுதம் தாங்கிய தாக்குதல் நடந்த இடத்திற்கு அருகிலிருந்துதான் நாம் இப்போது பேசிக்கொண்டிருக்கிறோம். சில காலமாகவே இந்தத் தாக்குதலின் வாசம் மிரட்டிக்கொண்டுதான் இருந்தது. அதனால் மக்கள் ஓரளவுக்குத் தயாராக இருந்தார்கள், தங்களை ஓரளவுக்கு தற்காத்துக்கொண்டார்கள். சந்தைகள், கடைகள், வீடுகள், மசூதிகள், வாகனங்கள் எரிக்கப்பட்டன. வீதியெங்கும் கற்களும் சிதிலங்களும்தான் இருந்தன. சவக் கிடங்குகளில் இடமே இல்லை. மருத்துவமனை எங்கும் காயம்பட்டவர்கள் நிறைந்திருக்கிறார்கள். முஸ்லிம்கள், இந்துக்கள், ஒரு போலீஸ் அதிகாரி, உளவுத்துறையின் ஓரு இளம் அதிகாரி ஆகியோரும் இதில் உண்டு.

ஆம், இரு தரப்பிலும் அதிர்ச்சி தரும்படியான கொடுஞ்செயல்கள் செய்யத் தயாராக இருந்தார்கள். அன்பின், உதவியின் பிரவாகத்தையும் காண முடிந்தது. ஆனால் இங்கே ஒப்பீடுகள் நியாயமற்றவை. “ஜெய் ஸ்ரீ ராம்” என முழங்கிய ரவுடி கும்பல்களே தாக்குதல்களைத் தொடங்கினார்கள் என்ற உண்மையில் எந்த மாற்றமும் இல்லை. வெளிப்படையாக பாசிச முகத்தைக் காட்டும் ஆட்சியாளர்கள் அவர்களுக்குத் துணையாக இருந்தார்கள் என்பதிலும் சந்தேகமே இல்லை. அவ்வாறு கோஷங்கள் முழங்கப்பட்டாலும் இதை இந்து-முஸ்லிம் ‘கலவரம்’ என யாரும் வகைப்படுத்த விரும்பவில்லை. இது ஃபாஸிட்டுகளுக்கும் அவர்களுக்கு எதிரானவர்களுக்கும் இடையில் நடக்கும் மோதலின் மற்றொரு வெளிப்பாடு. இதில் ஃபாசிஸ்டுகளின் முதல் எதிரிகள் முஸ்லிம்கள், அவ்வளவே. இதைக் கலவரம் என்று அழைப்பதோ, இடதுக்கும் வலதுக்கும் இடையில் நடக்கும் மோதல் என பிரிப்பதோ, சரிக்கும் தவறுக்குமோன முரண்பாடு என்றோ புரிந்துகொள்வது ஆபத்தானது.

காவல் துறையினர் வேடிக்கை பார்ப்பதையும் சில நேரங்களில் அவர்களே வன்முறையில் இறங்குவதையும் வீடியோ ஆதாரங்கள் மூலம் நாம் ஏற்கனவே பார்த்துவிட்டோம். டிசம்பர் 15ஆம் தேதி ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழக நூலகத்தில் செய்தது போலவே அவர்கள் சி.சி.டி.வி. கேமராக்களை உடைக்கிறார்கள். காயமடைந்த முஸ்லிம் ஆண்கள் ஒருவர்மீது ஒருவராக விழுந்து கிடக்கும் இடத்தில் தேசியகீதம் பாடச் சொல்லி அவர்களை அடிப்பதையும் பார்த்தோம். விழுந்து கிடக்கும் இளைஞர்களில் ஒருவன் இறந்து கிடக்கிறான். இறந்தவர்கள், காயமடைந்தவர்கள், நொறுங்கிப் போனவர்கள் முஸ்லிம்களோ, இந்துக்களோ அல்ல. மறைப்புத் துணியற்ற ஃபாசிச ஆட்சியின் தலைவர் நரேந்திர மோடியின் பலியாடுகள் அவர்கள். 18 ஆண்டுகளுக்கு முன்பு இதைவிட பெரிய அழித்தொழிப்பைச் செய்தவர்தான் அவர்.

A mob beats Mohammed Zubair in New Delhi on February 24. Photo: Danish Siddiqui/Reuters

இந்த நெருப்பை எப்படிப் பற்றவைத்து , பரவச் செய்தார்கள் என்பதை வரும் ஆண்டுகளில் ஆழமாக ஆய்வுசெய்யப் போகிறார்கள். களத்தில் என்ன நடந்தது என்பது வரலாற்றுப் ஒரு பதிவாக நின்றுபோய்விடும். ஆனால் அது உருவாக்கிய

அதிர்வலைகள் வெறுப்பு அலைகளாக சமூக ஊடகங்களில் புரளிகளாகவும் கட்டுக்கதைகளாகவும் பரவி வருகிறது. வடக்கு தில்லியில் இப்போது எந்தக் கொலைகளும் நடக்கவில்லை என்றாலும் நேற்று (பிப்ரவரி 29) மத்திய தில்லியில் ஒரு கும்பல் கோஷம் எழுப்பிச் சென்றது: “தேச துரோகிகளுக்கு தக்க பாடம் புகட்டுங்கள். அந்த நாய்களை சுட்டுக் கொல்லுங்கள்.” இதேபோன்ற வெறுப்புக் கருத்துக்களை எழுப்பிய பி.ஜே.பி.யின் சட்டமன்ற தேர்தல் வேட்பாளரான கபில் மிஷ்ரா மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று சில நாட்களுக்கு முன்புதான் தில்லி உயர் நீதிமன்ற நீதிபதி ஜஸ்டிஸ் முரளிதர் போலீஸாரை வெளுத்து வாங்கினார். பிப்ரவரி 26ஆம் தேதி நள்ளிரவில் அந்த நீதிபதிக்கு பணியிட மாற்ற உத்தரவு வழங்கப்பட்டது. கபில் மிஸ்ரா தெருவுக்கு வந்துவிட்டார் அதே வெறுப்பு கோஷங்களோடு. நீதிபதிகள் பற்றிய கதைகள் நமக்குத் தெரியும். ஜஸ்டிஸ் லோயா பற்றி நாம் அறிந்ததே. ஆனால் பாபு பஜ்ரங்கியை நாம் மறந்திருப்போம். 2002இல் குஜராத் நரோதா பாடியாவில் 96 முஸ்லிம்கள் சாகக் காரணமான நபர் அவர். அவர் யூடியூப்பில் சொல்வதைக் கேட்டுப் பாருங்கள்: “நரேந்திர பாய்” தன்னை ஜெயிலிருந்து விடுவித்தார்.

எப்படி… நீதிபதிகளை “செட்டிங்” செய்து. இப்படி படுகொலைகள் நடக்கும் என்று நமக்குத் தேர்தல்களுக்கு முன்பே தெரியும். ஓட்டுக்களைப் பிரித்து தங்களுக்கென வாக்கு வங்கியைக் கட்டமைக்கும் கொடூரமான உத்திகளை நாம் கண்டோம். ஆனால் தில்லி தேர்தலில் பி.ஜே.பி. அவமானகரமாக தோற்ற சில நாட்களிலேயே அங்கு அப்படி ஒரு அழித்தொழிப்பு நடந்திருக்கிறது. இது தில்லிக்கான தண்டனை. அடுத்த தேர்தலைச் சந்திக்கும் பிஹாருக்கான எச்சரிக்கை.

எல்லாமே ஆவணமாக்கப்பட்டுள்ளது. எல்லாவற்றையும் கேட்கவும் பார்க்கவும் முடியாமலும் இல்லை. கபில் மிஸ்ரா, பர்வேஷ் வர்மா, மத்திய அமைச்சர் அனுராக் தாக்குர், உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத், உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஏன் பிரதமரேகூட தூண்டிவிடும் வகையில் பேசியிருக்கிறார்கள். ஆனால் எல்லாவற்றையும் தலைகீழாக நம்பச் சொல்கிறார்கள். முழுக்க முழக்க அமைதியான வழியில் நடக்கும், அதுவும் பெரிதும் பெண்களால் நடத்தப்படும் போராட்டத்தால் இந்தியா என்ற தேசமே பாதிக்கப்பட்டிருக்கிறது என்பதுபோன்ற பிம்பம் கட்டமைக்கப்படுகிறது. முஸ்லிம் போராட்டக்காரர்கள் 75 நாட்களாக தெருக்களில் நிற்கிறார்கள். சி.ஏ.ஏவுக்கு எதிராக.

A protestor holds her child during a demonstration at Shaheen Bagh in New Delhi against the Citizenship Amendment Act. Photo: Reuters

முஸ்லிம் அல்லாத சிறுபான்மையினருக்கு குறுக்குவழியில் குடியுரிமை வழங்கும் சி.ஏ.ஏ. அரசியல் சாஸனத்திற்கு விரோதமானது மட்டுமல்ல, அப்பட்டமான முஸ்லிம் விரோத சட்டமாகவும் திகழ்கிறது. அதோடு தேசிய ஜனத்தொகை பதிவேட்டையும் தேசிய குடியுரிமை பதிவேட்டையும் இணத்துப் பார்க்கும்போது அதன் உண்மையான நோக்கம் புரிகிறது. முஸ்லிம்களை மட்டுமின்றி ஆயிரக்காண பிற நம்பிக்கைகள் கொண்ட இந்தியர்களை சட்ட விரோத பிரஜைகளாக அடித்து நொறுக்கி கிரிமினல்களாக நிறுத்துவதுதான் இதன் நோக்கம். “அந்த நாய்களைச் சுட்டுக்கொல்லு” என்று கோஷம் போடுகிறவர்கள் உள்ளிட்ட லட்சணக்கானோர் உரிய ஆவணங்கள் இன்றி அந்த அவலத்திற்கு ஆளாவார்கள்.

குடியுரிமையே கேள்விக்குள்ளாகும்போது அனைத்தும் கேள்விக்குள்ளாகிறது: குழந்தைகளின் உரிமை, ஓட்டுரிமை, நிலத்தின் மீதான உரிமை, எல்லாமே. அரசியல் சிந்தனையாளர் ஹன்னா ஆரென்ட் சொல்வதுபோல, “உங்களுக்கு உரிமைகள் உண்டு என்பதற்கான உரிமையைத் தருவதுதான்  குடியுரிமை.” அது எப்படிக் கிடையாது என்று சொல்கிறவர்கள் அசாமில் என்ன நடக்கிறது எனப் பார்க்கவும்.

இந்துக்கள், முஸ்லிம்கள், தலித்துகள், ஆதிவாசிகள் உள்ளிட்ட 20 லட்சம் பேர் அங்கு குடியுரிமை இழந்திருக்கிறார்கள். பழங்குடியினருக்கும் பழங்குடி அல்லாதோருக்கும் இடையில் அங்கு பிரச்சனை வெடித்திருக்கிறது. என்.பி.ஆர்-என்.ஆர்.சி-சி.ஏ.ஏவுக்கு ஒரே ஒரு நோக்கம்தான்: இந்தியா மட்டுமின்றி இந்திய துணைக்கண்டத்து மக்கள் அனைவரையும் தீவுகளாக பிரிப்பது. பங்களாதேசிகளைக் கரையான்கள் என்று அழைக்கும் அமித்ஷா போன்றவர்களின் செயல்கள் பங்களாதேசத்திலும், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானிலும் வசிக்கும் பல லட்சம் இந்துக்களின் வாழ்வை அச்சுறுத்தலுக்குள்ளாக்குகிறது. தில்லியிலிருந்து கிளம்பும் வெறுப்பு அரசியலுக்கு அவர்கள் விலைகொடுக்க வேண்டியிருக்கும்.

நாம் எங்கே வந்து நிற்கிறோம் என்று ஒருமுறை நினைத்துப் பாருங்கள். 1947இல் காலனி ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெற்றோம். அந்த விடுதலைப் போரில் தற்போது ஆட்சியிலிருக்கும் தரப்பினர் தவிர அனைவரும் தம்மை இணைத்துக்கொண்டோம். அதன்பிறகு நிகழ்ந்த சமூக இயக்கங்களும், சாதி ஒழிப்புப் போராட்டங்களும், முதலாளித்துவத்திற்கு எதிரான மல்லுகட்டலும், பெண்ணிய யுத்தங்களும்தான் நமது இன்றுவரையிலான பாதையின் தடங்கள்.

1960களில் நீதி கோரி நெடும் பயணம் மேற்கொண்டோம். இந்த நாட்டின் வளங்கள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என ஆளும் வர்க்கத்திற்கு எதிராகப் புரட்சி செய்தோம்.

1990களில் புதிய இந்தியாவின் கட்டமைப்பிற்காக தங்கள் நிலத்திலிருந்தும் கிராமங்களிலிருந்தும் இடம் பெயர்த்தப்பட்ட மக்களுக்காக மட்டுமே குரல் கொடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டோம். இது எப்படிப்பட்ட புதிய இந்தியா? 120 கோடி ஜனத்தொகைக்கு இந்தியா போடும் வருடாந்திர பட்ஜெட் தொகையைவிட அதிக பணம் வைத்திருக்கும் 63 டாப் பணக்காரர்களைக் கொண்ட புதிய இந்தியா இது.

இப்போது நாம் எங்கே நிற்கிறோம். இந்த தேசத்தின் விடுதலைக்காக ஒரு உழைப்பும் போடாத நபர்களிடம் நமது அடிப்படை உரிமைகளுக்காக பிச்சைப் பாத்திரம் ஏந்தி நிற்கிறோம்.

நமக்கான பாதுகாப்பு பறிபோகிறது. நாம் உரிமைப் பிச்சை ஏந்தி நிற்கிறோம்.

காவல் துறையினர் வகுப்புவாதிகளாக மாறுகிறார்கள். நாம் பிச்சை ஏந்தி நிற்கிறோம்.

நீதித் துறை தனது கடமைகளைத் துறக்கிறது. நாம் பிச்சை ஏந்தி நிற்கிறோம்.

பணத்தின் ஆட்சியின் அதிகாரத்தை நோக்கி கேள்வி கேட்க வேண்டிய ஊடகங்கள், பணத்திற்கும் ஆட்சிக்கும் சாமரம் வீசுகிறது. நாம் பிச்சை ஏந்தி நிற்கிறோம்.

Relatives and friends of Rahul Thakur, 23, who was killed in a mob attack in Delhi. Photo: Money Sharma/AFP

அரசியல் சாஸனத்திற்கு விரோதமாக ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து விலக்கப்பட்ட 210ஆம் நாளில் நாம் இதைப் பேசிக்கொண்டிருக்கிறோம். மூன்று முன்னாள் முதல்வர்கள் உள்டப லட்சக்கணக்கான காஷ்மீரிகள் தொடர்ந்து ஜெயிலில் இருக்கிறார்கள். 70 லட்சம் மக்கள் இணைய-தொலைதொடர்பு துண்டிக்கப்பட்ட தீவில் வாழ்கிறார்கள். வெகுஜனங்கள் மீதான மனித உரிமை மீறலின் புதிய அத்தியாயமாக அது மாறுகிறது. பிப்ரவரி 26ஆம் தேதி தில்லியின் தெருக்கள் காஷ்மீரின் வீதிகள் போலவே இருந்தன. அந்த நாளன்றுதான் காஷ்மீரின் குழந்தைகள் ஏழு மாதங்களில் முதல் முறையாக பள்ளி சென்றார்கள். ஆனால் சுற்றிலும் எல்லாம் சிதிலமான பிறகு பள்ளிக்குச் சென்று என்ன பயன்…

ஒரு ஜனநாயகத்தில் அரசியல் சாஸனம் ஆட்சி செய்யாத போது, அதன் அமைப்புகள் உள்ளீடற்றதாக மாறும்போது அது பெரும்பான்மைவாத ஆட்சியாகத்தான் மாறும். ஒரு அரசியல் சாஸனம் தொடர்பாக உங்களுக்கு மாற்றுக் கருத்து இருக்கலாம். ஆனால் இந்த அரசாங்கம் செய்வதுபோல அரசியல் சாஸனமே இல்லாததுபோல் ஆட்சி செய்வது ஜனநாயகத்தை புதைகுழியில் தள்ளுகிறது. ஒரு வேளை அதுதான் அவர்களின் இலக்கு என தோன்றுகிறது. இதுதான் நமது பாணி கரோனா வைரஸ். நாம் நோய்மையுற்றவர்கள்.

வானில் எந்த நம்பிக்கைக் கீற்றும் தெரியவில்லை. எந்த நல்லெண்ணம் கொண்ட சக தேசமும் கண்ணில் படவில்லை. ஐ.நா எங்கே இருக்கிறது என தெரிந்தகொள்ள முடியவில்லை. அது மட்டுமின்றி, தேர்தலில் ஜெயிக்க நினைக்கும் எந்தக் கட்சியும் தார்மீக நிலைகள் எடுக்க விரும்பவில்லை. ஏனென்றால் அமைப்பே அப்படி மாறிப் போயிருக்கிறது.

தூற்றினால் தூற்றட்டும் என்றெண்ணும் மக்கள் நமக்குத் தேவை.

தங்கள் வாழ்வை அச்சுறுத்தலின் பாதையில் வைப்பவர்கள் நமக்குத் தேவை.

உண்மையைச் சொல்லத் தயாராக இருப்பவர்கள் நமக்குத் தேவை.

துணிச்சலான பத்திரிகையாளர்கள் அதைச் செய்ய முடியும். துணிச்சலான வழக்கறிஞர்கள் அதைச் செய்ய முடியும், செய்துகொண்டுதான் இருக்கிறார்கள். கலைஞர்கள், துணிச்சலான கவிகள், இசையமைப்பாளர்கள், ஓவியர்கள், சினிமா கலைஞர்கள் எல்லோரின் பங்களிப்பும் அவசியம். அழகு நம் பக்கமிருக்கிறது.

நாம் கடுமையாகச் செயலாற்ற வேண்டியிருக்கிறது. ஒட்டுமொத்த உலகையும் வென்றெடுப்பது நம் கையில்தான் உள்ளது.

தமிழில்: செந்தில்குமார்

(கடந்த வெள்ளி அன்று (28 பிப்ரவரி 2020)ஜந்தர் மந்தரில் அருந்ததி ராய் பேசிய உரை)

நன்றி : உயிர்மை மற்றும் மக்கள் உரிமை பாதுகாப்பு மையம்

Permanent link to this article: http://new-democrats.com/ta/our-version-of-coronavirus-arundhati-roy-on-delhi-violence-ta/

Leave a Reply

Your email address will not be published.

%d bloggers like this:
Read more:
கிராமப்புற தபால் ஊழியர்களின் வேலை நிறுத்தம் : உரிமைக்கான போராட்டம்

இவர்களில் பெரும்பாலான தொழிலாளர்களுக்கு ரூ.5,000 முதல் ரூ.8,000 வரை சம்பளம் வழங்கப்படுகிறது. "நாங்கள் எந்தவொரு மருத்துவத் திட்டத்தின்கீழும் வருவதில்லை" என்ற அவர் "மொத்த தபால் ஊழியர்களின் எண்ணிக்கையில்...

ஜெயலலிதாவின் நோக்கு வர்மம்: பதறிப் பணியும் ஊடகங்கள்

இனி சூடு, சொரணை, வெட்கம், மானம் அனைத்திற்கும் நாம் வேறு தமிழ்ச் சொற்களைக் கண்டுபிடித்தால்தான் தமிழைக் காப்பாற்ற முடியும்.

Close