தமிழக விவசாயத்தையும் தமது வாழ்வாதாரத்தையும் பாதுகாப்பதற்காக 20 நாட்களுக்கும் மேலாக டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக சென்னை டைடல் பார்க்கில் பணிபுரியும் ஐ.டி ஊழியர்கள் பலர் பதிவுகள், மீம்ஸ்-கள் தயாரித்து வெளியிட்டனர். பு.ஜ.தொ.மு – ஐ.டி ஊழியர்கள் பிரிவு நடத்திய அறைக்கூட்டத்தில் கலந்து கொண்டனர். மேலும், தமது ஆதரவை வெளிப்படுத்தும் வகையில் ஏதாவது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தங்களது உணர்வை வெளிப்படுத்தினர்.
அதன்படி ஏப்ரல் 3-ம் தேதி அனைத்து விவசாயிகள் கூட்டமைப்பு அழைப்பு விடுத்திருந்த மாநிலம் தழுவிய வேலை நிறுத்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து மாலை 4 முதல் 5 மணி வரை அனைத்து ஐ.டி ஊழியர்களும் அலுவலகத்தை விட்டு வெளியே வந்து நிற்பது என்று முடிவெடுக்கப்பட்டது.
மாலை 4 மணி அளவில் டைடல் பார்க் ஐ.டி வளாகத்துக்கு வெளியில் கூடிய ஊழியர்கள் தயாரித்து வந்திருந்த பேனரை விரித்து பிடிக்கத் தொடங்கினர். அதை பார்த்துக் கொண்டிருந்த “காவல்துறை” வேகவேகமாக வந்து பேனரை பிடுங்கி சுருட்டி வைத்துக் கொண்டனர்.
மேலும் ஐ.டி ஊழியர்கள் சிலரிடம் ஐ.டிகார்ட் வாங்கி புகைப்படம் எடுத்திருக்கின்றனர். “இங்கு போராட்டம் நடத்தக் கூடாது” என்று சட்டம் பேசிய காவலரிடம், “இங்குதான் வேலை செய்கிறோம். இங்குதான் எங்களது கருத்தை பதிவு செய்ய முடியும். எங்களுக்கு சங்கம் உள்ளது, அதற்கான உரிமைகளின்படி ஆலை வாயில் கூட்டம் நடத்த யாரிடமும் அனுமதி தேவையில்லை” என்று அவருக்குத் தெரியாத சட்டத்தை விளக்கிக் கூறியதும் பம்மி கலந்து கொள்ள வரும் அனைவரையும் கலைத்து விடுவது, கூட்டம் கூடுவதை தடுப்பதில் கவனமாக இருந்திருக்கின்றனர்.
சற்று நேரத்தில் அங்கு வந்த பு.ஜ.தொ.மு – ஐ.டி ஊழியர்கள் பிரிவின் சட்ட ஆலோசகர் காவல்துறையிடம் பேசி, “என்னவாயிருந்தாலும் என்னைக் கேளுங்கள், என்னை தொடர்பு கொள்ளுங்கள்” என்று தனது முகவரி அட்டையை கொடுத்தார். அதை வாங்கிக் கொண்ட காவல்துறை அதிகாரி, “இல்ல சார், கேட்டிருந்தா நாங்களே அனுமதி கொடுத்திருப்போம், இவங்க எதுக்கு அனுமதியின்றி செய்றாங்க. அதனால்தான், வேற ஒண்ணுமில்லை” என்று கூறியிருக்கின்றனர. வழக்கறிஞரும் அமைதியான முறையில் கூடி ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கான சட்ட உரிமையை வலியுறுத்தினார்.
இருப்பினும், காவல்துறை வழங்கிய வாக்குறுதியை ஏற்று சட்டப்படி அனுமதி கேட்பது என்றும், போராட்டத்தை தொடர்ச்சியாக நடத்த வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஆனால், காவல்துறை தம் வசம் இருந்த தகவல்களை பயன்படுத்தி சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் எச்.ஆர்-க்கு தொலைபேசி போராட்டத்தில் கலந்து கொண்ட ஊழியர்கள் பற்றி புகார் தெரிவித்திருக்கின்றனர். இது முழுக்க முழுக்க சட்ட விரோதமானது.
“ஐ.டி ஊழியர்கள் சிறு குழந்தைகளும் இல்லை, நிறுவன எச்.ஆர் ஊழியர்களை கண்காணிக்கும் ஆயாம்மாவும் இல்லை. பணி, பணியிடம் தொடர்பில்லாத, அலுவலகத்துக்கு வெளியில் செய்யும் அரசியல் நடவடிக்கைகளில் நிறுவனம் தலையிட முடியாது” என்பதே ஐ.டி ஊழியர்களின் நிலைப்பாடு.
அதன்படி நம்மை நேரடியாக பாதிக்கும் பணி தொடர்பான பிரச்சனைகளை தீர்ப்பதற்கும் சரி, விவசாயிகள், மாணவர்கள், பிற உழைக்கும் மக்களை பாதிக்கும் பிரச்சனைகளுக்கு ஆதரவு தெரிவிப்பதற்கும் சரி, சங்கமாக அணி திரண்டு போராடுவதே பொருத்தமான வழிமுறை.
டைடல் பார்க்கில் பணிபுரியும் ஐ.டி ஊழியர்கள் அனுப்பிய செய்தி