எச்.சி.எல் ரமேஷா தீர்ப்பு – ஐ.டி ஊழியர்களின் உரிமை போராட்டத்தில் ஒரு மைல்கல்

2016-ம் ஆண்டு மே மாதம் வெளியான ரமேஷா வழக்கின் தீர்பபு ஐ.டி ஊழியர்களின் உரிமைகளுக்கான சட்டப் போராட்டத்தில் ஒரு முக்கிய மைல்கல்

எச்.சி.எல் நிறுவனம் ரமேஷா என்ற ஐ.டி துறை ஊழியரை வேலை நீக்கம் செய்தது சட்ட விரோதமானது” என்று சென்னை தொழிலாளர் நீதிமன்றம் அளித்துள்ள  தீர்ப்பின் மூலம் ஐ.டி துறை ஊழியர்களுக்கு 30 ஆண்டுகளாக மறுக்கப்பட்டு வந்த, இந்திய அரசியல் சட்டமும் தொழிலாளர் சட்டங்களும் வழங்கும் அடிப்படை உரிமைகள் உறுதிப்படுத்தப்பட்டன.

திரு ரமேஷா ஆகஸ்ட் 20, 2009 என முன்தேதியிட்டு 2010-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 26-ம் தேதி எச்.சி.எல் நிறுவனத்தில் பணி நியமனம் பெற்றார். அதாவது, அவரை வேலைக்கு அமர்த்தி, அவரது பணியை பரிசீலித்து பின்னரே வேலை நியமனம் வழங்கியிருக்கிறது எச்.சி.எல். அதைத் தொடர்ந்து அந்த ஆண்டு செப்டம்பர் 20-ம் தேதி சிறப்பான பணிக்கான பாராட்டையும், ஊதிய உயர்வையும் ரமேஷா ஈட்டினார்.

ஆனால், ஜனவரி 22, 2013 அன்று ரமேஷாவை சட்ட விரோதமாக வேலை நீக்கம் செய்தது, எச்.சி.எல். ஆயிரக்கணக்கான ஐ.டி ஊழியர்கள் பல்வேறு நிறுவனங்களில் ஒவ்வொரு ஆண்டும் எதிர் கொள்வதைப் போல அவர் மீது என்ன குறைபாடு என்பதை எழுத்து மூலமாக தெரிவிக்கவோ, அது தொடர்பாக முறையான விசாரணை நடத்தவோ செய்யாமல் ரமேஷாவுக்கு வேலை நீக்க உத்தரவை வழங்கியிருக்கிறது எச்.சி.எல்.

இந்த சட்டவிரோத வேலை நீக்கத்தை எதிர்த்து சென்னை தொழிலாளர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறார், ரமேஷா. தமக்கு இழைக்கப்படும் அநீதியை சகித்துக் கொண்டு, சட்ட விரோத வேலை நீக்கத்தை மவுனமாக ஏற்றுக் கொண்டு, வேறு வாய்ப்புகளை தேடிப் போய்விடாமல் சட்டபூர்வமான தனது உரிமைகளையும், தனது தொழில்முறை கவுரவத்தையும் நிலைநாட்டிக் கொள்ள நடத்திய போராட்டத்தில் 3 ஆண்டுகளுக்குப் பிறகு வெற்றி பெற்றிருக்கிறார், ரமேஷா.

அந்த வழக்கின் தீர்ப்பின்படி எச்.சி.எல் நிறுவனம் ரமேஷாவை மீண்டும் பணியில் அமர்த்துவதோடு 2013-ல் அவர் வேலையிலிருந்து நீக்கப்பட்டது முதல் அவருக்குச் சேர வேண்டிய முழுச் சம்பளத்தையும், பணித் தொடர்ச்சியையும் அவருக்கு வழங்க வேண்டும்.

1947 தொழில்தகராறு சட்டத்தின்படி “எந்த ஒரு துறையிலும் சம்பளத்துக்காக அல்லது வேறு வகை வெகுமதிக்காக உடல் உழைப்பு அல்லது திறன் உழைப்பு, அல்லது திறன் இல்லாத உழைப்பு அல்லது செயல்பாட்டு உழைப்பு, அல்லது எழுத்து வேலை, அல்லது மேற்பார்வை வேலை செய்யும் யாரும் “தொழிலாளர்” ஆவார். மென்பொருள் ஊழியரின் பணி, திறமைகளையும், நுட்ப அறிவையும் கோருகிறது. எனவே, ஐ.டி நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் ஒருவர் தொழில்தகராறு சட்டத்தின்படி “தொழிலாளர்” என்று வரையறுக்கப்பட வேண்டும்” என்று இந்தத் தீர்ப்பை வழங்கிய கூடுதல் தொழிலாளர் நீதிமன்ற நீதிபதி எஸ் நம்பிராஜன் உறுதி செய்துள்ளார்.

இந்தத் தீர்ப்பு உற்பத்தித் துறை தொழிலாளர்கள் மட்டுமின்றி வங்கி, காப்பீடு, ஆசிரியர் போன்ற படித்த பிரிவினருக்கு கிடைத்து வரும் யூனியன் அமைக்கும் உரிமை, சட்ட விரோதமான பணி நீக்கலுக்கு எதிரான பாதுகாப்பு, கூட்டு பேச்சுவார்த்தை உரிமை ஆகியவை ஐ.டி துறை ஊழியர்களுக்கும் உள்ளன என்பதை உறுதி செய்கிறது.

ஐ.டி துறையில், ‘ஊழியர்கள் அனைவரும் “சூப்பர் வைசர்கள்”, “உயர் ஊதியம் பெறுபவர்கள்”, எனவே சம்பளம் பெறும் ஊழியர்களாக இருந்தாலும் பிற துறை ஊழியர்கள் சட்டபூர்வமாக அனுபவிக்கும் உரிமைகள் அவர்களுக்கு கிடையாது’ என்று முதலாளிகள் பிரச்சாரம் செய்து வந்தனர்  அதற்கேற்ப , தமது விருப்பப்படி சில விதிமுறைகளையும் ஏற்படுத்திக் கொண்டனர். பணி நியமன உத்தரவில் தமக்கு சாதகமான பல நிபந்தனைகளை சேர்ப்பது, ஊதிய உயர்வு, பணி உயர்வு, பணியை மதிப்பிடுவது ஆகியவற்றில் ஊழியர்களை தனித்தனியாக பிரித்து அவர்களுக்கிடையே ஆரோக்கியமற்ற போட்டியை ஊக்குவிப்பது என்று ஐ.டி ஊழியர்களின் ஜனநாயக உரிமைகளை மறுத்து வந்தனர்.

அது போலவே, ரமேஷாவும் நிறுவனத்தின் விருப்பத்திற்கேற்ப பணி நியமனம், ஊதிய உயர்வு இவற்றைத் தொடர்ந்து தேவை தீர்ந்ததும் கழிப்பறை காகிதம் போல தூக்கி எறியப்பட்டு அவமானப்படுத்தப்பட்டிருக்கிறார். தொழிலாளர் சட்டங்களின் படியான நிலை ஆணை (standing order) முறையாக அவருக்கு வழங்கப்பட்டிருக்கவில்லை. நிறுவனம் கூறுவது போல ‘திறமையை தொடர்ந்து மேம்படுத்தத் தவறினால் வேலை நீக்கம் செய்யப்படுவார்’ என்ற நிறுவனத்தின் சட்ட விரோதமான நடைமுறை கூட அவருக்கு முறையாக தெரிவிக்கப்பட்டிருக்கவில்லை.

இந்தத் தீர்ப்பை எதிர்த்து எச்.சி.எல் மட்டுமின்றி, ஐ.டி துறையின் பிற பெரு நிறுவனங்களும் எச்.சி.எல் உடன் திரைமறைவில் இணைந்து, மேல் முறையீடு செய்வது உறுதி. ஊழியர்களை பிளாஸ்டிக் கப் போல பயன்படுத்தி தூக்கி எறியும் தமது வாடிக்கையை தடையின்றி தொடர்வதற்கு பல கோடி ரூபாய் செலவழித்து இந்தத் தீர்ப்பை ரத்து செய்யவும், ஊழியர்களின் உரிமைகளை மறுப்பதற்கு ஏற்றவகையில் நிறுவன நடைமுறைகளை மாற்றிக் கொள்ளவும், தேவைப்பட்டால் சட்டத்தையே திருத்தவும் முதலாளிகள் கடும் முயற்சி செய்வார்கள் என்று எதிர்பார்க்கலாம். இதற்காக நாஸ்காம் என்ற அவர்களது கூட்டமைப்பை பயன்படுத்திக் கொள்வார்கள்.

ஊழியர்களது திறமைகளையும், அனுபவத்தையும் துளிக்கூட மதிக்காமல், அவர்களது குடும்பப் பொறுப்புகளையும், வாழ்க்கை தேவைகளையும் கணக்கில் கொள்ளாமல் வேலையை விட்டு சட்ட விரோதமாக தூக்கி எறிகின்றன ஐ.டி நிறுவனங்கள். அவர்களது பண பலத்தையும், அரசியல் செல்வாக்கையும் எதிர்த்து ஊழியர்களின் உரிமைகளை பாதுகாப்பதற்கு அனைத்து ஐ.டி ஊழியர்களும் அமைப்பாக இணைவதே ஒரே வழி. உயர் தொழில்நுட்பக் கல்வி, முன்னேறிய தகவல் தொழில் நுட்ப அறிவு, சிறப்புத் திறமைகள் உடைய ஐ.டி ஊழியர்கள் தாம் பணிபுரியும் நிறுவனத்தின் நிர்வாகத்துடன் சம உரிமையுடன் பேச்சு வார்த்தை நடத்தவும், நிர்வாகம் செய்யும் தவறுகளை தட்டிக் கேட்கவும் தமக்கு இருக்கும் உரிமைகளை உறுதி செய்ய போராட வேண்டும். தமது சுயமரியாதையும், பணி கவுரவத்தையும் நிலைநாட்ட தொடர்ந்து போராட வேண்டும்.

More from New Democrats

Permanent link to this article: http://new-democrats.com/ta/ramesha-verdict-a-milestone-in-it-employees-fight-for-legal-rights/

Leave a Reply

Your email address will not be published.

%d bloggers like this:
Read more:
இந்தியத் தகவல் தொழில் நுட்பத்துறைக்கு கெட்ட கனவான 2017-ம் ஆண்டு!

நிறுவன மேலாளர்கள் தமது நலன்களையும், பங்குதாரர்களையும் நலன்களையும் கவனித்துக் கொள்கிறார்கள், ஊழியர்களின் நலனை பாதுகாக்க ஊழியர்களை தவிர யார் முன்வருவார்கள்?

மாலை 7 மணிக்கு மேல் வேலை செய்யும் பெண்களுக்கு வாகன வசதி

அவ்வகையில் பத்து மணிக்கு தங்கள் பகுதியை சென்றடையும் இவர்கள், வீடு சென்று சேரும் வழி பாதுகாப்பானதாக இருக்கும் என்று உறுதியாக சொல்ல முடியாது.

Close