இந்தியாவில் இனவெறி? 2500 ஆண்டுகளாக அறியப்பட்ட சாதிவெறி

இனவெறி? இந்தியாவில் 2500 ஆண்டுகளாக அறியப்பட்ட சாதிவெறி

நமது ஊடகங்களும் அரசு நிறுவனங்களும் இந்தியாவின் ஜனநாயகம் பற்றியும் மதச்சார்பின்மை பற்றியும் 24*7 கூச்சலிடுகின்றன. அவர்கள் சொல்லி முடிப்பதற்குள்ளாகவே “மற்றவர்களில்” இன்னொருவர் கொல்லப்படுகிறார். மறுபடியும் இது தொடர்கிறது…

இதோ இந்தியாவில் ஆப்பிரிக்கர்களின் கதை. இது அன்னியர் வெறுப்பு பற்றியது அல்ல. இந்தியர்களின் இந்த வெறுப்பு கருப்பு நிறமுள்ள வெளிநாட்டவர்களிடம் மட்டுமே காட்டப்படுகிறது, வெள்ளையர்கள் எப்போதும் கடவுளாக கருதப்படுகிறார்கள்!

இந்தக் கட்டுரையில் சுட்டிக்காட்டியுள்ளபடி சினிமா ஹீரோக்களும் அமெரிக்காவின் குடியரசுத்தலைவர்களும் அவர்களின் தோலின் நிறம் எதுவாக இருந்தாலும் மரியாதையாக நடத்தப்படுகிறார்கள்.

இந்தக் கட்டுரையை எழுதியவர் வர்ணாசிரமம் எனும் இந்தியச் சிறப்பியல்புகளுடன் கூடிய இனவாதத்தை தன் சொந்த அனுபவத்திலிருந்து எழுதியிருக்கிறார்.

‘வெள்ளை, உயரம், கூர்மையான மூக்கு’ = ஆரியர்கள் = கடவுள்கள்
‘கருப்பு, குட்டை, தட்டையான மூக்கு’ = தஸ்யுக்கள் = அடிமைகள்

பார்ப்பனியம் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக இனவாதத்தைக் கடைபிடித்து வருகிறது. ஆனால் அதிகாரத்தில் இருக்கும் நபர்களுக்கு பார்ப்பனியத்தில் பெருமைக்குரிய இடம் தரப்படும்.

ஆகவே இந்தியாவில் வேரூன்றியிருக்கும் இனவாதம் அதை கடைபிடிப்பவர்களால் பெருமையாக பார்க்கப்படுகிறது.

நமது ஆப்பிரிக்க சகோதரர்களுக்கு நாம் சொல்ல வேண்டிய ஒரே ஒரு செய்தி இருக்கிறது. “ஆம், நீங்கள் விவரிக்கும் இந்தக் கொடுமைகளை நாங்கள் பல வருடங்களாக எங்கள் சொந்த நாட்டில் அனுபவித்து வருகிறோம்”

இந்தியாவில் ஒரு இனவாதத்தின் கதை

நைஜீரியா லட்சக்கணக்கான இந்தியர்களுக்கு புகலிடமாக இருப்பதாகக் கூறப்படுகிறது – 20 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் என்று சொல்கிறார்கள். ஆனால் ஒரு பத்து லட்சத்துக்கும் மேல் என்று சொன்னால் உண்மைக்கு நெருக்கமாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

வெளிநாட்டில் வாழ்வதை பெரும்பாலான இந்தியர்கள் பெரிதாக நினைக்கிறார்கள். ஆனால் மற்றவர்கள் தங்கள் நாட்டிற்கு வருகையில் தலைகீழாக, அவர்களை தாழ்வாகப் பார்க்கிறார்கள். தாங்களே வெளிநாட்டிற்கு, குறிப்பாக ஐரோப்பா அல்லது அமெரிக்காவுக்கு போக விரும்புகிறார்கள் என்பதை மறந்து விடுகிறார்கள். நாட்டின் ஒவ்வொரு மூலையிலும் குறிப்பாக பஞ்சாபில், IELTS மற்றும் TOEFL பயிற்சி மையங்கள் நிறைய உள்ளன என்பதில் ஆச்சரியமில்லை.

வளமிக்க மத்திய கிழக்கு நாடுகளில் வசிக்கும் இந்தியர்களையும், தென்னாப்பிரிக்கா, மலேசியா போன்ற நாடுகளில் மக்கள் தொகையின் ஒரு பகுதியாய் வசிக்கும் இந்தியர்களைப் பற்றியும் பொதுவாக பலருக்கும் தெரியும்; ஆனால், ஆப்பிரிக்காவின் மற்ற நாடுகளுக்கு சென்று பார்த்தால் அங்கும் இந்தியர்கள் தங்கள் வாழ்க்கைக்கான போராட்டத்தில் ஈடுபட்டிருப்பதை காண்பீர்கள்.

சோகமான உண்மை என்னவென்றால், வெள்ளையின வெளிநாட்டவர் இல்லாத அனைவரும், குறிப்பாக பெரும்பாலான சந்தர்ப்பங்களில் தீவிர இனவாதத்தால் பாதிக்கப்படும் கறுப்பினத்தவர்கள் வித்தியாசமாக – ஒரு தீர்மானகரமான வகையில் தாழ்வாக – நடத்தப்படுகிறார்கள். ஆனால் அந்த நடத்தை எப்படி உருவாகிறது? ஒரு குறிப்பிட்ட மக்களுக்கு எதிரான தேவையற்ற எதிர்மறை கண்ணோட்டங்கள் இதற்கு ஒரு தூண்டுதலாகும்.

சில இந்தியர்கள் வெளிநாட்டவர்களை, குறிப்பாக ஆப்பிரிக்கர்களைப் பார்க்கையில், அவர்கள் கருப்பு நிறமுள்ள நபர்களை ஒருபோதும் பார்த்திராததுபோல உற்று பார்க்கிறார்கள், சிரிக்கிறார்கள், கேலி செய்கிறார்கள். பொதுப் போக்குவரத்தை பயன்படுத்துவது சில நாட்களுக்கு பிறகு வெறுப்பானதால் ஒரு கார் வாங்குவது அவசியம் என்று கருதினோம்; சில பயணிகள் எங்களுக்கு அருகில் உட்கார்வதை தவிர்த்தனர் (ஒருவேளை எங்களின் கருப்பு நிறம் அவர்களை கறைப்படுத்தி விடக் கூடாது என்பதற்காக?), மற்றவர்கள் நாங்கள் கீழிறங்கும் வரை எங்களை உற்றுப் பார்ப்பார்கள். நான் ‘கறுப்பினத்தவள்’ என அழைக்கப்படுவதை வெறுக்கிறேன். ஆனால் நான் ஆப்பிரிக்காவை சேர்ந்தவள் என்பதனால், நான் வெள்ளையாக இல்லை, எனக்கு கூரான நீண்ட மூக்கு கிடையாது. பல இந்தியர்களைக் காட்டிலும் நான் அழகாக இருந்தாலும் நான் இயல்பாகவே கருப்பு நிறமாக இருக்கிறேன். ஆனால் இங்கே இருக்கின்ற பிரச்சினை நிறத்தை விட மிக முக்கியமானது.

நான் பல்கலைக்கழக வளாகத்துக்கு வெளியில் தங்கி இருந்த நாட்களை நினைத்துப் பார்க்கின்றேன். எனது வீட்டு உரிமையாளரின் மகன் என் கணவர் மற்றும் என்னுடைய தொலைபேசி எண்களை ‘நீக்ரோ’ என்று சேமித்து வைத்திருப்பதை நான் அறிய நேர்ந்தது. ஒருமுறை எங்களுடைய தவறவிட்ட தொலைபேசியை அழைப்பதற்கு நாங்கள் அவருடைய தொலைபேசியைப் பயன்படுத்திய போது இது எனக்கு தெரிய வந்தது. அர்ஃபான் என்ற அந்த இளம் நண்பர் அதை நாங்கள் கவனித்ததை தெரிந்து சங்கடமாக உணர்ந்தார். ‘நான் இல்லை, என் அப்பா தான்’ என்று அவர் கூறினார். ஒரு மூத்த பஞ்சாப் போலீஸ் அதிகாரியாக இருந்தபோதிலும் பல்கலைக்கழகம் என்பதை சரியாக உச்சரிக்கக் கூட தெரியாத, 50 வயதான அவர் தந்தை, ‘நீக்ரோ 1’ மற்றும் ‘நீக்ரோ 2’ என்று எங்களது எண்களை சேமித்து வைத்துள்ளார் என்பதை நாங்கள் நம்ப வேண்டும் என்று அர்ஃபான் எதிர்பார்த்தார்.

மிகவும் அக்கறையான தோழி ஒருத்தி எங்களுக்கு இருந்தாள். அவள் எங்களின் ஒவ்வொரு அசைவைப் பற்றியும் கேள்வி கேட்டுக்கொண்டே இருந்தாள். அவள் எங்களைப்பற்றி கேட்டதெல்லாம் ஒரு “ஆர்வம்” காரணமாகத்தானே தவிர அக்கறையில்லை என்று பின்புதான் ஒரு நாள் தெரிய வந்தது. எங்களுடன் தனியாக இருந்தபோது சகஜமாக இருந்தவருக்கு, ​​பொதுவெளியில் எங்களுடன் பழகுவதற்கு சங்கடமாக இருந்தது. சில இந்தியர்கள் கறுப்பின நண்பர்களை வீட்டுக்கு அழைப்பது ஒருபுறமிருக்கட்டும், அவர்களுடன் சேர்ந்து நடக்கக் கூட மாட்டார்கள். அதே தோழியால் நாங்கள் கறுப்பினத்தவர்கள் என்பதால் எங்களை தன் திருமணத்திற்குக் கூட அழைக்க முடியவில்லை. அவரால் கறுப்பினத்தை சேர்ந்த நண்பர்களுடன் சேர்ந்து நிற்கும் அவமானத்தை தாங்க முடியாமல் இருக்கலாம்.

கல்லூரியின் சேர்க்கை பிரிவில் பணிபுரிந்த என் கணவர், அதைப்பற்றி தெரியாத அங்கு வரும் பெற்றோர்கள், மாணவர்களிடமிருந்து மட்டுமல்லாது, அவரது சக ஊழியர்களிடமிருந்தும் வரும் ஒருவித வெறுப்பான, கிட்டத்தட்ட “உன்னை இங்கே வேலை செய்ய அனுமதித்தது யார்?” எனும் தோரணையில் வரும் பார்வையைத் தவிர்ப்பதற்காக, இறுதியாக அவரது அடையாள அட்டையை கழற்றி வைக்க வேண்டி வந்தது. அவருடன் சில வேலைகளை பகிர்ந்துகொள்ள சொல்லப்பட்ட சக ஊழியரான ஒரு பெண் வெளிப்படையாக ஹிந்தியில் ‘காலா’ என்று முடியும் சில வார்த்தைகளை (‘நான் இந்த கருப்பனுடன் வேலை செய்ய மாட்டேன்’ என்று சொன்னதாக நாங்கள் புரிந்து நினைத்துக் கொண்டோம்) சொல்லித் திட்டிவிட்டு வெளியேறியதுடன் ஒப்பிடுகையில் இது ஒன்றுமில்லை.

பொதுவெளியில் பெற்றோர்கள் முன்னிலையிலேயே அந்நியர்களையும் வயதானவர்களையும் அவமதிக்கும் சில குழந்தைகளை நான் பார்த்திருக்கிறேன். இதில் சோகமான விஷயம் என்னவென்றால் அவர்கள் இயற்கையாகவே வடகிழக்கு இந்தியர்கள், கருத்த தோலுடைய இந்தியர்கள், தாழ்ந்த சாதி இந்தியர்கள், எங்களைப் போன்றவர்கள் ஆகிய சில பிரிவு மக்களை விட உயர்ந்தவர்கள் என்று கற்பிக்கப்படுகிறார்கள் என்பதுதான். பொதுவெளியை தவிர்ப்பதற்காக என்னை குற்றம் சாட்ட முடியுமா?

இளைஞர்கள், வயதானவர்கள் என்று இரு பிரிவைச் சார்ந்தவர்களும் நாங்கள் செய்யும் எல்லாவற்றையும் பார்த்து -ஏதோ நாங்கள் எங்கள் நாட்டில் காரே ஓட்டாதது போலவும், தொலைபேசி மற்றும் லேப்டாப்-களை பயன்படுத்தாதது போலவும் ஆச்சரியப்படுகிறார்கள். இஸ்லாத்தில் இனவாதம் ஒரு பாவச்செயல். ஒரு சில வளர்ந்த நாடுகளில் இனவாதம் ஒரு தண்டனைக்குரிய குற்றம். ஆனால் இந்தியாவில் இனவாதம் ஒரு பெருமைக்குரிய விஷயமாக தோன்றுகிறது. கடைகள் அல்லது வரிசைகளில் நிற்கும்போது நாங்கள் வெகுநேரமாக நின்று கொண்டிருந்தாலும் எப்போதும் இந்தியர்கள் தங்களை முதலில் கவனிக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். இந்தியர்களின் குடிமை உணர்வின்மையையும், பிறரை மதிக்கத் தவறும் பண்பையும் நான் வெறுக்கிறேன்.

இடப்பற்றாக்குறை இல்லாவிட்டால், எனது கல்வி சூழலில் எனக்கு நேர்ந்த அனுபவங்களை விரிவாக விவரித்திருப்பேன். ஒரு நாள் எனது ஆசிரியர் ஒருவர் காலனிய காலத்துக்கு பிந்தைய நவ-இலக்கியங்களை பற்றி எடுத்த வகுப்பில் திரும்பத்திரும்ப ஆப்பிரிக்கர்களின் இருண்ட வரலாற்றைப் பற்றி நிகழ்கால மொழியில்- “ஆப்பிரிக்கர்கள் அடிமைகள், காட்டுமிராண்டிகள், மனித மாமிசம் உண்பவர்கள்” என்று சொல்லி அவர்கள் மீதான தாக்குதல்கள், அடக்குமுறைகளை நியாயப்படுத்தி எங்களுக்கு எதிராக எழுதப்பட்டுள்ள கீழைத்தேச படைப்புகளைப் பற்றி அவர் பேசிய போது எனக்கு நரகத்தில் இருப்பது போல இருந்தது. வகுப்பிலிருந்த ஒரே ஒரு ஆப்பிரிக்க இன மாணவியான எனக்கு கோபத்தில் (அல்லது அவமானத்தில்) திருப்பிக் கத்த வேண்டும் போலிருந்தது. ஒரு முறை நான் பதில் சொல்ல தூண்டப்பட்ட போது என்னால் முடிந்த வரை எனது வார்த்தைகளை கட்டுப்படுத்த முயன்றேன். “சார், ஆப்பிரிக்க எழுத்தாளரால் எழுதப்பட்ட ஆப்பிரிக்க வரலாற்றை நீங்கள் ஒரு முறையாவது படித்திருக்கிறீர்களா?” என்ற எளிய கேள்வியை, ‘பல புத்தகங்களை படித்துள்ளதால் ஆப்பிரிக்காவைப் பற்றி தனக்கு எல்லாம் தெரியும்’ என்று நினைத்துக் கொண்டிருந்த ஆசிரியரைப் பார்த்துக் கேட்டேன். அவர் “இல்லை” என்ற தயக்கமான பதிலுடன் “யார் எழுதியிருக்கிறார்கள்?” என்று கேட்டார். ஆங்கிலத்தில் Phd பட்டத்துடன் பல பத்தாண்டுகள் அனுபவம் பெற்ற ஆசிரியரின் இந்த கேள்வி என்னை ஆச்சரியபடுத்தவில்லை. எனக்கு அவருடைய பிரச்சினை என்னவென்று தெரியும் – அவர் ஒரே மாதிரியான கண்ணோட்டம் கொண்ட ஒரே மாதிரியான பொருள்படும் (பெரும்பாலும் காலனிய) எழுத்தாளர்களின் படைப்புகளையே படித்திருக்கிறார்.

இந்தியர்களானாலும் கூட, ஆப்பிரிக்க பாரம்பரியத்தின் காரணமாக சித்திஸ் இன பழங்குடியினர் இன்னும் தங்கள் நாட்டில் நியாயமான அங்கீகாரத்தை பெற முடியவில்லை. அதே ஆப்பிரிக்க பாரம்பரியத்தின் காரணமாக ஒலிம்பிக்கில் வெற்றி பெற இப்போது இந்தியா அவர்களைப் பயன்படுத்திக்கொள்ள முயல்வது முரண் தான்.

இந்தியாவில் இனவெறி நகைக்கத்தக்க முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டதாகும்- அவர்கள் யாரை அலட்சியம் செய்ய வேண்டும் யாரை அலட்சியம் செய்யக்கூடாது என்று தேர்ந்தெடுக்கிறார்கள். நாங்கள் சினிமா பார்க்க தியேட்டருக்கு செல்லும்போது ஹாலிவுட் திரைப்படங்களில் கறுப்பினத்தவர்கள் செய்யும் காட்சிகளை மிகவும் சிலிர்ப்புடன் ரசிக்கும் இந்தியர்களை நான் பார்த்திருக்கிறேன். Fast and Furious 8 திரைப்படத்தில் டைரஸ் கிப்சன் அல்லது லுடக்ரிஸ் செய்யும் சண்டைக்காட்சிகளை இந்தியர்கள் மிகவும் ஆர்வத்துடன் ரசித்தது எனக்கு நினைவில் இருக்கிறது. அதே போன்று 2016 ஜனவரி 26 அன்று பராக் ஒபாமா இந்தியா வந்தபோது உலகம் மிகச்சிறந்த ‘இந்தியா’வைப் பார்த்தது; அவர்களின் சிறந்த விருந்தோம்பல் ஒரு கறுப்பினத்தவரான அமெரிக்காவின் குடியரசுத்தலைவருக்கு அளிக்கப்பட்டது. ஆனால் அதே கறுப்பினத்தவர்களை அவர்கள் தங்கள் நாட்டில் பார்க்கும்போது அலட்சியப்படுத்துகிறார்கள். கிருஷ்ணரும் பல இந்துக் கடவுளரும் இருண்ட அல்லது கருப்பு நிறம் எனக் கூறப்பட்டாலும் அது இந்தியர்களின் இனவாதத்தை சுத்தப்படுத்த போதுமானதாக இல்லை.

நான் பார்ப்பதற்கு இந்தியர்களைப் போல் இல்லை. நான் ஒரு ஆப்பிரிக்கன், ஒரு பெருமிதம் கொண்ட நைஜீரியன். சில இந்தியர்களைக் காட்டிலும் நான் அழகாக இருந்தாலும், அவர்களை விட படித்திருந்தாலும் பொருளாதார ரீதியாக பாதுகாப்பான நிலையில் இருந்தாலும் கூட அவர்கள் என்னை தாழ்ந்தவளாகவே பார்க்கிறார்கள். “நீ ஒரு ஆப்பிரிக்க இனத்தைச் சேர்ந்தவள் என்று எனக்கு தெரியும், நீங்கள் எல்லாம் ஏழைகள், முன்பு நீங்கள் அடிமைகளாக இருந்தீர்கள், இப்போது நீங்கள் வறுமையில் இருந்து விடுபடுவதற்காக இங்கு வந்திருக்கிறீர்கள்” என்று சொல்லும் கண்களுடனே அவர்கள் எங்களைப் பார்க்கிறார்கள். இதுதான் ஆப்பிரிக்காவைப் பற்றி அவர்கள் வைத்திருக்கும் ஒரே பார்வை. அன்புள்ள இந்தியர்களே தயவுசெய்து உங்கள் அறிவை புதுப்பித்துக் கொள்ளுங்கள். தயவுசெய்து இந்த மாதிரியான உங்களின் காலனிய முத்திரை குத்தலில் இருந்து வெளியே வாருங்கள்.

இதுவரையில் நான் இனவெறிக்குப் பழகிப்போயுள்ளதால் எனக்கு என்னைப்பற்றி கவலையில்லை. ஆனால் பாலினம், வயது, நிற வித்தியாசமின்றி பார்க்கும் அனைவருடனும் விளையாடும் மகன் எனக்கு இருக்கிறான். அந்த சிறுவன் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். என் மகனின் எதிர்காலத்தைப் பற்றி நான் கவலைப்படுகிறேன். சில நாட்களுக்குப் பிறகு அவனும் இந்த இனப் பாகுபாட்டுக்கு உட்படுத்தப்படுவான் என்று நான் பயப்படுகிறேன். அது அவனுக்கான கடவுளின் தேர்வை அவனை கேள்வி எழுப்பச்செய்யும்.

அனைத்து இந்தியர்களும் இனவெறியர்கள் என்று நான் கூறவில்லை ஆனால் பெரும்பாலானவர்கள் அப்படி இல்லை என்று கூறுவது சிரமம். என்னுடைய உயர்கல்வியின் போது என் வகுப்பைச் சேர்ந்த சில இந்தியர்களுடன் நான் மறக்க முடியாத தருணங்களைக் செலவழித்திருக்கிறேன். ஒரு சில அழகான குடும்பங்களுடன் நான் மகிழ்ச்சியாக உணவருந்தியிருக்கிறேன். மிகவும் மரியாதையானவர்களாகவும் உதவி செய்பவர்களாகவும் இருக்கும் சில இந்தியர்களை நான் பார்த்திருக்கிறேன். அந்த ஒரு சில இந்திய நண்பர்களுக்கு நான் எப்போதும் நன்றியுடன் இருப்பேன். ஆனால் அவர்கள் விதிவிலக்கானவர்கள்.

ஆப்பிரிக்கர்கள் அமெரிக்காவில் கடுமையான சித்திரவதை மற்றும் இனவெறிக்கு உட்படுத்தப்பட்ட நேரத்தில், அவர்கள் தங்களின் விடுதலைக்கு ஒரு சொற்றொடரை பயன்படுத்தினர். நான் இங்கு அதே சொற்றொடரை பயன்படுத்துகிறேன். எனக்கும் அவர்களைப் போல விடுதலை வேண்டும் என்பதற்காக அல்ல, இந்தியர்களுக்கு “கறுப்பு அழகு” என்பது சொல்லப்பட வேண்டும் என்பதற்காக.

சாதியா அபுபக்கர் L.P. பல்கலைக்கழகத்தில் படித்த PhD மாணவி. 2014ல் இருந்து இந்தியாவில் வசித்து வருகிறார்.

மொழிபெயர்ப்பு: மணி

 

Permanent link to this article: http://new-democrats.com/ta/racism-known-for-2500-years-in-india-called-casteism-ta/

Leave a Reply

Your email address will not be published.

%d bloggers like this:
Read more:
ஐ.டி/ஐ.டி சேவை ஊழியர்களுக்கு கம்யூனிஸ்ட் அறிக்கை

கார்ப்பரேட்டுகளுக்கிடையே வளர்ந்துவரும் போட்டியும், அதன் விளைவாக எழுகின்ற வணிக நெருக்கடிகளும் ஊழியர்களின் சம்பளங்களை எப்போதும் ஏற்ற இறக்கத்துக்கு உள்ளாக்குகின்றன. தொடர்ந்து அதிவேக வளர்ச்சி காணும் எந்திர சாதனங்களின்...

தொழிலாளர்கள் மீதான போரை நிறுத்து! – பு.ஜ.தொ.மு மற்றும் தோழமை சங்கங்கள் அறிக்கை

தொற்று நோய் மற்றும் அதன் பாதிப்பு காலங்கள், என்பது பா.ஜ.க அரசைப் பொறுத்த வரை உழைக்கும் வர்க்கத்தின் மீது ஏறித் தாக்கவும், அதனிடமிருந்து குறைந்தபட்ச ஜனநாயக மற்றும்...

Close