ரஜினி என்னும் அரசியல்வாதி – ஒரு ரஜினி ரசிகரின் பார்வையில்

ன்றைய தமிழக அரசியல் சூழ்நிலை பற்றி சிறு வயதில் ரஜினி ரசிகராக இருந்த, ஐ.டி துறையில் நீண்ட அனுபவம் கொண்ட ஒருவரின் கருத்துக்களை இந்தப் பதிவில் படித்துப் பாருங்கள்.

“நம் நாட்டில் தேர்தல் என்பது யார் சம்பாதிக்க வேண்டும் என்று மக்கள் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்ந்தெடுக்கும் முறை” என்று சொல்வது ஒரு புறம் இருக்க, இப்போது அந்தத் தேர்தல் முறை கூட பா.ஜ.கவின் தில்லாலங்கடி கணக்குகள், மத்தியில் அதிகாரத்தில் இருப்பதை பயன்படுத்தி அ.தி.மு.க, தி.மு.க போன்ற கட்சிகளையும் தனிநபர்களையும் வளைத்துப் போடுவது, பண பலத்தை இறக்கி அதிக இடங்களில் வெற்றி பெற முயற்சிப்பது என்று இன்னும் சீரழிந்திருப்பதை இந்த பதிவு அம்பலப்படுத்துகிறது.

2014-ல் காங்கிரஸ் அரசின் ஊழல்களையும், பொருளாதார வீழ்ச்சியையும் முன் வைத்து வளர்ச்சி, வேலை வாய்ப்பு என்ற பிரச்சாரம் செய்து ஆட்சிக்கு வந்த மோடி ஆட்சி அனைத்துத் துறைகளிலும் பல்லிளித்து விட்ட நிலையில் வரப்போகும் தேர்தலில் 5 ஆண்டுகள் ஆண்ட சைத்தானா, அல்லது அதற்கு முன்பு 10 ஆண்டுகள் ஆண்ட வேதாளமா என்று தேர்ந்தெடுக்கும் உரிமையைத் தவிர மக்கள் வேறு என்னதான் எதிர்பார்க்க முடியும்?

இனி பதிவை பார்க்கலாம்.

ரஜினி என்னும் நடிகர்

ஜினிகாந்த் தமிழ்த்திரை உலகின் சூப்பர் ஸ்டார். அவருடைய முதல் படமான அபூர்வ ராகங்களில் இருந்து இப்பொழுது படப்பிடிப்பில் இருக்கும் 2.0 மற்றும் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடத்திக் கொண்டிருக்கும் படம் வரை ஏறக்குறைய 160 படங்களில் அவர் நடித்துள்ளார். தமிழ் திரையுலகில் அவர் ஆற்றியுள்ள சாதனைகள் ஏராளம். எனக்கு நினைவு தெரிந்த நாள் முதலாக நான் ரஜினி படங்களின் மிகப்பெரிய ரசிகன். என்னுடைய சிறு வயதில் என்னை வெறுப்பேற்ற ரஜினி படங்களை யாராவது குறை கூறினால் எங்கள் வீட்டில் மிகப்பெரிய சண்டை வரும்.

ரஜினிகாந்த்

ரஜினி கடந்த 25 ஆண்டுகளாக அரசியலில் இருக்கிறார் என்றாலும் சமீப நாட்களில் தனிக்கட்சி தொடங்கி தேர்தலில் போட்டியிட முனைப்பு காட்டி வருகிறார்.

நடிகர் திலகம் சிவாஜி போன்றவர்களும் தங்களது கடைசி பத்து ஆண்டுகளில் மிகப்பெரிய வெற்றிப் படங்களை கொடுக்க முடியவில்லை. தனது வசனத்தால் திரை உலகை புரட்டிப் போட்ட கலைஞரின் சமீபத்திய படங்கள் தோல்விப் படங்கள் ஆக மாறின. ஆனால், ரஜினியின் படங்கள் இன்றும் இன்றைய இளம் நடிகர்களின் படத்திற்கு இணையாக வசூல் சாதனை புரிகின்றன. சிவாஜி போன்றவர்களைப் போன்ற மிகப்பெரிய நடிப்புத் திறன் இல்லை என்றாலும் அவருடைய உழைப்பும் தொழில் மீது அவர் கொண்ட பற்றும் அவருடைய படங்களை தொடர்ந்து வெற்றிப் படங்கள் ஆக்குகின்றன.

ரஜினி கடந்த 25 ஆண்டுகளாக அரசியலில் இருக்கிறார் என்றாலும் சமீப நாட்களில் தனிக்கட்சி தொடங்கி தேர்தலில் போட்டியிட முனைப்பு காட்டி வருகிறார். அவருடைய அரசியல் வருகை தமிழகத்தில் என்ன மாற்றத்தை ஏற்படுத்தும் என்று அவரது ரசிகனின் பார்வையில் சிந்தித்து இந்தக் கட்டுரையை எழுதுகிறேன்.

கடந்த 96-ம் ஆண்டு ஜெயலலிதா தலைமையிலான ஆட்சி முடியும் பொழுது காங்கிரஸ் மீண்டும் அ.தி.மு.கவுடன் கூட்டணி வைத்தது. அப்பொழுது தி.மு.க அணிக்காக ரஜினி முதன் முதலில் அரசியல் குரல் கொடுத்தார். “தமிழகத்தில் மீண்டும் அ.தி.மு.க ஆட்சி வந்தால் தமிழகத்தை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது” என்ற தனது 30 நிமிட உரையில் தனது கருத்தை முன் வைத்தார். அவருடைய குரல் அந்த நேரத்தில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. அந்தத் தேர்தலில் அ.தி.மு.க 4 தொகுதிகளில்தான் வெற்றி பெற முடிந்தது. அந்தக் கட்சியின் தலைவர் ஜெயலலிதா பர்கூர் தொகுதியில் தி.மு.க வேட்பாளர் சுகவனத்தால் தோற்கடிக்கப்பட்டார். இவ்வாறு ரஜினியின் முதல் குரல் தமிழக அரசியலில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்திய தேர்தலுடன் இணைந்திருந்தது.

1996-ல் ரஜினி

“தமிழகத்தில் மீண்டும் அ.தி.மு.க ஆட்சி வந்தால் தமிழகத்தை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது” – 1996-ல் ரஜினி

ஆனால் 2004-ம் ஆண்டு முதல் அவர் நேரடியாகவோ, மறைமுகமாகவோ ஆதரித்த கட்சிகள் மிகப்பெரிய தோல்வியை சந்திக்கத் தொடங்கின. அவர் தனது திரைப்படம் ஒன்றை வெளியிடும் தருணத்தில் ரஜினி அரசியலில் ஈடுபடப் போகிறார் என்று பேச்சு கிளம்பும். திரைப்படங்களிலும் அரசியலில் ஈடுபடப் போவது போன்ற காட்சிகளை இடம் பெறச் செய்வார். ஆனால், அவர் படம் ரிலீஸ் முடிந்தவுடன் மீண்டும் ஆழ்ந்த மௌனத்திற்கு சென்று விடுவார்.

இது தமிழக மக்களை சலிப்படையச் செய்து ரஜினி அரசியல் பிரவேசம் என்பதை ஒரு காமெடி விஷயமாக காலம் மாற்றியது. ஆனால், சென்ற ஆண்டு தனிக் கட்சி ஆரம்பித்து விட்டதாகவும் தனது கட்சி தேர்தலில் போட்டியிடப் போவதாகவும் ரஜினி ஆணித்தரமாக அறிவித்தார். அன்று முதல் அவரின் அரசியலுக்கு பின்பு பாரதிய ஜனதா கட்சியே இருக்கிறது என்ற எண்ணம் மக்கள் மனதில் உள்ளது.

ரஜினியின் மிகப்பெரிய பலவீனம் தன்னைச் சுற்றி உள்ளவர்களை நம்பி விடுவது. இதற்கு உதாரணமாக ஒரு விளம்பரத்தைக் கூறலாம். சத்குரு ஜக்கி ஒரு மிஸ்டு கால் கொடுத்தால் இந்தியாவில் உள்ள அனைத்து நதிகளையும் இணைத்து விடப் போவதாக விளம்பரம் செய்தார். நதிநீர் இணைப்பு என்பது பல மாநிலங்கள் சம்பந்தப்பட்ட ஒரு விஷயம். நதிநீர் பிரச்சனைகள் என்பது இன்று இந்தியாவின் தீர்க்க முடியாத மிகப்பெரிய பிரச்சனையாக இருக்கிறது. இவ்வளவு பெரிய விஷயத்தை எப்படி மிஸ்டு கால் கொடுத்து சரி செய்ய முடியும் என்பது பாமர மனிதனுக்கு இருக்கும் கேள்வி.

ஆனால், ரஜினியோ இத்தகைய கேள்வி எதுவும் இல்லாமல், சத்குருவிற்கு ஆதரவாக விளம்பரத்தில் தோன்றி மிஸ்டு கால் கொடுக்கச் சொன்னார். அந்த விளம்பரத்தில் நடித்து சில ஆண்டுகள் ஆகியும் இதில் எந்த முன்னேற்றமும் இல்லை. அதைப் பற்றி அவர் கவலைப்படவும் இல்லை. சத்குருவைச் சந்தித்து விளக்கம் கேட்கவும் இல்லை. இது ரஜினியின் மிகப்பெரிய மைனஸ். சமீபத்தில் தூத்துக்குடி விஷயத்திலும் சிலர் யோசனையை கேட்டு போராடியவர்களை சமூக விரோதிகள் என்று கூறினார். இரண்டு நாட்களில் அதற்கு வருத்தம் தெரிவித்தாலும் மக்கள் அவர் மீது கொண்டுள்ள நம்பிக்கை தேயத் தொடங்கியது.

சத்குரு - ரஜினி

கேள்வி எதுவும் இல்லாமல், சத்குருவிற்கு ஆதரவாக விளம்பரத்தில் தோன்றி மிஸ்டு கால் கொடுக்கச் சொன்னார், ரஜினி

ரஜினியின் தனிப்பட்ட பிரச்சனையாக கோச்சடையான வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. இதனை சிலர் தவறாக பிரச்சாரம் செய்கின்றனர். ரஜினி யாருடைய பணத்தையும் அடித்துப் பிடுங்கவில்லை. அவருடைய சுய சம்பாத்தியத்தை காப்பாற்ற நீதிமன்றம் செல்வதில் எந்தத் தவறும் இல்லை. ஆனால், பண விஷயத்தில் இவ்வளவு கெட்டியாக உள்ள ரஜினியால் எப்படி தனித்து தேர்தலை எதிர்கொள்ள முடியும் என்று பார்த்தால் இதில் உள்ள அரசியலை தெளிவாக புரிந்து கொள்ள முடியும்.

பாரதிய ஜனதா சென்ற தேர்தலில் மோடியை மிகப்பெரிய பிம்பமாக சித்தரித்தது. அது அக்கட்சிக்கு மிகப்பெரிய வெற்றியை பெற்றுத் தந்தது. முதன்முறையாக மத்தியில் பாரதிய ஜனதா தனித்து தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்தது. ஆனால், இந்தத் தேர்தலில் மோடி பிம்பம் பின்னடைவைச் சந்தித்துள்ளது. பணமதிப்பு நீக்கம், ரஃபேல் விமான ஊழல் புகார்கள், பெட்ரோல்/டீசல் விலை உயர்வு, வேலை இல்லா திண்டாட்டம் போன்ற பல காரணங்களால் மோடி பிம்பம் மட்டும் அக்கட்சிக்குத் வெற்றியைத் தராது என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும் எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்வது அக்கட்சிக்கு மிகப்பெரிய பின்னடைவைத் தரும். அதற்கு சிறந்த எடுத்துக் காட்டாக கர்னாடகா தேர்தலை கூறலாம். அதிக இடங்களில் பாரதிய ஜனதா வெற்றி பெற்றாலும் அக்கட்சியால் அங்கு முதல்வர் நாற்காலியை வெல்ல முடியவில்லை. மேலும் சமீப மாநில இடைத்தேர்தல்களில் பாரதிய ஜனதா மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது.

அதனால்தான் பாரதிய ஜனதா கட்சி தமிழகம்/புதுச்சேரியில் 40 தொகுதிகளில் வெற்றி பெற ரஜினியை துருப்புச் சீட்டாக பார்க்கிறது. அதனால்தான் நாட்டின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம விபூஷன் ரஜினிக்கு சென்றது. மோடி தமிழகம் வரும் போது ரஜினி இல்லத்திற்குச் சென்று சந்திக்கிறார். ரஜினியோ சத்குருவை நம்பியது போல பாரதிய ஜனதாவையும் கண்மூடித்தனமாக நம்புகிறார். [ரஜினி நம்புபவர்கள் சத்குரு, பா.ஜ.க என்று இருப்பதன் மர்மம் என்ன?]

பண விஷயத்தில் இவ்வளவு கெட்டியாக உள்ள ரஜினியால் எப்படி தனித்து தேர்தலை எதிர்கொள்ள முடியும் என்று பார்த்தால் இதில் உள்ள அரசியலை தெளிவாக புரிந்து கொள்ள முடியும்.

நடக்கும் நிகழ்வுகளை பார்க்கும் போது பாரதிய ஜனதாவின் தேர்தல் வியூகம் பின்வருமாறு உள்ளது என்று தோன்றுகிறது.

1. அதன் முதல் சாய்சாக தி.மு.கதான் உள்ளது. அது அ.தி.மு.கவின் பலவீனத்தை நன்கு அறிந்து உள்ளது. “தி.மு.க காங்கிரஸ் கூட்டணியில் உள்ளது அது எப்படி பாரதிய ஜனதா கூட்டணிக்கு வரும்” என்று கேட்டால் அரசியலில் எதுவும் சாத்தியம் என்பதுதான் பதில். இந்திராவின் எமர்ஜென்சிக்கு பிறகு தி.மு.க காங்கிரசை ஆதரித்து “நேருவின் மகளே வருக நிலையான ஆட்சி தருக” என்று கூறவில்லையா. அல்லது வாஜ்பாயியின் ஆட்சி முழுவதும் ஆட்சியில் பங்கு பெற்றுவிட்டு, அடுத்த தேர்தலில் காங்கிரஸ் கூட்டணிக்கு மாறவில்லையா?

தி.மு.க, பாரதிய ஜனதா கட்சியை ஆதரித்தால் தேர்தலுக்கு தேவையான பணம் கிடைக்கும். அழகிரி எதிர்ப்பு இல்லாமல் போகும். மேலும் போனசாக எடப்பாடியின் ஆட்சி கலைக்கப்பட்டு தமிழக சட்டமன்றத்துக்கும் தேர்தல் நடத்தப்படலாம். அதனால், தமிழகத்தில் தி.மு.க ஆட்சி ஏற்படக் கூடிய சூழல் ஏற்படலாம். இதற்கு விலையாக 7 இடங்கள் வரை தி.மு.க விட்டுக் கொடுத்தால் பாரதிய ஜனதா சார்பாக ரஜினி கட்சி சில இடங்களில் போட்டியிட்டு வெற்றி பெறும். ரஜினி, பாரதிய ஜனதா, தி.மு.க மற்றும் சிறு கட்சிகள் சேர்ந்து பாரதிய ஜனதாவை மத்தியில் எண்ணிக்கையை சரிக்கட்ட உதவும். இது அவர்களின் முதல் திட்டம்.

2. இந்தத் திட்டத்திற்கு தி.மு.க உடன்படவில்லை என்றால் இ.பி.எஸ்-ஐ ஒதுக்கி விட்டு செங்கோட்டையனையோ, ரஜினியையோ அ.தி.மு.கவின் தலைமையாக மாற்ற முயற்சி நடக்கும். அழகிரியை வைத்து தி.மு.கவை உடைக்க பா.ஜ.க முயலும். இதிலும் ரஜினி முக்கிய துருப்புச் சீட்டு. அழகிரி ரஜினியின் சிறந்த நண்பர், அவர் மூலம் இந்த முயற்சி நடக்கலாம்.

தமிழக முதல்வர் இ.பி.எஸ்-ன் மிகப்பெரிய பலம் அவர் தனக்கு இருக்கும் (இல்லாத!) மக்கள் செல்வாக்கை பற்றி நன்கு தெரிந்து வைத்துள்ளதுதான். ஆர்.கே நகர் தேர்தல் அவருக்கு அந்தப் பாடத்தை புகட்டி உள்ளது. அதனால்தான் தமிழக அரசு உள்ளாட்சித் தேர்தலை தள்ளி வைத்துக் கொண்டே செல்கிறது. திருவாரூர் மற்றும் திருப்பரங்குன்றம் தேர்தல் அவருடைய திறனை நிரூபிக்க உதவும். இவற்றில் தோற்றால் ஆட்சியைக் காப்பாற்ற மேலே சொன்ன தலைமை மாற்றத்தை பா.ஜ.க நடத்தலாம். ரஜினி தனது சமீபத்திய பேட்டியில் செங்கோட்டையனின் செயல்பாடுகள் சிறப்பாக உள்ளன என்று கூறுகிறார். அவரின் குரல் பாரதிய ஜனதாவின் திட்டத்துடைய குரலாகவே உள்ளது. ரஜினி எப்படி அ.தி.மு.கவின் தலைவர் ஆக முடியும் என்றால் அரசியலில் எதுவும் நடக்கலாம் என்பதே பதில். இதற்கு விலையாக அ.தி.மு.கவின் ஆட்சிக் காலம் நீட்டிக்கப்படும்.

பாரதிய ஜனதா, அ.தி.மு.க, ரஜினி மற்றும் கூட்டணி கட்சிகள் சேர்ந்து தேர்தலை நடத்த முடியும் போது கணிசமான இடங்களை பாரதிய ஜனதா பெறலாம். தலைவர் இல்லாத அ.தி.மு.க-விற்கு ரஜினி என்னும் தலைவர் கிடைப்பார். ரஜினிக்கும் தனது பலம் தெரியும். அதனால்தான் அவர் இத்தனை காலம் அரசியலில் குதிக்காமல் அமைதி காத்து வந்தார். RK நகர் தோல்வி ரஜினியை அரசியலில் குதிக்கக் கூடிய நிர்ப்பந்தத்தை அவருக்கு வழங்கியது.

இந்தக் கட்டுரை முழுவதும் பல யூகங்களைக் கொண்டு எழுதி இருக்கிறேன். இவை அடுத்த தேர்தலில் நடக்கலாம், நடக்காமல் போகலாம் என்றாலும் ரஜினி ஒரு தனி மரம் அல்ல, அடுத்த தேர்தலில் நேரடியாகவோ, மறைமுகமாகவோ முக்கிய இடத்தில் இருக்கப் போகிறார். அவர் பாரதிய ஜனதாவிற்கு தேவையான பலனை கொண்டு வரப் போகிறாரா, மீண்டும் பாரதிய ஜனதா ஆட்சியைப் பிடிக்க உதவப் போகிறாரா என்பதை காலம்தான் முடிவு செய்யும்.

இப்பொழுதும் ரஜினி நல்ல ஒரு நடிகர்தான். பாரதிய ஜனதா இயக்கும் இந்தத் “தேர்தல்”-ல் அவர் வழக்கம் போல சிறப்பாக செயல்படுவார் என்றே நடக்கும் நிகழ்வுகள் கூறுகின்றன. “ரஜினி” கவுண்ட் டவுன் ஸ்டார்ட் ஆகி விட்டது. இந்தத் “தேர்தல்” படம் ரசிகர்களின் அபிமானத்தை பெறுமா, மக்கள் மத்தியில் வெற்றி பெறுமா என்பதே இப்பொழுது உள்ள சுவாரஸ்யமான கேள்வி.

– ஒரு மூத்த ஐ.டி ஊழியர்

Permanent link to this article: http://new-democrats.com/ta/politician-rajinikanth-a-fans-view/

Leave a Reply

Your email address will not be published.

%d bloggers like this:
Read more:
ஐ.டி-ல என்ன சார் நடக்குது? – ஆடியோ

"யூனியன்றது நம்மெல்லாம் சேர்ந்தாதான் யூனியன். உங்களுக்கு இருக்கிற பிரச்சனை எல்லாத்துக்கும் இருக்குன்னு புரிஞ்சுக்குங்க, நம்ம செக்டார் மட்டுமில்ல, இன்னும் அன்ஆர்கனைஸ்ட் லேபர் இருக்காங்க, அந்த மாதிரி இருக்கறவங்களயும்...

புதிய தொழிலாளி – மார்ச் 2017 பி.டி.எஃப்

ஹைட்ரோகார்பன் யாருக்கான வளர்ச்சி!, நவீன தொழில்நுட்பம் - வளர்ச்சியா, வதையா?, பிறரது நிழலுக்காக வெந்து மடியும் சூளைத் தொழிலாளி!, சீறும் டிராகன்! நடுங்கும் கழுகு! - இன்னும்...

Close