பாராளுமன்ற தேர்தல்: ஜனநாயகம் என்னும் ஏட்டுச் சுரைக்காய்

‘Thinking out of the box’ தகவல் தொழில்நுட்பத் துறை ஊழியர்கள் ஆகிய நாம் நமது வேலையில் அடிக்கடி எதிர்கொள்ளும் சொற்றொடர் இது. எந்த ஒரு சிக்கலையும் தீர்க்கும் போது வரம்புக்குட்பட்டு சிந்திக்கக் கூடாது, ஒரு சட்டகத்துக்குள் நின்று கொண்டு சிந்திக்க கூடாது. ஏற்கனவே இருக்கக்கூடிய தீர்வுகளை மட்டும் பரிசீலித்து கொண்டு ஒரு இடத்தில் தேங்கி போய் நின்று விடக்கூடாது. இதுதான் மேற்கண்ட சொற்றொடர் நமக்கு உணர்த்துவது. இதனை நாம் நமது வேலையில் பலமுறை யோசித்திருப்போம். ஆனால் சமூகத்தைப் பற்றி சிந்திக்கும் போது மட்டும் நாம் இவ்வாறு சிந்திப்பது கிடையாது. ஏற்கனவே தெரிந்த தீர்வுகளை தாண்டி சட்டகத்திற்கு வெளியே சமூகத்தின் சிக்கல்களுக்கு தீர்வு இருக்கிறதா என்று நாம் தேடிப் பார்த்திருக்கிறோமா. அவுட் ஆப் தி பாக்ஸ் சிந்தித்திருக்கிறோமா.
இதோ தேர்தல் தேதி நெருங்கி விட்டது. அனைத்துக் கட்சிகளும் கூட்டணி கணக்குகளை ஆரம்பித்து விட்டன. அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை நிரந்தர எதிரியும் இல்லை என்ற மிகவும் கேவலமான ஃபார்முலாவை வைத்துக்கொண்டு எந்தக் கொள்கையும் இல்லாமல், சீட்டுக்காகவும் நோட்டுக்காகவும் கூட்டணிக் கணக்குகள் போடப்படுகின்றன.
ஊடகங்களும் இதுதான் அரசியல் என்று நமக்கு பாடம் நடத்துகின்றன. தகவல் தொழில்நுட்ப ஊழியர்களாகிய நாம் இதுகுறித்து என்ன நினைத்துக் கொண்டிருக்கிறோம் எதார்த்தம் எப்படி உள்ளது? வேறு ஏதும் தீர்வே இல்லையா என்ன? போன்றவைகளை பற்றி பார்ப்போம்.
ஏற்கனவே ஊடக சந்தையில் கரகாட்டம் குயிலாட்டம் மயிலாட்டம் என்று பல்வேறு வகையான ஆட்டங்களை காண்பித்து சந்தையின் வியாபாரம் சூடுபிடிக்க வைக்க முன்னோட்ட வேலைகள் களைகட்ட தொடங்கிவிட்டது. Exhibition -களில் சந்தைப்படுத்தப்படும் பொருட்கள் போலியானவையாக இருப்பது பற்றி வர்த்தக மையங்களுக்கு என்ன கவலை, வாடகை வந்தால் சரிதான்!
‘சம்பந்தப்பட்டவர்கள்’ உடல் சுகம் காணும் சிற்றின்பத்தால் ஏற்படும் மகிழ்ச்சியை விட, ‘ஏற்பாடு’ செய்து கொடுக்கும் விபச்சார தரகனே எப்போதும் அகமகிழ்ச்சி அடைவானாம். அதுபோலதான் இருக்கிறது தேர்தல் சமயத்தில் ஊடகங்களின் செயல்பாடுகள். இதைவிட இன்னும் கொச்சையாக ஊடகங்களை விமர்சித்தாலும், அவைகளுக்கு சுரணை வரப்போவது இல்லை. நிற்க!
ஊடகங்களின் தேர்தல் பரப்புரைகள் ஒருபுறம் இருக்கட்டும், தேர்தல் பற்றி சாமான்யர்கள், நடுத்தர வர்க்க மக்கள் ஆகியோர் கொண்டுள்ள கருத்துக்களானது, ‘யாருக்கு ஒட்டு போட்டாலும், நாம வேலை பாத்தாதான் நமக்கு கஞ்சி, இருந்தாலும் நம்ம ஊரு தலைவரு கட்சியில வட்ட செயலாளரு, அவர் கொஞ்சம் நல்லவரு, அவரு மூஞ்சிக்காகவும் கட்சிக்காரங்க கொடுத்து காசுக்காகவும் ஒரு ஓட்டு போட்டுட்டு வந்துடுவோம்’, இது சாமான்யர்.
‘I don’t like politics, but என்னோட ஓட்ட யாரும் கள்ள வோட்டா போட்டு அது எதாவது கெட்டவங்களுக்கு போறத விட, நாமளே நேர போயி நம்மளோட நல்ல ஓட்ட நல்லவங்களுக்கு போட்டுட்டு வந்திடனும். காசு வாங்கிட்டு ஒட்டு போடுறதாலயும், கள்ள வோட்டு போடப்படுவதாலயும் நல்லவங்க தேர்தல்ல ஜெயிக்க முடியல’ இது நகர்ப்புற நடுத்தர மக்கள்.
மேலே உள்ள கருத்துக்கள் சரியா தவறா என்கிற ஆய்வு ஒருபக்கம் இருக்கட்டும், ஆனால் தேர்தல் நடப்பதாலும், வெற்றி பெற்ற பிரதிநிதிகளாலும் எவ்வித பலன்களும் இல்லை என்பது தான் எதார்த்தமாக இருக்கிறது. சரி இதுக்கு என்ன பன்னலாம்?
வெற்றிபெற்ற மக்கள் பிரதிநிதி மக்களின் கோரிக்கைகளை, அடிப்படை தேவைகளை (அனவைருக்கும் தரமான இலவச சமசீர் கல்வி, தரமான இலவச மருத்துவம், தரமான வீடு, சுத்தமான குடிநீர், இன்னும் பல.,) திட்டமிட்ட காலத்திற்குள் நிறைவேற்ற தவறினால் லஞ்ச லாவண்யம் ஊழலில் திளைத்தால் பிரதிநிதியின் பதவி பறிக்கப்பட்டு தக்க தண்டனை கொடுக்கப்பட வேண்டும். அதே போல அரசு ஊழியர்களும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும், அரசு ஊழியரும் தன் கடமையை செய்ய தவறினால் ஊழல் லஞ்ச லாவண்யத்தில் ஈடுபட்டால் இவரின் பதவி பறிக்கப்பட வேண்டும். மீண்டும் தேர்தல் நடத்தப்பட்டு புதிய பிரதிநிதியை, புதிய ஊழியரை தேர்ந்தெடுக்க வேண்டும்.
‘இதெல்லாம் இங்க ஆகுற கதையா, வேற எதாவது சோலி இருந்தா பாருங்க பாஸ், சும்மா டைம்பாஸ் பன்னிக்கிட்டு’ இப்படியொரு கமென்ட் 99% பேர்கிட்ட இருந்து வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது.
இப்படி நினைப்பவர்களுக்கு என்னுடைய தாழ்மையான வேண்டுகோள், முதலில் தேர்தல் பிரதிநிதித்துவத்தில், மக்களின் கோரிக்கை நிறைவேறாத பட்சத்தில் திரும்ப அழைத்தல்(பதவி பறிக்கப்படுத்தல்) என்ற ஒரு மாற்று இருக்கிறது என்பதை முதலில் ஏற்றுக்கொள்ளுங்கள், அது சாத்தியமா இல்லையா என்பதை பிறகு நடைமுறையில் சாத்தியப்படுத்துவோம்.
அறிவியல் வளர்ச்சி, குறிப்பாக தகவல் தொழில்நுட்பத்தின் பிரம்மாண்டமான வளர்ச்சி என எவ்வளவோ மாற்றங்கள் ஆனால் மனித வாழ்வில் சமூக மாற்ற சிந்தனை மட்டும் இன்னும் Static ஆகவே தான் இருக்கிறது.
ஆண்டான் அடிமை ஆட்சி முறை, மன்னர் ஆட்சி முறை, முதலாளித்துவ ஜனநாயக ஆட்சி முறை, அதன் பிறகு ஏதும் இல்லையா என்ன?
நாம் இதுவரை பல்வேறு சமுதாய அமைப்பு முறையை தாண்டி வந்துள்ளோம், அதனடிப்படையில் கடந்த மன்னர் ஆட்சி முறையில் சந்தை சிறியதாக இருந்தபடியால் கைவினை தொழில்கள் மூலமே தனி நபர் உற்பத்தி இருந்து வந்தது. அதன் பிறகு, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப சாதனங்களின் வளர்ச்சி சந்தை விரிவாக்கம் காரணமாக சமூக உற்பத்தி முறை ஏற்பட்டது, முதலாளித்துவம் வளர்ந்து வந்தது, முதலாளித்துவ வளர்ச்சிக்கு மன்னர் ஆட்சி முறை தடையாய் இருந்தது, மக்களின் துணை கொண்டு மன்னர் ஆட்சியை ஒழித்துவிட்டு முதலாளித்துவம் அரசியல் ஆதிக்கம் பெற்றது. மக்களை ஆசுவாசப்படுத்த பாராளுமன்ற பிரதிநிதித்துவமும், அடக்கி ஒடுக்க போலீஸ் ராணுவம் போன்ற அதிகார கருவிகளையும் கொண்டதே இப்போதிருக்கும் ஜனநாயகம் எனப்படுவது.
உற்பத்தியில் ஈடுபட்டு செல்வங்களை பெருக்குவது கோடிக்கணக்கான தொழிலாளர்களே, ஆனால் அந்த செல்வங்களை அனுபவிப்பதோ ஆயிரத்தில் இருக்கும் சில முதலாளிகள். கேட்டால் அவரு ‘மொதல்(முதலீடு) போட்டிருக்காருல்ல’ என்று எகத்தாளமா பேசுவது, நம் நாட்டின் தரகு முதலாளிகளான அம்மணிகள், அதானி போன்றோருக்கு நம்மை போன்ற நடுத்தர மற்றும் ஏழை மக்களின் வங்கி சேமிப்பை கொண்டே கடன் வழங்கப்பட்டதற்கு நிறைய ஆதாரங்கள் உள்ளன. அதனால் முதலீட்டாளர் என்ற தகுதியையும் அவர்கள் இழக்கிறார்கள்.
உற்பத்தியும் மக்களுடையது!
முதலீடும் மக்களின் சேமிப்பு பணத்திலிருந்து!
ஆனால் லாபத்தை கையகப்படுத்தும் முதலாளித்துவத்தை மட்டும் நாம் ஏன் சுமக்க வேண்டும்.
இப்போதிருக்கும் பாராளுமன்ற ஜனநாயகம் அமைப்பு என்பதே முதலாளித்துவத்திற்கு சேவை செய்யத்தான், அந்த அமைப்பு நடத்தும் தேர்தலால் மக்களுக்கு தீர்வு கிடைப்பது எப்படி சாத்தியம் ஆகும்.
மக்களுக்கான ஜனநாயகத்தை மக்களே நிர்ணயிக்கும் அமைப்பில் நடத்தப்படும் தேர்தலில் மட்டுமே நாம் தீர்வை பெற முடியும்.
நமது துறையில் வேலைபார்க்கும் போது எது அறிவியல் என்றும், எது நமது வேலையை திறம்படச் செய்ய உதவும் என்றும் நாம் நம்பி அமுல்படுத்துகிறோமோ அந்த அறிவியலை, சமூகத்தைப் பற்றிச் சிந்திக்கும் போது கைவிட்டுவிட்டு ஊடகங்களின் பிரச்சாரத்திற்கு பலியாகிறோம். எது அரசியல் என்பதை நாம் உணர வேண்டிய நேரமிது.
-R. ராஜதுரை.

Permanent link to this article: http://new-democrats.com/ta/parliament-elections-thinking-out-of-the-box/

Leave a Reply

Your email address will not be published.

%d bloggers like this:
Read more:
சிறுபான்மை இனத்தவருக்கு மருத்துவ சேவை மறுக்கும் அமெரிக்க முதலாளித்துவம்

இந்த முதலாளித்துவ முறைக்குள் நின்று கொண்டு இந்த ஏற்றத்தாழ்வுகளையும் குறைபாடுகளையும் அழித்துவிட இயலுமா? நியாயமான மற்றும் சிறந்த சுகாதார வசதிகளை அனைத்து அமெரிக்க மக்களுக்கும் வழங்க முடியுமா...

ஐ.டி ஊழியர் செய்தியும் கருத்தும் – ஏப்ரல் 27, 2017

சாராயக் கடையை எதிர்த்து போராடிய பெண்களின் மீது தாக்குதல் நடத்திய அதிகாரிகளுக்கு பாராட்டுவிழா கூட நடத்தும் அளவு கேடுகெட்ட அரசு நிர்வாகம்தான் இப்போது இந்தியாவில் நடந்து கொண்டிருக்கிறது.

Close