பகுத்தறிவு, சுயமரியாதை, சமூகநீதி – பெரியாரின் வாரிசு தொழிலாளி வர்க்கமே

சுயமரியாதை, பகுத்தறிவு, சமூக நீதி என்ற முன்னேற்றப் பாதையில் தமிழ்நாட்டை செலுத்திய பகலவன் தந்தை பெரியார். அவரது 140-வது பிறந்த நாளை ஒட்டி தொழிலாளி வர்க்கத்துக்கும், குறிப்பாக ஐ.டி ஊழியர்களுக்கும் பெரியாரின் சிந்தனைகள் எவ்வாறு பொருந்துகின்றன என்பதையும், பெரியாரின் பணிகளை தொடர்ந்து முழுமை பெற நாம் என்ன செய்ய வேண்டும் என்பதையும் சுருக்கமாக பார்க்கலாம்.

பெரியாருக்கு மரியாதை செலுத்தும் பு.ஜ.தொ.மு -வின் திருவள்ளூர் ( மேற்கு) மாவட்டக்குழு

மனிதர்களுக்கிடையே ஏற்றத் தாழ்வு, உழைப்பை இழிவாகக் கருதுவது, உழைக்கும் மக்களுக்கு கல்வி மறுப்பு, பெண்கள் மீதான அடக்குமுறைகள் ஆகியவற்றுக்கு சாவு மணி அடித்து ஜனநாயகத்தை நிலைநாட்டியது மேற்கு ஐரோப்பாவில் தோன்றிய முதலாளித்துவ உற்பத்தி முறை. இந்தியாவுக்கு ஆங்கிலய காலனிய ஆட்சியாளர்களால் முதலாளித்துவம் புகுத்தப்பட்ட போதும், சாதிய பாகுபாடுகள், ஒடுக்கு முறைகள், தேசிய இனங்கள் மீதான ஒடுக்குமுறைகள், பழமையான மூடப் பழக்கங்கள் மீது நம்பிக்கை ஆகியவை தொடர்ந்தன (இன்றும் தொடர்கின்றன). 20ம் நூற்றாண்டில், இவற்றை எதிர்த்து சமரசமற்ற போர் தொடுத்தவர் தந்தை பெரியார்.

கூனிக் குறுகி கைகட்டி வாய் பொத்தி நிற்பது, துண்டை இடுப்பில் கட்டிக் கொள்வது, உழைப்புக்குக் கூலியாக பழைய பொருட்களை யாசகமாக கொடுப்பது என்று சாதிய ரீதியில் உழைக்கும் மக்கள் அவமானப்பட்டு வந்ததை எதிர்த்து சுயமரியாதையை கற்பித்தார் பெரியார். எந்த விதமான அடக்குமுறையையும் எதிர்த்து நிற்பது, உரிமைகளுக்காக போராடுவது என்ற தமிழ்நாட்டின் போராட்ட உணர்வுக்கு இது அடித்தளமிட்டது.

ஜாதகம், சோதிடம், சகுனங்கள் என்று நூற்றுக்கணக்கான வழிகளில் அன்றாட வாழ்வை சிக்கலாக்கி, அறிவியலுக்கு எதிரான முறைகளில் மக்களை அடிமைப்படுத்தி வைத்திருந்த மூடப் பழக்கங்களை உடைத்தெறியும் வகையில் பகுத்தறிவு பிரச்சாரத்தை முன்னெடுத்தார், பெரியார். அது தமிழ்நாட்டு இளைஞர்களின் சிந்தனையில் தெளிவையும், அணுகுமுறையில் முன்னேற்ற பார்வையையும் கொண்டு வந்தது.

இன்றைய சமூகம் நேற்றைய வரலாற்றின் விளைவு. எனவே, வரலாற்று ரீதியாக இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நிவாரணமாக ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட சாதியினருக்கு சிறப்பு உரிமைகள் வழங்கப்பட வேண்டும் என்ற கோட்பாட்டை தமிழ்நாடு ஏற்றுக் கொண்டதற்கான அடிநாதம் தந்தை பெரியாரின் அரசியலில் உள்ளது. குறிப்பாக, பெண்கள் சுயமரியாதையுடனும், பகுத்தறிவுடனும் சிந்தித்து, தமது சமூக உரிமைகளை நிலைநாட்டிக் கொள்ள வேண்டும் என்று கற்பித்த பெருமை பெரியாரை சேரும். இந்தித் திணிப்பை எதிர்த்து இந்தியாவுக்கே முன்னோடியாக தமிழகத்தை நிறுத்தியவர் பெரியார்.

பெரியார் தனது 94-வது வயதில் 1973-ம் ஆண்டு மறைந்தார். அவரது நூற்றாண்டு விழாவை 1979-ம் ஆண்டு கொண்டாடினோம். ஆனால், பெரியார் எந்த பார்ப்பனிய சாதிய ஆதிக்கத்தை எதிர்த்து வேரறுக்க போராடினாரோ அது மீண்டும் காலூன்ற முயற்சிக்கிறது. சோதிட, வாஸ்து குப்பைகளும், சமூக ஏற்றத் தாழ்வுகளும், ஆணவக் கொலை போன்ற பெண்கள் மீதான சாதிய அடக்குமுறைகளும் கடந்த 40 ஆண்டுகளில் மீண்டும் துளிர் விட்டு வலுவாக வளர்ந்து வருகின்றன. இவற்றை ஊக்குவித்து வளர்த்து தமிழகத்தில் காலூன்ற முயற்சிக்கும் இந்துத்துவ பா.ஜ.கவின் வளர்ச்சி தமிழகத்தை பீகார், உ.பி நிலைமைக்கு பின்நோக்கி இழுத்துச் சென்று விடும்.

இந்த முயற்சிகளை முறியடித்து தமிழகத்தையும், ஒட்டு மொத்த இந்தியாவையும் முன்னேற்ற, ஜனநாயக, பகுத்தறிவு பாதையில் வழிநடத்துவது தொழிலாளி வர்க்கத்தாலும், பாட்டாளி வர்க்க சித்தாந்தத்தாலும் மட்டுமே முடியும். பெரியாரின் வழி வந்த கட்சிகள் முதலாளித்துவத்துடன் சமரசம் செய்து கொண்டு, பெரியாரின் கொள்கைகளை பேச்சளவில் மட்டும் நிறுத்திக் கொள்கின்றனர். பெரியாரின் சமூகப் பணி கருத்தியல் தளத்தில் கலாச்சார துறையில் மாற்றங்களை கொண்டு வந்தது என்றால், இந்த சனாதன குப்பைகளை வேரோடு பிடுங்கி எறிந்து சமூக நீதி, பகுத்தறிவு, சுயமரியாதையை நிரந்தரமாக நிலை நாட்டுவது தொழிலாளி வர்க்கத்தின் புரட்சிகர நடவடிக்கை மூலமாக மட்டுமே சாத்தியமாகும்.

Permanent link to this article: http://new-democrats.com/ta/periyar-legacy-and-working-class/

Leave a Reply

Your email address will not be published.

%d bloggers like this:
Read more:
சங்கக் கூட்டம் மார்ச் 2018 – போஸ்டர்

தயாரிப்பு : மணியன்

விவசாயிகளுக்காக ஐ.டி ஊழியர்கள் – நேரலை

இன்று செவ்வாய்க் கிழமை (ஏப்ரல் 18, 2017) மாலை 4 மணி முதல் 7 மணி வரை பல்லாவரம் அம்பேத்கர் சிலை அருகில் டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு...

Close