ஷ. அமனஷ்வீலி அவர்கள் எழுதிய குழந்தைகள் வாழ்க எனும் நூலிலிருந்து குறும்புக்காரக் குழந்தைகள் பற்றி…
குழந்தைகளின் குறும்பு நமது அமைதியைக் குலைக்கிறது, குழந்தை வளர்ப்பில் பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது, ஆசிரியரியல் வழிகளால் இவற்றைப் பல நேரங்களில் தீர்க்க முடியாது. நாம் தடைகளை, கட்டுப்பாடுகளை நாடுகின்றோம்.
குறும்புக்காரக் குழந்தைகள் உற்சாகமானவர்கள்; சோம்பலற்றவர்கள், ஒளிவுமறைவற்றவர்கள்; இவர்களிடமிருந்து தப்பிக்க முடியாது. பின்னவர்கள் உற்சாகமாக ஓடியாட, தற்காப்பில் ஈடுபட குறும்புக்காரக் குழந்தைகள் உதவுகின்றனர்.
குறும்புக்காரக் குழந்தைகள் அறிவுக் கூர்மை உடையவர்கள், நுண்ணறிவு வாய்த்தவர்கள், எந்த ஒரு எதிர்பாரா சந்தர்ப்பத்திலும் இவர்கள் தம் திறமைகளைப் பயன்படுத்தி, அதன் மூலம் நிலவரத்தையும் உறவுகளையும் மறுமதிப்பீடு செய்யும் அவசியத்திற்குப் பெரியவர்களை ஆளாக்குவார்கள்.
குறும்புக்காரக் குழந்தைகளிடம் சுய வளர்ச்சி, சுய இயக்க உணர்வுகள் அதிகமாக இருக்கும்; தம் தனிப்பட்ட திறமைகளின் வளர்ச்சி பற்றிய ஆசிரியர்களின் தவறான கணிப்புகளை இவர்கள் தம்முள்ளேயே ஈடு கட்டிக் கொள்கின்றனர்.
குறும்புக்காரக் குழந்தைகள் நகைச்சுவையுணர்வு மிக்கவர்கள். இவர்கள் நன்கு கலந்து பழக்கூடியவர்கள்.இவர்களது செயல்முனைப்பான கற்பனை மூலம் சுற்றியுள்ளதை சுயமாக அறியவும் மாற்றியமைக்கவும் விழைகின்றனர்.
குழந்தைகளுடைய குறும்புகள் – வாழ்க்கையின் மீது இவர்களுக்குள்ள நேயத்தின் வெளிப்பாடு , மகிழ்ச்சியின் பாலுள்ள நாட்டம், இவர்களுடைய மூளைத் திறமைகள் மற்றும் உடல் பலத்தின் இணைப்பு.
குறும்புக்காரக் குழந்தைகள் உண்மையானவர்கள், இவர்கள் ஆசிரியர்களின் சிந்தனை , ஆசிரியரியலின் ஆராய்ச்சிப் பொருள் !
கருத்து :
இப்படி ஊக்குவித்து வார்த்தெடுக்கப்பட வேண்டிய குழந்தைகள், இன்றைய வணிகமயமான கல்வி முறைக்குத் தமது பிள்ளைப் பருவத்தை பலிகொடுத்துவிடுகின்றனர். குழந்தைகளுக்கு உண்மையாக கல்வி அளிக்கும் சமூக மயமான கல்வியை நோக்கிய புரட்சிகர சிந்தனையும் செயல்பாடுகளுமே குழந்தைகளை மீட்டெடுக்கும் !
– பிரியா