ஒவ்வொருவரின் மனதையும் ஏதோ ஒருவகையில் தொட்டு விடும் கலைப்படைப்புகள் அரிதாகவே பிறக்கின்றன. இயக்குநர் மாரி செல்வராஜின் பரியேறும் பெருமாள் என்ற திரைப்படம் அத்தகைய ஒரு படைப்பு. அது தமிழ் சமூகத்தின் சாதிய நடைமுறையை சித்தரிப்பதில் இதுவரை தொடப்படாத உயரங்களை தொடுகிறது. விமர்சகர்கள், ரசிகர்கள், பிற திரைப்பட கலைஞர்கள் என்று பல்வேறு தரப்பினரும் இந்தப் படம் குறித்து வலுவான எதிர்வினை ஆற்றியிருக்கின்றனர்.
இந்த திரைப்படம் குறித்து ஆஷாமீரா அய்யப்பன் இந்தியன் எக்ஸ்பிரஸ்-ல் எழுதிய விமர்சனத்தின் தமிழாக்கத்தை கீழே தருகிறோம்.
நமது நாட்டை நவீனத்தையும், முன்னேற்றத்தையும் நோக்கி வழிநடத்திச் செல்லும் இடத்தில் இருக்கும் ஐ.டி ஊழியர்கள் இயல்பாகவே சாதிய நடைமுறைகளை வெறுத்து ஒதுக்குகிறவர்கள். ஐ.டி ஊழியர்கள் மத்தியில் இந்தத் திரைப்படம் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கருதுகிறோம். இதுவரை இந்தப் படத்தை பார்க்காத நண்பர்கள் அவசியம் திரையரங்குகளில் சென்று பார்த்து பயனடையும்படி பரிந்துரைக்கிறோம்.
பரியேறும் பெருமாள் என்பதன் பொருள் குதிரையில் ஏறிய கடவுள். இந்தப் பெயர் ஒரு ராஜா போன்ற மனிதரை நினைக்க வைக்கிறதா? ஆனால், இந்தப் படத்தின் நாயகன் (கதிர்) ஒரு சராசரி இளைஞன், ஆனால், ஒரு தாழ்த்தப்பட்ட சாதியில் பிறந்தவன். பரியனின் வாழ்க்கை பற்றிய பல விஷயங்களை இது முடிவு செய்கிறது.
உதாரணமாக, பரியனும் அவனது நண்பர்களும் கிராமத்தில் குளத்தை சுதந்திரமாக பயன்படுத்த உரிமை இல்லை என்பதை அவர்களது சாதி தீர்மானிக்கிறது. இவர்களுடன் சண்டை பிடிக்க வருபவர்களுடன் சண்டை போட ஒரு சிலர் தயாராகின்றனர். ஆனால், பரியன் அவனது நாய் கருப்பியுடன் அந்த இடத்தை விட்டு போய் விடுகிறான். அடுத்த நாள் அவன் கல்லூரியில் சேர வேண்டியிருக்கிறது; சண்டை போடுவதற்கெல்லாம் நேரமில்லை.
சண்டை போட வேண்டும் என்று சொல்பவர்களுக்கும், அதை மறுப்பவர்களுக்கும் இடையேயான உரையாடல் மொத்த படத்தின் அரசியலை சுருக்கமாக சொல்லி விடுகிறது.
“நம்ம கிட்ட இல்லாதது அவங்க கிட்ட என்னதான் இருக்கு” என்று குமுறுகிறார் ஒருவர்.
“ம்.. வயலும் வரப்பும் அவங்க கிட்ட இருக்கு. நம்ம கிட்ட வெறும் வாயும் வயிறும்தான இருக்கு”.
“இது எப்பதான் மாறும்?”
“என் அப்பனும், உன்னோட அப்பனும் வருமானத்துக்காக அவங்க வயல உழுறதை நிறுத்தும் போதுதான் மாறும்.”
பரியனின் இப்படிப்பட்ட ஒரு உலகில் இருந்து வருகிறான். ஆனால், இந்த யதார்த்தம் சட்டக் கல்லூரியில் சேர்ந்த பிறகு அவனை மேலும் தீவிரமாக தாக்குகிறது. சட்டக் கல்லூரியில் சாதி, அரசியல் என்று பல விஷயங்கள் அவன் கவனத்தை திசைதிருப்பும் என்று ஆரம்பத்திலேயே எச்சரிக்கப்படுகிறான். அவன் எதிர்கொள்ள வேண்டிய அடக்குமுறை என்னவென்பதை பரியன் படிப்படியாக புரிந்து கொள்கிறான். அவன் மீண்டும் மீண்டும் சீண்டப்படுகிறான். அவன் மீதான தாக்குதல்களும், கொடூரங்களும் மேலும் மேலும் மோசமாகிச் செல்கின்றன.
திரைப்படத்தின் தொடக்கத்தில் “சாதியும், மதமும் மனிதகுலத்துக்கு எதிரானவை” என்று ஒரு வாக்கியம் காட்டப்படுகிறது. இந்த ஒரு இடத்தில்தான் இயக்குனர் மாரி செல்வராஜ் ஒரு கருத்தை சொல்கிறார். மற்ற நேரங்களில் அவர் கதை சொல்கிறார் – அந்தக் கதையில் ஒரு முதியவரின் பகுதி நேர பணி “ஆணவக் கொலை”களை அரங்கேற்றுவது.
இந்தப் படம் பரியேறும் பெருமாள் தனது சொந்த அடையாளத்தை அங்கீகரித்து ஏற்றுக் கொள்வது பற்றிய கதை. எனக்கு “கேம் ஆஃப் த்ரோன்ஸ்”-ல் டைரியன் லானிஸ்டரின் வரிகள் நினைவு வந்தன, “நீ யார் என்பதை ஒரு போதும் மறக்காதே, ஏனென்றால் உலகம் அதை மறக்கப் போவதில்லை”. பரியனின் இந்த உருமாற்றம் உயிரோட்டத்துடன் வளர்கிறது, அந்த வளர்ச்சியில் பார்வையாளர்களும் பரியனோடு சேர்ந்து பயணிக்கின்றனர். ஒரு தயக்கமான கேள்வியாக, ஒரு வேண்டுகோளாக ஆரம்பிப்பது, படிப்படியாக ஒரு குமுறலாக வளர்ந்து அவன் மீது வீசப்படும் இழிவுகளை மூழ்கடித்து விடுகிறது.
“இவனை துன்புறுத்துபவர்களை நம்மால் தடுக்க முடியுமா? முடியாதுன்னா அவனை மட்டும் ஏன் நிறுத்த முயற்சிக்கிறோம்? தற்கொலை செஞ்சுக்கிறதை விட சண்டை போட்டு சாகறது மேல்” என்கிறார், சாதிய ஒடுக்குமுறையை நேரடியாக எதிர் கொண்ட கல்லூரி முதல்வர்.
மாரி செல்வராஜின் வசனங்கள் இது வரை நான் கேள்விப்பட்டு மட்டும் இருந்த ஒரு கொடூர உலகத்தை திரையில் காட்டுகிறது. இந்தப் போரில் கூட மாரி செல்வராஜ் சமூகத்தை கருப்பு வெள்ளையாக காட்டவில்லை. நியாயத்தை பேசும் குரல்களுக்கும், வெகுளியான குரல்களுக்கும் அவர் இடம் கொடுக்கிறார். படத்தின் துணை நிகழ்வுகள் மனதை தைக்கும் அளவுக்கு கூர்மையாக உள்ளன. ஜோதி கண்களை மூடிக் கொண்டு, தனது குடும்பத்தின் சாதிய சித்தாந்தத்திலிருந்தும் துண்டித்துக் கொண்டு, ஒரு நீண்ட வசனம் பேசுகிறாள்.
சில படங்களில் வலுவான கதை இருந்தாலும், சாதாரணமாக படமாக்கப்பட்டு நம்மை வந்தடையும். ஆனால், பரியேறும் பெருமாள் அத்தகைய படம் இல்லை. மாரி செல்வராஜ் பல உருவகங்களை படத்தில் வைத்திருக்கிறார். இடைவேளைக்கு முந்தைய நம்மை குலைத்து போட்டு விடும் காட்சியில் காமரா எனது உடல் நகர்வுகளை பிரதிபலிப்பது போல இருந்தது. பார்ப்பதை நம்ப முடியாமல் தலையை அசைத்துக் கொண்டிருந்தேன். எந்த விபரத்தையும் காட்டுவதை காமெரா தவிர்க்கவில்லை. என்ன விபரங்கள் என்பதையும் மாரி செல்வராஜ் சரியாக தீர்மானித்திருக்கிறார்.
இளையராஜாவின் இசையில் ஓடுவது போன்ற ஒரு வாழ்க்கையை காட்டுகிறார், மாரி செல்வராஜ். “நான் யார்” பாடல் தனது அடையாளத்தை மீட்டெடுத்துக் கொள்வது ஒரு படைப்பாற்றல் மிக்க வெளிப்பாட்டை காட்டுகிறது. சமீப காலத்தில் மிக படைப்பூக்கம் நிறைந்த காட்சிகளில் ஒன்று அந்தப் பாடல். சித்தாந்தங்களும் கலையும் கேடயங்களாகவும், ஆயுதங்களாகவும் மாறியிருக்கின்றன. எனக்கு மீண்டும் மீண்டும் பா. ரஞ்சித் நினைவு வந்தது. அவர்தான் இந்த வகையிலான சிந்தனையை திரையில் கொண்டு வந்த முதல் குரல் என்பதுதான் அதற்குக் காரணம். மாரி செல்வராஜ் இன்னும் ஒரு படி முன்னேறி செல்கிறார்.
பரியேறும் பெருமாள் நீலம் என்ற நிறத்தின் பொருள் என்னவென்பதை எனக்கு மாற்றி விட்டது. அதன் சமூக முக்கியத்துவத்தைப் பற்றி நினைக்காமல் நீல நிறத்தை இனிமேல் என்னால் ஒரு போதும் பார்க்கமுடியாது என்று நினைக்கிறேன்.
கதிர் ஒரு மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். அவருக்குத் துணையாக யோகிபாபு. யோகிபாபு இப்போதெல்லாம் எல்லா படங்களிலும் ஸ்கோர் செய்து விடுகிறார். ஒரே பலவீனமான நடிகர் ஆனந்தி, பாத்திரத்துக்கு பொருத்தமாக இருக்கிறார், நடிக்கிறார் ஆனால் அப்பாவித்தனத்தை கொஞ்சம் ஓவராக காட்டுகிறார்.
சந்தோஷ் நாராயணன் நம்மை அடித்து நிலைகுலைய வைக்கும் வகையில் இசையமைத்திருக்கிறார். அவரது இசை நமது நாடி நரம்புகளை எல்லாம் ஊடுருவும் அளவுக்கு ராவாக உள்ளது. கருப்பி பாடல் உங்கள் கண்களை குளமாக்கினால், “வா ரயில் விட போலாமா” பாடல் வருவதற்கு காத்திருங்கள், அது உங்களை உருக்கி விடும்.
படம் முழுவதும் வதையும் வன்முறையும் நிரம்பியிருக்கிறது. ஆனால், பரியன் அதை திருப்பி அளிக்க விரும்பவில்லை. பழிக்குப் பழி என்பதன் மூலம் ஒரு எளிய வழியை தேட மாரி முயற்சிக்கவில்லை. பழிக்குப் பழி என்ற உணர்ச்சி சுழல் வடிவமானது. தொடர்வது. மாறாக, மாரி செல்வராஜ் அதை ஒரு படி முன்னெடுத்துச் சென்று, ஒரு இடைநிலை கட்டத்திற்கு கொண்டு செல்கிறார்.
கடைசி காட்சி ஒரு குறுக்கு பட்டையாக சுருங்கி, மேசையின் மீது அக்கம்பக்கமாக வைக்கப்பட்டிருக்கும் இரண்டு டீக்குவளைகள் மீது குவிகிறது. “எல்லாத்தையும் மறந்துடுங்க. நீங்க யாரா இருந்தாலும், எவ்வளவு வித்தியாசமா இருந்தாலும், நாம சமமானவங்க. நாமெல்லாம் மனுசங்க” என்று சொல்லும் மாரி செல்வராஜின் மொழி அது.
நீண்ட காலத்துக்குப் பிறகு தியேட்டரில் கண் மை கரைய நான் அழுதது இந்தப் படத்துக்குத்தான்.
– ஆஷாமீரா அய்யப்பன்
தமிழில் : நெடுஞ்செழியன்
நன்றி : Indian Express
பு.ஜ.தொ.மு – ஐ.டி ஊழியர்கள் பிரிவு தலைவர் சியாம் சுந்தர் எழுதிய இந்தப் புத்தகத்தை வாங்கி படியுங்கள்.
“ஐ.டி ஊழியர் வாழ்க்கை ஜாலியா பிரச்சனைகளா?” புத்தகம் கிடைக்குமிடங்கள்