படிப்பதும் ஒரு போராட்டமே! படித்தெழு தொழிலாளி வர்க்கமே!

 

“நாமதான் படிக்காமல் முட்டாளா இருக்கோம், நம்ம புள்ளையையாவது படிக்கவைக்கனும்”, என்று பல தொழிலாளர்கள் எப்பாடு பட்டாவது பிள்ளைகளை படிக்க வைக்கின்றனர். படிப்பு என்பதை வேலை வாய்ப்புக்காக என்று மட்டும் பார்க்காமல் உலகத்துல நடக்குற நல்லது கெட்டதை புரிஞ்சுக்கணும், அதுக்கும் படிப்பு அவசியம் என்று மக்கள் நினைக்கிறார்கள். ஒருவருக்கு கல்வி உரிமை இருந்தால்தான் மற்ற எல்லா உரிமைகளைப் பற்றியும் விவரம் தெரியவரும் என்பது தெரிந்துதான்,  வெகுகாலத்திற்குமுன்பே உழைக்கும் மக்களுக்கு சாதிரீதியாக, கல்வி உரிமையை மறுத்தது பார்ப்பனியம். இன்று அதையே ஆரம்ப கல்விக்கு பூட்டு, அடித்தட்டுமக்களை உயர்கல்வியில் நுழையவிடாமல் நீட்(டு) என வர்க்க ரீதியாக கல்வி உரிமையைத் தடுக்கிறது மறுகாலனியாக்கம்.

பிள்ளைகளை  படிக்க பள்ளியில் சேர்த்துவிட்டோம் என்பதோடு ஒரு தொழிலாளியின் கடமை முடிந்து விடுவதில்லை, பள்ளிக் கல்வி என்பதைத் தாண்டி பொதுவான விசயங்களை அறிந்து கொள்ள தொழிலாளி தானும் அன்றாடம் பல விசயங்களை படிப்பதை கடமையாக, உரிமையாக  உணர வேண்டும். உலகமயம் என்ற புதிய சுரண்டலின் மூலமாக முதலாளிகள் பிள்ளைகளின் படிப்பை மட்டும் தடுக்கவில்லை, பெற்றோர்களாகிய தொழிலாளர்களின் படிக்கும் பழக்கத்தையும் தடுக்கிறார்கள். மிகை உழைப்பு, அதிகச் சுரண்டல் என்ற வகையில் எதையும் படிக்க வாய்ப்பில்லாதவர்களாக, நேரமற்றவர்களாக நம்மை ஆக்கிவிட்டது முதலாளித்துவம்.

ஒருவன் தான் வாழும் உலகம், சமூக வாழ்க்கை எதன் அடிப்படையில் இயங்குகிறது உழைப்பின் வரலாறு என்ன? உழைப்பாளர்களின் வரலாறு என்ன? எவ்வளவு உழைத்தாலும் ஏன் கஷ்டப்படுகிறோம்? விரல்விட்டு எண்ணக் கூடிய சில முதலாளிகள் மட்டும் உழைக்காமலே செல்வந்தர்களாக இருப்பது எப்படி?. .என்பதை எல்லாம் தெரிந்து கொண்டால்தான் தான் விரும்பும் வாழ்க்கையை இவ்வுலகில் படைப்பதற்கான அறிவுத் தேர்ச்சியை பெறமுடியும். சூழ்நிலைமைகள் தடுத்தாலும் முக்கியமாக தமது சூழ்நிலைமைகளை மாற்றுவதற்காக தொழிலாளி போராடி படிக்கவேண்டும்.

நமது முந்தைய தலைமுறை பலர் மாடு மேய்த்துக் கொண்டும், வயலுக்குப் போய் கொண்டும், போராடித்தான் ஒரளவு படித்தார்கள். முக்கியமாக கடின வேலைகளுக்கு இடையிலும் முடிதிருத்தும் தொழிலாளி, சலவைத் தொழிலாளி, சைக்கிள்கடைத் தொழிலாளி போன்றவர்கள் சுயமரியாதை உணர்வை ஊட்டும் விதமாக தமது பணிக்களத்தையே படிப்பறையாக, வாசிப்பு சாலையாக்கி தாங்களும் படித்தார்கள்; சக உழைக்கும் மக்களையும் படிக்க வைத்தார்கள். பல கருத்துக்களை படித்ததால்தான் சமூக உணர்வும், ஒடுக்கு முறைகளுக்கு எதிரான போராட்ட உணர்வையும் படைத்தார்கள். அறிவுக் கண் திறக்கத் திறக்கத்தான் புதிய விசயங்களே தெரிய வந்தது. திருவள்ளுவர் “கண்ணுடையர் என்பவர் கற்றோர்; முகத்திரண்டு புண்ணுடையர் கல்லாதவர்.” என்று கல்லாதவர் முகத்திலிருப்பது கண் அல்ல வெறும் புண் என்றார். காரணம் கற்றுத் தேறாதவர்கள் எதையும் பார்க்க முடியாதவர்கள். உண்மை விவரம் தெரியாது.

ஆகவே, உழைத்து வாழும் நாம் பொதுக் கல்வி என்ற முறையில் பல கருத்துக்களையும் படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள நூல்களை தேர்வு செய்து படிக்கவேண்டும். ஒருவன் படிப்பது மூலம் மட்டும் தான் நமக்கு  பல நூற்றாண்டுகள்  முன்னே நடந்த உலக விபரங்களை அறிய முடியும். அறிவது மட்டுமல்ல அப்போது நம்மைப்  போன்ற தொழிலாளிகள் எவ்வாறு வாழ்ந்தார்கள்? எதை நோக்கி வளர்ந்தார்கள்? இன்று நமது நிலை என்ன? நாம் என்ன செய்தால், எவ்வாறு சிந்தித்தால் பிரச்சினைகளில் இருந்து மீளலாம் என்பதையும் சிந்திக்க முடியும். நமக்காக சிந்தித்தவர்களின் தொடர்ச்சியாக நாமும் மாற முடியும். அதுவும் உழைக்கும் மக்களின் பிரச்சினைகளைப் பற்றியும், மனிதமாண்பைப் பற்றியும் சிந்தித்தவர்களின் கருத்துக்களைப் படிப்பது வளமானது. அறிவுச் செல்வம்தான் அழியாதது.

கல்வியை உழைக்கும் நமக்கு மறுத்த பார்ப்பனியத்தை, ஆண்டைகளை பழிவாங்கும் வகையில் அவர்களின் ஆதிக்கத்தை ஒழிக்கும் வகையில் படிக்க வேண்டும் என்று போதித்த பெரியார், அம்பேத்கர் போல் சமூகத்துக்காக படிப்பது அவசியம். தூக்குத் தண்டனை வழங்கப்பட்டு சாகப் போகும் நேரத்திலும் இறுதிவரை படித்த பகத்சிங்கைப் போல படிக்கவேண்டும். தொழிலாளர் வர்க்கத்துக்காகவே வாழ்ந்த மார்க்ஸ், எங்கல்ஸ், லெனின், ஸ்டாலின், மாவோ போல இடையறாது படித்தால்தான் நாம் புதிய உலகையே படைக்கவல்ல, தகுதியுள்ள வர்க்கம் என்பதை நிறுவ முடியும். “தொழிலாளர்கள் முட்டாள்களாக இருக்கும் வரை அவர்களது பின் தங்கிய அறியாமையைப் பார்த்து முதலாளித்துவம் எரிச்சலடைகிறது. தொழிலாளர்கள் அறிவுக் கூர்மை அடைந்தவுடன் அவர்களது முன்னேறிய அரசியல் உணர்வைப் பார்த்து அச்சமடைகிறது” என்றார் கார்ல் மார்க்ஸ். நம் படிப்பின் தேவை எவ்வளவு பொருள் பொதிந்தது பார்த்தீர்களா? முதலாளிகளின் மூலதனத்திற்காக உழைப்பதை விடவும், நம் வர்க்கத்தின் சமூக நலனுக்காக படிப்பு நம்மிடம் துடிப்பாக மாற வேண்டும்.

ஏன் படிக்க வேண்டும் என்பது நமக்கு தெரிந்தவுடனேயே, எதைப் படிக்கவேண்டும்? என்ற தெளிவையும் பெற வேண்டும். எழுதப்பட்ட எல்லாமும் பொதுவானது என்று நம்புவதும் தவறு. வர்க்கமாய், சாதியாய், பாலினமாய் பிரிவும், ஏற்றத்தாழ்வும் உள்ள நமது சமுதாயத்தில் எழுதப்படும் கருத்துக்களும், நூல்களும் வர்க்க, சாதிய, பாலின சார்பு, ஆதிக்கம் என்பதாகவே இருக்கும். எனவே படிப்பில் உண்மை நிலையை கண்டறியும் வழி படிப்பையும் வர்க்க கண்ணோட்டத்தோடு பார்ப்பதுதான். இன்றைய நிலையில் தொழிலாளர்கள் அதிகபட்சம் செய்தித்தாள் வாசிப்பது, ஜீனியர்விகடன், நக்கீரன், குமுதம் போன்ற கையில் கிடைக்கும் வார ஏடுகளைப் படிப்பது என்பதாக இருக்கிறது. இவைகளை நடத்தும் முதலாளிகள், எழுதும் எழுத்தாளர்களின் பக்கச் சார்புடன்தான் செய்திகள், கருத்துக்கள் வருகின்றன. இப்படி எழுதப்பட்டதெல்லாம் உண்மை என்று எதையும் அரசியல் கொண்டு ஆராயாமல் நம்புவது பேதமை. நம் வர்க்கத்திற்கு இதில் என்ன இருக்கிறது? இது எழுதப்பட்டதன் நோக்கம் என்ன? ஒரு முடிவுக்கு வரும் வகையில் அலசிப் பார்க்கவேண்டும்.

உதாரணத்திற்கு, சமீபத்தில் நடக்கும் போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தை பல பத்திரிக்கைகள் ஸ்ட்ரைக்! பஸ் ஒடவில்லை! மக்கள் தவிப்பு! என்று தலைப்பு போடுகின்றன. தொழிலாளர்களால்தான் மக்கள் தவிப்பு எனும் கண்ணோட்டத்தை உருவாக்குகின்றன. உண்மையில் அதே செய்தியை அரசு கைவிரிப்பு! தொழிலாளர்களது சேமிப்பை களவாடியது, அரசு! அரசின் நடவடிக்கையால் தான் பஸ்கள் ஓடவில்லை! என்ற உண்மை நிலையை ஊடகங்கள் பிரதிபலிக்கவில்லை. எனவே படிப்பிலும் வர்க்க கண்ணோட்டம் இல்லாதவர்கள் எதிரிகளது கண்ணோட்டத்திற்கு இரையாவது தான் நடக்கும்.

செய்தித்தாள்களே இப்படி எனில், நூல்களாக வரும் பலவற்றையும் பகுத்துப் பார்த்து,  தொகுத்துக் கொள்ளும் பயிற்சியை தொழிலாளர்கள் மேற்கொள்ள வேண்டும். விளம்பரத்தில் கவர்ச்சியோடு வரும் பொருட்களை வாங்குவது போல புத்தகங்களை வாங்காமல், நமது வர்க்கத்திற்கான தேவை என்ன என்பதை தெரிந்து, உழைப்பவரை உயர்த்த எழுதப்பட்ட வரலாறு, கவிதைகள், கதைகள், சமூக அறிவியல் நூல்கள், மனித சமூகத்திற்கு முன்னேற பாதை அமைத்து தரும் மார்க்சிய-லெனிய நூல்கள், பார்ப்பன மதவெறிக்கு பலியாகாமல் தடுக்கும் பெரியார், அம்பேத்கர் எழுத்துக்கள், என தேர்ந்தெடுத்து படிக்கவேண்டும். திருக்குறள் உள்ளிட்ட தமிழ் இலக்கிய நூல்களைப் படித்தாலும் உழைக்கும் மக்களை நெறிப்படுத்துக் கருத்துக்களை அவற்றிலிருந்து எடுத்துக் கொள்வதை கற்றுக் கொள்ள வேண்டும். கண்டதையும் படித்து பண்டிதனாவது சுயநலம், கரெக்ட் ஆனதை படித்து கம்யூனிஸ்ட் ஆவதுதான் பொதுநலம். நாம் பொதுநலத்திற்காகப் படிக்கவேண்டும்.

இருக்குற வேலையில எங்கங்க படிக்கிறது? என்று அலுத்துக் கொள்வதில் அர்த்தமில்லை, இப்படி பொழுதுக்கும் நம் வாழ்வின் கழுத்தை இறுக்குகிற வேலையிலிருந்து மீளவே முதலில் படிக்க வேண்டும். நம்மை படிக்க விடாத முதலாளித்துவத்தை இருக்க விடாமல் செய்வதற்காகவும் நாம் படித்துதான் ஆகவேண்டும். நீங்கள் படிக்க ஆரம்பித்தால், அது உங்களை சும்மாய் இருக்கவிடாது என்பது தெரிந்துதான், முதலாளித்துவம் உங்களை படிக்க முடியாதபடி வேலைச்சூழலை உருவாக்கி வைத்திருக்கிறது. எனவே படிப்பதற்கான போராட்டம், தொழிலாளர் வர்க்கத்தின் விடுதலைப் போராட்டத்தோடு இணைந்தது. சந்தேகமிருந்தால் நீங்கள் படிக்க ஆரம்பியுங்கள், அதிலும் வர்க்க உணர்வோடு படிக்க ஆரம்பியுங்கள், படிப்பதற்கான போராட்டம், நீங்கள் படைப்பதற்கான போராட்டங்களுக்கு உதவி செய்யும் கலையழகைக் காணும் வாய்ப்பு உங்களுக்கும் வாய்க்கும்!

 –துரை.சண்முகம்.

புதிய தொழிலாளி, ஜனவரி 2018

 

Permanent link to this article: http://new-democrats.com/ta/reading_is_also_a_struggle/

Leave a Reply

Your email address will not be published.

%d bloggers like this:
Read more:
NDLF IT Employees Wing ன் 2019 ஆண்டிற்கான முதல் மாதாந்திர கூட்டம் – ஜனவரி 2019.

தேதி: 26-Jan-2019 நேரம்: 4 PM இடம்: பெரும்பாக்கம். 'நாம் அளிக்கும் வாக்குகளும் அவர்கள் கொடுக்கும் வாக்குறுதிகளும்!' பன்றி தொழுவமும் வர இருக்கும் பாராளுமன்ற தேர்தலும் -...

“முன்னேற்றத்துக்கு” நாடு கொடுக்கும் விலை என்ன?

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 18.5 லட்சம் டன் மின்-கழிவுகள் (அதாவது ஒரு நபருக்கு 1.5 கிலோ) உருவாக்கப்படுகின்றன என்கிறது ஒரு ஆய்வு. 2018-ல் இந்த அளவு 30...

Close