ஜனவரி 2-ம் தேதி ஓலா, ஊபர் நிறுவனங்களின் சொற்ப ஊக்கத் தொகை, அடைய முடியாத இலக்குகள், கட்டணம் நிர்ணயிப்பதில் வெளிப்படைத்தன்மை இல்லாமை ஆகியவற்றை எதிர்த்துசென்னையில் வாடகை கார் ஓட்டுனர்கள் ஒரு நாள் வேலை நிறுத்தம் நடத்தினர். சுமார் 40,000 வண்டிகள் வேலை நிறுத்தத்தில் கலந்து கொண்டன. சென்னை விமான நிலையம், ஓ.எம்.ஆர், கோயம்பேடு பேருந்து நிலையம், சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்களில் வாடகை வண்டிகள் கிடைக்காமல் போனது.
ஒரு நாளைக்கு 8 மணி நேரம் மட்டும் வண்டி ஓட்டினால் ரூ 3,000 சம்பாதிப்பது சாத்தியமில்லை, ரூ 2,000 சம்பாதிக்க 250-300 கி.மீ வரை ஓட்ட வேண்டியுள்ளது. பெட்ரோல் செலவு போக ஒரு நாளைக்கு ரூ 450-500 வரை மட்டுமே மிஞ்சுகிறது. எனவே இதை முறைப்படுத்தி ஓட்டுனர்களுக்கு நியாயமான வருமானத்தை உறுதி செய்ய வேண்டும் என்பது அவர்களது கோரிக்கை.
தனியார் சேவைதான் சிறந்த சேவை, அரசு எதிலும் தலையிடக் கூடாது என்று ஓலா, ஊபரை வரவேற்றவர்களை நோக்கி நெதர்லாந்தில் வசிக்கும் கலையரசன் அந்நாட்டில் தனியார் பேருந்து ஓட்டுனர்களின் வேலை நிறுத்தம் பற்றி ஃபேஸ்புக்கில் எழுதியதுடன் இதை ஒப்பிட்டுப் பார்த்தால் தனியார்மயத்தின் கோர முகம் புரியவரும். குறைந்த விலையில், ஓலா, ஊபர் வழங்கும் வசதியான சேவையின் பின் இருக்கும் சுரண்டலை புரிந்து கொள்ள முடியும்.
இந்தியா, இலங்கையில் தனியார்மயத்தை ஆதரிப்பவர்கள் கவனத்திற்கு:
இன்று நெதர்லாந்து முழுவதும் தனியார் பஸ் நிறுவனங்களில் பணியாற்றும் சாரதிகள் வேலை நிறுத்தம் செய்கின்றனர். தாங்க முடியாத வேலைப்பளுவை குறைக்கக் கோரியும், சம்பளத்தை 3,5% அதிகரிக்க கோரியும் வேலை நிறுத்தத்தில் குதித்துள்ளனர். இன்று அதிகாலை 4 மணியில் இருந்து இரவு 11 மணி வரையில் வேலை நிறுத்தம் நடக்கும். இந்தப் போராட்டத்தை FNV, CNV ஆகிய இரண்டு பெரிய தொழிற்சங்கங்கள் ஆதரிக்கின்றன.
நான்கு மணிநேரம் தொடர்ந்து வண்டி ஓட்ட வேண்டி இருப்பதாகவும், சிறுநீர் கழிக்க கூட இடைவேளை கிடைப்பதில்லை என்றும் சாரதிகள் முறையிடுகின்றனர். குறிப்பாக மாவட்ட, மாகாணப் பிரதேசங்களில் நீண்ட நேரம் ஓடும் பஸ் வண்டி ஓட்டுநர்கள் இதனால் பெரும் அசௌகரியங்களுக்கு ஆளாகின்றனர். “சிறுநீர் கழிக்க நேரம் கொடு” என்பதே இன்றைய போராட்டத்தின் பிரதானமான சுலோகமாக வைக்கப் பட்டுள்ளது.
நெதர்லாந்து பொதுப் போக்குவரத்து துறையின் பெரும் பகுதி பல தனியார் நிறுவனங்களினால் நடத்தப் படுகின்றது. Arriva, Connexxion போன்ற பன்னாட்டு நிறுவனங்களும் அவற்றுள் அடங்கும். இவை பிற ஐரோப்பிய நாடுகளிலும் பஸ், டிரெயின் சேவைகளை நடத்துகின்றன. இலாபம் சம்பாதிப்பதை மட்டுமே குறிக்கோளாக கொண்ட தனியார் நிறுவனங்கள், குறைந்தளவு வேலையாட்களைப் போட்டு வேலைப்பளுவை கூட்டுகின்றன. அதன் விளைவு தான் இன்றைய வேலைநிறுத்தப் போராட்டம்.
இதே நேரம், ஆம்ஸ்டர்டாம், டென் ஹாக், ரொட்டர்டாம் ஆகிய மூன்று பெரும் நகரங்களில் மாத்திரம் இன்று பேருந்து வண்டிகள் சேவையில் ஈடுபடும். ஏனென்றால் அவை பெரும் பகுதி உள்ளூராட்சி சபையின் முதலீட்டில் நடக்கின்றன. நல்ல வேளை அவை இன்னும் 100% தனியார் கைகளுக்கு போகவில்ல. பொருளாதாரத்தில் தனியார்மயம், தாராளமயம் வந்தால் எல்லாம் சிறப்பாக நடக்கும் என்று நினைத்துக் கொண்டிருப்பவர்களுக்கு இந்தத் தகவல் சமர்ப்பணம்.
நன்றி : கலையரசன்