தகவல் தொழில்நுட்பத் தொழிலாளர்களாகிய நம்மில் பலர் வெளிநாடுகளுக்கு சென்று வந்திருக்கிறோம். அந்த நாடுகளில் பார்த்த வானுயர்ந்த கட்டிடங்களும், ஷாப்பிங் மால்களும், வளைந்து நெளிந்து செல்லும் மேம்பாலங்களும், அவற்றில் ஓடும் பன்னாட்டு நிறுவனங்களின் பிராண்டட் கார்களும், சுரங்க இரயில்களும் இன்றைக்கு சென்னை போன்ற பெரும் நகரங்களில் இருப்பதை, அங்கே சென்றுவந்தவர்கள் ஒப்பிட்டுப் பேசுவதைக் கேட்டிருக்கிறோம்.
உலகத் தரம் வாய்ந்த இந்த கட்டிடங்களை நமக்காக எழுப்பியவர்கள் யார்? பொருளாதாரத்தில் முன்னேறிய நாடுகளின் வசதிகளை மலிவு விலையில் நமக்காக ஏற்படுத்திக் கொடுத்தது யாருடைய உழைப்பு? நாம் பயன்படுத்தும் சாலைகளை, நமது வீடுகளை, நாம் வேலை பார்க்கும் அலுவலகத்தை, ஏன் நாம் வசிக்கும் இந்த நகரத்தையே நமக்காக செதுக்கிக் கொடுத்தவர்கள் யார்? தில்லி, மும்பை, சென்னை என இந்தியாவின் புகழ் பெற்ற ஒவ்வொரு நகரத்தின் நவீனத்திலும் புலம் பெயர் தொழிலாளர்களின் வேர்வையும் இரத்தமும் கலந்துள்ளது.
அம்பத்தூர், ஆவடி, படப்பை, ஸ்ரீபெரும்புதூர், திருவள்ளூர், திருப்பூர், நாமக்கல் என உற்பத்தித் துறை தொழிற்பேட்டைகளின் முதுகெலும்பாய் உழைப்பது புலம்பெயர் தொழிலாளர்களே. அப்படிப்பட்ட தொழிலாளர்கள் இன்றைக்குத் தங்களது சொந்த கிராமங்களை நோக்கி நடந்தே சென்று கொண்டிருக்கிறார்கள்.
புலம்பெயர் தொழிலாளர்களின் இன்றைய அவல நிலைக்கு அரசின் அலட்சியம் மட்டுமல்ல அரசியல் கட்சிகளும், சமூகமும் இதற்கு முக்கிய காரணம். இன்று புலம்பெயர் தொழிலாளர்களின் நலன் குறித்து சமூக ஊடகங்களில் கண்ணீர் வடிப்பவர்களில் பெரும்பாலானவர்கள் கடந்த இரு மாதங்களாக இந்த அவலத்தைக் கண்டும் காணாமல் இருந்தவர்கள்தான்.
நாம் அனைவரும் பிரச்சனையின் ஒரு பகுதியை மட்டும்தான் பார்க்கிறோம் அல்லது அவ்வாறு பார்ப்பதற்குப் பழக்கப்படுத்தப்பட்டுள்ளோம். புலம்பெயர் தொழிலாளர்கள் இன்றைக்கு ஆயிரக்கணக்கான மைல்கள் குடும்பத்துடன் நடந்து செல்வதும், சாலை விபத்துக்களிலும், ரயில்விபத்திலும் கொல்லப்பட்டிருப்பதும் ஊடக விவாதங்களில் பேசு பொருளாகியிருப்பதால் பலரும் அவர்களுக்காகப் பரிதாபப் படுகிறார்கள். அதேசமயம் உண்மையான அக்கறையுடன் பலரும் தங்கள் பகுதியிலிருக்கும் தொழிலாளர்களுக்காக உதவுகிறார்கள்.
ஆனால் நாம் ஒரு முக்கியமான கேள்வியை கேட்க மறக்கிறோம். “புலம் பெயர் தொழிலாளர்கள் பேரிடர் காலத்தில் தாங்கள் பணிபுரியும் இடத்திலிருந்து தங்களது சொந்த கிராமங்களை நோக்கி ஏன் போகிறார்கள்? அவர்களுக்கு அப்படிப்பட்டதொரு நிர்பந்தத்தை ஏற்படுத்தியது யார்?”
தங்களது கிராமத்தைவிட்டுப் பல ஆயிரம் மைல்கள் கடந்து வந்து, மொழி தெரியாத ஊரில், அடிப்படை வசதிகள் ஏதும் இல்லாத தகரக் கொட்டகையில் தங்கி, அடிமாட்டுக் கூலிக்கு உழைத்து அவர்கள் சேர்த்துக் கொடுத்த செல்வங்களை எல்லாம் அள்ளிக்கொண்ட பெரு நிறுவனங்கள் கொரோனாவைக் காரணம் காட்டி நாளை முதல் வேலைக்கு வராதே என ஒரே வார்த்தையில் கூறிவிட்டன.
அவர்களை எதிர்த்துப் பேச வழியில்லை. தங்களுக்கென பரிந்து பேச நாதியில்லை. காக்க வேண்டிய அரசோ, நீ பிழைத்தால் எனக்கென்ன, செத்தால் எனக்கென்னவென்று பாராமுகமாகத் திரும்பிக் கொண்டது. வந்த ஊரில் கடன் வாங்கக் கூட வசதியில்லை. சொந்த ஊருக்குத் திரும்பிச் சென்றால் சோத்துக்காவது வழிசெய்யலாம் என்று நடக்க ஆரம்பித்துவிட்டனர்.
புலம் பெயர் தொழிலாளர்ககளை நிறுவனங்கள் வேலையைவிட்டுத் துரத்தியடித்ததுதான் அவர்களின் இன்றைய அவல நிலைக்கான ஆரம்பப் புள்ளி. இந்த ஆரம்பப் புள்ளியை மாற்றாதவரை அவர்களின் நிலமையில் சிறிதும் மாற்றத்தைக் கொண்டுவர முடியாது.
ஆனால் கடந்த இரண்டு வாரங்களில் பாஜக அரசு மத்தியிலும் தான் ஆளும் மாநிலங்களிலும் எடுத்துவரும் தொழிலாளர் விரோத நடவடிக்கைகள், நாட்டின் ஒட்டுமொத்த தொழிலாளர்களையும் இந்த நிலைக்குத் தள்ளிவிட வேண்டும் என்பதில் அவர்கள் உறுதியாக இருப்பதைக் காட்டுகிறது. இன்று புலம்பெயர் தொழிலாளர்களின் நிலைகண்டு நாம் பாராமுகமாக இருந்தால் நாளை நமக்கும் இதே நிலைதான் என்பதில் ஐய்யமில்லை.
- வாசுகி
புஜதொமு ஐடி ஊழியர் பிரிவு