ரிசர்வ் வங்கி கவர்னர் : உர்ஜித் படேல் போய் சக்திகாந்த தாஸ்

ரிசர்வ் வங்கியின் ஆளுனர் பதவியில் இருந்த உர்ஜித் படேல், டிசம்பர் 10-ம் தேதி ராஜினாமா செய்து அடுத்த நாளே (11-ம் தேதி) ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி சக்திகாந்த தாஸ் அந்த பதவியில் அமர்த்தப்பட்டுள்ளார்.

உர்ஜித் படேல்

ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேல் எதனால் ராஜினாமா செய்தார்?

நமது சம்பளம், சேமிப்பு, முதலீடு எல்லாவற்றையும் பாதுகாப்பதும், வளர்ப்பதும் எதை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது? பொருளாதாரத்தின் இயக்கத்தை ஒழுங்குபடுத்துவதான பணம் எப்படி நிர்வகிக்கப்படுகிறது, வங்கிகள், கடன் சந்தைகள் எவ்வாறு கண்காணிக்கப்படுகின்றன என்பதை பொறுத்திருக்கிறது. நமது நாட்டில் அந்த முக்கியமான பொறுப்பை கையாள்வது இந்திய ரிசர்வ் வங்கி.

ரிசர்வ் வங்கி என்பது என்பது பணம் அச்சிடுவது, பணப்புழக்கத்தை கண்காணிப்பது, வணிக வங்கிகளின் செயல்பாடுகளை ஒழுங்குபடுத்துவது போன்ற வேலைகளைச் செய்கிறது. ரிசர்வ் வங்கியின் கவர்னரின் கையொப்பத்துடன் ரூபாய் நோட்டுகள் வெளியிடப்படுகின்றன. அப்படியொரு அதிகாரம் உள்ள கவர்னர் பதவி வகிப்பவர் பதவிக்காலம் முடியும் முன்னரே ராஜினாமா செய்வது அல்லது செய்ய வைக்கப்படுவது அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்துகிறது.

ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேல் எதனால் ராஜினாமா செய்தார்? ரகுராம் ராஜனுக்கு பிறகு அவர் பதவியில் அமர்த்தப்படும்போது மோடியின் ஆதரவாளர், ஆர்.எஸ்.எஸ் ஆள், அம்பானி நிறுவனத்தில் வேலை செய்தவர் என்றெல்லாம் பல எதிர்ப்புகள் வந்ததே, பிறகு ஏன் மோடி ஆட்சி முடியும் முன்னரே ராஜினாமா செய்கிறார்? நியமிக்கப்படும்போதும் மோடியை விமர்சித்தார்கள், ராஜினாமா செய்யும்போதும் மோடியை விமர்சிக்கிறார்கள். எதற்கெடுத்தாலும் மோடிதானா? என்றும் சிலர் கேட்கின்றனர்.

ரிசர்வ் வங்கியானது ஆளும் முதலாளித்துவ அரசின் பொருளாதார கொள்கைகளுக்கு ஏற்ப நாட்டின் நிதித் துறையை கையாளும் ஓர் நிர்வாக அமைப்பாகும். அந்த வகையில் பொருளாதாரத்தில் அதிக தாக்கம் செலுத்தும் முடிவுகளை எடுக்கும் அமைப்பு ஆகும்.

இப்படிப்பட்ட ரிசர்வ் வங்கி அன்னிய முதலீடுகளை பாதுகாக்கும் நோக்கத்தில் செயல்படும் சுயேச்சையான, தன்னாட்சி நிறுவனமாக இருக்க வேண்டும் என்பது உலக வர்த்தகக் கழகம், பன்னாட்டு நாணய நிதியம் போன்றவற்றின் ஆணை. அதாவது, மின் கட்டணம் நிர்ணயிக்க மின்சார ஒழுங்குமுறை ஆணையம், தொலைதொடர்புத்துறைக்கு தனியாக ஆணையம், பங்குச் சந்தைக்கு ஆணையம் என்று தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்துக்கும் மக்களுக்கும் பதில் அளிக்கும் பொறுப்பு இன்றி கார்ப்பரேட் முதலாளிகளின் பிரதிநிதிகளால் கார்ப்பரேட் முதலாளித்துவத்தின் நலன்களை உறுதி செய்வதாக இருக்க வேண்டும். அதன் செயல்பாடுகளை இந்திய அரசியல்வாதிகளும், அரசியல் சட்டமும் கட்டுப்படுத்தக்கூடாது. ஆணையம் இவை அனைத்துக்கும் அப்பாற்பட்ட அதிகாரம் கொண்டிருக்க வேண்டும்.

ஆர்.எஸ்.எஸ் தலைமையிலான மோடியின் பா.ஜ.க அரசோ 30 ஆண்டுகளாக மன்மோகன் சிங் முதல் ரகுராம் ராஜன் ஏன் உர்ஜித் படேல் வரை கண்ணும் கருத்துமாக கட்டியமைத்த இந்த அடிப்படையிலான நிறுவன அமைப்பை சீர்குலைக்கிறது. குஜராத்தி முதலாளிகளின் ஒரு தரப்பை பிரதிநிதித்துவப்படுத்தும், இந்துத்துவ சிந்தனையாளர்களை பொருளாதார ஆலோசகர்களாக வைத்திருக்கும் மோடி அரசு, ரகுராம் ராஜன், உர்ஜித் படேல் போன்றவர்களை விட சிறப்பாக தமது பாணியில் முதலீட்டாளர்களுக்கு சேவை செய்ய முடியும் என்று தமது பொருளாதார திட்டத்தை வைக்கிறார்கள்.

உர்ஜித் படேல் மோடியின் மீதான விசுவாசத்தை விட ஐ.எம்.எஃப், சர்வதேச கார்ப்பரேட் நிதி மூலதன கட்டமைப்புக்கு அதிக விசுவாசமானவர். எனவேதான், குருமூர்த்தி போன்ற அதிமேதாவிகளின் தலையீட்டை பொறுக்க முடியாமல், அதற்கு பொறுப்பேற்க விரும்பாமல், நாளைக்கு ஒரு புதிய அரசு வந்து விசாரணை வைத்தால் சிக்கிக் கொள்ள விரும்பாமல் ராஜினாமா செய்துள்ளார்.

ஐ.எம்.எஃப்-ன் ஒரு ஊழியர்

உர்ஜித் படேல் என்பவர் ஐ.எம்.எஃப்-ஆல் பயிற்றுவிக்கப்பட்ட, ஆனால் ரகுராம் ராஜனை போல முழுக்க முழுக்க ஐ.எம்.எஃப் விசுவாசியாக இல்லாத, ஐ.எம்.எஃப்-ன் ஒரு ஊழியர்

உர்ஜித் படேல் லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ்-ல் பட்டம் பெற்று, ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலையின் எம்.ஃபில் முடித்து, அமெரிக்காவின் யேல் பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். 1991-94-ல் இந்தியாவில் மன்மோகன் சிங்-ஆல் அமல்படுத்தப்பட்ட பொருளாதார சீர்திருத்த கால ஆரம்பத்தில் சர்வதேச நாணய நிதியத்தின் (ஐ.எம்.எஃப்) இந்தியா பிரிவில் வேலை செய்தவர். அதாவது, இந்தியாவுக்கு கொடுத்த கடனுக்கு என்னென்ன நிபந்தனைகள், இந்திய அரசு ஐ.எம்.எஃப்க்கு விசுவாசமாக நடந்து கொள்கிறதா என்றெல்லாம் கண்காணிக்கும் பணியில் இருந்தவர்.

1992-95ல் அவர் ஐ.எம்.எஃப் சார்பில் இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதை விட முக்கியமாக 1995-க்குப் பிறகு ஐ.எம்.எஃப்-லிருந்து ஐ.எம்.எஃப் பிரதிநிதியாக (deputation) ரிசர்வ் வங்கிக்கு அனுப்பப்பட்டு இந்திய கடன் பத்திரச் சந்தையை உருவாக்குவதற்கும், வங்கித் துறை சீர்திருத்தங்களுக்கும், ஓய்வூதிய சீர்திருத்தங்களுக்கும், அன்னியச் செலாவணியை சந்தையின் போக்கில் விடுவதற்கும் ஆலோசகராக பணியாற்றியவர். அதாவது, நமது நாட்டின் சேமிப்புகளை அன்னிய பந்தய மூலதனத்தின் சூதாட்டத்துக்கு இரையாக்குவதற்கு திட்டம் போட்டு கொடுத்தவர். 2004-ல் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய ஓய்வூதியத் திட்டம், வங்கித் துறை தனியார் மயம், வங்கிப் பணத்தை கார்ப்பரேட்டுகளுக்கு தாரை வார்த்தல், பங்குச் சந்தை சூதாட்டத்துக்கு இந்திய பொருளாதாரத்தை இரையாக்குதல் போன்ற இன்றைய பொருளாதார கட்டமைப்புக்கு அடித்தளம் அமைப்பதில் முக்கிய பங்கு வகித்தவர்.

அதன் பிறகு வாஜ்பாயி ஆட்சியின் போது நிதி அமைச்சகத்தில் ஆலோசகராகவும், இன்னும் பல பொறுப்புகளையும் ஏற்று பணியாற்றினார். இதன் பின்னர் மோடியின் குஜராத்தில் பொறுப்புகள் கொடுக்கப்பட்டார். 2013-ல் ரிசர்வ் வங்கி கவர்னராக நியமிக்கப்படுவதற்கு முன்பு உர்ஜித் படேல் போஸ்டன் கன்சல்டிங் குரூப் என்ற அமெரிக்க நிறுவனத்தின் ஆலோசகராக பணியாற்றினார்.

அதாவது, உர்ஜித் படேல் என்பவர் ஐ.எம்.எஃப்-ஆல் பயிற்றுவிக்கப்பட்ட, ஆனால் ரகுராம் ராஜனை போல முழுக்க முழுக்க ஐ.எம்.எஃப் விசுவாசியாக இல்லாத, ஐ.எம்.எஃப்-ன் ஒரு ஊழியர். கூடுதலாக குஜராத்தில் மோடி அரசில் கார்ப்பரேட் சேவைப் பணியை செய்த வகையில் மோடிக்கும் பா.ஜ.கவுக்கும் நம்பகமாக இருந்தவர்.

எனவே, ரகுராம் ராஜனை கழற்றி விட்ட போது அவர் இருந்த இடத்தில் ஐ.எம்.எஃப் முதலான சர்வதேச மூலதனம் ஏற்றுக் கொள்ளக் கூடிய நபராக உர்ஜித் படேல் இருந்தார். கவர்னராக நியமிக்கப்பட்டார்.

ரிசர்வ் வங்கி கவர்னர் பதவிக்கு
நேர்முகதேர்வாம்..!! (பேஸ்புக்கில் இருந்து)

ஆர்.எஸ்.எஸ் குருமூர்த்தி முதலானவர்களின் இந்துத்துவ பொருளாதார அறிவு, ‘கருப்புப் பணம் என்றால் கட்டுகட்டாக படுக்கைக்குக் கீழ் வைத்திருப்பார்கள்’, ‘விலை வாசி உயர்வுக்கு பணப் புழக்கம் அதிகமானதுதான் காரணம்’, ‘ஊழலும் பயங்கரவாதமும் அதிகரிப்பதற்கு அதிக மதிப்பு நோட்டுகள்தான் அடிப்படை’ என்ற மேலோட்டமாக தெரியும் தோற்றங்களை வைத்து முடிவு எடுக்கும் அளவிலேயே இருகிறது. கருப்புப் பணம் என்பது பொருளாதாரத்தில் சுற்றி வருவது, சொத்துக்களாக மாறி வருவது, விலைவாசி உயர்வு உற்பத்திச் செலவால் தீர்மானிக்கப்படுகிறது, ஊழலும் பயங்கரவாதமும் இந்த முதலாளித்துவத்தின் அடி நாதம் என்று ஆழமாக ஆய்வு செய்து உண்மையை கண்டறிய விருப்பம் இல்லாதவர்கள், எனவே அதற்கான திறமையும் இல்லாதவர்கள். அவர்களைப் பொறுத்தவரையில் 3000 ஆண்டுகளுக்கு முன்பு இயற்றப்பட்ட வேதங்களில் அனைத்து அறிவும் எழுதி வைக்கப்பட்டு விட்டது.

இந்த புத்திசாலிகள்தான் பண மதிப்பு நீக்கம் என்ற நம் நாட்டு மக்கள் மீது நிகழ்த்தப்பட்ட குற்றச் செயலின் மூளையாக செயல்பட்டவர்கள். பண மதிப்பு நீக்கம் செய்ததில் நாயகர்களாக விளங்கியவர்கள் மோடி, அருண் ஜெட்லி, சக்தி காந்த தாஸ், குருமூர்த்தி போன்றவர்கள். அரவிந்த் சுப்பிரமணியம், அரவிந்த் பானகரியா, உர்ஜித் படேல் போன்ற பொறுப்புள்ள நிர்வாக பதவியில் இருந்த மேற்கத்திய தொழில்முறை முதலாளித்துவ நிபுணர்கள் அந்த நேரத்தில் வாய்மூடி மௌனம் சாதித்தனர். கடந்த 2 ஆண்டுகளில் ஒவ்வொருவராக குற்றம் நடந்த இடத்தை காலி செய்து விட்டு எஸ்கேப் ஆகி விட்டார்கள். ரகுராம் ராஜன் குற்றம் நடக்கப் போகிறது என்று தெரிந்தவுடன் அதற்கு முன்பே ஜகா வாங்கி விட்டார்.

சக்திகாந்த தாஸ்

சக்திகாந்த தாஸ் 2016-ல் பண மதிப்பு நீக்கத்தை திட்டமிட்டு, அமல்படுத்தியதில் முன்னணி பாத்திரம் ஆற்றியவர். அதாவது மோடி விரும்புவதை செய்து கொடுக்கும் அதிகாரி.

கடந்த சில மாதங்களாக ரிசர்வ் வங்கிக்கும் மோடி அரசுக்கும் இடையேயான பிரச்சனை ரிசர்வ் வங்கியின் கையிருப்புகளை அரசுக்குக் கொடுக்கவும், வங்கிகள் கடன் கொடுப்பதற்கான விதிமுறைகளை தளர்த்தவும் ரிசர்வ் வங்கி மறுக்கிறது என்பதுதான்.

ரிசர்வ் வங்கியின் கையிருப்பு என்பது ஒரு கணக்கியல் ரீதியான விஷயம்தான். ரிசர்வ் வங்கியில் நோட்டுதான் அச்சிடுகிறார்கள், அந்த நோட்டுக்கு மதிப்பை கொடுக்கும் உற்பத்தியில் ரிசர்வ் வங்கிக்கு எந்தப் பங்கும் இல்லை. அந்த உற்பத்தியில் ஈடுபடும் கோடிக்கணக்கான உழைக்கும் மக்கள் ரிசர்வ் வங்கியின் நோட்டுகளை ஏற்றுக் கொள்வதாலும், வரி செலுத்துவதாலும்தான் அந்த கையிருப்புக்கு மதிப்பு. எனவே, கையிருப்பை கைப்பற்றி கார்ப்பரேட்டுகளுக்கு கொடுக்கிறோம் என்றால் அதன் பொருள் மக்கள் மீது மீண்டும் கடன் சுமையையும், வரிச் சுமையையும் சுமத்துவதுதான். நமது ஆர்.எஸ்.எஸ் மேதாவிகளோ, ரிசர்வ் வங்கி பல லட்சம் கோடி ரூபாயை படுக்கைக்குக் கீழ் பதுக்கி வைத்து மோடி அரசை நாட்டை முன்னேற்ற விடாமல் தடுக்கிறது என்று கதை சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.

அதே போல, ஏற்கனவே வாராக் கடன்கள் கொடுத்து சுமையில் தள்ளாடும் வங்கிகளை அதே வழியில் கார்ப்பரேட்டுகளுக்கு கடன் கொடுக்க அனுமதிக்க வேண்டும் என்பதும் மோடி – பா.ஜ.கவை இயக்கும் முதலாளிகளுக்கு வங்கிப் பணத்தை தாரை வார்க்க வேண்டும் என்ற கோரிக்கைதான்.

இந்த பஞ்சாயத்தில்தான் உர்ஜித் படேல் போய் சக்திகாந்த தாஸ் வந்திருக்கிறார். சக்தி காந்த தாஸ் பொருளாதார விவகாரங்களுக்கான செயலர் என்ற முறையில் 2016-ல் பண மதிப்பு நீக்கத்தை திட்டமிட்டு, அமல்படுத்தியதில் முன்னணி பாத்திரம் ஆற்றியவர். 2014-ல் மோடி அரசு பதவி ஏற்றவுடன் வருவாய்த் துறை செயலராக நியமிக்கப்பட்டார். அதாவது மோடி விரும்புவதை செய்து கொடுக்கும் அதிகாரி.

குருமூர்த்தியையோ, அல்லது அகோரி சாமியார்களில் ஒருவரையோ ரிசர்வ் வங்கி கவர்னராக நியமிக்கும் நேரம் இன்னும் வரவில்லை.

இன்னும் குருமூர்த்தியையோ, அல்லது அகோரி சாமியார்களில் ஒருவரையோ ரிசர்வ் வங்கி கவர்னராக நியமிக்கும் நேரம் வரவில்லை. ரகுராம் ராஜனுக்கு பிறகு உர்ஜித் படேல் என்றா்ல உர்ஜித் பட்டேலுக்கு பிறகு ஐ.ஏ.எஸ் அதிகாரியான சக்தி காந்த தாஸ்தான் தாக்குப் பிடிக்கும். அடுத்த முறை இன்னும் கீழே இறங்கலாம், குருமூர்த்தியை நியமிக்கலாம்.  தவளையை தண்ணீரில் போட்டு மெல்ல மெல்ல சூடேற்றினால் துள்ளி வெளியே குதிக்காமல் வெந்து போய் விடும் என்பார்கள். முதலாளிகளுக்கு படிப்படியாக சூடேற்றுகிறது ஆர்.எஸ்.எஸ் அரசு.

இவ்வாறாக, கங்கை நதிக்கரை ஆரியர்கள் 3000 ஆண்டுகளுக்கு முன்பே அறிவுகள் அனைத்தையும் கண்டறிந்து சொல்லி விட்டதாக நம்பிக் கொண்டிருக்கும் இந்துத்துவ கும்பல், நவீன ஏகாதிபத்திய பொருளாதார, நிதி மூலதன கட்டமைப்பையும் தனது கமண்டலத்திவில் மொண்டு குடிக்க முயற்சிக்கிறது.

ஐ.எம்.எஃப், உலக வர்த்தகக் கழகம் போட்டு கொடுக்கும் ரோட்டில் விசுவாசிகளாக பயணித்தால்தான் நாட்டை முறையாக சுரண்டி அடகு வைக்க முடியும் என்ற அறிவும், பணிவும் உடையவர்கள் மன்மோகன் சிங், ப சிதம்பரம் போன்ற பொருளாதார மேதைகள். அதற்கான நிறுவனங்களை மோடியின் ஆர்.எஸ்.எஸ் கும்பல் குரங்கு கையில் கிடைத்த பூமாலைகளாக சிதைத்து எறிவதை பார்த்து அவர்கள் பதறுகிறார்கள்.

உர்ஜித் படேல் ராஜினாமா பற்றி பதறும் முதலாளித்துவ ஆதரவாளர்கள் பங்குச்சந்தை வீழ்ச்சியை நினைத்தும், ஐ.எம்.எஃப் பிரநிதித்துவப்படுத்தும் நிதி மூலதனத்துக்கு ஆதரவாகவும் பதறுகிறார்கள். உழைக்கும் வர்க்கத்தின் அக்கறையே வேறு.

இந்த இரண்டு கட்சியினரும் எதைச் செய்தாலும் அதன் சுமையை அனுபவிப்பது உழைக்கும் மக்களும், விவசாயிகளும் சிறு முதலாளிகளும்தான் என்ற நிலையில் இவர்களில் யார் உத்தமர் என்று தேடிக்கொண்டிருப்பது தூக்கு போட்டுக்கொண்டு சாவதா, அல்லது தண்ணீரில் முழுகடிக்கப்பட்டு சாவதா என்று தேர்ந்தெடுக்கச் சொல்வதாகவே இருக்கும்.

பா.ஜ.க-ம் சரி, காங்கிரசும் சரி இதே கார்ப்பரேட் முதலாளித்துவ, நிதி சூதாட்ட கட்டமைப்புக்குள் பதவிக்கு போட்டி போடுகிறார்கள்.

தொழிலாளி வர்க்கத்துக்கு உகந்த தீர்வில்

1. நம் நாட்டு பொருளாதாரம் அன்னிய மூலதனத்துக்கு அடிமைப்படுத்தப்பட்டிருப்பதை ஒழித்துக் கட்ட வேண்டும்.

2. விவசாயிகள், தொழிலாளர்கள், சிறு உடைமையாளர்களின் பொருளாதார நலனை உறுதி செய்யும் வகையில் சுயசார்பான உள்நாட்டு பொருளாதார வலிமையை பெருக்க வேண்டும்.

3. அந்த அடிப்படையில் சம உரிமையுடன் பிற நாடுகளுடன் பொருட்களையும், தொழில்நுட்பங்களையும் பரிவர்த்தனை செய்து கொள்ள வேண்டும்.

இத்தகைய ஒரு திட்டம், கார்ப்பரேட்டுகளுக்கு சேவை செய்வதே ஒரே வழி என்று ஏற்றுக் கொண்ட இந்த இரண்டு கட்சிகளிடமும் இல்லை. வேறு எந்த ஓட்டு அரசியல் கட்சியும் இதைப் பற்றி பேசுவதில்லை.

தொழிலாளி வர்க்கத்தின் அதிகாரம் மட்டுமே அடுத்தடுத்து வரும் நெருக்கடிகளிருந்து, அன்னிய கடன், அன்னிய சார்பு, வேலையின்மை, விவசாய அழிவு, இயற்கை வளங்கள் கொள்ளை, சுற்றுச் சூழல் நாசம் என்ற இந்த மீளா புதைகுழியிலிருந்து நமது நாட்டையும் மக்களையும் மீட்டெடுக்க முடியும்.

Permanent link to this article: http://new-democrats.com/ta/rbi-governor-shaktikanta-das-replaces-urjit-patel/

Leave a Reply

Your email address will not be published.

%d bloggers like this:
Read more:
காவிரிப் பிரச்சினை – சமூக வலைத்தள கருத்துப்படங்கள்

காவிரி மேலாண்மை வாரிய பிரச்சினை தொடர்பாக சமூக வலைத்தளங்களில் வலம் வரும் கருத்துப்படங்களின் தொகுப்பு

டி.சி.எஸ்-ன் சதுரங்க வேட்டை

உப்பு முதல் மென்பொருள் வரை செய்யும் "பன்னாட்டு" நிறுவனம் என்று தன்னை விளம்பரப்படுத்திக் கொள்ளும் டாடா குழுமம் உண்மையில் "ரைஸ் புல்லிங்", “மண்ணுள்ளிப் பாம்பு" என்று மக்கள்...

Close