இந்த வீடியோ தனியார் கார்ப்பரேட் மருத்துவமனைகளின் நடத்தையின் கோர முகத்தை தோலுரித்து காட்டுகிறது. ஹேமநாதனின் அம்மா நடத்தப்பட்ட விதம் இவர்களது நடத்தையின் உச்ச கட்டம், ஆனால் இது போன்ற கார்ப்பரேட் மருத்துவமனைகளை நாடுபவர்கள் ஒவ்வொருவரும் இந்த விவரிப்பில் வரும் மிக மோசமான அம்சங்கள் ஏதாவது ஒன்றை கூடுதலாகவோ, குறைவாகவோ எதிர்கொண்டிருப்பார்கள்.
5 நட்சத்திர வசதி, குளிரூட்டப்பட்ட அறைகள், நவீன கருவிகள், விலை உயர்ந்த மருந்துகள், கச்சிதமான நடைமுறைகள், நூற்றுக்கணக்கான மருத்துவர்கள், பயிற்றுவிக்கப்பட்ட செவிலியர் என்று அனைத்தையும் பணத்தை மையமாக வைத்து இயங்குகின்றன இந்த மருத்துவமனைகள்.
நோயாளியின் தேவையை விட, அவரது பணம் கட்டும் திறமைதான் சிகிச்சையை தீர்மானிக்கிறது. பணம் கட்ட முடியாதவர்கள் உடனடி சிகிச்சை தேவைப்படுபவர்களாக இருந்தாலும், அந்த சிகிச்சை மருத்துவமனையில் இருந்தாலும் சிகிச்சை மறுக்கப்படுவார்கள். பணம் இருப்பதாக மதிப்பிடப்பட்டவர்களுக்கு தேடித் தேடி அனைத்து விதமான சிகிச்சைகளையும் வழங்குவார்கள்.
நோயாளியின் நோயை தீர்ப்பதுதான் கவனம் என்று இருக்க வேண்டிய மருத்துவர்கள், பணத்தை வாங்கிக் கொண்டு இயங்கும் எந்திரமாக மாற்றப்படுகிறார்கள். இத்தகைய கார்ப்பரேட் மருத்துவமனைகள் நமது சமூகத்தை பிடித்த நோய்கள். இவற்றை ஒழித்துக் கட்டி சமூகத்தை குணப்படுத்த வேண்டியிருக்கிறது.