ராட்சசன் : சைக்கோ சமூக வெறுப்புக்கு மருந்து என்ன?

மீபத்தில் வேலை இழந்த ஒரு ஐ.டி ஊழியர் வங்கியை கொள்ளையடிக்க முயற்சித்ததை படித்தோம். வேலை இழந்தவர்கள் மேனேஜரை தாக்குவது பற்றிய சம்பவங்களையும் நிறைய படிக்கிறோம். The Axe என்பது வேலை இழந்த ஒரு ஊழியர் ஒரு சீரியல் கில்லராக எப்படி மாறுகிறார் என்பது பற்றிய பிரெஞ்சு படம்.

இது போன்ற ஏதோ ஒரு காரணத்தால் சமூகத்தால் சீண்டப்பட்டு, அவமானப்படுத்தப்பட்டு, வாழ்க்கை மறுக்கப்பட்ட ஒருவர் சைக்கோவாக மாறி தொடர் கொலைகள் செய்வது பற்றிய படம் சமீபத்தில் வந்த “ராட்சசன்”. இந்தத் திரைப்படம் பற்றி ஒரு பார்வை.

***

ராட்சசன் சிறப்பான திரில்லர் வகை படம். படத்தை பிடிக்காதவர்கள் இருக்கவே முடியாது . கடைசி நிமிடம் வரை சீட் நுனியில் பார்க்க வைக்கும் காட்சி அமைப்புகள் மற்றும் ஹாலிவுட் பாணி திரைக்கதை. ஒரு முழுநீள நகைச்சுவை படமான “முண்டாசுப்பட்டி”-யை இயக்கிய இயக்குனர் இந்த படத்தில் எடுத்துக் கொண்ட தலைப்பு திகைக்க வைக்கிறது.

சீரியல் கொலையாளிகள் பற்றி படம் எடுக்க தயாரித்துக் கொண்டிருக்கும் இளைஞர், போலீசில் சேர்கிறார்; பள்ளிச் சிறுமிகள் கொலை செய்யப்பட்டு, கொடூரமாக உடல் சிதைக்கப்பட்டு வீசி எறியப்படுவதை துப்பறிகிறார் என்பதில் ஆரம்பிக்கிறது படம்.

போலீஸ் துறையில் மேலதிகாரிகளின் அற்பத்தனம், சர்வாதிகாரம், லாக்-அப் சித்திரவதை, போலீஸ் அரசியல் அனைத்தும் வருகின்றன. சட்டத்தினால் பயன் இல்லை; விசாரணையில் மனித உரிமை என்பது காவல் துறையின் இரக்கத்தில் காட்டப்படும் சலுகை; அரைகுறை புலனாய்வு செய்யும் வழக்கு அழுத்தத்தில் இருக்கும் காவல் துறை. சிபாரிசில் வேலைக்கு சேரும் நிஜம்!

தெளிவாக பேசுபவனை, வேலைக்கு சேர்ந்தவனை சிகரெட் வாங்கிட்டு வரச் சொல்லும் பெண் காவல் அதிகாரியின் அலட்சியம், திமிர், கர்வம்; கிட்டத்தட்ட அரை சைக்கோவாக செயல்படும் போலீஸ் அதிகாரி அவர். 3rd டிகிரி டிரீட்மென்ட் என்று அடித்தே உண்மையை வரவழைக்கலாம் என்று நினைக்கும் காவல் துறை; மனித உரிமை என்பது பாலியல் குற்றவாளிகளை காப்பாற்றும் அமைப்பு போலவும் காவல் துறை எது செய்தாலும் ஒரு நியாயம் இருக்கும் என்று யோசித்து சொல்லும் கதையோட்டம். வழக்கம் போல இறுதிக் காட்சிக்கு முன்பு ஹீரோ சஸ்பெண்ட் செய்யப்படுகிறார்.

வாய் பேச முடியாத, காது கேட்காதவர்கள் பற்றிய பகுதி, அவர்களுக்கான பதிவு செய்யும் மெசின், குழந்தைகள் ஓவியம், வண்ணம் தீட்டுதல், நடனம் என கலையில் ஆர்வம் கொண்டிருக்கின்றனர்.

கடத்தப்பட்டவர்கள் வாழ்வில் அன்றைய தினம் ஏதோ ஒரு விசேஷ தினமாக இருப்பது, அப்பா அம்மா திருமண நாள், பிறந்த நாள், டியூஷனுக்கு போவது என்று பல திசைகளில் இயல்பாக கதையை கொண்டு சென்று கொலையாளியை நம்மையும் தேட வைக்கிறார். ஆட்டோவை வேட்டையாடுவது, ஒவ்வொரு குளூவாக துரத்துவது என்று சஸ்பென்சை பராமரிக்கிறார். பிண பரிசோதனை டாக்டர் காட்டப்படுகிறார். இப்படி பல சந்தேகப்படுவதற்கான வாய்ப்புகளை உருவாக்கிக் கொண்டே செல்கிறார். கடைசியில் எதிர்பாரா விதமாக கிளிக் ஆகி, அதுவும் ஹீரோவின் ஆய்வு மூலம் கிளிக் ஆகி அடையாளம் காண்கிறார்கள்.

படம் கையாண்ட சில காட்சிகள் நெஞ்சில் அகலாதவை. நினைவில் கடந்து போக இயலாத நிஜங்கள்! பள்ளியில் ஆசிரியரின் சைக்கோ பாலியல் வக்கிரம், இரவில் பேருந்துக்குக் காத்திருக்கும் பெண்ணை துரத்தும் ரவுடிகள் என்று பல விஷயங்களை தொட்டுச் செல்கிறார், இயக்குனர்.

  • பெற்ற பெண்ணை கெடுக்க வந்த ஒருவனை தாய் கொலை செய்கிறாள். விசாரிக்கும் போது “அப்பன் என்ன பண்ணான்” என்று கேட்கும் போது “அவனைத்தான் கொன்னேன்” என்று சொல்லும் அவலம். குடிப்பழக்கத்தை தடுக்க முடியாத சமூகம், குற்றம் நடப்பதை தடுக்க முடியாத காவல் துறை; தற்காப்புக்காக கொலை என்று பொய் கையெழுத்து போட்டு தான் பாதிக்கப்பட்ட பெண்ணை பரீட்சைக்கு அனுப்ப வைக்கும் சமூக பெண்ணுரிமை தான் நிஜம்.
  • இன்பராஜ் என்ற ஆசிரியர். அவரை பார்க்கும் போதுதான் உண்மையில் பயம் வருகிறது. அவன் அந்த சிறுமிகளின் வலியை பார்த்து ரசிக்கும் குரூரமான மனநிலை படைத்தவனாக இருக்கிறான். போலீசில் சிக்கியதும் கோழை ஆகி விடுகிறான், அதன் பிறகு முரண்டுகிறான், ஒரு கட்டத்தில் சுடப்பட்டு சாகிறான்.

வில்லன் செய்யும் கொடூரங்களை நேரடியாக காட்டவில்லை. எனவே வில்லன் மீது அனுதாபமும் வருகிறது. suggestive-ஆக பின்னணி ஓலங்கள், கொல்லப்பட்ட சிறுமிகளின் சிதைக்கப்பட்ட உடல்கள் என்று காட்டுகின்றனர். அதைப் பார்த்து புரிந்து கொள்ள முடிந்தவர்களுக்கு கோபமும் வருகிறது.

ஒரு மனிதனை இயற்கையின் சமநிலை தவற வைத்தால் அவன் என்னவாக மாறுவான்? என்பது படம் முன் வைக்கும் கேள்வி. படத்தில் ராட்சசனாக மாறுவது வாழ்வில் இழப்புகளையும் அவமானங்களையும் சந்தித்த ஒரு நபர். இப்படியெல்லாம் நடக்குமா? இந்தப் படம் ஒரு கற்பனையே என்று நினைத்தால் உங்களை நீங்கள் மாற்றி கொள்ளவும். உங்கள் எண்ணத்தை மாற்றிக் கொள்ளவும்.

யாருக்கு வேண்டுமானாலும் சமநிலை தவறலாம். சமூகம் யாரை ராட்சசனாக மாற்றுகிறது?

  • 3.2 கோடி வழக்கு தேக்கத்தில், நீதிக்காக ஏங்கி 5 -10 வருடம் அலையும் சமநிலை தவறும் வழக்காடிகள் என்ன செய்வார்கள்?
  • கடுமையாக உழைத்து ஒழுங்காக வேலையை செய்தாலும் வேலையை இழக்கும் 94 % Contract ஒப்பந்தத் தொழிலாளி அதை எப்படி கையாள்வார்?
  • குடிநோயில் பாதிக்கப்பட்ட குடும்பத்தை சேர்ந்த மகன் மகள் தந்தை, சமூகத்தால் ஒதுக்கி வைக்கப்பட்டு இழிவுபடுத்தப்படும் LGBT மக்களின் மனநிலை எப்படி இருக்கும்?
  • இந்தியாவில் 2017 கணக்கெடுப்பின் படி 48 லட்சம் பேராக உள்ள மூன்றாம் பாலினத்தவர் உரிமைகள் மறுக்கப்பட்டால் அதன் விளைவு என்னவாக இருக்கும்?
  • வாழ்க்கையை நினைத்து ஏங்கும் மாற்றுத்திறனாளிக்கு வாய்ப்புகள் மறுக்கப்படும் போது என்ன ஆகும்?
  • கனவு கண்டு நன்றாக படித்து விட்டு பணம் இல்லாமல் படிக்கச் இயலாத மாணவர்கள் என்ன செய்ய வேண்டும்?
  • போலீசால் கைது செய்யப்பட்டு மனித உரிமைகள் மறுக்கப்பட்ட போராளிக்கு என்ன வழி?
  • மனித உரிமைகள் நீதி மறுக்கப்பட்ட அரசு எதிர் மனுதாரராக உள்ள வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்கள், சொத்துரிமை கட்டப்பஞ்சாயத்து நீதியில் சொத்துரிமை மறுக்கப்பட்ட பெண்கள், அபலை ஆண்கள் மற்றும் அனாதைகள் இவர்களுக்கு சமூகம் வைக்கும் தீர்வு என்ன?

உண்மையில், சாதி ரீதியாக ஒடுக்கப்படும் மக்களும், சுரண்டப்படும் தொழிலாளர்களும் சைக்கோவாக மாறி விடுவதில்லை. அவர்கள் இந்த சமூகத்தையே தம் உழைப்புதான் தூக்கிப் பிடிக்கிறது என்ற பெருமிதத்தோடு வாழ்கின்றனர்; கட்சிகளிலும், சங்கங்களிலும் அணி திரண்டு தமது உரிமைகளுக்காக போராடுகின்றனர்.

அப்படியே மனநிலை பிறழ்ந்தாலும் தினமும் உழைத்துப் பிழைப்பவர்களுக்கு சைக்கோ ஆகி சீரியல் கொலை செய்வதற்கு வாய்ப்புகள் இல்லை என்பது நிதர்சனம்.

ராட்சசன் படத்தில் சைக்கோவாக இருப்பவர்கள் அதிகாரத்தில் இருப்பவர்கள் அல்லது சொத்து, வசதி இருப்பவர்கள்தான். ராபர்ட் ஆகட்டும், இன்பராஜ் ஆகட்டும், இமைக்கா நொடிகள் படத்தில் வில்லன் ஆகட்டும் இவர்கள் எல்லோருமே தனிமையில் இருப்பவர்கள். கொலை செய்வதற்கும், சித்திரவதை செய்வதற்கும் போதுமான இடம் உடைய பெரிய வீடு, தனிமை வீடு வைத்திருப்பவர்கள். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுக்கு இவர்களைப் பற்றி எந்த அக்கறையும் இருப்பதில்லை.

இந்த சைக்கோ, சீரியல் கில்லர் போன்ற விஷயங்கள் முதலாளித்துவ தனிநபர் வாத, உழைப்பிலிருந்து அன்னியமாக்கும் சமூகத்தின் விளைபொருட்கள்.

இந்த சைக்கோ, சீரியல் கில்லர் போன்ற விஷயங்கள் முதலாளித்துவ தனிநபர் வாத, உழைப்பிலிருந்து அன்னியமாக்கும் சமூகத்தின் விளைபொருட்கள். இத்தகைய படங்கள் 20-ம் நூற்றாண்டின் இரண்டாவது பாதியில் அமெரிக்காவில் வெளியாக ஆரம்பித்தன. The Silence of the Lambs உள்ளிட்ட ஹேனிபல் லெக்டர் தொடர் படங்கள் இந்த வகையைச் சேரும். ராட்சசன் படத்தில் பாத்ரூமில் கறை படிந்த பேசின் எல்லாம் அந்தப் படங்களின் தாக்கத்தில் உருவானவை.

நம் நாட்டில் தனிமைப்படுத்தலையும், அன்னியமாதலையும் தோற்றுவிக்கும் முதலாளித்துவ உற்பத்தி முறையின் ஆதிக்கம் அதிகரிப்பதன் வெளிப்பாடுகள் ராட்சசன் போன்ற படங்கள்.

முதலாளித்துவ வளர்ச்சியால் வெகு வேகமாக அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் நமது சாதிய சுரண்டல் அடிப்படையிலான கிராம சமூக முறையில் ஊரில் எல்லோரும் எல்லோருக்கும் தெரிந்தவர்கள் என்ற நிலையில் இது போன்று உண்மையிலேயே மனம் பிறழ்ந்தவர்கள் கூட கொடூர குற்றங்களில் ஈடுபடுவதற்கான வாய்ப்புகள் குறைவு. அவர்கள் சட்டையை கிழித்துக் கொண்டு தெருவில் திரிவதோடு முடிந்து விடும். இல்லை குடும்ப வன்முறை, ஒடுக்குமுறைக்கான அடியாள் என்ற வடிவில் வெளிப்படும். தனிநபர்களாக தொடர் குற்றங்களை செய்வது சாத்தியமில்லை.

அதிகரித்து வரும் முதலாளித்துவ முறையிலான சமூகத்தில் “ராட்சசன்” போன்ற பிரச்சனைகள் அதிகரிக்கும். அமெரிக்காவில் நடக்கும் தனிநபர் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் இதற்கு சான்று. பழைய பாணி சாதிய சுரண்டல்களும், புதிய பாணி முதலாளித்துவ சுரண்டல், அன்னியமாதலும் இல்லாத அவற்றை ஒழித்துக் கட்டிய ஒரு சமூக ரீதியான வாழ்க்கை முறையில்தான் இந்தப் பிரச்சனைகளை தீர்க்க முடியும்.

முதலாளித்துவ சமூகத்தில் எல்லா திறமையும் இருந்து வாழ்க்கையை வாழ முடியாமல் போகிறவர்கள் வில்லன்கள் தான்; உண்மையில் சமூகம் நல்லவர்களை திறமைசாலிகளை மடைமாற்றி சமூகத்திற்கு எதிராக செயல்பட வைக்கிறது.
வில்லன்கள் உருவாக்கம் சமூக அமைப்பையே சாரும். ஒரு வாழ்க்கையை வாழ இயலாத ஹார்மோன் குறைபாடு காதல் மறுக்கப்பட்டு, அவமானப்படுத்தப்பட்டு அசிங்கப்பட்டு, அநீதிக்கு நீதி கேட்டு வன்முறையை கையில் எடுப்பதை படம் விரிவாக கையாள்கிறது.

அதை சட்டத்தின் முன் நிறுத்தாமல் தானே தண்டனை கொடுக்க நினைக்கும் அறியாமை கொண்ட காவல் துறை அதிகாரி. ஒரு பெண்ணுக்கு அநீதி என்றால் மஹாபாரதம் சமூகத்தை அழிப்பது சரி என்கிறது. ஒரு பெண்ணுக்கு அநீதி என்றால் ராமாயணம் சமூகத்தை அழிப்பது சரி என்கிறது. “ராட்சசன்” படம் எந்த ஒரு தவறுக்கும் சமூகத்தை அழிப்பது தவறு என்கிறது. இராவணன் பக்கம் நின்று பார்த்தால் தான் நியாயம் புரியும். சமூகம்தான் தவறானவர்களை உருவாக்குகிறது .

பேன்ட்-ஐ கழற்றி ஓட விடுவது, பள்ளிக்கு அப்பா என்ற பெயரில் வேறு நபரை அழைத்து வந்து அவர் அடிப்பது, அதை ஆசிரியர் தடுப்பது என்று பரியேறும் பெருமாள் படத்துக்கும் இதற்கும் ஒரு சில காட்சி ஒற்றுமைகள் இருக்கின்றன.

இரண்டாம் பாதி கொஞ்சம் நீண்டு விட்டது என்பதுதான் பலரின் விமர்சனம். தினமலர் விமர்சனமே ஒரு காமெடிதான். இப்படியெல்லாம் காட்டினால் மனம் துன்புறுகிறது. பள்ளி ஆசிரியர் இப்படி இருப்பாரா, கொடைக்கானல் மேட்டுக்குடி பள்ளியில் சிறுவர்கள் இப்படி நடந்து கொள்வார்களா, போலீஸ் இப்படி இருக்குமா, இதை எல்லாம் காண்பிக்க வேண்டிய அவசியம் எனன என்று பொங்குகிறார்கள்.

நீதிக்கு எதிராக இருப்பவர்களை யார் தண்டிக்க வேண்டும்? ராட்சசனா? ரட்சகனா? அரசா? மக்களா?

– காசி குமார்

Permanent link to this article: http://new-democrats.com/ta/raatchasan-review/

Leave a Reply

Your email address will not be published.

%d bloggers like this:
Read more:
கஜா புயல் : ஒட்டு மொத்த அழிவு, எளிய மக்கள் மீது அதிக சுமை

"எல்லாமே போயிருச்சி. வீட்டில பொருள் எல்லாம் போச்சு. மிக்சி, பீரோ எல்லாத்திலையும் தண்ணீ ஏறி கெட்டுப் போச்சு என்ன செய்யப் போறேன்ன்னு தெரியலை, இந்த இரண்டு பொண்...

இன்ஃபோசிஸ் பணமூட்டைகளின் குடுமி பிடிச்சண்டை – ஊழியர்கள் நடுக்கடலில்

நிறுவனத்தின் ரகசியங்கள் வெளியில் போய் விடாமல் பாதுகாக்க அந்த தொகை வழங்கியதாக கூறியிருக்கிறது, இன்ஃபோசிஸ். முறைகேடுகளை மறைப்பதற்காக பணம் கொடுக்கப்பட்டதா என்று கேள்வி எழுப்புகிறார் நாராயணமூர்த்தி.

Close