ஐ.டி மற்றும் ஐ.டி.ஈ.எஸ் துறையைச் சார்ந்த நிறுவனங்கள் சூழப்பட்டுள்ள ஓ.எம்.ஆர் பேருந்து நிறுத்தங்களில் இரவு 8 மணிக்கு மேல் பெண்கள் வீடு திரும்ப காத்திருப்பது ஒரு பொதுவான நிகழ்வு.
இரவு 8 மணி என்பதுபாதுகாப்பான நேரமாகவே கருதப்படுகிறது, ஏனெனில் பேருந்து நிறுத்தமும், சாலையும் இயல்பாகவும் பரபரப்பாகவும் இயங்கிக்கொண்டிருக்கும் நேரமது.
இப்படி கிளம்பும் நேரம் பாதுகாப்பானதாக கருதப்பட்டாலும் இவர்கள் வீடு சென்று சேரும் நேரம் பாதுகாப்பானதா என்ற கேள்விக்கு தீர்க்கமான பதில் கிடையாது.
தாம்பரம், பெருங்களத்தூர், கூடுவாஞ்சேரி, திருவொற்றியூர் போன்ற பல்வேறு தொலைவான பகுதிகளிலிருந்து இங்கு வேலைக்கு வரும் பெண்கள் அவர்களது பகுதிகளுக்கு சென்று சேர இரண்டு மணி நேரம் அல்லது அதைவிட அதிகமான நேரம் ஆகின்றது. அவ்வகையில் பத்து மணிக்கு தங்கள் பகுதியை சென்றடையும் இவர்கள், வீடு சென்று சேரும் வழி பாதுகாப்பானதாக இருக்கும் என்று உறுதியாக சொல்ல முடியாது.
ஏதோ ஒரு துயர சம்பவத்திற்கு பிறகே விழித்துக் கொள்வது நம் வழக்கம். அதுபோல ஒன்று நடந்து விடக் கூடாது என்பதற்காகவும், வருமுன் காப்பதே நன்று என்பதற்கேற்ப செயல்படும் விதமாக பெண்கள் 7 மணிக்கு வீடு செல்லும் வகையில் பணி நேரம் நிர்ணயிக்கப்பட வேண்டும். அதைத் தாண்டும் தருணத்தில் அவர்களை வீட்டில் கொண்டு விடுவதற்கு அலுவலக வாகனம் ஏற்பாடு செய்யப்பட வேண்டும்.
பு.ஜ.தொ.மு – ஐ.டி ஊழியர்கள் பிரிவின் உறுப்பினர் ஒருவர் அனுப்பியது