நிலைமை மோசமாத்தான் இருக்கு, ஆனா கம்யூனிசம்தான் தீர்வா?

மாதத்தில் ஒருமுறை நண்பர்களோடு சேர்ந்து மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் “புதிய ஜனநாயகம்” புத்தக விற்பனைக்கு செல்வது வழக்கம்.

அவ்வாறு ஒருநாள் மாலை 5.30 மணிக்கு சென்னையில் ஒரு பகுதியில் விற்பனைக்கு சென்றோம்.
அங்குள்ள கடைக்காரர்களிடம் புத்தகத்தை காட்டி புத்தகத்தின் முக்கியத்துவத்தை எடுத்துக் கூறி வாங்கி படிக்கும்படி கேட்டுக்கொள்வோம். எண்ணெய் விற்கும் கடையில் உள்ளவரிடம் புத்தகத்தை பற்றி பேசினோம்.

“எல்லா செய்தித்தாளும், தொலைகாட்சிகளும் ஏதாவது ஒரு ஓட்டுக் கட்சி சார்ந்துதான் இயங்குகிறது, ஆதலால் அவர்கள் மக்கள் பிரச்சனைகளை உண்மையாக வெளிப்படுத்துவதில்லை அவ்வாறு கொஞ்ச நெஞ்சம் வெளிப்படுத்தினாலும் தேர்தலின் போது ஓட்டுக்காகதான் செய்கிறார்களே தவிர மக்கள் மீதுள்ள பற்றில் அல்ல.

சமீபத்தில் மழையால் பாதிக்கப்பட்ட கடலூர் மற்றும் சென்னையில் பலபகுதியில் கழிவுநீர் சாலை முழுவதும் நிரம்பி மக்கள் வசிக்கும் வீட்டிற்குள் செல்லும் அளவுக்கு பாதுகாப்பற்ற வாழக்கையை மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் ஆனால் அதிகாரிகளும் ஆட்சியாளர்களும் சேர்ந்து இரட்டை இலை யாருக்கு என்றும் ஆர்.கே. நகர் தேர்தலில் யார் யாருடன் கூட்டணி என்று பதவிக்காக சண்டை போடுவதை ஊடகங்களும் உடனடிச் செய்தியாக வெளியிட்டு மக்கள் உண்மையான பிரச்சனையை சிந்திக்க விடாமல் செய்கிறார்கள்.

எனவே மக்களாகிய நாம் நம்முடைய பிரச்சனைகளுக்கு யாரெல்லாம் காரணம், அந்த பிரச்சனைக்கு யாரோடு சேர்ந்து இயங்குவது என்பது பற்றிய தகவல் இந்த புத்தகத்தில் இருக்கிறது வாங்கி படியுங்கள்”

என்று சொல்லி முடித்ததும் 15 ரூ கொடுத்து புத்தகம் வாங்கிகொண்டார். படித்துவிட்டு அடுத்தமுறை நான் வரும்போது கருத்து கூறுங்கள் என்று சொல்லி அங்கிருந்து ஆட்டோ நின்றிருந்த பகுதிக்கு சென்றோம்.

அவரிடம் புத்தகத்தை பற்றிய அறிமுகம் எடுத்துச் சொன்னேன். புத்தகத்தின் அட்டையை பார்த்துவிட்டு “கம்யூனிஸ்ட் புத்தகமா” என்று கேட்டுவிட்டு, “கம்யூனிஸ்ட் வெளிநாட்டு காரங்க ஆச்சே எனக்கு வேணாம்” என்றார்.

“நாம் பயன்படுத்தும் பெரும்பான்மையான பொருட்கள் வெளிநாட்டினர் கண்டுபிடித்ததுதான். உதாரணத்துக்கு இப்போது உங்கள் கையில் உள்ள கைபேசியும் வெளிநாட்டினர் கண்டுபிடித்ததுதான் அதேபோல நீங்க ஓட்டும் ஆட்டோவும் வெளிநாட்டினர் கண்டுபிடித்ததுதான் அதற்காக நாம் பயன்படுத்தாமல் நிறுத்தி விட்டோமா? இல்லையே.”

“எனவே நமது நாட்டினரோ அல்லது வெளிநாட்டினரோ கண்டுபிடித்தது அல்லது சொன்ன கருத்துக்கள் சரியாக இருக்கும் பட்சத்தில் ஏற்றுக் கொள்வதிலும் பயன்படுத்துவதிலும் எந்தவித தவறுமில்லை, அந்தவிதத்தில் கம்யூனிஸ்ட்களை பார்க்கவும்” என்று  பதிலை கூறினோம்.

உடனே எதோ புத்துணர்ச்சி வந்ததுபோல என்னை பார்த்தார். பிறகு “புத்தகத்தை படிக்கிறேன்” என்று வாங்கிக் கொண்டார். “படித்துவிட்டு உங்களுடைய கருத்துக்களை அடுத்தமுறை வரும்போது சொல்லலாம்” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து அடுத்த கடைக்கு சென்றோம்.

அடுத்து பார்மசி கடையில் பெண் ஒருவர் இருந்தார். அவரிடம் புத்தகம் பற்றி பேசியதும் படிக்கிறேன் என்று வாங்கிக்கொண்டார்.

“மறக்காமல் புத்தகத்தை படியுங்கள் படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்” என்றோம்.

“படிப்பதற்காகத்தான் இந்த புத்தகத்தை வாங்கியுள்ளேன். ஆதலால் படித்துவிட்டு கண்டிப்பாக என்னுடைய கருத்து சொல்றேன்” என்று உற்சாகமாக சொன்னார்.

ஒரு ஐ.டி ஊழியரிடம் அறிமுகப்படுத்திக் கொண்டு புத்தகத்தை பற்றி சொல்லும் போது அட்டையில் போடப்பட்டிருந்த “கம்யூனிசம் வெல்லும்” என்பதைப் பார்த்து “இப்போ எல்லாமே நெருக்கடியில சிக்கி, முட்டுக்கட்டையில நிற்கிறது உண்மைதான், ஆனால் கம்யூனிசம்தான் இதற்குத் தீர்வா, கேரளாவில கம்யூனிஸ்ட் ஆட்சி நடக்குது, ஆனா அங்க கம்பெனி எதுவும் திறப்பதில்லை. எல்லோரும் வெளியூருக்குத்தான் வேலை தேடி போகிறார்கள்” என்றார்.

“கேரளாவில் நடப்பது கம்யூனிஸ்ட் ஆட்சியா என்பதை எளிமையாக பேசலாம். கம்யூனிசத்துக்கும், முதலாளித்துவத்துக்கும் அடிப்படையான வித்தியாசம் கம்பெனி யாருக்கு சொந்தம், யார் கட்டுப்படுத்துகிறார்கள் என்பதுதான்.

சமீபத்தில் வெரிசான் லே ஆஃப் நடந்த போது, 10 ஆண்டுகள் வரை கம்பெனியில் வேலை செய்த ஊழியர்களை ஒரு நாள் காலையில் சீட்டு கிழித்து, செக்யூரிட்டி காவலோடு வெளி கேட்டில் கொண்டு விட்டு விட்டார்கள். அதற்கு அடிப்படை அந்த கட்டிடம், நாற்காலி-மேசை, கணினிகள் எல்லாம் எனக்கு சொந்தம், ஊழியர் எத்தனை வருடம் வேலை செய்தாலும் அவருக்கு அதில் எந்த உரிமையும் இல்லை என்ற முதலாளித்துவ சொத்துடைமைதான்.

இந்த கட்டிடமும், நாற்காலி மேசைகளும், கணினிகளும் தொழிலாளி வர்க்கத்தின் உழைப்பில் கடந்த காலத்தில் உருவாக்கப்பட்டவை. அதை வெரிசான் போன்ற முதலாளிகள் கைப்பற்றி தம்முடைய கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வது இந்த முதலாளித்துவ அமைப்பில் சாத்தியமாகிறது.

கட்டிடமும், கணினிகளும் ஊழியர்கள் இல்லை என்றால் சும்மா இருக்க வேண்டியதுதான். ஊழியர்கள் தமது உழைப்பை செலுத்தும் போதுதான் அவற்றுக்கு உயிர் வருகிறது. அவற்றிலிருந்து மதிப்பு உருவாகிறது. ஆனால், அந்த ஊழியர்களுக்கு நிறுவனத்தின் மீது எந்த உரிமையும் இல்லை, ஒரு நாள் காலையில் வேலையை விட்டு நீக்கப்படுகிறார்கள்.

இதை ஒழித்துக் கட்டுவதுதான் கம்யூனிசத்தின் அடிப்படை. உழைப்பதற்கான சாதனங்கள் (கடந்த கால உழைப்பில் உருவானவை) உழைக்கும் மக்களின் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டு சமூக ரீதியில் கூட்டாக முடிவெடுத்து நிர்வகிக்கப்படும்.

இந்த வித்தியாசத்தை இன்னும் விரிவாக பின்னர் பேசலாம்”

என்று விளக்கியதும் பத்திரிகையை வாங்கிக் கொண்டு தொடர்பு விபரங்களையும் கொடுத்து விட்டுச் சென்றார்.

– ஐ.டி ஊழியர்கள் பிரிவு சங்க உறுப்பினர்கள்

Permanent link to this article: http://new-democrats.com/ta/political-discussion-with-members-of-public/

Leave a Reply

Your email address will not be published.

%d bloggers like this:
Read more:
“ப்ளூவேல்” ஏன் கொல்கிறது?

இதுபோன்ற பல விளையாட்டுகளின் வரிசையில் இந்த "ப்ளூவேல்" விளையாட்டு வருகிறது. சுற்றியிருக்கும் சமூகத்திலிருந்து துண்டித்துக் கொள்ளும் கட்டாயம், விளையாட்டின் படிநிலைகளை தாண்டி போகும் துடிப்பு, அது கொடுக்கும்...

சி.டி.எஸ்-க்கு பிரச்சனையா? உண்மையாகவா?

தான் லஞ்சம் கொடுத்தது தொடர்பான ஆதாரங்களை வெற்றிகரமாக மறைத்து உயர்மட்ட மேலாளர்களுக்கோ, முதலீட்டாளர்களுக்கோ எந்த சேதமும் இன்றி சி.டி.எஸ் தப்பித்து விடலாம். சி.டி.எஸ் ஊழியர்களும், பொதுமக்களும் மட்டும்தான்...

Close