பணமதிப்பழிப்பு தொடங்கி ஊரடங்கு வரை: தீவிரமடையும் பாசிசத் தாக்குதல்கள்

நெருக்கடியான காலம் இந்தச் சாக்கு எல்லாவிதமான அடக்குமுறைகளையும், உரிமைகள் பறிக்கப்படுவதையும் நியாயப்படுத்திவிடுகிறது. அரசின் சட்டவிரோதமான நடவடிக்கைகளைக்கூடக் கேள்விக்கு உட்படுத்த முடியாத நிலைமையைத் தோற்றுவிக்கிறது.

கரோனா நோய்த் தொற்றை எதிர்கொள்ளுவது என்ற பெயரில் மேலிருந்து திணிக்கப்பட்ட ஊரடங்கு, ஆரோக்கிய சேது செயலி, டிரோன்களின் மூலம் பொதுமக்களின் நடமாட்டத்தைக் கண்காணிப்பது, ஊரடங்கை மீறுபவர்களுக்குத் தன்னிச்சையாக போலீசே தண்டனை அளிப்பது, அபராதம் விதிப்பது என்பதில் தொடங்கி கடைசியாக அறிவிக்கப்பட்டிருக்கும் தொழிலாளர் சட்டத் திருத்தங்கள் வரையிலும் எதுவொன்றும் சட்டப்படியாகவோ, பொதுமக்களின் நலனை முன்னிட்டோ அறிவிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்படவில்லை.

பிரதமர் நரேந்திர மோடி, தன்னைத் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களின் பிரதிநிதி என்றோ, நாடாளுமன்றத்திற்குப் பதில் அளிக்க வேண்டிய பொறுப்பும் கடமையும் தனக்கு உண்டு என்றோ ஒருநாளும் கருதிக் கொண்டது கிடையாது. அவரது எதேச்சதிகார மனப்பான்மையை ஏற்கெனவே பணமதிப்பழிப்பு விவகாரத்தில் நாம் அனுபவிக்க நேர்ந்தது. பாசிஸ்டு கும்பலுக்கே உரிய முட்டாள்தனத்தை, அவரது அரசு அவசர அவசரமாக ஜி.எஸ்.டி.யை அமல்படுத்திய பின் நாடே புரிந்துகொண்டது.

அதனைப் போலவே, ஒரு நான்கு மணி நேர கால அவகசாத்தில் ஊரடங்கை இந்திய மக்களின் மீது ஏவிவிட்டார், மோடி. இக்குறுகிய கால அவகாசத்திற்குள் பொதுமக்கள் எப்படித் தங்களைத் தயார்படுத்திக் கொள்ள முடியும் என்பது பற்றியெல்லாம் மோடி கிஞ்சித்தும் சிந்திப்பதும் கிடையாது, அக்கறை கொள்வதும் கிடையாது.

மாநில முதல்வர்களைக் கலந்து ஆலோசித்த பிறகுதான் ஊரடங்கு இரண்டு முறை நீட்டிக்கப்பட்டிருப்பதைப் போல மைய அரசு காட்டிவருவதெல்லாம் அப்பட்டமான மோசடி, நாடகம். மோடியோடு எந்தெந்த முதல்வர்கள் பேசலாம் என்பதைத் தீர்மானித்துவிட்டுத்தான் இந்தக் கலந்தாலோசனை நாடகங்கள் நடைபெற்றுள்ளன.

எனில், நடப்பது ஜனநாயக ஆட்சியா அல்லது முடியாட்சியா? மோடி, பிரதமரா அல்லது டெல்லி சுல்தானா என்ற கேள்விகள் எழுவது தவிர்க்க முடியாதது.

புலம் பெயர்ந்த தொழிலாளர்களும் அவர்களது குடும்பங்களும் ஊரடங்கால் எதிர்கொண்டு வரும் அவலங்களுக்கு மோடி ஆற்றிய எதிர்வினையோ குரூரமானது. வாழ்வாதாரத்தைவிட, உயிர்தான் எனக்கு முக்கியம்” என்றார், அவர்.

தொழிலாளி வர்க்கத்தைப் பொருத்தவரை உயிரும் வாழ்வாதாரமும் எதிரெதிர் துருவங்கள் அல்ல. மோடி அறிவித்த ஊரடங்கு அவர்களது வேலையை, வாழ்வாதாரத்தை மட்டும் பறிக்கவில்லை, உயிர் வாழும் உரிமையை, கண்ணியத்தை, மானம், மரியாதையைச் சேர்த்தே பறித்தது. அதனால்தான், நடந்தாவது தமது சொந்த கிராமத்திற்குச் சென்றுவிட அவர்கள் முடிவெடுத்தார்கள். அவ்வாறு நடந்தவர்களை மைய அரசும், மாநில அரசுகளும் நடத்திய விதம் இட்லரின் வதை முகாம் வரலாற்றைத்தான் நினைவுபடுத்துகிறது.

ஊரடங்கு, பொதுமக்களின் நடமாட்டத்தைக் கண்காணிக்கவும் கட்டுப்படுத்தவும் அரசிற்கும் போலீசுக்கும் அதிகாரம் அளிக்கிறது என்றால், மைய அரசு கரோனாவைக் காட்டி இறக்கிவிட்டிருக்கும் ஆரோக்கிய சேது செயலி அதனைத் தரவிறக்கம் செய்வோரின் தரவுகளைத் திருடிக்கொள்ளும், அரசின் மொழியில் சொன்னால், சேகரித்துக் கொள்ளும் அதிகாரத்தை அரசிற்குத் தந்திருக்கிறது.

ஆதார் குறித்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடந்தபோது, குடிமகன்களுக்கு அந்தரங்க உரிமை கிடையாது என வாதாடிய மோடி அரசு, ஆரோக்கிய சேது செயலியின் மூலம் பெறப்படும் தரவுகளை வேறு நோக்கங்களுக்குப் பயன்படுத்தாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது. இந்தச் செயலியை, அரசு மற்றும் தனியார் ஊழியர்கள் அனைவரும் தரவிறக்கம் செய்துகொள்ளுவதைக் கட்டாயமாக்கியிருக்கிறது மோடி அரசு. இந்த எதேச்சதிகாரம் நிறைந்த உத்தரவின் வழியாக அமைப்புரீதியில் திரட்டப்பட்ட ஊழியர்கள், தொழிலாளர்களின் தனியுரிமை பறிக்கப்பட்டிருக்கிறது.

சீனாவில் கரோனா பரவத் தொடங்கியபோது அறிமுகப்படுத்தப்பட்ட இது போன்ற செயலி, பின்னர் அம்மக்களின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தும் கருவியாகப் பயன்படுத்தப்பட்டது என்பதை நாம் நினைவில் கொண்டால், இந்தச் செயலி ஆக்டோஃபஸைப் போன்றது என்பதைப் புரிந்துகொள்ள முடியும்.

கரோனாவைக் காட்டி எந்தவிதச் சட்டபூர்வ அங்கீகாரமுமின்றி அறிமுகப்படுத்தப்பட்ட செயலியைப் போலவே, பி.எம். கேர்ஸ் என்ற புதியதொரு நிவாரண நிதிக் கட்டமைப்பைத் தன்னிச்சையாக உருவாக்கியிருக்கிறார், மோடி. இதற்கு யார் நிவாரண நிதி அளிக்கிறார்கள், எவ்வளவு அளிக்கிறார்கள், அந்த நிதி எவ்வாறு செலவழிக்கப்படுகிறது என்ற விவரங்களை யாரும் கேட்டு அறிய முடியாது. மோடியின் தலைமையில் மூன்று கேபினட் அமைச்சர்களை உறுப்பினர்களாகக் கொண்டு செயல்படக் கூடிய இந்த நிதிக் கட்டமைப்பின் வரவு- கணக்குகளை மைய அரசின் தலைமைத் தணிக்கை அதிகாரிகூடத் தணிக்கை செய்ய முடியாது.

இப்படிச் சட்டபூர்வ அங்கீகாரமும், வெளிப்படைத் தன்மையும் அற்ற விதத்தில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த நிதிக்கு மைய அரசு ஊழியர்கள் தமது சம்பளத்திலிருந்து நிதி அளிக்க வேண்டும் என்றும், நிதி அளிக்க விரும்பாதவர்கள் அது குறித்துத் தெரிவிக்க வேண்டுமென்றும் உத்தரவிடப்பட்டிருக்கிறது. இந்த உத்தரவின் மறைபொருள் என்னவென்றால், நெருக்கடியான காலக் கட்டத்தில் நீங்கள் அரசின் பக்கம் நிற்கவில்லை என்றால், அதற்கு எதிராக நிற்கிறீர்கள் என்பதுதான்.

இதுவொருபுறமிருக்க, கரோனாவின் தாக்கத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் பொருளாதார நடவடிக்கைகளை மீட்டெடுப்பது என்ற போர்வையில் தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகளை ரத்து செய்யும் சட்டத் திருத்தங்களை பா.ஜ.க. ஆளும் உ.பி., ம.பி., குஜராத் மாநில அரசுகள் நிறைவேற்றியுள்ளன.

சுற்றுப்புறச் சூழலைப் பாதிக்கக்கூடிய தொழிலையோ அல்லது திட்டங்களையோ தொடங்கும் முன்பாக, அத்திட்டங்கள் சுற்றுப்புறச் சூழலில் எத்தகைய தாக்கங்களை ஏற்படுத்தும் என்பது குறித்து அறிக்கை தயாரிக்க வேண்டும். அந்த அறிக்கையின் அடிப்படையில்தான் அத்திட்டங்களுக்கான பூர்வாங்க அனுமதி அளிக்கப்படும் அல்லது மறுக்கப்படும். சுற்றுப்புறச் சூழலைப் பாதுகாப்பதற்காக 1994- கொண்டுவரப்பட்டு, 2006- திருத்தப்பட்ட இந்தச் சட்டபூர்வ நடைமுறையை முற்றிலுமாகக் கைவிடும் அறிவிக்கையை, ஊரடங்கு அறிவிக்கப்படுவதற்கு முதல் நாள் வெளியிட்டிருக்கிறது, மைய அரசு.

மின்சாரச் சட்டம் 2003 பாரிய திருத்தங்களைச் செய்து வரைவு மின்சாரச் சட்டம்-2020- வெளியிட்டிருக்கிறது, மோடி அரசு. இவ்வரைவு சட்டமானால், அது மாநில அரசின் உரிமைகளை மட்டும் பறிக்கப் போவதில்லை. தமிழகத்தில் குடிசை வீடுகளுக்கும், விவசாயிகளுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரத்தை முற்றிலுமாக ஒழித்துக் கட்டிவிடும். மேலும், மின்சாரக் கட்டணத்திற்கு அளிக்கப்படும் மானியங்களை முற்றிலுமாக ஒழித்துவிட்டுத் தனியார் மின்சார விநியோக நிறுவனங்கள் பொதுமக்களையும், விவசாயிகளையும், சிறு தொழில் நிறுவனங்களையும் பகற்கொள்ளை அடிப்பதற்குக் கதவைத் திறந்துவிடும்.

கரோனா தொற்று அபாயத்தால் நாடாளுமன்றமும், மாநிலச் சட்டமன்றங்களும் முற்றிலுமாக முடக்கப்பட்டிருக்கும் நிலையில் கார்ப்பரேட் கும்பலுக்கு ஆதரவான இந்நடவடிக்கைகளை எடுக்கத் துணிகிறது, பா.ஜ.க. அரசு. கரோனா தொற்றையடுத்து உருவாகிவரும் புதிய சமூக, அரசியல் சூழ்நிலையை, அதாவது பொதுமக்கள் வீட்டுக்குள் முடக்கப்பட்டிருப்பதையும், பழைய மாதிரி அரசியல் ஆர்ப்பாட்டங்களை, பொதுக்கூட்டங்களை, பிரச்சாரங்களை நடத்த இயலாத சூழ்நிலையையும் பயன்படுத்திக் கொண்டு இவற்றை நடைமுறைக்குக் கொண்டுவருவதில் முனைப்புக் காட்டுகிறது.

கரோனா தொற்று மக்கள் அனைவரையும் பாதிப்பதில்லை. பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் அத்தொற்றால் இறந்து போய்விடுவதுமில்லை. ஆனால், இந்த கரோனா தொற்று நெருக்கடியைப் பயன்படுத்திக் கொண்டு மோடி அரசு கட்டவிழ்த்துவிட்டிருக்கும் மேற்கண்ட நடவடிக்கைகள் அனைத்தும் நாட்டை கார்ப்பரேட்-காவி பாசிச இருளுக்குள் விரைந்து தள்ளிச் செல்லும் அபாயமிக்கவை. யாரும் தப்பித்துவிட முடியாது.

கரோனா தொற்று அபாயத்திலும்கூடத் தமிழகத்துப் பெண்கள் டாஸ்மாக் திறக்கப்படுவதை எதிர்த்து வீதியில் இறங்கவில்லையா! அப்படிப்பட்டதொரு நெஞ்சுறுதியோடு மோடி அரசு திணிக்க முயலும் இந்த பாசிச அடக்குமுறைகளை எதிர்த்துத் தெருவில் இறங்குவோம்!

 – புதிய ஜனநாயகம்

 

 

 

 

 

 

 

 

புதிய ஜனநாயகம் – மே 2020 மின்னிதழ் – வினவு

தொடர்பு முகவரி

புதிய ஜனநாயகம்,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.ஃகே. சாலை, (அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம், சென்னை – 600024

தொலைபேசி: 94446 32561
மின்னஞ்சல் puthiyajananayagam@gmail.com

Permanent link to this article: http://new-democrats.com/ta/puja-05-2020-editorial/

Leave a Reply

Your email address will not be published.

%d bloggers like this:
Read more:
சர்கார் : முருகதாசுக்கு இருப்பது அசட்டு துணிச்சல் தான்!

ஐ.டி கம்பெனிகளில் பெரும் தலைகள் பலர் பேசுவதை கேட்டு உள்ளீர்களா?? ஐ.டி தலைவர்கள் உரையாற்றும் உப்புமா சொற்பொழிவுகளை, பொய் புனையும் பொழிவுகளை காசு கொடுத்தால் கூட யாரும்...

புதிய ஜனநாயகம் – ஜூன், ஜூலை 2020 – பி.டி.எஃப் டவுன்லோட்

இந்த இதழில் வெளியான கட்டுரைகள்: ஊரடங்கு, ஊரடங்குன்னு தொடர்ந்தோம்னா, நாசமாய்ப் போய்டுவோம்! இந்தியா – சீனா முறுகல் போக்கு: மோடி அரசின் சவடாலும் சரனாகதியும்! சுயசார்பு இந்தியா:...

Close