செய்தி:
பீகார் மாநிலம் பெகுசாரை மாவட்டத்தில் உள்ள B.R.கல்வி நிலையம் என்ற தனியார் பள்ளி கடந்த வெள்ளிக்கிழமை (ஜூன் 16 2017) அன்று அங்கு படித்து வந்த சகோதரிகள் இருவரின் தந்தை ஷா-வை பள்ளிக்கு அழைத்தனர். அப்போது பள்ளி ஆசிரியை குமாரி மற்றும் தாளாளர் N.K.ஜா ஆகியோர் ஷா-வை உடனடியாக சிறுமிகளின் பள்ளிக்கட்டணத்தையும் அவர்களின் சீருடைக்கான கட்டணத்தையும் கட்டுமாறு கூறியுள்ளனர்.
அதற்கு ஷா தன்னிடம் இப்போது பணம் இல்லாததால் சனிக்கிழமை கட்டுவதாகக் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஆசிரியை சிறுமிகளை உள்ளே இழுத்துச் சென்று அவர்களின் சீருடைகளைக் களைந்து அரைநிர்வாணமாக்கி அவர்களை வீட்டுக்கு அழைத்துச் செல்லுமாறு தந்தையிடம் கூறியுள்ளார். சிறுமிகளின் தந்தை ஷா காவல்துறையில் பதிவு செய்த புகாருக்கு பிறகு இந்த சம்பவம் வெளியில் தெரிய வந்துள்ளது. மாநிலக் கல்வி அமைச்சர் அசோக் சௌத்ரி இது குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.
கண்ணோட்டம் :
மக்கள் அனைவருக்கும் தரமான இலவசக் கல்வி அளிக்க வேண்டிய தனது பொறுப்பை தட்டிக் கழிக்கும் இந்த சொரணையற்ற அரசின் பாராமுகமும் அலட்சியமும் தனியார் கல்வி நிறுவனங்கள் மென்மேலும் பெருக வழிவகுத்திருக்கிறது. தனியார் கல்விக் கொள்ளையர்கள் தங்களின் பணபலம் மற்றும் ஆள்பலத்தைப் பயன்படுத்தி அரசு வகுத்துள்ள விதிமுறைகளையும் கட்டுப்பாடுகளையும் அப்பட்டமாக மீறுகின்றன.
இந்த அரசும் இதைக் கண்காணிப்பதற்கோ ஒழுங்குபடுத்துவதற்கோ திராணியின்றி நிற்கிறது. அன்றியும் இந்த அரசும் அரசு நிறுவனங்களும் ஏற்கனவே பெரும்பான்மை மக்களின் நம்பிக்கையை இழந்து அவர்களை வஞ்சித்து வருகின்றன. தன்னால் வகுக்கப்பட்ட விதிகளையே நடைமுறைப்படுத்த முடியாத அளவுக்கு தோல்வியைத் தழுவியுள்ளன.
மக்கள் இந்த அநீதிக்கு எதிராக திரண்டெழுந்து கேள்வி எழுப்பி அவர்களை தடுத்து நிறுத்தாவிட்டால் நாம் மேலும் மேலும் இந்த தேசம் நிர்வாணமாக்கப்படுவதை பார்த்துக் கொண்டிருக்கப் நேரிடும்.
இந்தக் குறிப்பிட்ட சம்பவத்தில் பள்ளி நிர்வாகம் காவல் துறையையும் நீதித்துறையையும் சரிக்கட்டிவிட்டு தப்பிவிடும் என்று நாம் எதிர்பார்க்கலாம்.
இது இந்த சம்பவத்தோடு மட்டும் நிற்கப்போவதில்லை. இதை நாம் அனுமதிக்கப் போகிறோமா?