“பேட்ட” – தொழிலாளர் விரோத ரஜினியின் வெட்கம் கெட்ட வசூல் “வேட்ட”

பாலி, காலா போன்ற படங்களில் ஒடுக்கப்பட்டோரின் தலைவனாய், குரலாய் நடித்தும் தனது சுய உருவம் வெளிப்பட்டதன் விளைவால் வியாபார அளவில் பெரிய வெற்றியை பெறமுடியாமல் போனதன் காரணமாக தனது மிகப் பழைய வெற்றி உத்தியான பழி வாங்கும் கதையை எடுத்து தொழில் முறையில் வெற்றியும் பெற்றுள்ளார்.

பத்திரிகையாளர் சந்திப்பில் பல கேள்விகளை மௌனமாக “நான் இன்னும் முழு நேர அரசியல்வாதி அல்ல” என தவிர்த்து செல்லும் ரஜினிகாந்த தனது பேட்ட திரைப்படத்தின் தொடக்க காட்சியிலிருந்து “உலக அரசியல்” புத்தகத்தை படிப்பதும், ஆளும் கட்சியை கிண்டலடிக்கும் காட்சிகளும், “புதிதாக வருபவர்களை அடிமைப்படுத்துவதா” என பொங்கி எழுவதும், “போர்க்கு பழக வேண்டும்” என்று அரசியல் தொடர்பான வசனங்களை ஒவ்வோரு 15 நிமிடத்திற்க்கும் பேசி தனது சோர்ந்து போன ரசிகர்களை உசுப்பேற்றி வியாபாரத்தில் வெற்றி கண்டிருக்கிறார், இதுவும் ஒரு வகையான சுரண்டல் முதலாளித்துவமே..

ஏன் படத்தை மட்டும் விமர்சிக்காமல் ரஜினியை விமர்சிக்கிறோம்!

ஒரு தொழில் முறை நடிகர் எனில் அவரது படைப்புகளை மட்டும் விமர்சிக்கலாம், ஆனால் 40 வருடங்களுக்கு திரைத்துறையில் தன் நடிப்பால் கோடிக்கணக்கில் தமிழக ரசிகர்களை ஈர்த்து “தலைவர்” என ரசிகர்களால் அழைக்கப்படுபவர் இத்தனை வருடமும் தன்னுடைய ரசிகர்களை நல்வழிபடுத்தினாரா?

தமிழகத்தில் இரு பெரிய தலைவர்கள் மறைந்த தருணத்தை தனக்கான அரசியல் வாய்ப்பாக கருதி வருடம் ஒரு படம் கொடுத்தவர் இந்த வருடத்தில் 3 படம் கொடுத்து ரசிகர்களை பெருக்க முயற்சிப்பது அரசியல் தந்திரம் என தெளிவாக தெரிகிறது. அதே நேரம் மக்கள் பிரச்சினைகளில் எதிர் மறை கருத்துகளை தெரிவிப்பதும், அமைதி காப்பதும் அவர் மக்களுக்கான அரசியலை முன்னேடுக்காமல் தனது அரசியல் (இறுதி) ஆசையை நிறைவேற்றி கொள்ளவே முன்னேடுக்கிறார் என்பது பெரும்பாலனோர் அறிந்ததே …

பேட்டயை புகழ்ந்து முற்போக்கு படம், புரட்சிகரமான படம், இளைய தலைமுறைக்கான காவியம் என்று சொல்வதா? பிற்போக்கான படம் என்று சொல்வதா?

பேட்டையில் நல்ல விஷயங்கள் என்று பின்வருவனவற்றை சொல்லலாம் .

  1. மணல் கொள்ளையை தடுப்பதற்காக நடக்கும் போராட்டம்.
  2. குடும்பத்தில் நடக்கும் வன்முறையை போராட்டத்தில் ராஜதந்திரமாக உறவாடிக் கெடுப்பது என்பதற்கு வாலி கதையை உதாரணமாக சொல்வது.
  3. பெண்ணுரிமையை காப்பாற்றுவது.
  4. மணமுறிவுக்கு பின் காதல் வாழ்க்கை இருக்கலாம் .

படத்தில் விஷத்தை சர்க்கரை கலந்து கொடுத்தால் இனிப்பாக இருக்கிறது என்பது போல பல கருத்துக்கள் உள்ளன. அதெல்லாம் என்ன என்று பட்டியல் இட்டால்

  1. சொத்துரிமைக்காக பங்காளிச் சண்டை நடக்கும் பொழுது, கொலை செய்யலாம். கொலை செய்து விட்டு 3 மாதத்தில் வெளியே செய்யலாம்.
  2. பெண்ணுக்கு சரிசமமாக சொத்துக்களை எழுதி வைப்பேன் என்று சொல்லும் தந்தையை கொல்லும் மகன்களை சட்டம் ஒன்றும் செய்ய முடியவில்லை. கட்டப்பஞ்சாயத்து கொலை தான் தீர்வு. கூடப் பிறந்த தங்கைகளுக்கு சொத்துரிமை மறுக்கும் தந்தையை ஆதரிக்கும் மகன், தன் தங்கைக்கு சொத்துரிமை கொடுக்கும் போது தந்தையை கொலை செய்வது.
  3. ஒரு பெண் தனக்கு பிடித்த ஆடவனை திருமணம் செய்வது, ஆணவக் கொலையை எதிர்ப்பது போல காட்சிப்படுத்தும் விதம் சட்டத்தால், காவல்துறையால் ஒன்றும் பயனில்லை என்பதை தெளிவாக காட்டுகிறது.
  4. ஒரு கொலையை பொது இடத்தில் செய்யும்போது, குடும்பமாக சேர்ந்து கொலை செய்வதை ஆதரிக்கும்போது, கொலையை செய்துவிட்டு சாட்சியை விலைக்கு வாங்கி, சாட்சியை மிரட்டி வழக்கை ஒன்றுமில்லாமல் செய்து குற்றவாளி ஹீரோ வெளியே வருவது என சிறப்பான நியாயம். ஒரு ஹீரோ மாஸ் ஹீரோ எதைவேண்டுமானாலும் செய்யலாம்.. நல்ல சமூக செய்தி மற்றும் சமூக நீதி ..

ஆனால் சாதியத்தை, பிற்போக்கை எதிர்ப்பது போல நடித்து விட்டேன் என்று ரஜினி சொல்லி கொள்ளலாம்.

பங்காளித் தகராறு, சொத்துத் தகராறு, சொத்துக்காக கொலைகள், பழிவாங்குவதற்காக கொலைகள், அரசியலுக்காக கொலைகள், மணலுக்காக கொலைகள், மணல் அள்ளும் contract முறைகள் , அது சம்பந்தப்பட்ட பிரச்னைகள், கொலைகள், பெண்ணுக்கு சொத்துரிமை கொடுத்ததற்காக தந்தையை கொலை செய்வது, பழிவாங்குவதற்காக தங்கை அண்ணனை கொலை செய்யச் சொல்வது, ரஜினி ஸ்டைலாக கொலை செய்வது, பழிவாங்குவதற்காக தங்கையை குடும்பத்துடன் கொலை செய்வது, தங்கையை ஆணவக்கொலை செய்ய வருபவனை காலை உடைப்பது, காலை உடைத்தவன் பழிவாங்கும் செயலுக்காக காலை உடைத்தவனின் குடும்பத்தை வேர் அறுப்பது, 20 வருடம் கழித்து அந்த பழிவாங்கும் செயலுக்காக மற்றவனின் குடும்பத்தை வேரறுப்பது, கடைசியில் எல்லோரும் சொந்தங்கள். ரத்த சம்பந்த சொந்தங்களின் பிரச்னைகள். சூழ்ச்சி செய்து பங்காளிகளுக்குள் சண்டையை மூட்டிவிட்டு பொய் சொல்லி குடும்பத்தை வேரறுப்பது என்று பல கொலைகள், வன்முறைகள். விஷத்தை சர்க்கரை வைத்து கலர்ஃபுல்லாக திரைக்கதை அமைத்து சிறப்பாக கொடுத்திருக்கிறார்கள்.

படத்தின் ஆரம்பத்தில் ஒரு ஹாஸ்டல் வார்டனாக ரஜினி வந்து காண்ட்ராக்டில் நடக்கும் தில்லுமுல்லுகளை மேலோட்டமாக காண்பித்துவிட்டு போகிறார்கள். காண்ட்ராக்டர்கள் என்ன அரசியல் பின்புலத்துடன் இருக்கிறார்கள்? அரசியல்வாதி சொன்னால் ரவுடிகளின் களமிறங்குகிறார்கள்? காவல்துறை எதற்கும் கண்டுகொள்ளாமல் இருப்பது ஏன் என்பன போன்ற கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் லாஜிக் சொதப்பல்கள் படத்தில்.

ரஜினி ஹாஸ்டல் வார்டனாக சிபாரிசில் சேர்ந்து மிரட்டி காரியம் சாதிப்பது, ஒரு போராட்டத்தில் பழிவாங்கும் படலத்தில் தனிமனிதனாக காய் நகர்த்தி செயல்படுத்தி குடும்ப வன்முறை வஞ்சத்தை 20 வருடம் கழித்து பழி தீர்த்துக்கொள்வது என்று சிறப்பான திருப்பங்களுடன் திரைக்கதை நிகழ்வுகள் என்பதை ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும்.. திரைக்கதை தெளிவாக இருக்கிறது. விறுவிறுப்பாக இருக்கிறது.. எல்லா பழிவாங்கும் செயலும் நியாயமாகவே படுகிறது. குறிப்பாக ஹீரோ செய்யும் பழிவாங்கல் செயல்கள் எல்லாமும் சரி. பல வன்முறை கொலைகள் நிறைந்த குடும்பத்துடன் பார்க்க வேண்டிய குடும்ப வன்முறை நிறைந்த குடும்ப கொலைகள் படம்.

இந்தப் படத்தால் சமுதாயத்திற்கு என்ன நன்மை?

சமுதாயத்தில் அற்பப் பிரச்சினைக்காக கோர்ட் படியேறி பத்து பதினைந்து வருடம் நியாயம் கேட்டு அலையும் இடத்தில் சொத்து தகராறு கொலைகள் நடப்பதை நியாயப்படுத்தும் செயலாக இருக்கிறது. ஏற்கனவே இந்திய நீதித் துறையில் 3.3 கோடி வழக்குகள் நிலுவையில் இருக்கிறது. கொலை செய்து விட்டு எப்படி தப்பிப்பது என்று ரூட் போட்டுக் கொடுத்திருக்கிறார்கள்.

போர் என்று சொல்லிவிட்டு குடும்ப வன்முறையை, ஒவ்வொரு தரப்பு நியாயத்தையும் நியாயப்படுத்தி கொலையை நியாயப்படுத்தி சிறப்பான திரைக்கதை ஏற்படுத்தி படத்தை சிறப்பாக முடித்து இருக்கிறார்கள்.

அரசியல்வாதிகளுக்கு பிரச்சினை, குடும்பத்தில் பிரச்சனை, பணம் புழங்கும் இடத்தில் பிரச்சனை, மாணவர்களுக்கும் பிரச்சனை. காவல்துறை என்பது பேட்ட திரைப்படத்தில் இல்லாத ஒன்று தான். காவல்துறை லஞ்சம் வாங்குகிறது என்பதை வெட்கம் இல்லாமல் சென்சார் போர்டு ஒப்புதல் அளித்து உள்ளது . தமிழ்நாட்டில் மட்டும் இல்லை உத்தர பிரதேசத்தில் காட்டப்படும் இடங்களிலும் காவல்துறையை இல்லாதது போல காட்டுகின்றனர். காதலர்களுக்கு கல்யாணம் செய்து வைப்பது சமூகக் கடமை என்று காட்டப்படுவது பா.ஜ.க/சிவசேனா கட்சி அரசியலை ஞாபகப்படுத்துகிறது.

இந்தப் படத்தால் படத்தை வாங்கியவர்கள், படத்தை விற்றவர்கள், படத்திற்கு ஏரியா உரிமை வாங்கியவர்கள், ஆடியோ ரைட்ஸ், television ரைட்ஸ், விளம்பர உரிமை வாங்கியவர்கள், படத்தில் வேலை செய்த technician நற்பெயர், பணியாற்றிய அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் சம்பளம், தியேட்டரில் கொடுத்த கான்டீன், பார்க்கிங் காண்ட்ராக்ட் முறை வரை லாபம்தான் .

ஆனால் சமுதாயத்திற்கு ஆதிக்க சாதி வெறியைக் கொடுத்தது நியாயமா?

பார்க்கும் மக்களுக்கு லாபமா? பாட்ஷா சிறப்பான படம் பார்த்ததால் என்ன சமுதாயம் மாற்றம் வந்தது. பாட்ஷா படம் வெளிவந்தது அதனால் சமூகத்திற்கு என்ன நன்மை. அருணாச்சலம், படையப்பா, தளபதி போன்ற படங்களால் சமூகத்திற்கு என்ன நன்மை? “THUMSUP ” விளம்பரத்திற்கு மகேஷ்பாபு, அக்ஷய்குமார் நடிப்பதை பார்க்கிறோம் . “THUMSUP ” சிறந்த உற்சாக பானம் அல்லவா? “THUMSUP ” போல பெப்சி, கோக் போன்ற கம்பெனிகள் விளம்பரத்திற்காக தலைசிறந்த கிரிக்கெட் வீரர்களையும் அன்று டாப்பில் இருக்கும் நடிகர்களை வைத்து மார்க்கெட்டிங் செய்வது காலங்காலமாக நடக்கும் மார்க்கெட்டிங் வித்தை. இப்போது ரஜினி என்ற நடிகரை வைத்து தமிழ்நாட்டில் அரசியல் கால்பதிப்பது பிஜேபி செய்யும் மார்க்கெட்டிங்.

தொழிற்சங்கங்கள் எப்படி எப்போதும் ரஜினிக்கு எதிரான கருத்து வெளியிட்டுள்ளன, வெளிவருகின்றன, ரஜினியை எதிர்த்து கருத்துக்கள் வெளியிடுகின்றன என யோசிக்கலாம்.

ரஜினி பிஜேபி ஆதரவு கொள்கைகளை சரி என்று ஜால்ரா தட்டும் போது பிஜேபி உழைப்பாளர் நலனுக்கு எதிராக கொண்டு வந்த FTE காண்ட்ராக்ட் Amendment, NEEM காண்ட்ராக்ட் முறை, எல்லா அரசு சேவையையும் தனியாருக்கு தாரை வார்ப்பது போன்ற கொள்கை செயல்கள், பிஜேபிக்கும் ரஜினிக்கும் எதிராகவே தொழிலாளிகள் இருப்பார்கள் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

ஸ்டெர்லைட் போராட்டத்தின் போது ரஜினி, “எல்லோரும் போராட்டம் என்றால் நாடு சுடுகாடாகிவிடும்” என்று சொல்கிறார். அது நியாயமான கருத்து இல்லை என்று பலர் சொன்னாலும் ரஜினி எது செய்தாலும் சரி என்று சில BJP ஜால்ராக்கள் இருக்கத்தான் செய்வார்கள். கார்ப்பரேட்டுக்கு எதிராக நியாயம் கேட்க மக்கள் அநியாயமாக கொல்லப்படும்போது இது தவறு என்று சொல்லாமல் நியாயத்துக்கு எதிரான குரல்களை நசுக்கும் பிஜேபி கட்சியை ஆதரித்து பேசுவது, பாராட்டி பேசுவதாக ரஜினியின் போக்கு இருக்கிறது.

ஐ.டி துறையில் கட்டாய வேலை நீக்கம், கட்டாய ராஜினாமா ஆகிய பிரச்சினையின் போது ரஜினி வாய் திறக்கவில்லை. ஏன் சொந்த நடிகர் சங்க பிரச்சனைக்கும் வாய் திறக்காத நபர் . உழைப்பாளர் வர்க்கத்திற்கு எதிராக பேசிய ரஜினி படத்தை எதிர்ப்பது என்ற முடிவை பல தொழிற்சங்கங்கள் எடுத்துவிட்டன.

#metoo பிரச்சனையின் போது ரஜினி அமைதி காத்தது, விசாகா கமிட்டி இல்லாத சினிமா துறையை பற்றி களமாடியது, விபச்சார ரைடில் புவனேஸ்வரி உளறிய போது சினிமாவை பத்திரிகைகள் கண்டித்த போது அதை எதிர்த்து கண்டன கூட்டங்கள் போடுவது “ஒரு வேளை சோத்துக்காக விபச்சாரத்தில் ஈடுபட்டார்கள்” என்று ரஜினியின் இரட்டைத் தன்மை பல இடங்களில் வெளிப்பட்டு உள்ளது.

அரசியல் களத்தில் அரசியல் கட்சிகள் ரசிகர்களின் ரசனையை வியாபாரமாக்கி மார்க்கெட்டிங் செய்வது தான் அரசியல் வித்தை. பார்ப்பன பின்புலம் கொண்ட தலைவர்கள் ரஜினி, கமல் போன்ற அரசியல் தலைவர்கள் அரசியலில் உள்ளே வந்தால் தொழிற்சங்கங்களின் நிலை என்ன? என்பதை பார்த்து தான் ரஜினி படத்தை கொள்கைரீதியாக எதிர்ப்பது என்பது நிலைப்பாட்டை தொழிற்சங்கங்கள் எடுத்து இருக்கிறது.

கண்டிப்பாக மற்ற படங்களை விட சிறந்த திரைக்கதை அமைப்பு இந்த படத்தை வெற்றிப்படமாக தான் மாற்றியுள்ளது. ஆனால் சமூகத்திற்கு ரஜினியால், மறைமுகமாக ரஜினி ஆதரிக்கும் பிஜேபி கட்சியால் அனைவருக்கும் பிரச்சனை என்பதால் உழைப்பாளர்களுக்கு எதிராக இருக்கும் BJP சித்தாந்தத்தால் இந்த படத்தை தொலைக்காட்சியில் ஒளிபரப்பும் போது பார்க்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

கமல், ரஜினி போன்ற அரசியல் தெளிவு இல்லாத நபர்கள் சினிமாவில் ரசிக உள்ளங்கள் மகிழ்வதற்காக பெரும்பான்மை உழைப்பாளர் சமூகம் தங்களின் வாழ்வாதாரத்தை 2 -3 மணி நேர படத்திற்காக விலை கொடுக்க வேண்டுமா?

படத்தை படமாக தான் நாங்கள் பார்ப்போம் என்று சொல்கிறோம். அரசியலை அரசியலாக பாருங்கள் என்று சொல்லும் கார்ப்பரேட் அரசியல் நாம் வேலை செய்யும் ஐ.டி கம்பெனிகள் வரை வந்து “கட்டாய ராஜினாமா” “கட்டாய வேலை நீக்கம்” என்று அடியாள் வைத்து மிரட்டி ராஜினாமா செய்ய வைக்கிறது. அதை எதிர்த்து குரல் கொடுக்காத அரசியல் ரஜினியின் அரசியல்.

பணம், புகழ் உள்ள ரஜினி மக்களுக்கு எதிராக இருக்கும் திரைப்படங்களையும், மக்களுக்கு எதிராக இருக்கும் கட்சிகளை ஏன் ஆதரிக்கிறார்?

படத்தை படமாக பாருங்கள் என்று சொல்லிவிட்டு எம்ஜிஆர், ஜெயலலிதா, எஸ்.எஸ்.ஆர், விஜயகாந்த், ராமராஜன், சரத்குமார், விஷால், கமல், ரஜினி, டி ராஜேந்தர் என படத்தில் நடிப்பவர்களை உண்மையான ஹீரோக்கள் என்று நம்பி அரசியலில் ஏற்றிவிட்டு தமிழ்நாட்டை நடிகர்களை வைத்து நடத்தும் நாடக கொட்டகையாக மாற்றும் அரசியல் களமாக இருக்கும் அவல நிலை தமிழ்நாட்டில் Politics உள்ளது.

படத்தை நான் இலக்கியமாக பார்க்கிறேன், படத்தை பொழுதுபோக்கிற்காக நான் பார்க்கிறேன் என்று சொல்லும் நபர்களுக்கு, தமிழ்நாட்டில் கலைத்துறையை சேர்ந்தவர்கள் தான் அரசியலில் கடந்த 50 வருடமாக கோலோச்சிக் கொண்டிருக்கிறார்கள்.

எம்ஜிஆர், சிவாஜி தொடங்கி ரஜினி, கமல் வரை சினிமா மோகம்தான் அரசியலை ஆட்கொண்டு இருக்கின்றது. ஜெயலலிதா போன்ற அரசியல்வாதிகள் அரசியல் செய்வதாக சொல்லிக்கொண்டு தொழிற்சங்கங்கள் மற்றும் தொழிலாளர்கள் நசுக்கப்படுவதை தமிழ்நாட்டில் பார்த்துக் கொண்டேதான் இருக்கிறோம்.

ஐ.டி துறையில் பிரச்னை என்று NDLF IT யூனியன் தொழிலாளர் உரிமை குறித்து கேட்ட போது 18 மாதங்கள் ஜெயலலிதா ஆட்சியில் கிடப்பில் போடப்பட்டது நமது மனு. காத்திருந்த காலத்தில் 8200 IT துறை தமிழக தற்கொலைகளை தமிழநாடு கடந்த 6 வருடத்தில் கண்டு இருக்கிறது.

சென்னை பெரு வெள்ளத்தின் போது ஸ்டிக்கர் ஒட்டிய ஜெயலலிதா ஜனநாயகம். ஐ.டி துறை தொழில்சங்கம் தேவைப்படாத துறை என சினிமா மூலம் ஆட்சி அமைத்த அரசியல் தலைகள் சொன்னது. சினிமா மோகத்தில் எம்.ஜி.ஆரை தேர்தெடுத்த மக்கள் அதே மோகத்தில் தேர்தெடுத்த ஜனநாயத்தின் அடுத்த படி ஜெயலலிதா. அ.தி.மு.கவின் தமிழ் நாடு ஐ.டி துறை மினிஸ்டர் மணிகண்டன் அவர்கள் கொக்கி குமார் அடிபட்டால் நேரில் சென்று பார்க்கிறார். தமிழ்நாடு ஐ.டி கம்பெனியில் ஐ.டி ஊழியர் பிரச்னை என்றால் கண்டுகொள்ளாமல் இருக்கிறார் .

சினிமா சார்ந்த பிரபலங்களை அரசியல் தலைவர்களாக மேடை ஏற்றிவிட்டு உழைப்பாளர்களை நசுக்கும் சட்டங்களை எதிர்க்காமல் அரசியலில் நடிக்கும் நடிகர்களை மேடை ஏற்றிவிட்டு, படத்தை படமாக பாருங்கள் என்று சொல்வதற்கு யாருக்கும் தகுதி இல்லை என்று சொல்லலாம்.

இன்று ரஜினி, கமல் இருவரும் இனிவரும் அரசியல் மேடைகளில் அலங்கரிக்க போகின்றனர்..

எந்த வகையில் பார்த்தாலும் அவர்களது அரசியல் உழைப்பாளர்கள் ஆதரவாக இல்லாத, கொள்கை இல்லாத அரசியல். அது மேடையில் ஏறினால், நாளைக்கு தொழிற்சங்க போராட்டத்தில் எனக்கென்ன என்று ஒதுங்கிக் கொள்ளும் ரஜினியின் கொள்கை இல்லாத அரசியல். அத்தகைய நடிகர்களின் அரசியல் மேடை படங்களை தொழிற்சங்கங்கள் புறக்கணிப்பதில் நியாயம் இல்லையா…?

– காசிராஜன்

Permanent link to this article: http://new-democrats.com/ta/petta-politics-review/

Leave a Reply

Your email address will not be published.

%d bloggers like this:
Read more:
டி.சி.எஸ் லாபம் : சம்பள உயர்வு இல்லை, புதிய ஊழியர்களுக்கு கணினி கூட இல்லை!

அமருவதற்கு நாற்காலி, கணினி கிடைப்பதற்கு சிலமணி நேரம் முன்பே வேலைக்கு வரவேண்டும் என்பார்கள். அவ்வாறு வந்தாலும் நடுவில் வெளியே சென்று வரும்போது அதை இன்னொருவர் எடுத்துக்கொள்வார். அவருடன்...

ஓலா, உபேர்: பீலாவும் பில்டப்பும்!

2012–13-க்குப் பிறகு தகவல் தொழிநுட்ப வளர்ச்சி புதிய புதிய பயன்பாடுகளை ஸ்மார்ட் போன் களுக்குள் புகுத்தியது; பாஸ்ட் ட்ராக் போன்ற கால்டாக்ஸி நிறுவனங்கள் பின்னுக்கு தள்ளப்பட்டன அல்லது...

Close