“நாங்கள் இருக்கிறோம் உங்களோடு” – விவசாயிகளுக்கு ஐ.டி ஊழியர்கள் நீட்டிய ஆதரவுக் கரம்!

.டி துறையில் பணிபுரியும் தமிழக இளைஞர்களின் உணர்வுகளுக்கு முகம் கொடுக்கும் விதமாக நடந்தது 18-04-2017 அன்று பல்லாவரத்தில் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி – ஐ.டி. ஊழியர்கள் பிரிவும் மெப்ஸ் (MEPS) வளாக ஐ.டி ஊழியர்களும் இணைந்து நடத்திய விவசாயிகளுக்கு ஆதரவான ஆர்ப்பாட்டம்.

This slideshow requires JavaScript.

விவசாயிகளுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம்

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி – ஐ.டி. ஊழியர்கள் பிரிவும் மெப்ஸ் (MEPS) வளாக ஐ.டி ஊழியர்களும் இணைந்து நடத்திய விவசாயிகளுக்கு ஆதரவான ஆர்ப்பாட்டம்.

அலுவலக பணி நெருக்கடிகளுக்கு மத்தியில், சுட்டெரிக்கும் ஒரு வெயில் நாளில், மாலையில் பல கிலோமீட்டர் தூரம் பயணித்து விவசாயிகளுக்காக போராட முன்வந்தவர்கள் சில 10 பேர் என்றால், அவர்களுடன் உணர்வு ரீதியாக இணைந்தவர்கள் இன்னும் பல நூறு பேர்.

இந்த ஆர்ப்பாட்டத்துக்கான தயாரிப்புகள் மார்ச் மாதம் 1-ம் தேதி நெடுவாசல் ஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்த்து மெப்ஸ் வளாக ஊழியர்கள் திரளாக வெளியில் வந்து ஜி.எஸ்.டி சாலையோரத்தில் தட்டிகளை பிடித்து நின்ற போது ஆரம்பித்து விட்டன என்று சொல்லலாம். அதன் பிறகு வாட்ஸ்-ஆப் குழுக்கள் மூலமாகவும், அலுவலக உரையாடல்களிலும் விவசாயிகள் பிரச்சனை பற்றிய விவாதங்கள் தொடர்ந்தன.

அய்யாக்கண்ணு அவர்கள் தலைமையில் தமிழக விவசாயிகள் டெல்லியில் சென்று போராட ஆரம்பித்த பிறகு அனைவரையும் ஒரு வகை பதற்றமும் அவசரமும் தொற்றிக் கொண்டது. ஏப்ரல் 3-ம் தேதி விவசாயிகள் சங்கங்கள் அழைப்பு விடுத்திருந்த பொது வேலை நிறுத்த தினத்தன்றும் மெப்ஸ் ஊழியர்கள் வளாகத்தின் உள்ளே கூடி இந்தப் பிரச்சனை பற்றிய தமது கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர். டெல்லியில் தெருவில் நிற்கும் நமது விவசாயிகளுக்காக நம்மால் இயன்ற வழியில் ஆதரவை தெரிவிக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.

விவசாயிகளுக்கு ஐ.டி ஊழியர்களின் ஆதரவுக் குரல்

டெல்லியில் போராடும் விவசாயிகளின் கோரிக்கைகளை ஆதரித்தும், நெடுவாசல் ஹைட்ரோகார்பன் திட்டத்தை ரத்து செய்யக் கோரியும் ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு காவல்துறையிடம் அனுமதி கோருவது என்று முடிவு செய்து பு.ஜ.தொ.மு – ஐ.டி ஊழியர்கள் பிரிவு அமைப்பாளர், வழக்கறிஞர், மெப்ஸ் ஐ.டி ஊழியர்களின் பிரதிநிதிகள், டைடல் பார்க் ஐ.டி ஊழியர்களின் பிரதிநிதிகள் என்று ஒரு குழுவாகச் சென்று எழும்பூர் காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர். “மெப்ஸ் வளாகத்தின் முன்பு ஆர்ப்பாட்டம், போராட்டம் நடத்துவதற்கு இடமே [இடம் இருக்கிறது, கார்ப்பரேட்டுகளின் மனம் கோணாமல் இருக்க விரும்பும் அரசுக்கு மனம்தான் இல்லை] இல்லை” என்று சாதித்து விட்ட நிலையில் தாம்பரம் காவலர்களின் பரிந்துரையின்படி தாம்பரம் சண்முகம் சாலையில் அனுமதி கோரப்பட்டது. “ஒட்டு மொத்த ஜி.எஸ்.டி சாலையிலேயே பல்லாவரம் அம்பேத்கர் சிலை அருகில் மட்டும்தான் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதிப்போம்” என்று கூறி அதற்கான அனுமதி கோரும் கடிதத்தை கொடுக்கும்படி கூறினர் காவல்துறையினர்.

உழைக்கும் மக்களுடன் கரம் கோர்த்த ஐ.டி ஊழியர்கள்

18-ம் தேதி செவ்வாய்க் கிழமை மாலை 4 மணி முதல் 7 மணி வரை ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று முடிவு செய்த 13-ம் தேதியிலிருந்தே இதற்கென இயங்கி வரும் வாட்ஸ்ஆப் குழுவில் தயாரிப்புகள் சூடு பிடித்தன். ஆர்ப்பாட்டத்துக்கான முழக்கங்கள் என்ன, கோரிக்கைகள் என்ன, எங்கெங்கு பேனர் கட்டுவது, அழைப்பு அட்டைகளை எப்படி தயாரிப்பது, அதற்கான வடிவமைப்பு செய்வது யார் என்று அவரவர் பங்குக்கு அவரவர் திறமைகளை பயன்படுத்தி கூட்டாக களத்திலும் மெய்நிகர் உலகிலும் இயங்க ஆரம்பித்தனர். இதற்கு இணையாக பு.ஜ.தொ.மு ஐ.டி ஊழியர் பிரிவு இணையதளத்தில் செய்திகள் வெளியிடுவது, பத்திரிகையாளர்களுக்கு தகவல் அனுப்புவது, மீம்ஸ்கள், பேனர்கள் தயாரித்து இணையத்தில் பரப்பவது என்று அடுத்த 6 நாட்களுக்கு பிரச்சாரம் விறுவிறுப்பாக நடத்தப்பட்டது.

“கட்சிகளை, கட்சித் தலைவர்கள் விமர்சிக்கக் கூடாது” என்ற ஒரு கருத்து முன் வைக்கப்பட்டு, கடுமையான ஆனால் நட்புரீதியான விவாதங்களுக்குப் பிறகு “விவசாயப் பிரச்சனைகளுக்கு காரணமாக இருந்து, பிரச்சனைகளை தீர்க்காமல் வளர்த்து விடும் கட்சிகளையும், தலைவர்களையும் அரசியல் ரீதியாக விமர்சித்து விளக்குவது தேவையானது. ஆனால், தனிநபர் தாக்குதல்கள் தவிர்க்கப்பட வேண்டும்” என்று அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

விவசாயிகளுக்கு ஆதரவாக…இணைகிறோம்.

வெள்ளி, சனி, ஞாயிறு என்ற நீண்ட வார இறுதியின் போது அலுவலகங்கள் விடுமுறையில் முடங்க, அரசியல் பணிகள் தொடர்ந்தன. ஐ.டி ஊழியர்கள் பணிக்கு திரும்பிய திங்கள், செவ்வாய்க் கிழமைகளில் துண்டு பிரசுரங்கள், அழைப்பு அட்டைகள் வினியோகிக்கப்பட்டன. பேனர்கள், தட்டிகள் தயாரிப்புப் பணிகளை ஏற்றுக் கொண்டவர்கள் அதைச் செய்து முடித்தனர்.

இத்தகைய தயாரிப்புகளுக்குப் பிறகு வெப்ப அலை வீசும் நாளாக வானிலை ஆய்வு மையம் குறித்திருந்த செவ்வாய்க் கிழமை அன்று ஆர்ப்பாட்டம் திட்டமிட்டபடி நடைபெற்றது. மெப்ஸ் ஐ.டி ஊழியர்கள், பிற வளாக ஐ.டி ஊழியர்கள், பு.ஜ.தொ.மு – ஐ.டி ஊழியர்கள் பிரிவு அமைப்பாளர் தோழர் கற்பகவிநாயகம், வழக்கறிஞர் தோழர் சக்தி சுரேஷ் மற்றும் பு.ஜ.தொ.மு – வாகன ஓட்டுனர்கள் சங்கத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்துக்காக போடப்பட்டிருந்த ஷாமியானாவில் அமர்ந்து உரைகளை கேட்பவர்கள் ஒரு பகுதியும், அம்பேத்கர் சிலை அமைந்திருக்கும் (எவ்வளவு பொருத்தமான இடம்!) தெருவோரத்திலும், தெரு முனையில் ஜி.எஸ்.டி சாலையை நோக்கி மெப்ஸ் ஊழியர்கள் முழக்கங்கள் பொறித்த தட்டிகளை ஏந்தி நின்றும் ஆர்ப்பாட்டம் சுமார் இரண்டு மணி நேரம் நடைபெற்றது.

தோழர் கற்பகவிநாயகம்

“நாம் அனைவரும் இந்த மண்ணில் நமது விவசாயிகள் விளைவிக்கும் சோற்றை சாப்பிடுபவர்கள்தான். மிக முக்கியமாக நமது தந்தையும், சகோதரர்களும், சக குடிமக்களும் செத்துக் கொண்டிருக்கும் போது சும்மா இருக்க முடியாது.”

முதலில் பேசிய தோழர் கற்பகவிநாயகம், “கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக டெல்லியில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்யக்கோரியும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரியும் போராடி வருகின்றனர். ஆனாலும் அவர்களின் கோரிக்கைகளுக்கு செவி கொடுக்க மறுக்கிறது மத்திய அரசு. மேலும் மீத்தேன் திட்டம், ஹைட்ரோ கார்பன் திட்டம் என தமிழகத்தை தொடர்ந்து வஞ்சித்து வருகிறது. இதனை தமிழக அரசும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது. இவற்றை எதிர்த்து விவசாயிகளுக்காக போராட நாம் களமிறங்கியுள்ளோம்.

ஆனால், விவசாயிகள் எதிர்கொண்டிருக்கும் நெருக்கடி என்பது இந்த ஆண்டு திடீரென்ற தோன்றிய ஒன்று அல்ல. 1990-கள் முதல் அமல்படுத்தப்பட்டு வரும் தனியார்மய-தாராளமய-உலகமய கார்ப்பரேட் ஆதரவு கொள்கைகள் படிப்படியாக விவசாயப் பொருளாதாரத்தை நிலைகுலையச் செய்திருக்கின்றன. விவசாயிகளை தற்கொலையை நோக்கியும், நகரங்களை நோக்கியும் துரத்தியிருக்கின்றன.

நம்மிடம் சிலர் கேட்கலாம் மென்பொருள் நிறுவன ஊழியர்களுக்கும் விவசாயிகளுக்கும் என்ன சம்மந்தமென்று. இன்று ஐ.டி. துறையில் பணிபுரிபவர்கள் பலரும் விவசாயிகளின் பிள்ளைகள் தான். அதற்கும் மேல் நாம் அனைவரும் இந்த மண்ணில் நமது விவசாயிகள் விளைவிக்கும் சோற்றை சாப்பிடுபவர்கள்தான். மிக முக்கியமாக நமது தந்தையும், சகோதரர்களும், சக குடிமக்களும் செத்துக் கொண்டிருக்கும் போது சும்மா இருக்க முடியாது. இந்த உணர்வுதான் நம்மை இங்கு கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது.

விவசாயிகளுக்கு எதிரான அரசின் நடவடிக்கைகளை கண்டிப்பது முக்கியமானது என்றாலோம் நாம் அத்தோடு நின்று விட முடியாது. அந்தக் கண்டனங்கள் சமூகவலைத்தள மீம்ஸ்களை தாண்டி வீதிகளில் தெரிவிக்கப்பட வேண்டும். மீண்டும் ஒரு மெரினா போராட்டத்தைப் போன்ற உறுதியான போராட்டத்தை கட்டமைக்க வேண்டியுள்ளது. அதையும் தாண்டி விவசாயப் பிரச்சனைகளுக்கு நிரந்தரத் தீர்வு காண நாம் கைகோர்த்து உழைக்க வேண்டியிருக்கிறது.” எனப் பதிவு செய்தார்.

ஐ.டி ஊழியர் வினோத்

“ஊர் ஊராக சுற்றி செல்பி எடுப்பவர் ஏன் விவசாயிகளை சந்தித்து ஒரு செல்ஃபி எடுத்துக் கொள்ளலாமே?”

அவரைத் தொடர்ந்து மெப்ஸ் வளாகத்தில் பணிபுரியும் ஐ.டி ஊழியர் திரு வினோத் தனது உரையில் “நமக்கெல்லாம் சோறு போட்ட விவசாயிகள் டெல்லியில் ஆடையின்றி அமர்ந்து போராடிக் கொண்டிருக்கின்றனர். அவர்களை யாரும் கண்டு கொள்ளவில்லை. மாநிலத்தை ஆளும் கட்சியினர் கட்சியின் சின்னத்திற்காக சண்டையிட்டுக் கொண்டு பேரங்களை நடத்திக் கொண்டிருக்கின்றனர். மத்தியில் ஆளுர் பிரதமரோ கூப்பிடும் தொலைவில் இருந்தும், விவசாயிகளை பார்க்க மறுக்கிறார். ஊர் ஊராக சுற்றி செல்பி எடுப்பவர் ஏன் விவசாயிகளை சந்தித்து ஒரு செல்ஃபி எடுத்துக் கொள்ளலாமே? அதைச் செய்வாரா?

விவசாயம் தான் நாட்டின் முதுகெலும்பு என்கிறார்கள் ஆனால் அது முறிக்கப்பட்டு விட்டது. அதை முறித்துவிட்டு என்ன டிஜிட்டல் இந்தியா? டிஜிட்டல் இந்தியாவில் ஒரு கிலோ அரிசியை டவுன்லோடு செய்து கொள்ள முடியுமா?

எந்தத் துறையில் வேலை செய்பவராக இருந்தாலும் விவசாயமே அனைவருக்கும் சோறு போடுவது. அதனால்தான் ஜப்பான் கப்பலில் விவசாயம் செய்து கொடிருக்கிறது. ஆனால் எல்லாச் சூழலும் இருந்தும் நமது விவசாயிகள் தற்கொலைக்கு தள்ளப்படுகின்றனர்.

நாளை நமது நாடும் சோமாலியா போல் பட்டினிச் சாவை நோக்கிச் செல்லாமல் இருக்க விவசாயத்தை காக்க வேண்டும் அதற்காக அனைவரும் களத்தில் இறங்கிப் போராட வேண்டும்.” எனக் கூறினார்.

ஐ.டி ஊழியர் சமந்தா

“ஐ.டி துறையில் வேலை செய்யும் நம்முடைய சம்பளத்தில் இருந்து அவர்களாகவே வரியை பிடித்துக் கொள்கிறார்கள். இந்த வரிப்பணத்தை என்ன செய்கிறார்கள் என்றே தெரியவில்லை. இந்த பூமி விளைவதை உறுதி செய்வதற்கு பாசன வசதியும், விவசாயத்துக்கு உத்தரவாதமும் அளிக்க மறுக்கிறார்கள்.”

இதனைத் தொடர்ந்து மெப்ஸ் வளாகத்தில் பணி புரியும் ஐ.டி. ஊழியர் சமந்தா பேசினார். “இன்று நாம் கூடி இருப்பது விவசாயிகளின் கோரிக்கைகளுக்காகத் தான். விவசாயம் செய்வது எவ்வளவு சிரமமான வேலை என்பது இங்கு உள்ள விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு தெரியும். நாம் எல்லாம் சில செடிகள் நடலாம், 10 மரங்களை நடலாம். ஆனால் அதைத் தாண்டி பெரிதாக எதையும் செய்ய முடியாது. ஆக விவசாயத்தை காக்க வேண்டும், என்ன செய்யலாம்?

வானம் பொழிகிறது, பூமி விளைகிறது, உனக்கு ஏன் கிஸ்தி என்று காலனிய ஆதிக்கத்துக்கு எதிராக வீர வசனம் பேசிய மரபு தமிழர் மரபு. ஆனால், இன்றைக்கு பூமி விளையாமலேயே வரியை எடுத்துக் கொள்கிறார்கள். நம்மிடம் கேட்பது கூட இல்லை. ஐ.டி துறையில் வேலை செய்யும் நம்முடைய சம்பளத்தில் இருந்து அவர்களாகவே வரியை பிடித்துக் கொள்கிறார்கள். இந்த வரிப்பணத்தை என்ன செய்கிறார்கள் என்றே தெரியவில்லை. இந்த பூமி விளைவதை உறுதி செய்வதற்கு பாசன வசதியும், விவசாயத்துக்கு உத்தரவாதமும் அளிக்க மறுக்கிறார்கள்.

இந்நிலையை மாற்றி விவசாயத்தைக் காப்பது இந்த மத்திய மாநில அரசுகள் மக்கள் அரசாக மாறும் போது மட்டுமே சாத்தியம்.” என பேசினார்.

வழக்கறிஞர் சக்தி சுரேஷ்

“பல லட்சம் கோடி கடன் தொகை கார்ப்பரேட் நலன்களுக்காக தள்ளுபடி செய்யப்படுகிறது. ஆனால் விவசாயிகளின் கடன்களை கட்டாயமாக வசூலிக்க வேண்டும் என்கிறது அரசு.”

பு.ஜ.தொ.மு. வழக்கறிஞர் சக்தி சுரேஷ் தனது கண்டன உரையில் “ஐ.டி. ஊழியர்கள் பற்றி ஒரு பொதுவான பார்வை உள்ளது; மடிப்பு கலையாத உடை, கையில் ஸ்மார்ட் போன் இவைதான் அவர்களின் அடையாளம். ஆனால் இந்த பொதுப் பார்வையை மாற்றும் விதமாக உள்ளது அவர்களின் இந்தப் போராட்டம். சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக இங்கு சாலையில் கையில் பதாகையேந்தி, விவசாயிகளுக்காக நின்று கொண்டிருக்கின்றனர். இவர்கள் தங்கள் சொந்த முயற்சியிலேயே இந்த ஆர்ப்பாட்டத்துக்கான ஏற்பாடுகளை செய்து நடத்தி வருகின்றனர்.

திட்டமிட்டே விவசாயத்தை அழிக்க மீத்தேனும், ஹைட்ரோ கார்பன் திட்டங்களும் கொண்டுவரப்படுகின்றன. உ.பி-யில் தேர்தல் வெற்றிக்காக விவசாயக் கடன்களை ரத்து செய்வதாகக் கூறி ஆட்சியைப் பிடித்தது பா.ஜ.க. ஆனால் தமிழகத்தில் அவர்களுக்கு அரசியல் லாபம் இல்லாத காரணத்தால் தமிழக விவசாயிகளை திட்டமிட்டே வஞ்சிக்கிறது.

பல லட்சம் கோடி கடன் தொகை கார்ப்பரேட் நலன்களுக்காக தள்ளுபடி செய்யப்படுகிறது. ஆனால் விவசாயிகளின் கடன்களை கட்டாயமாக வசூலிக்க வேண்டும் என்கிறது அரசு.

பு.ஜ.தொ.மு தோழர்கள் முழக்கம்

விவசாயிகளுக்கு ஆதரவான முழக்கமிடுவதில் முன்நின்ற பு.ஜ.தொ.மு தோழர்கள்

விவசாயிகளுக்கு மட்டும் இன்று பிரச்சினை இல்லை. ஐ.டி. ஊழியர்களுக்கும் பிரச்சினை உள்ளது. தற்போது சி.டி.எஸ். நிறுவனமானது தனது நிறுவனத்தில் ஆட்குறைப்பு செய்து கொண்டிருக்கிறது. இவ்வாறு அனைத்துத் தரப்பினருடைய வாழ்க்கையும் கார்ப்பரேட் நலன்களுக்காக அழிக்கப்பட்டு வருகிறது. எனவே, இவை அனைத்துக்கும் எதிராக மக்கள் திரள வேண்டியது அவசியம்” என்று வலியுறுத்தி பேசினார்.

இறுதியாக தோழர் திலீபன் நன்றியுரை கூற ஆர்ப்பாட்டம் நிறைவு பெற்றது.

ஐ.டி ஊழியர்கள் களத்தில் இறங்கி போராடுபவர்கள் என்பதை உலகுக்கு காட்டி விட்ட மன நிறைவுடனும், இந்தப் போராட்டத்தை தொடர்ந்து எடுத்துச் சென்று, தம்மால் இயன்ற அனைத்து வழிகளிலும் விவசாய நெருக்கடியை தீர்ப்பதற்கான முயற்சிகளில் ஈடுபடுவது என்ற மன உறுதியோடும் ஐ.டி ஊழியர்கள் கலைந்து சென்றனர்.

 

This slideshow requires JavaScript.

 

மேலும் படிக்க

Permanent link to this article: http://new-democrats.com/ta/pallavaram-demonstration-by-it-employees-extends-hand-of-support-to-tnfarmers/

Leave a Reply

Your email address will not be published.

%d bloggers like this:
Read more:
திருடுவதே வெற்றியின் இரகசியம்!

மொத்தத்தில் நம் நாட்டை ராட்சச மலைப்பாம்பு போல் சுற்றி வளைத்து நெருக்கிக் கொண்டிருக்கும் இந்தக் குடும்பம். இதெல்லாம் எப்படி சாத்தியமானது?

முகமூடி 2.0

குஜராத்தில் நடந்த முஸ்ஸிம் இனப்படுகொலைகளுக்குப் பிறகு எவ்வாறு அப்துல்கலாம் என்ற முகமூடி தேவைப்பட்டதோ அவ்வாறு இன்று நாடு முழுவதும் தலித் மக்கள் தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கும் நிலையில் இவர்களுக்கு...

Close