பத்திரிகை செய்தி : யமஹா தொழிலாளர் போராட்டத்துக்கு ஐ.டி ஊழியர்கள் ஆதரவு

பத்திரிகை செய்தி

அக்டோபர் 1, 2018

பொருள் : யமஹா தொழிலாளர் போராட்டத்துக்கு பு.ஜ.தொ.மு ஐ.டி ஊழியர்கள் பிரிவு ஆதரவு

சென்னை ஒரகடத்தில் உள்ள யமஹா தொழிலாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு பு.ஜ.தொ.மு – ஐ.டி ஊழியர்கள் பிரிவு தனது ஆதரவை தெரிவித்துக் கொள்கிறது. ஐ.டி ஊழியர்கள் சங்கமாக இணைந்து ஆட்குறைப்புக்கு எதிராகவும், நிறுவனங்களின் தொழிலாளர் விரோத போக்குகளுக்கு எதிராகவும் போராட ஆரம்பித்திருக்கும் நிலையில், போராடும் யமஹா தொழிலாளர்களிடமிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டியவை நிறைய உள்ளன.

சென்னை மாநகரம் எவ்வாறு ஐ.டி துறையில் முன்னணி வகிக்கிறதோ அதே போல இந்திய அளவில் அதிகமான ஆட்டோமொபைல் தொழிற்சாலைகளை கொண்ட நகரமாக உள்ளது. இது அமெரிக்காவின் டெட்ராய்டு மாநகரத்தைப் போன்று வாகன உற்பத்தி நிறுவனங்களின் மையமாக கட்டமைக்கப்பட்டுள்ளது. சென்னையின் ஒரகடம் பகுதியில் சிறிதும் பெரிதுமாக பல நூறு தொழிற்சாலைகளில் வாகனங்களும் உதிரி பாகங்களும் உற்பத்தி செய்யப்பட்டு இந்திய உள்நாட்டு சந்தைக்கும் பிற நாடுகளுக்கு ஏற்றுமதியும் செய்யப்படுகிறது. ஒரகடம் பகுதி தொழிற்சாலைகளில் பணிபுரியும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் உழைப்பின் பலனே இந்த உற்பத்தி, ஏற்றுமதி சாதனைகளுக்கும், சென்னைக்கு இந்தியாவின் டெட்ராய்ட் என்ற பெயர் கிடைப்பதற்கும் காரணமாக உள்ளது.

இந்த ஒரகடம் பகுதியில் ஜப்பானிய பன்னாட்டு நிறுவனமான யமஹா தனது வாகன உற்பத்தி தொழிற்சாலையை நிறுவியுள்ளது. இந்தத் தொழிற்சாலையில் 800-க்கும் ஏற்பட்ட முழுநேர பணியாளர்களும், 2000-க்கும் மேற்பட்ட ஒப்பந்தத் தொழிலாளர்களும் பணிபுரிந்து வருகின்றனர். யமஹா நிறுவனம் தனது இந்திய இருசக்கர வாகன உற்பத்தியில் 4% வாகனங்களை இந்தத் தொழிற்சாலையில் உற்பத்தி செய்து வருகிறது. இந்தத் தொழிற்சாலையில் விதிமுறைகளுக்கு மாறாக அதிக அளவில் ஒப்பந்த ஊழியர்கள் வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர்.

யமஹா தொழிலாளர்களின் உரிமையை நிலைநாட்ட எந்தத் தொழிற்சங்கமும் இல்லாமல் இருந்து வந்தது. நிர்வாகம் இதனை சாதகமாக எடுத்துக்கொண்டு தொழிலாளர்களுக்கு தகுந்த ஊதிய உயர்வு வழங்காமலும், போனஸ் வழங்காமலும் இழுத்தடித்து வந்தது. வலுவான தொழிற்சங்கம் இல்லாத நிலையில் ஐ.டி ஊழியர்கள் எதிர் கொண்டு வரும் நெருக்கடிகளுடன் இதனை ஒப்பிட்டுப் பார்க்கலாம்.

தொழிலாளர்களின் உரிமைகளைப் பேணவும், முதலாளி வர்க்கத்தின் இந்தச் சுரண்டலில் இருந்து அவர்களை பாதுகாக்கவும் தொழிலாளர்கள் தாங்களாக சேர்ந்து தங்களுக்காக IYMTSC (இந்திய யமஹா மோட்டார் தொழிலாளர் சங்கம்) என்ற பெயரில் ஒரு தொழிற்சங்கத்தை நிறுவினர். அவர்களது பிரதான கோரிக்கையாக ஒப்பந்த ஊழியர்களை பணிக்கால அடிப்படையில் நிரந்தரமாக்குவதையும் போனஸ் மற்றும் தகுந்த ஊதிய உயர்வு வழங்குவதையும் தேர்ந்தெடுத்த தொழிற்சங்கத்தின் வாயிலாக நிர்வாக தரப்பிடம் கோரிக்கை வைத்தனர்.

ஆனால் லாபத்தில் கொழுத்த யமஹா நிறுவனம் தொழிலாளர்களின் இந்த நியாயமான கோரிக்கைகளுக்கு செவிசாய்க்கவில்லை. அதனால் ஊழியர்கள் தங்கள் கோரிக்கைகளை தொழில் தாவா சட்டத்தின் 2K பிரிவின் கீழ் தொழிலாளர் அலுவலரிடம் முறையிட்டனர். தொழில்தாவா சட்டத்தை மதிக்காத யமஹா நிர்வாகம் பலகட்ட பேச்சுவார்த்தைகளுக்கு வராமல் தொழிலாளிகளை அலைக்கழித்தது. அதன் உச்சகட்டமாக பிரகாஷ் என்ற தொழிலாளியின் வீட்டிற்கு குண்டர்களை அனுப்பி பிரகாஷின் தாயையும் சகோதரர்களையும் மிரட்டியுள்ளது யமஹா நிர்வாகம்.

மேலும் தொழிற்சங்கத்தை முடக்க வேண்டும் என்றும், தொழிலாளர்கள் ஒற்றுமையை குலைத்து அவர்களை அச்சுறுத்தி அவர்களின் நியாயமான கோரிக்கைகளை நீர்த்து போகச் செய்ய வேண்டும் என்ற தனது லாப வெறியில் நிர்வாகம் இந்த தொழிற் தாவாவில் பங்கேற்க சென்ற தொழிற்சங்கத்தின் பொருளாளரான ராஜமணிகண்டன் என்பவரையும், சங்கத்தின் செயலாளர்களில் ஒருவரான பிரகாஷ் என்பவரையும் எந்த காரணமும் கூறாமல் பணி நீக்கம் செய்தது.

இது தொழிலாளர்களின் மத்தியில் மிகப் பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியது. தமது நியாயமான உரிமைக்காக போராடிய தொழிலாளர்களை பழிவாங்கும் விதமாக நிர்வாகம் செயல்பட்டது தெள்ளத்தெளிவாக அவர்களுக்கு விளங்கியது. அதனால் பணிநீக்கம் செய்யப்பட்ட ராஜ மணிகண்டனையும், பிரகாஷையும் மீண்டும் உடனடியாக பணியில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்ற பிரதான ஒற்றை கோரிக்கையுடன் பெருவாரியான ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தை முடக்க தனது பண பலத்தைக் கொண்டு நிர்வாகம் பல வழிகளில் முயற்சி செய்தது.

இந்தப் பிரச்சனையை சுமுகமாக முடிக்க தொழிலாளர் அலுவலகத்தில் முத்தரப்பு பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்தனர். அதையும் மதிக்காத யமஹா நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில், ‘ஊழியர்களின் பணி நிறுத்தம் சட்டத்திற்கு முரண்பட்டது’ எனவும், ‘நீதிமன்றம் உடனடியாக தலையிட்டு தொழிலாளர்களின் வேலைநிறுத்தத்தை கைவிட ஆணையிட வேண்டும்’ என்றும் முறையீடு செய்தது. தன்னிடம் பணி புரியும் தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட மனமின்றி, தொழிலாளர் அலுவலரின் அழைப்பையும் நிராகரித்து தனது அதிகார பலத்தினால் நீதிமன்றம் மூலம் இந்த வேலை நிறுத்தத்தை முடிக்க முயற்சித்து உள்ளது. இதனை விசாரித்த ஒற்றை நீதிபதி இந்த வழக்கினை 2 வாரங்களுக்கு தள்ளிவைத்தார்.

இதற்கிடையில் யமஹா நிறுவனம் இந்த வேலை நிறுத்தத்தை முடக்க பல வழிகளில் முயன்று வருகிறது. உள்ளிருப்பு போராட்டம் செய்த தொழிலாளர்களுக்கு முதலில் கழிவறை வசதிகள் உபயோகிக்க மறுப்பு தெரிவித்தது. மேலும் ஒப்பந்த ஊழியர்களின் துணையுடன் தொழிற்சாலையை தொடர்ந்து நடத்த முயற்சி செய்கிறது. என்றாலும் தொழிலாளர்களின் ஒற்றுமைக்கு முன்பு நிர்வாகத்தின் சதித்திட்டம் செல்லுபடி ஆகவில்லை. யமஹா போராட்டத்திற்கு ஆதரவாக ராயல் என்பீல்டு மற்றும் MSI கார்ப் நிறுவனம் ஊழியர்களும் போராட்டக் களத்தில் குதித்தனர். ஒரகடம் பகுதி தொழிலாளர்களின் ஒற்றுமையால் ஒன்றுபட்டு போராட்ட கனல் சூடேறி உள்ளது. நிர்வாகத்தின் பல சதித்திட்டங்களையும் உடைத்து இந்தப் போராட்டம் இன்று பத்தாவது நாளை எட்டியுள்ளது.

தொழிலாளி வர்க்கத்தின் நீண்ட போராட்டங்களின் மூலமாக ஈட்டப்பட்ட சட்டரீதியான உரிமைகள் பலவற்றை நீர்த்துப் போகச் செய்யும் முயற்சியில் முதலாளிகள் தற்போது ஈடுபட்டு வருகின்றனர். யமஹா தொழிலாளர்களின் இந்தப் போராட்டம் Fixed Term Employment முறையில் ஒப்பந்த தொழிலாளர் முறைக்கு சட்ட அங்கீகாரம் வழங்குவது போன்ற தொழிலாளர் விரோத நடவடிக்கைகளை எதிர்த்து போராடுவதற்கு ஐ.டி ஊழியர்கள் உள்ளிட்டு அனைத்துத் தரப்பு தொழிலாளர்களுக்கும் முன்னுதாரணமாக உள்ளது.

யமஹா ஊழியர்களின் போராட்டம் பற்றிய விபரங்கள் நமது புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி சார்பாக சமூக வலைத்தளங்களில் பரவலாக கொண்டு சேர்க்கப்பட்டது. நிர்வாகம் தனது அதீத இலாப நோக்கத்தை கைவிட்டு தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளை ஏற்று போனஸ் வழங்கவும், ஊதிய உயர்வு வழங்கவும், பணி நீக்கம் செய்த 2 தொழிலாளிகளை மீண்டும் சேர்த்துக் கொள்ளவும், ஒப்பந்தத் தொழிலாளர்களு க்கு பணி நிரந்தரம் வழங்க வேண்டும் என்றும்நமது சங்கம் சார்பாக கோரிக்கை வைக்கப்படுகிறது. இதனை ஏற்று நிர்வாகம் செயல்படாதவரை நாடு முழுவதும் உள்ள ஐ.டி தொழிலாளர்கள் யமஹா நிறுவனத்தின் வாகனங்களை வாங்காமல் புறக்கணிக்க வேண்டும் என்ற முழக்கமும், இதனை ஒட்டிய மீம்களும் எமது சங்கம் சார்பாக பரப்பப்படுகிறது.

இந்தப் போராட்டத்தை ஆதரித்து AICTU தொழிற்சங்கத்துடன் நமது புதிய ஜனநாயக தொழிலாளர்கள் முன்னணி மைய சங்கமும் இணைந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் இன்று ஈடுபடுகிறது.

தொழிலாளர் போராட்டம் வெல்லவும், யமஹா ஊழியர்களின் உரிமைக் காக்கவும் நமது பு.ஜ.தொ.மு ஐ.டி ஊழியர்கள் பிரிவு எப்போதும் துணை நிற்கும். தொழிலாளி வர்க்கத்தின் உரிமைகளை காக்கவும், வர்க்க ஒற்றுமையை வலுப்படுத்தி ஜனநாயகத்தை நோக்கிய போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லவும் பு.ஜ.தொ.மு – ஐ.டி ஊழியர்கள் பிரிவு உறுதி பூண்டுள்ளது.
சட்டப்படி சங்கம் துவங்கினால்…

சட்ட விரோதமாக அதை ஒடுக்க நினைக்கும் நிறுவனங்கள்.
எளியோருக்குத்தான் சட்டம்! வலியோருக்கு அது சட்டை!
அதற்கு ஒத்து ஊதும் அரசு எந்திரம்!
வர்க்கமாக ஒன்றிணைவோம்! சுரண்டலை அழித்தொழிப்போம்!

தொழிலாளர் கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை யமஹா நிறுவன தயாரிப்புகளை புறக்கணிப்போம்!

– புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, ஐ.டி ஊழியர்கள் பிரிவு

“ஐ.டி ஊழியர் வாழ்க்கை ஜாலியா பிரச்சனைகளா?” புத்தகம் கிடைக்குமிடங்கள்

More from New Democrats

Permanent link to this article: http://new-democrats.com/ta/press-release-ndlf-it-supports-yamana-workers-strike/

Leave a Reply

Your email address will not be published.

%d bloggers like this:
Read more:
பணமதிப்பு நீக்கம் – மோடிக்கு பொறுப்பில்லையாம்!

பா.ஜ.கவினரும் அரசும் இப்போது, 'திட்டம் நல்ல திட்டம், மோடியின் நோக்கம் நல்ல நோக்கம், புதிய சிந்தனையை பயன்படுத்தி தைரியமான நடவடிக்கை எடுத்தார். அதை கருப்புப் பண பேர்வழிகளும்,...

மெரினாவில் காவிகளின் கண்களுக்கு தெரிந்த சமூக விரோத செயல்கள் – கார்ட்டூன்

மெரினாவில் ஒலித்த தமிழகத்தின் குரல் - விவசாயத்தை பாதுகாப்போம், டாஸ்மாக்கை மூடுவோம், கல்வி உரிமையை மீட்போம் - இன்னும் பல.

Close