ஐ.டி துறையில் வேலை பார்க்கும் தொழிலாளிகள் என்னதான் சமூகத்தின் மற்ற உழைக்கும் வர்க்கத்தினை விட தம்மை மேலானவராக நினைத்துக் கொண்டாலும் அவர்களுடைய பின்புலம் அதாவது பெற்றோர்கள் விவசாயத்தில் வேலை செய்பவர்களாகவும், ஆசிரியராகவும், வங்கித்துறையில் வேலை பார்ப்பவராகவும் தொழிலாளர்களாக இருப்பார்கள். அவர்கள் பல்வேறு இன்னல்களை அனுபவித்தவர்களாகவும் அரும்பாடுபட்டு நல்ல நிலைமைக்கு வந்திருப்பார்கள்.
மேலும், நாம் சமூகத்தில் பலவகைப்பட்ட மனிதர்களை பார்த்திருப்போம். குறிப்பாக எந்த ஒரு சமூக பிரச்சனையாக இருந்தாலும் அதற்காக குரல் கொடுப்பவகளை பார்த்திருப்போம். நாமும் வேலை பார்க்கும் இடத்திலும், வாழும் இடத்திலும், நண்பனுக்காக இப்படி ஏதோ ஒருவகையில் சக மனிதர்களுக்காக குரல் கொடுத்திருப்போம்.
உதாரணமாக, சுனாமி தாக்குதல், சென்னை வெள்ளம், வர்தா புயல், கஜா புயல் போன்ற இயற்கை சீற்றங்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சாதி, மதம், ஏழை பணக்காரன் பார்க்காமல் பலர் உதவினார்கள். உயிரை பணயம் வைத்து போராடி காப்பாற்றியவர்கள் உள்ளனர். நமது யூனியனில் கூட பலர் பாதிக்கப்பட்ட ஐ.டி ஊழியர்களுக்கு உதவி செய்ய பல மணி நேரம் செலவிடுகின்றனர்.
அப்படிப்பட்ட யாரும் விருதுக்காகவோ பணம் பதவிக்காகவோ செய்யவில்லை. பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்றுவதையும் அவர்களுக்கு உதவுவதையும் தம்முடைய கடமையாக நினைத்து செய்கிறார்கள். ஆனால் அதையே சாதகமாக எடுத்துக்கொண்டு அதையெல்லாம் தான் செய்ததாக சொல்லிக்கொண்டு ஓட்டு பொறுக்கும் அரசியல்வாதிகளை நாம் அறிவோம்.
ஆனால் உழைக்கும் மக்கள் பாதிக்கப்படும்போதெல்லாம் உதவி செய்யாதவர்கள் அவர்களுக்காக போராடாதவர்கள் அவர்களை கண்டுகொள்ளாதவர்கள்தான் விருதுகளும் பதவிகளும் எடுத்துக்கொண்டு சொகுசாக வாழ்கிறார்கள். அந்த சொகுசு வாழ்க்கைக்கான பணத்தை உழைக்கும் மக்களாகிய நமது வரிப்பணத்தில் இருந்துதான் எடுத்துக்கொள்கிறார்கள் என்பதையும் நாம் மறந்துவிட கூடாது. ஆங்கிலேயர் காலனிய ஆட்சியில் கூட சர் பட்டம், ராவ் பகதூர் பட்டம், திவான் பகதூர் பட்டம் என்று ஆட்சியாளர்களுக்கு சேவை செய்தவர்கள் பெற்ற விருதுகளை நாம் வரலாற்று பாடத்தில் படித்திருப்போம்.
அந்த வகையில் ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்தை ஒட்டி பத்மா விருதுகள் மத்திய அரசால் வழங்கப்படுகின்றன. மக்கள் நலன் கருதி செயல்பட்டவர்கள், குறிப்பிட்ட துறைகளில் சிறந்து விளங்கியவர்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்படுவதாக சொல்லப்படுகிறது. ஆனால் உண்மையில் எவ்வாறு இந்த விருதுகள் வழங்கப்படுகிறது என்றால் வழக்கமாக ஆள்கிற கட்சிக்கு யாரெல்லாம் விருப்பமாக உள்ளார்களோ அவர்களுக்காக கொடுக்கப்படுகிறது. அதாவது தனது கட்சியின் தலைவர்களுக்கும், ஆதரவு கட்சிகள் பரிந்துரைப்பவர்களுக்கும், கடந்த காலத்தில் மற்றும் எதிர்காலத்தில் தனது ஆட்சிக்கு பங்கம் விளைவிக்காமல் வேடிக்கை பார்த்தவர்களுக்கும், தான் மேற்கொள்ளும் அடக்குமுறைக்கு துணை நின்றவர்களுக்கும் கொடுக்கப்படும் பரிசாக உள்ளது. அவ்வாறு செய்வதை திரைபோட்டு மறைப்பதற்காக விரல் விட்டு எண்ணக்கூடிய அளவுக்கு மக்கள் மத்தியில் பெயர் வாங்கியவர்களை கௌரவித்து மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த வருடம் குடியரசு தின நாளில் பாரத் ரத்னா, பத்மா பூஷண், பத்மா விபூஷன் போன்ற விருதுகள் பெறுபவர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில் பாரத் ரத்னா விருது பிரணாப் முகர்ஜி, பூபன் ஹசாரிகா, நானாஜி தேஷ்முக் இவர்கள் மூன்று பேருக்கு வழங்குவதாக கூறப்பட்டுள்ளது. மத்தியில் ஆளும் பா.ஜ.க கட்சிக்கு ஏற்ற வகையில் பட்டியில் தயாரித்து வெளியிடப்பட்டுள்ளது. எதிர் கட்சியாக உள்ள காங்கிரஸ் இதைப்பற்றி பேசிவிட கூடாது என்பதற்காக காங்கிரஸ் கட்சியில் இருந்து பா.ஜ.கவுடன் ஐக்கியமாகிக் கொண்டிருக்கும் பிரணாப் முகர்ஜி பெயர் சேர்க்கப்பட்டுள்ளது.
மத்தியில் ஆளும் பா.ஜ.க கட்சி தனது ஆட்சிக்கு துணை நின்றவர்களில் மதம், சாதி, இயக்கம் என்று இன்னும் ஒருபடி மேலே போய் ஆராய்ந்து பட்டியல் தயாரித்துள்ளது. இது எதிர்பார்த்த ஒன்றுதானே தவிர அதிர்ச்சி தரக்கூடிய விஷயம் இல்லை. ஏனென்றால் இதற்கு முன்னால் நடந்த விவரங்கள் நமக்கு பதில் கூறும். தொலைக்காட்சி நாடகங்களில் நடித்துக் கொண்டிருந்த ஸ்மிரிதி இராணி கல்வித்துறை அமைச்சர் ஆவதும், வரலாறு படித்த சக்திகாந் தாஸ் நாட்டின் பணத்தை நிர்வாகிக்கும் ரிசர்வ் வங்கி ஆளுநர் ஆவதும், ஆடிட்டர் குருமூர்த்தி ரிசர்வ் வங்கி இயக்குனர் குழுவில் இடம் பெறுவதும், உச்ச நீதிமன்ற நீதிபதிகள், சிபிஐ இயக்குனர்கள், மாநில ஆளுநர்கள், பல்கலைக் கழக துணைவேந்தர்கள் என்பது போல பல துறைகளில் பல்வேறு வகைகளில் அவர்களுக்கு ஏற்ற ஆட்களை பொறுப்புகளுக்கு அமர்த்தி தனக்கு சாதகமான இந்து பாசிச நடவடிக்கையை எடுத்து வருகிறது மோடி அரணு என்பது நாடே அறியும்.
அந்த வகையில் ஜனசங்கத்தில் தலைவராக இருந்த நானாஜி தேஷ்முக்-க்கு பாரத ரத்னா. ஜனசங்கம்தான் பின்னர் பா.ஜ.க கட்சியாக மாறியது என்பதை நினைவுபடுத்திக் கொள்ளவும், பா.ஜ.க கட்சிக்கு ஏற்றவகையில் பாடல்கள், கவிதைகள் எழுதிய பூபன் ஹசாரிக்கும் பாரத் ரத்னா விருது கொடுக்கப்படுகிறது. பாரத் ரத்னா விருது மட்டுமில்லை, அதுபோலத்தான் அனைத்து விதமான பத்மா விருதுகளும் கொடுக்கப்படுகிறது.
“பிரணாப் முகர்ஜி நாட்டின் நலனுக்காக அயராது உழைத்தவர், நானாஜி தேஷ்முக் ஏழைகள் மீது அனுதாபம் கொண்டவர், மனிதாபிமானம் உள்ளவர், பூபன் ஹசாரி பாடல்கள் கவிதைகள் மூலம் சகோதரத்துவம் நல்லிணக்கம் சொல்பவர்” என்று பிரதமர் மோடி ட்விட்டரில் பதிவிடுகிறார். அதாவது விருதுகள் பட்டியல் வெளிவந்த உடன் முதல் முறையாக பதிவிட்டு வாழ்த்து தெரிவித்தவர் இவர்தான். அப்படியென்றால் நம்மால் புரிந்து கொள்ள முடியவில்லையா விருதுகள் யார் முடிவு செய்கிறார்கள் யாருடைய கட்டுப்பாட்டில் யாருக்கு சாதகமாக செய்யப்படுகிறது என்பதை.
மூன்று பெயர்களை சொல்லி ஏழைகளுக்காக பாடுபட்டவர், சகோதரத்துவம் நல்லிணக்கம் கொண்டவர் என்று சொல்லும் இதே மோடியின் பா.ஜ.க கட்சிதான் உண்மையாக உழைக்கும் மக்களின் நலனுக்காக போராடியவர்களை, பேசியவர்களை சுட்டுக்கொல்கிறார்கள், சிறையில் அடைத்து சித்ரவதை செய்கிறார்கள் என்பதை எப்படி மறக்க முடியும்? நரேந்திர தபோல்கர், கோவிந்த் பன்சாரே, எம்.எம் கல்புர்கி, கௌரி லங்கேஷ் இன்னும் பலர் பெயர் தெரியாதவர்கள், மக்களின் நலனுக்காக செயல்பட்டவர்களை மதவெறி பா.ஜ.க கைக்கூலிகள் சுட்டு கொன்றார்கள். அதேபோல சமீபத்தில் மோடியை கொல்ல திட்டம் தீட்டினார்கள் என்று சொல்லி உழைக்கும் மக்கள் நலனுக்காக செயல்பட்ட பேராசிரியர் சாய்பாபா போன்ற அறிவுத்துறையினரை கைது செய்து சிறையில் அடைத்து சித்ரவதை செய்கிறார்கள். இவ்வாறு உழைக்கும் மக்களுக்காய் போராடும் அமைப்புகள் மீது நூற்றுக்கணக்கான வழக்குகள் போடப்படுகிறது, அவை அடக்கி ஒடுக்கப்படுகின்றன. ஆள்கொல்லி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடியவர்களை குறி வைத்து சுட்டுக் கொன்றது அரசு.
பா.ஜ.க கட்சியின் இந்து பாசிசத்துக்கு ஆதரவானவர்களுக்கு விருதுகள் கொடுக்கப்பட்டு கௌரவிக்கப்படுகின்றனர். அந்த வகையில் குடியரசு தினத்தை பாசிச பா.ஜ.க இந்து மதவெறி கும்பல் பா.ஜ.க விருதுகள் வழங்கி பயன்படுத்திக் கொண்டிருக்கிறது. அடுத்து காங்கிரஸ் ஆட்சி வந்தால் காங்கிரஸ் தனது கட்சிக்கு இணக்கமானவர்களுக்கு விருது கொடுத்து கௌரவிக்கும் என்று உறுதியாக சொல்லலாம்.
உண்மையாக மக்களுக்காய் போராடுபவர்களுக்கு பேசுபவர்களுக்கு செயல்படுபவர்களுக்கு கைது சித்ரவதை படுகொலை தண்டிக்கப்படுகிறார்கள் என்பதுதான் நாம் புரிந்து கொள்ள வேண்டியது. உழைக்கும் மக்களின் நலனுக்காக வாழ்பவர்கள் காயங்கள், கஷ்டங்கள் பரிசாக எடுத்துக்கொண்டு முன்னேறி செல்வதால்தான் இன்னும் உழைக்கும் மக்கள் உயிர் வாழ முடிகிறது இல்லை என்றால் என்றோ பேரழிவு ஏற்பட்டிருக்கும், மனித சமூகம் அழிந்து போயிருக்கும்.
– சுகேந்திரன்
https://en.wikipedia.org/wiki/Nanaji_Deshmukh
https://en.wikipedia.org/wiki/Bhupen_Hazarika