சட்ட விரோத லேஆஃப் (பெஞ்ச்-க்கு அனுப்புவது)-க்கு சிறைத்தண்டனை

வெரிசான் நிறுவனம் திடீரென்று ஒரு நாள் ஆயிரக்கணக்கான ஊழியர்களை கழுத்தை பிடித்து வெளியில் தள்ளாத குறையாக வேலையை விட்டு நீக்குகிறது. இந்திய சட்டப்படி இது போன்ற ஆட்குறைப்பு செய்வதற்கு என்ன நடைமுறையை கடைப்பிடிக்க வேண்டும், அதை மீறும் முதலாளிக்கு என்ன தண்டனை (ஒரு மாத கால அளவிற்கு மிகாத சிறைத் தண்டனை அல்லது ரூ 1000-க்கு மிகாத அபராதம்) என்பது பற்றிய விபரங்களை இங்கு படிக்கலாம்.

“சட்ட விரோத ஆட்குறைப்பு செய்த வெரிசான் நிறுவனத்தை எப்படி தண்டிக்கப் போகிறோம்?”

ஐ.டி துறையில் வேலையை விட்டு அனுப்புவதற்கு நிகராக ஊழியர்கள் அச்சுறுத்தப்பட்டு மன உளைச்சலுக்கு உள்ளாக்கப்படும் இரண்டு விஷயங்கள் அப்ரைசல் ரேட்டிங், பெஞ்ச். பெஞ்ச்-ல் வைக்கப்படுவது என்பது தொழிற்தகராறு சட்டப்படி லே ஆஃப் என்று அழைக்கப்படும் நடைமுறைக்கு இணையானதாகு. அதற்கு பின்பற்றப்பட வேண்டிய நடைமுறை என்ன, இதற்கு மாறாக லே ஆஃப் (பெஞ்ச்-க்கு அனுப்புவது) செய்யும் நிறுவனத்துக்கு என்ன தண்டனை (ஒரு மாத கால அளவிற்கு மிகாத சிறைத் தண்டனை அல்லது ரூ 1000-க்கு மிகாத அபராதம்) என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.

வேலை வழங்குவதை நிறுத்தி வைத்தல் – Lay – Off

Lay – Off பற்றி பிரிவு – 2(kkk) – வழங்கும் விளக்கம்

நிலக்கரி, எரிசக்தி, மற்றும் கச்சாப்பொருட்கள் பற்றாக்குறை, உற்பத்தியான பொருட்கள் தேக்கம், ஆலையில் எந்திரங்கள் பழுது ஏற்படுவது அல்லது பிற இயற்கைப் பேரழிவு ஆகியனவற்றின் காரணமாக

ஆலையின் வருகைப் பதிவேட்டில் உள்ள, ஆட்குறைப்பு செய்யப்படாத தொழிலாளர்களுக்கு தொடர்ந்து வேலை கொடுப்பதில் தற்காலிகமாக தவறுகின்ற இயலாத அல்லது மறுக்கும் செயல் வேலை வழங்காமல் நிறுத்தி வைத்தல் அல்லது தொழிலினை நிறுத்தி வைத்தல் ஆகும்.

இதன்படி

வேலை செய்வதற்காக தொழிற்சாலைக்கு வந்துள்ள தொழிலாளர்களுக்கு வழமையான வேலை நேரத்திலிருந்து இரண்டு மணிநேரத்திற்குள் வேலை வழங்க வேண்டும் அவ்வாறு வழங்காமல் போனால் அது இப்பிரிவின் கீழ் Lay – Off ஆகும்.
ஷிப்டின் முதல் பகுதியில் வேலை வழங்காமல் ஷிப்டின் இரண்டாவது பகுதியில் வேலை வழங்கினால் அது பகுதி நேர Lay – Off ஆகும்.

ஷிப்டின் முதல் பகுதியில் வேலை வழங்கிய பின்னர் ஷிப்டின் இரண்டாவது பகுதியில் வேலை வழங்க இயலவில்லையெனில் முழுமையான சம்பளம் வழங்கப்பட வேண்டும்.

எனவே

Lay – Off தற்காலிகமான, தவிர்க்க இயலாத, நெருக்கடியான காரணங்களினாலேயே மேற்கொள்ளப்பட வேண்டும். இவை அல்லாத வேறு காரணங்களுக்காக உள்நோக்கத்துடன் செய்யப்படும் Lay – Off தொழிலாளர் விரோதப்போக்கு ஆகும். மேலும்

Lay–Off அறிவிக்கப்படும் போது தொழிலாளர்களுக்கு மீண்டும் வேலை கொடுக்க வேண்டும் என்ற நோக்கம் இருக்க வேண்டுமென்பது கட்டாயமான நிபந்தனை ஆகும்.

Lay–Off-ல் கீழ்க்கண்ட அம்சங்கள் கட்டாயமாக இருக்கவேண்டும்

 1. Lay – Off புறநிலைக் காரணங்களால் வேலை கொடுக்க இயலாத / மறுக்கும் நிலை ஏற்பட்டிருக்க வேண்டும்.
 2. தற்காலிகமானதாக மீண்டும் வேலை வழங்கும் நோக்கத்தினை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்.
 3. Lay – Offக்கான காரணங்கள் நிலக்கரி, மின்சாரம், கச்சாப்பொருட்கள் பற்றாக்குறை, எந்திரங்கள் பழுது / கோளாறு, இயற்கை பேரழிவு மற்றும் இவை தொடர்பான காரணங்களாக மட்டுமே இருக்க வேண்டும்.
 4. வேலை வழங்கப்படாத தொழிலாளர்கள், ஆலையின் வருகைப்பதிவேட்டில் உள்ள நபர்களாக, ஆட்குறைப்பு செய்யப்படாதவர்களாக இருக்க வேண்டும்.

Lay – Offக்கான இழப்பீடு – (இதுபற்றி பிரிவு 25C விளக்குகின்றது.)

 1. Lay – Off விடப்பட்ட காலத்தில் 45 நாட்கள் வரை இழப்பீடு கோரலாம். 45 நாட்களுக்கும் மேலாக Lay – Off விடப்பட்டால் இழப்பீடு கோர முடியாது. ஆனால் இதுதொடர்பாக நிர்வாகத்திற்கும் தொழிலாளர் / தொழிற்சங்கத்திற்கும் ஒப்பந்தம் இருந்தால் கோரலாம்.
 2. வார விடுமுறை நாட்கள் தவிர்த்து வேலை நாட்களுக்கு இழப்பீடு கொடுக்கப்பட வேண்டும். இழப்பீடாக அடிப்படைச்சம்பளம் மற்றும் அகவிலைப்படியின் 50% ஈடான தொகை வழங்கப்பட வேண்டும்.
 3. பதிலித் தொழிலாளருக்கோ / தினக்கூலி தொழிலாளருக்கோ Lay – Off இழப்பீடு வழங்கப்படத் தேவையில்லை.
 4. சராசரியாக 50 தொழிலாளருக்கு குறைவாகக் கொண்ட தொழிற்சாலைகள், பருவகால தொழிற்சாலைகள், தொடர்ச்சியாக செயல்படாமல் அவ்வப்போது செயல்படும் தொழிற்சாலைகள் ஆகியனவற்றில் Lay – Off இழப்பீடு கோர முடியாது.

மேலும் இப்பிரிவின்படி

 1. Lay – Off மேல் நீட்டிக்கப்படும் சூழ்நிலையில் பிரிவு 25Fன் படி ஆட்குறைப்பு செய்ய முதலாளிக்கு உரிமை உண்டு.
 2. Lay–Off இழப்பீடு கோரும் நபர் தொழிலாளி என்ற வரையறையில் உள்ளவராக இருக்க வேண்டும்.
 3. முந்தைய வேலையாண்டில் 12 மாதங்களில் 240 நாட்கள் வேலை செய்திருக்க வேண்டும். சுரங்கத் தொழில் என்றால் 190 நாட்கள் வேலை செய்திருக்க வேண்டும். இல்லையெனில் Lay–Off இழப்பீடு கோர முடியாது.

கீழ்க்கண்ட சூழ்நிலைகளில் Lay–Off இழப்பீடு கோர முடியாது – (இது பற்றி பிரிவு 25E விளக்குகின்றது).

 1. Lay – Off ல் பாதிக்கப்பட்ட தொழிலாளைக்கு மாற்றுப்பணி வழங்கப்பட்டு அதனை அவர் ஏற்க மறுத்தால் Lay–Off இழப்பீடு கோர முடியாது.
  (இவ்வாறு வழங்கப்படும் மாற்றுப்பணி
  (i) அந்த தொழிலாளி ஏற்கனவே செய்துவந்த வேலையாகவோ அல்லது பெரும்பாலும் அதனைப் போன்றதாகவோ இருத்தல் வேண்டும்.
  (ii) கொடுக்கப்படும் மாற்றுப்பணி அந்த தொழிலாளியால் எவ்வித சிரமமின்றி செய்யக்கூடியதாகவும், அவர் ஒத்துக் கொள்ளக்கூடியதாகவும் இருக்க வேண்டும்.
  (iii) கொடுக்கப்படும் மாற்றுப்பணி அந்தத் தொழிலாளியின் தகுதிநிலைக்கு குறைவானதாகவோ, தனித்திறமையோ/ முன்னனுபவம் தேவைப்படுவதாகவோ இருக்கக் கூடாது.
  (iv) மேற்படி மாற்றுப்பணிக்கு வழங்கப்படும் சம்பளம் அவர் ஏற்கனவே பெற்றுவந்த சம்பளத்திற்கு குறைவானதாக இருக்கக் கூடாது.
  (v) மாற்றுபணி வழங்குமிடம் வேறு தொழிற்சாலையாக இருக்குமானால் அது முதலாளிக்கு சொந்தமான, அதே நகரம் / கிராமத்திலோ அல்லது 5மைல் (8கி.மீ} சுற்றுவட்டாரத்திலோ இருக்க வேண்டும்.
  மேற்கண்டவைகள் இல்லாவிடில் முதலாளி கொடுக்கும் மாற்றுப்பணியினை தொழிலாளி மறுக்கலாம். அத்துடன் Lay – Off க்கான இழப்பீடு கோரலாம்.)
 2. Lay – Offல் இருந்தாலும் தொழிலாளர்கள் தினந்தோறும் ஒருமுறை ஆலைக்கு வரவேண்டும். இல்லையெனில் Lay–Off இழப்பீடு கோர முடியாது.
  அதே தொழிற்சாலையில் வேறொரு பிரிவினைச் சார்ந்த தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்தின் காரணமாகவோ அல்லது அவர்கள் வேண்டுமென்றே மெதுவாக உற்பத்தியில் ஈடுபடுவதன் காரணமாகவோ Lay – Off விடப்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால் தொழிலாளர்களுக்கு இழப்பீடு வழங்கப்பட வேண்டியதில்லை.

Lay–Off விடப்படும் போது முதலாளி பின்பற்ற வேண்டியவை – (இது பற்றி பிரிவு 25D விளக்குகிறது)

சட்ட விரோத ஆட்குறைப்புக்கு எதிராக பு.ஜ.தொ.மு – ஐ.டி ஊழியர்கள் பிரிவு மே 2017-ல் நடத்திய ஆர்ப்பாட்டம்

Lay–Offல் உள்ள ஆலையின் தொழிலாளர்களின் வருகைப்பதிவேடு முறையாக பராமரிக்கப்பட வேண்டும், அன்றாடம் வருகை தரும் தொழிலாளர்களின் பெயர்கள் குறிக்கப்பட வேண்டும். அவர்களுக்கு உரிய இழப்பீடு கொடுக்க வேண்டும்.

மேலும்

Lay–Off பற்றி தொழிலாளர்களுக்கு உடனடியாக தெரிவிக்கப்பட வேண்டும். தொழிற்சாலை எப்போது இயல்பு நிலைக்குத் திரும்பும் என்பது பற்றியும், தொழிலாளர்கள் எப்போது முதல் வேலை திரும்ப வேண்டும் என்பதும் தெரிவிக்கப்பட வேண்டும். குறிப்பிட்டு தேதி குறிப்பிட இயலாத நிலையில் தொழிலாளர்கள் மீண்டும் பணியில் சேர 3 வார காலம் அவகாசம் வழங்க வேண்டும்.

Lay–Off விடப்படுவதை தடை செய்தல் – (இது பற்றி பிரிவு 25M விளக்குகிறது)

 1. ஆலையில் 100 அல்லது அதற்கு மேற்பட்ட தொழிலாளர்களும் இருப்பின் உரிய அரசிடம் முன்னனுமதி பெற்ற பின்னரே Lay – Off விடப்பட வேண்டும். (மின்சக்தி பற்றாக்குறை, இயற்கைப் பேரழிவு, திடீரென ஏற்படும் தீவிபத்து, வெடிவிபத்து போன்ற காரணங்களினால் உரிய அரசின் முன்னனுமதி இன்றி Lay – Off விடப்படலாம்).
 2. மேற்கூறிய காரணங்களினால் உரிய அரசின் முன்னனுமதியின்றி Lay – Off விடப்படலாம் விடப்பட்டாலும் அதனைத் தொடர்ந்து நீட்டிக்க வேண்டுமெனில் உரிய அரசின் முன்னனுமதி பெற வேண்டும்.
 3. Lay – Off விடுவதற்கு அனுமதி கோரி அதற்கான காரணங்களைத் தெரிவித்து உரிய அதிகாரிக்கு குறிப்பிட்ட வகையில் விண்ணப்பிக்க வேண்டும். மேற்படி விண்ணப்பத்தின் நகலினை தொழிலாளர்களுக்கு/ தொழிற்சங்கத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும்.
 4. மேற்படி அனுமதி கோரிய விண்ணப்பத்தின் மீது உரிய அதிகாரி விசாரணை நடத்த வேண்டும். மேற்படி விசாரணை முதலாளி, தொழிலாளி ஆகிய இரு தரப்பினரும் தங்களின் வாதங்களை முவைக்க போதிய வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். சரியான காரணங்கள் இருந்தால் மட்டும் அனுமதி வழங்கப்பட வேண்டும் இல்லையெனில் மறுக்கப்பட வேண்டும். மேற்கூறிய உத்தரவு எழுத்துப்பூர்வமாக இருதரப்பினருக்கும் அனுப்பிவைக்கப்பட வேண்டும்.
 5. உரிய அரசிடமிருந்து விண்ணப்பம் அளிக்கப்பட்டு 60 நாட்களுக்கு மேல் எவ்வித தகவலும் வராதபட்சத்தில் உரிய அரசு Lay – Off செய்ய அனுமதி அளித்ததாக கொள்ளப்படலாம்.
 6. Lay – Off அனுமதி வழங்குவது தொடர்பான உரிய அதிகாரியின் உத்தரவு இறுதியானது மற்றும் இருதரப்பினரையும் கட்டுப்படுத்தக் கூடியது. மேற்படி உத்தரவு ஓராண்டு காலம் வரை அமலில் இருக்கும்.
 7. Lay – Off தொடர்பாக உத்தரவிட்ட அதிகாரி தானாகவோ, தொழிலாளர் / முதலாளி வேண்டுகோளின் பேரிலோ, தான் ஏற்கனவே வழங்கிய உத்தரவினை மறுஆய்வு செய்யவோ அல்லது தொழிலாளர் தீர்ப்பாயத்திற்கு அனுப்பவோ அதிகாரம் பெற்றுள்ளார்.
 8. தொழிலாளர் தீர்ப்பாயத்திற்கு விசாரணைக்கு அனுப்பப்பட்டால் 30 நாட்களுக்குள் தீர்க்கப்பட வேண்டும்.
 9. உரிய அரசினால் அனுமதி மறுக்கப்பட்டு அதனை மீறி செயல்படுத்தப்படும் அல்லது உரிய அரசிடம் விண்ணப்பம் அனுப்பாமல் செயல்படுத்தப்படும் Lay – Off சட்டவிரோதமானது. மேலும் தொழிலாளர்கள் அனைவரும் வழக்கம்போல் அனைத்துப் பயன்களையும் வழங்கப்பெற வேண்டியவர்கள்.
 10. அசாதாரணமான சூழ்நிலைகள் காரணமாக உரிய அரசு தொழிற்சாலைகளுக்கு விலக்களிக்கலாம். (முதலாளியின் திடீர் மரணம், பெரிய அளவிலான விபத்து போன்றவை)

சட்டவிரோதமான Lay–Offக்கு தண்டனை – (இது பற்றி பிரிவு 25Q விளக்குகிறது)

பிரிவு 25Mக்கு முரணான வகையில் Lay–Off விடப்பட்டால் சம்பத்தப்பட்ட முதலாளிக்கு ஒருமாத கால அளவிற்கு மிகாத சிறை தண்டனையோ, ரூ.1000க்கு மிகாத தண்டமோ அல்லது இரண்டுமோ வழங்கப்படலாம்.

===

சட்ட விரோத ஆட்குறைப்பு செய்த வெரிசான் நிறுவனத்தை எப்படி தண்டிக்கப் போகிறோம்?

பெஞ்ச் என்ற பெயரில் சட்ட விரோதமாக ஊழியர்களை லேஆஃப் செய்திருக்கும் அனைத்து ஐ.டி நிறுவனங்களையும் எப்படி வழிக்கு கொண்டு வரப் போகிறோம்?

பு.ஜ.தொ.மு – ஐ.டி ஊழியர்கள் பிரிவில் இணைந்து நமது உரிமைகளை வென்றெடுப்போம்.

Permanent link to this article: http://new-democrats.com/ta/penalty-for-illegal-layoff-benching/

Leave a Reply

Your email address will not be published.

Optimization WordPress Plugins & Solutions by W3 EDGE
%d bloggers like this:
Read more:
திருடுவதே வெற்றியின் இரகசியம்!

மொத்தத்தில் நம் நாட்டை ராட்சச மலைப்பாம்பு போல் சுற்றி வளைத்து நெருக்கிக் கொண்டிருக்கும் இந்தக் குடும்பம். இதெல்லாம் எப்படி சாத்தியமானது?

Jamsetji Tata
தொடக்கம் முதலே முதலாளித்துவம் மனிதகுல விரோதியே – அமிதவ் கோஷ்

"பிரபலமான யேல் பல்கலைக் கழகமும், இன்றைய சிங்கப்பூரும் , ஹாங்காங்கும் போதைப் பொருள் வர்த்தகத்தைத் தவிர்த்து செழித்து வளர்ந்திருக்கவே முடியாது."

Close