பத்திரிகை செய்தி : டெக் மகிந்த்ராவில் சட்ட விரோத ஆட்குறைப்பை தடுத்து நிறுத்துவோம்

ஜூன் 11, 2018

பத்திரிகை செய்தி

பொருள் : டெக் மகிந்த்ரா நிறுவனத்தில் 1,500 ஊழியர்கள் சட்ட விரோதமாக வேலை நீக்கம் செய்யப்படுவதை தடுத்து நிறுத்துவோம்

C P Gurnani

சென்ற ஆண்டு, டெக் மகிந்த்ரா ஊழியர் ஒருவர் உடனடியாக ராஜினாமா செய்து விட்டு போகும்படி எச்.ஆர் அதிகாரியால் மிரட்டப்பட்டது தொடர்பாக டெக் மகிந்த்ரா சி.ஈ.ஓ சி.பி குர்னானி தனிப்பட்ட முறையில் மன்னிப்பு கேட்டுக் கொண்டார்

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி கடந்த 20 ஆண்டுகளாக தமிழ்நாட்டிலும் புதுச்சேரியிலும் தொழிலாளர்களை திரட்டி தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. ஆட்டோமொபைல் தொழிலாளர்கள் முதல் ஐ.டி ஊழியர்கள் வரை, நிரந்தர தொழிலாளர்கள் முதல் ஒப்பந்த தொழிலாளர்கள் வரை அனைத்துத் துறை, அனைத்து நிலை தொழிலாளர்களையும் பிரதிநிதித்துவப்படுத்துகிறது பு.ஜ.தொ.மு. பு.ஜ.தொ.மு-வின் ஐ.டி ஊழியர்கள் பிரிவு 2015-ம் ஆண்டு ஜனவரி மாதம் 10-ம் தேதி அமைக்கப்பட்டது. இப்பிரிவு ஐ.டி/பி.பிஓ ஊழியர்கள் தமது பணியிட பிரச்சனைகளுக்கு கூட்டு பேர உரிமைகளை பெறுவதற்கும், நிறுவனங்களின் தொழிலாளர் விரோத நடவடிக்கைகளை எதிர்த்தும் போராடி வருகிறது.

இந்த வார தொடக்கத்தில் டெக் மகிந்த்ரா நிறுவனத்தைச் சேர்ந்த பல ஊழியர்கள் எங்களை தொடர்பு கொண்டு, அவர்களது எச்.ஆர் அதிகாரிகள் வேலையை விட்டு ராஜினாமா செய்து விட்டு போகும்படி கட்டாயப்படுத்துவதாக தெரிவித்தனர். ஆட்குறைப்பு செய்வதற்காக குறி வைக்கப்பட்ட ஊழியர்களுக்கு வருடாந்திர அப்ரைசல் முறையில் குறைந்த ரேட்டிங் கொடுக்கப்படுகிறது. மேலாளரால் உயர் ரேட்டிங் கொடுக்கப்பட்ட சில ஊழியர்களின் ரேட்டிங்கை எச்.ஆர் குறைப்பதும் நடந்திருக்கிறது. இந்த அப்ரைசல் முறையே அறிவியல் பூர்வமற்ற, வெளிப்படைத்தன்மையற்ற, நிர்வாகத்தால் தன்னிச்சையாக தீர்மானிக்கப்படக் கூடியதாக உள்ளது.

இவ்வாறு குறைந்த ரேட்டிங் தரப்பட்ட ஊழியர்களை அவர்கள் செய்து கொண்டிருக்கும் பணியிலிருந்து விடுவிக்கும்படி மேலாளர்களை எச்.ஆர் அதிகாரிகள் கட்டாயப்படுத்துகின்றனர். மேலும், தேவை இருந்தாலும் அத்தகைய ஊழியர்களுக்கு எந்தப் பணியும் கொடுக்கக் கூடாது என்றும் அறிவுறுத்துகின்றனர். ஊழியர்களுக்கு பணி ஒதுக்கும் மென்பொருளில் குறைந்த ரேட்டிங் பெற்ற ஊழியர்களுக்கு பணி வழங்க முடியாதபடி தடை செய்திருக்கின்றனர்.

இவ்வாறு ஆட்குறைப்பு செய்வதற்காக குறி வைக்கப்பட்ட ஊழியர்களை எச்.ஆர் அதிகாரிகள் அழைத்து ராஜினாமா செய்யும்படி கட்டாயப்படுத்துகின்றனர். நிறுவனத்துக்காக பல ஆண்டுகள் உழைத்த ஊழியர்கள் மூடிய அறைக்குள் மிரட்டப்படுகின்றனர்; எச்.ஆர் அதிகாரிகள் அவர்களை அவமானப்படுத்தி, இழிவுபடுத்தி, அச்சுறுத்துகின்றனர். ; ராஜினாமாவுக்கான நடைமுறைகளை உடனே செய்து விட்டு வெளியேறும்படி கட்டாயப்படுத்துகின்றனர்.

பு.ஜ.தொ.மு – ஐ.டி ஊழியர்கள் பிரிவு டெக் மகிந்த்ரா நிறுவனத்தின் மனித வளத்துறை அதிகாரிகளின் இந்த சட்டவிரோத, நியாயமற்ற செயல்பாடுகளை வன்மையாக கண்டிக்கிறது. டெக் மகிந்த்ரா இத்தகைய கட்டாய ராஜினாமா நடவடிக்கையையும் சட்டவிரோத ஆட்குறைப்பையும் உடனடியாக நிறுத்துமாறும், பாதிக்கப்பட்ட அனைத்து ஊழியர்களையும் மீண்டும் பணியில் அமர்த்துமாறும், ஊழியர்களுக்கு தற்போதைய தொழில்நுட்பங்களில் பயிற்றுவித்து வளர்க்குமாறும் வலியுறுத்துகிறோம்.

2017-ம் ஆண்டு 50-க்கும் அதிகமான விப்ரோ ஊழியர்களின் இது போன்ற புகாரை நாங்கள் விப்ரோ நிர்வாகத்தின் முன் கொண்டு சென்றோம். பின்னர், தொழில் தாவா சட்டம் பிரிவு 2K-ன் கீழ் தொழிலாளர் துறையில் தொழில்தாவா தாக்கல் செய்தோம். இதன் மூலம் அந்த மனுவில் இணைந்த எந்த ஊழியரும் கட்டாயப்படுத்தப்பட்டு ராஜினாமா செய்வது தடுக்கப்பட்டது, அவர்கள் அனைவரும் நிறுவனத்தில் தொடர்ந்து வேலை செய்கின்றனர்.

மேலும், இந்த விஷயத்தை தொழிலாளர் துறை செயலரிடமும், தொழிலாளர் ஆணையரிடமும் எடுத்துச் சென்று, ஐ.டி நிறுவனங்களில் கட்டாய ராஜினாமா மூலம் ஆட்குறைப்பு செய்வதை தடுத்து நிறுத்துமாறு கோரிக்கை விடுத்தோம். வேலை இழந்த ஊழியர்களின் நிலைமையை வெளிப்படுத்தும் வண்ணம் ஆர்ப்பாட்டம், பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தினோம்.

சென்ற ஆண்டு, டெக் மகிந்த்ரா ஊழியர் ஒருவர் உடனடியாக ராஜினாமா செய்து விட்டு போகும்படி எச்.ஆர் அதிகாரியால் மிரட்டப்பட்டது தொடர்பாக மகிந்த்ரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மகிந்த்ராவும், டெக் மகிந்த்ரா துணைத் தலைவர் வினீத் நய்யாரும், அதன் சி.ஈ.ஓ சி.பி குர்னானியும், தனிப்பட்ட முறையில் மன்னிப்பு கேட்டுக் கொண்டனர். ஆனால், அதன் பிறகும் நிறுவனத்தில் சட்டவிரோத ஆட்குறைப்பு நடவடிக்கை தொடரவே, பாதிக்கப்பட்ட ஊழியர்கள் தொழிலாளர் ஆணையரையும், நீதிமன்றத்தையும் அணுகினர்; நிறுவனம் நீதிமன்றத்தின் கண்டனத்துக்குள்ளானது.

எச்.ஆர் மிரட்டலுக்கு பயந்து கட்டாய ராஜினாமா செய்ய மறுக்குமாறு டெக் மகிந்த்ரா ஐ.டி ஊழியர்களை பு.ஜ.தொ.மு ஐ.டி ஊழியர்கள் பிரிவு கேட்டுக் கொள்கிறது. அப்ரைசல் முறையும், கட்டாய ராஜினாமாவும் இந்திய தொழிலாளர் சட்டத்துக்கு விரோதமானவை. ஐ.டி/பி.பிஓ நிறுவனங்கள் முறையான வழிமுறையை பின்பற்றாமல் ஊழியர்களை வேலையை விட்டு அனுப்ப முடியாது (இல்லா விட்டால் அவர்கள் கட்டாய ராஜினாமா பெறுவதைப் பற்றி கவலலைப்படப் போவதில்லை). டெக் மகிந்த்ரா ஊழியர்கள் யாராவது கட்டாயத்தின் கீழ் ராஜினாமா செய்திருந்தால் அதை உடனடியாக திரும்பப் பெறுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

பாதிக்கப்பட்ட ஊழியர்கள் அனைவரும் பு.ஜ.தொ.மு – ஐ.டி ஊழியர்கள் பிரிவை தொடர்பு கொண்டு, சங்கத்தின் வழக்கறிஞர்களை கலந்தாலோசித்து நிர்வாகத்தின் மிரட்டலை எதிர்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

செயலாளர்,
பு.ஜ.தொ.மு – ஐ.டி ஊழியர்கள் பிரிவு

Permanent link to this article: http://new-democrats.com/ta/press-release-stop-tech-mahindras-illegal-layoff-of-1500-employees-ta/

Leave a Reply

Your email address will not be published.

%d bloggers like this:
Read more:
13 வயது தலித் சிறுமியின் கொலையின் மீதான மயான அமைதி

"இந்த அமைதியை கிழிக்க பல குரல்கள் தேவை. தலித் குரல்கள் மட்டும் போதாது. குற்றங்களை தடுப்பது மட்டுமே எங்களது இலக்கல்ல. சாதியையும் ஒழிக்கவேண்டும்"

“இறுக்கமது இளகட்டும், மனதின் இருளது விலகட்டும்!” – ஐ.டி ஊழியர்களின் மே தினச் செய்தி

பல்லாயிரம் தொழிலாளர்களது அயராத போராட்டத்தாலும் , அவர்கள் சிந்திய குருதியிலும் ஈன்றெடுக்கப்பட்ட 8 மணி நேர வேலை , தொழிலாளர் நலச் சட்டங்கள், பணிப்பாதுகாப்பு போன்ற அடிப்படை...

Close