பொள்ளாச்சி பாலியல் குற்றக் கும்பலைத் தண்டிக்க முடியாதா?

பொள்ளாச்சி பகுதியில் நடந்த பெண்களுக்கு எதிரான பாலியல் கொடூரம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

பொள்ளாச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பெண்கள் நூற்றுக்கணக்கில் இந்த பாலியல் குற்றக் கும்பலிடம் சிக்கி சித்திரவதையை அனுபவித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்த செய்திகள் தற்போது வெளிவந்துள்ள சூழலில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கும் அவர்களது குடும்பத்தாருக்கும் பாதுகாப்பில்லை என்ற சூழலே நிலவுகிறது. இதற்கு சான்றாக பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணின் அண்ணன் காவல்நிலையம் சென்றபோது  இந்த குற்றக்கும்பல் அவரை தாக்கியுள்ளதையே எடுத்துக்கொள்ளலாம். இவ்வளவு பரபரப்பான பின்னரும் இதுபோல தாக்குதலில் ஈடுபடுகிறார்கள் என்றால், கடந்த ஏழு ஆண்டுகளாக இந்த கும்பல் எத்தனை அட்டூழியங்களை அரங்கேற்றியிருக்கும்.

ஒவ்வொரு நாளும் ஏதாவதொரு பெண் பாலியல் ரீதியில் தாக்குதலுக்கு ஆளாக்கப்பட்டதாக வரும் செய்தியை நாம் படிக்கிறோம். அவற்றையெல்லாம் வெறும் செய்திகளாக நாம் கடந்து சென்று விடுகிறோம். சமூகம் இப்படித்தான் இருக்கிறது, நாம் என்ன செய்ய முடியும் என்று நம்மையே நாம் சமாதானம் செய்து கொள்கிறோம். இது போன்ற செய்திகளைக் கேட்டுக் கேட்டு மரத்துப் போன நமது உணர்வுகளைத் தட்டி எழுப்ப பொள்ளாச்சிப் பெண்களின் கதறலைப் போன்றதொரு பெரும் சோக நிகழ்வு தேவைப்படுகிறது.

இந்த உணர்வு எழுச்சியும் சிறிது காலத்திற்குத்தான். இதற்கு முன்பு சென்னையில் மாற்றுத் திறனாளி சிறுமி பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்ட போது நாம் இவ்வாறு கொதித்தெழுந்தோம் அதற்குப் பிறகு அதனை மறந்துவிட்டு வேறு விவாதங்களுக்குள் சென்று விட்டோம். இந்தச் செய்தியும் சில மாதங்களில் மறந்துபோகும், ஏனென்றால் இதைவிட இன்னும் கொடூரமாக அல்லது இதைவிட பரபரப்பான செய்தி எங்கு, எப்போது கிடைக்கும் என்று ஊடகங்கள் தேடிக் கொண்டிருக்கின்றன. எவ்வளவு விரைவாக அடுத்த பரபரப்புச் செய்தி வருகிறதோ அவ்வளவு விரைவாக இது மறக்கடிக்கப்படும்.

இப்படி மறந்துவிட்டு கடந்துவிட்டால் போதுமா? நம்மால் ஏதும் செய்யமுடியாதா என்றால், முடியும்.

ஐடி துறை நண்பர்களே நாம் இதை துவங்கிவைப்போம். நமது சங்கம் பணிப்பாதுகாப்பு, சம்பள உயர்வு, போனஸ் வாங்குவது போன்ற கோரிக்கைகளுக்காக மட்டுமானதல்ல, சமூகத்தில் ஒடுக்கப்படும் அத்தனை விசயங்களுக்கும் எதிரானது. அந்தவகையில் ஒடுக்கப்படும்  பெண்களுக்கு ஆதரவாகவும், ஒடுக்கும் ஆண்களுக்கும் எதிராகவும் நின்று நாம் பிற துறையினருக்கு முன்மாதிரியாகத் திகழவேண்டும். அதை தொழிற்சங்கமாக நாம் முன்னெடுப்போம். நமக்கு தேர்தலில் ஓட்டு வாங்கவேண்டும் என்ற நிர்பந்தமில்லை, எதிரி பலமானவன் என்ற அச்சமில்லை, நம்மால் முடியுமா என்ற தயக்கமில்லை.

இதுபோன்ற சம்பவங்கள் அனைத்தும் ஏதோ ஓர் வகையில் மூடி மறைக்கப்படும். அதற்கு அரசியல், அதிகாரம், பணம், குண்டர் படை என்று ஏராளமான வழிமுறைகளை கையாள்வார்கள். சம்பந்தப்பட்ட விசாரணை அதிகாரியையே விலைக்கு வாங்குவார்கள், நீதிபதிகளைக் கூட விலைக்கு வாங்குவார்கள். இன்னும் மேலே கூட செல்வார்கள்.

இதெல்லாம் கற்பனையல்ல, காவல்துறை பெண்அதிகாரி விஷ்ணு பிரியாவிற்கு நேர்ந்தது என்ன? பெண் நீதிபதிகளே பாலியல் குற்றம் சாட்டவில்லையா? நிர்மலாதேவி விவகாரம் தெரிவிப்பது என்ன?

மற்றொரு பக்கம் குற்றம் செய்தவர்களை கண்டிப்பது போல கண்டித்துவிட்டு பெண்கள் கவனமாக உடை உடுத்த வேண்டும், கவனமாக  வேலைக்கு செல்ல வேண்டும், பெற்றோர் கண்காணிக்க வேண்டும் என்று அறிவுரை கூறுவோரும் உள்ளார்கள்.

இதையெல்லாம் மீறி ஒரு பெண் துணிந்து காவல்நிலையம் சென்றால் யார் பாதுகாப்பு கொடுப்பது. அதற்காக பயந்து தற்கொலை செய்ய வேண்டுமா? அல்லது ஊரைவிட்டு ஓடி விட வேண்டுமா? குற்றமிழைத்தவன் தான் வெட்கப்பட வேண்டும். அவன்தான் ஊரைவிட்டு ஓடவேண்டும்,  தற்கொலை செய்து சாக வேண்டும்.

மற்றொரு பக்கம் இதையெல்லாம் தாங்கிக்கொள்ள முடியாத சில காவல்துறை அதிகாரிகளும் இருக்கத்தான் செய்கிறார்கள். மேலிருந்து வரும் அழுத்தங்களுக்காக வேறு வழியில்லாமல் சகித்துக் கொள்கிறார்கள்; விலைபோகிறார்கள்.

எனவே, இதற்கெல்லாம் மாற்று கீழிருந்து நாம் கொடுக்கும் அழுத்தத்தில் இருக்கிறது. ஆம், சமூகத்தின் முன்னேறிய படித்த பிரிவான ஐடி துறை ஊழியர்களான நாம் களத்தில் இறங்கி வழிகாட்டினால் தான் இதுபோன்ற சமூகப் பிரச்சினைகளை தீர்க்கமுடியும்.

அதற்கு முதல் கட்டமாக, நாம் பணிபுரியும் இடங்களில் இது போன்ற பெண்களுக்கு எதிரான வன்முறைகள் நிகழாமல் தடுக்க, அவ்வாறு நிகழும் பட்சத்தில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆதரவாக நின்று செயல்பட, நம் அலுவலகங்களில் பெண்கள் தலைமையில் ஆண்களும் இணைந்து நமது சங்கத்தின் வழிகாட்டலுடன் குழுக்களை அமைப்போம். நமது அலுவலகங்களில் நடக்கும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பற்றி நாமே விசாரிப்போம். தக்க நடவடிக்கை எடுக்கும் வரை சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு பாதுகாப்பு கொடுப்போம். நிர்வாகத்திற்கு அழுத்தம் கொடுப்போம். சரியான தீர்ப்பு கிடைக்காவிட்டால் சாலைகளில் இறங்குவோம்.

இதுதான் சரியான மாற்றாக இருக்கும், இதைவிட சரியான மாற்று உங்களிடம் இருந்தாலும் சொல்லுங்கள் இணைந்து செயல்படுவோம்.

-பிரவீன்

Permanent link to this article: http://new-democrats.com/ta/punish-the-pollachi-rape-criminals/

Leave a Reply

Your email address will not be published.

%d bloggers like this:
Read more:
மோடியின் மருத்துவக் காப்பீடு : கார்ப்பரேட்டுகளுக்கு கறி விருந்து

நமக்குத் தேவை மருத்துவக் காப்பீடு அல்ல, மருத்துவ சிகிச்சை. அதை அரசு மருத்துவமனைகள் மூலமாக அனைவருக்கும் பொதுவாக, தேவைக்கேற்றபடி அரசே வழங்க வேண்டும். ஆனால், இந்த அரசுக்...

ஐ.டி ஆட்குறைப்பு – நாம் அறிவாளிகளா? அப்பாவிகளா?

மேற்கூறிய நடவடிக்கைகளின் மூலம் தகவல் தொழில் நுடப் ஊழியர்கள் தமது பிரச்சனைகளைத் எதிர் கொண்டால் நிச்சயம் அவர்களின் வாழ்க்கை ஜாலி தான் பிரச்சனைகள் வரும் போது துவண்டு...

Close