சகாரா, பிர்லா குழுமங்களில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களில் மோடி மற்றும் பிற அரசியல் தலைவர்களுக்கு (மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் முதலமைச்சர்கள், டெல்லி முன்னாள் முதலமைச்சர் ஷீலா தீட்சித்) பணம் கொடுக்கப்பட்டதாக பதிவாகியிருப்பது தொடர்பாக சிறப்புப் புலன் விசாரணைக்கு உத்தரவிட முடியாது என்று உச்சநீதிமன்றம் கூறியிருக்கிறது. அத்தகைய விசாரணைக்கு உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை தள்ளுபடி செய்திருக்கிறது.
“இந்த ஆவணங்களின் நம்பகத்தன்மை கேள்விக்குரியது, அவை போதுமான அத்தாட்சி இல்லாதவை” என்று விளக்கம் சொல்லியிருக்கிறது. “இத்தகைய குறிப்புகளை யார் வேண்டுமானாலும் எழுதியிருக்கலாம், அதன் மூலம் அரசியல் தலைவர்கள் மீது போலி குற்றம் சாட்டலாம்” என்று தனது முடிவை நியாயப்படுத்தியிருக்கிறது. லஞ்சம் கொடுத்தவர்கள் அரசியல்வாதிகளிடமிருந்து வாங்கி வைத்திருக்கும் ரசீது கிடைத்தால்தான் மேல் விசாரணை நடத்துவோம் என்று உச்சநீதிமன்றத்தின் முடிவை புரிந்து கொள்ளலாம்.
பிர்லா ஆவணங்களைப் பொறுத்தவரை பணம் கொடுக்கப்பட்டது பற்றிய குறிப்புகளை எழுதியவர்களை வருமான வரித்துறை விசாரித்த போது அவற்றை தாங்கள்தான் எழுதியதாக அவர்கள் ஒத்துக் கொண்டிருக்கிறார்கள். ஹவாலா மூலம் பெருமளவு ரொக்கப் பணத்தை பல்வேறு தேதிகளில் பெற்றுக் கொண்டதையும், குழுமத்தின் தலைவர் சுபேந்து அமிதாப்பின் உத்தரவுப்படி அரசு உயர் பதவிகளில் (முதலமைச்சர் முதலிய பதவிகள்) இருப்பவர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்பட்டதையும் அவர்கள் வாக்குமூலமாக உறுதி செய்திருக்கிறார்கள். பணம் கொண்டு போன அலுவலர்களின் பெயர்களும் பதிவு செய்யப்பட்டுளன. “குஜராத் சி.எம்” என்ற குறிப்பை எழுதியதாக குழுமத்தின் தலைமை பொறுப்பில் இருக்கும் சுபேந்துவும் ஒத்துக்கொண்டிருக்கிறார்.
சகாரா அலுவலகத்தில் கையால் எழுதப்பட்ட குறிப்புகளும் கணினி கோப்புகளும் கைப்பற்றப்பட்டன. கைப்பற்றப்பட்ட கணினி கோப்புகளில் ஒரு வருமான வரித்துறை அதிகாரி, சகாரா அதிகாரி ஒருவர், இரண்டு சாட்சிகள் கையெழுத்திட்டுள்ளனர். கோப்பின் ஒவ்வொரு பக்கத்திலும் நான்கு பேரும் கையொப்பமிட்டுள்ளனர். இந்தக் கோப்பு சகாரா குழும சேர்மன் சுப்ரதோ ராயின் மூத்த உதவியாளரின் கணினியிலிருந்து கைப்பற்றப்பட்டது. அத்தகைய ஒரு கோப்பை யாரும் போலியாக உருவாக்கி வைத்திருக்க மாட்டார்கள். பணம் கொண்டு கொடுத்தவர்களாக குறிப்பிடப்பட்டுள்ளவர்கள் சுப்ரதோ ராயின் தனி செயலகத்தில் வேலை செய்யும் ஊழியர்கள்.
இந்த இரண்டு விவகாரங்களிலுமே உயர் பதவி வகிக்கும் பலருக்கு பணப் பட்டுவாடா செய்யப்பட்டது தொடர்பாக போதுமான முதல் கட்ட ஆதாரம் உள்ளது. எனவே, அடுத்த கட்ட புலன் விசாரணை நடத்தியிருக்க வேண்டும். ஆனால் அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் தாங்களே அதில் சம்பந்தப்பட்டிருப்பதால் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்காமல் விஷயத்தை மூடி மறைத்திருந்தார்கள். எனவேதான் உச்சநீதிமன்றம் தலையிட்டு அத்தகைய விசாரணைக்கு உத்தரவிடும்படி மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
1990-களில் அத்வானி உட்பட பல்வேறு கட்சி தலைவர்களுக்கு பணம் கொடுத்ததாக குறிப்பிடும் ஹவாலா புகழ் ஜெயின் சகோதரர்களின் டைரிகளில் கூட பெயர்களை சுட்டிக் காட்டும் முதல் எழுத்துக்கள் (initials) மட்டும்தான் இருந்தன. அதன் அடிப்படையிலேயே பணம் கொடுக்கப்பட்டதா என்று விசாரிக்கும்படி உத்தரவிடப்பட்டது.
அதை விட வலுவாக பெயர்களே நேரடியாக குறிப்பிடப்பட்ட ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு, அவற்றை சம்பந்தப்பட்ட நபர்கள் உறுதி செய்திருக்கும் உறுதி செய்திருக்கும் நிலையில் உச்சநீதிமன்றம் அடுத்த கட்ட விசாரணை கூட நடத்த தேவையில்லை என்று முடிவு செய்திருப்பது, லஞ்ச ஊழலை ஒழிப்பதில் அரசுக்கும் அரசியல்வாதிகளுக்கும் மட்டுமில்லை, உச்சநீதிமன்றத்துக்கும் அக்கறை இல்லை என்பதை தெளிவாகக் காட்டுகிறது.
பிர்லா மற்றும் சகாரா குழுமங்கள் அரசியல்வாதிகளுக்கு லஞ்சம் கொடுத்தது தொடர்பான ஆவணங்கள் பற்றி மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷணின் பேட்டி லஞ்ச ஊழல் செய்யாத புனிதர்களாக சித்தரிக்கப்படும் மோடி, பிற பா.ஜ.க தலைவர்களின் யோக்கியதையையும், கார்ப்பரேட்டுகளின் லஞ்ச நடைமுறை பற்றியும் தோலுரித்துக் காட்டுகிறது.
சகாரா-பிர்லா டைரிக் குறிப்புகள் பிராசந்த் பூஷண் குறித்து விளக்குகிறார்.
புகழ்பெற்ற வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் சமீபத்தில் பேசப்பட்ட சகாரா-பிர்லா டைரிக் குறிப்புகளைப் பற்றியும், ரிலையன்ஸ் குழுமமும், அதானி குழுமமும் நிலக்கரி இறக்குமதியில் மதிப்பை அதிகமாகக் காட்டி மோசடி செய்தது குறித்தும், எஸ்ஸார் ஒலிப்பதிவுகள் பற்றியும் அளித்த பேட்டி
சகாரா டைரிக் குறிப்புகள் குறித்தும் பிர்லா ஆவணங்கள் குறித்தும் சமீபத்தில் நீங்கள் பொதுமக்களின் கவனத்தை ஈர்த்தீர்கள். அந்த ஆவணங்கள் வருமானவரித்துறையின் வசமும் இருக்கின்றன. அவற்றில் உண்மையில் என்னதான் இருக்கிறது என்று விளக்க முடியுமா?
2013-ம் ஆண்டில் நிலக்கரி ஊழல் தொடர்பாக ஆதித்ய பிர்லா குழும நிறுவனங்களில், குறிப்பாக ஹிண்டால்கோவில் சி.பி.ஐ (மத்திய புலனாய்வுத் துறை) தேடுதல் (ரெய்டு) நடத்தப்பட்டது. அந்தத் தேடுதல் நடவடிக்கையில் ரூ 25 கோடி ரொக்கப் பணம் கைப்பற்றப்பட்டதோடு, அந்தக் குழுமத்தின் முதன்மை செயல்பாட்டு அலுவலர் (சி.ஈ.ஓ) அமிதாபின் கணினியில் சேமித்து வைக்கப்பட்டிருந்த சில தகவல்களும் கைப்பற்றப்பட்டன. கைப்பற்றப்பட ஆவணங்கள் சிலவற்றில் சுற்றுச் சூழல் திட்டம் ஒன்று தொடர்பாக லஞ்சம் கொடுக்கப்பட்டது பற்றிய குறிப்புகள் இருந்தன. அந்த லஞ்சம் சுற்றுச் சூழல் அமைச்சகம் அல்லது அமைச்சருக்குக் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும் என்பது தெளிவான ஒன்று. அந்த காலகட்டத்தில் குழுமத்தின் பல திட்டங்களுக்கு சுற்றுச் சூழல் துறை அமைச்சகத்திலிருந்து அனுமதி வாங்கும் முயற்சியில் பிர்லா குழுமம் ஈடுபட்டிருந்தது என்பது தெரிந்த விஷயம். எனவே, அந்தக் குறிப்புகள் சுற்றுச் சூழல் அனுமதிகள் வாங்குவதற்காக கொடுக்கப்பட்ட லஞ்சம் தொடர்பானவை என்பதில் ஐயமில்லை. அது போக, சுபேந்து அமிதாபின் கணினியிலிருந்து கைப்பற்றப்பட்ட இன்னொரு தொகுதி ஆவணங்களில் “குஜராத் சி.எம் – ரூ 25 கோடி. 12 கொடுத்தாகி விட்டது. 13?” (“Gujarat CM – Rs 25 crores. 12 paid. 13?”) என்ற குறிப்பு காணப்பட்டது.
அந்த ஆவணங்கள் லஞ்சம் கொடுக்கப்பட்டிருப்பதை வெளிப்படுத்தியிருந்த போதும், அதன் மூலம் ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் குற்றம் நிகழ்ந்திருப்பதை புலப்படுத்திய போதும், கவலையளிக்கும் விதமாக மத்திய புலனாய்வுத் துறை முதல் தகவல் அறிக்கை எதையும் பதிவு செய்யாமல் ஆவணங்களை வருமான வரித்துறையிடம் கொடுத்து விட்டது.
இந்த விஷயம் தொடர்பாக வருமான வரித்துறை கொஞ்சம் விரிவான புலனாய்வு செய்தது. அமிதாபிடம் பலமுறை அவர்கள் விசாரணை நடத்தியதில் அவர் “குஜராத் சி.எம் – ரூ 25 கோடி. 12 கொடுத்தாகி விட்டது. 13?” (Gujarat CM – Rs 25 crores. 12 paid. 13?) என்பதை தான் எழுதியதாக ஒத்துக் கொண்டார். ஆனால், “குஜராத் சி.எம்” (Gujarat CM) என்பது “குஜராத் காரங்கள் மற்றும் இரசாயனங்கள்” நிறுவனத்தைக் குறிக்கிறது என்றார். C-ம் M-ம் எதைக் குறிக்கின்றன என்று கேட்டபோது அவரால் பதில் சொல்ல முடியவில்லை; அவர் பொய் சொல்கிறார் என்று வருமான வரித்துறை முடிவு செய்தது.
மேலும், பிர்லா குழுமம் ஹவாலா வழியாக பெருமளவு ரொக்கப் பணத்தை பெற்று வந்ததும், அது பல்வேறு நபர்களுக்கு லஞ்சமாக கொடுக்க பயன்படுத்தப்பட்டதும் தெரிய வந்தது. இந்த ஆதாரங்கள் கிடைத்த பிறகும் வருமான வரித்துறை மேல் நடவடிக்கைக்காக அவற்றை மத்திய புலனாய்வுத்துறைக்கு அனுப்பி ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் விசாரணை நடத்தும்படி கோரவில்லை. விஷயத்தை அதே மட்டத்தில் குழி தோண்டி புதைக்க முயற்சிக்கப்பட்டது. அதன் பின் விஷயத்தை பேசித் தீர்த்துக் கொள்வதாக பிர்லா குழுமம் வருமான வரித்துறையை அணுகியதாகவும், அது தொடர்பான வாதங்கள் முடிந்து விட்டன என்றும் தெரிய வருகிறது. இத்தோடு இந்த விஷயம் முடித்து வைக்கப்படும் என்றும் தேடுதல் நடவடிக்கையில் கைப்பற்றப்பட்ட அந்த ஆவணங்கள் பிர்லா குழுமத்திடமே திருப்பிக் கொடுக்கப்பட்டு விடும் என்றும் அஞ்சப்படுகிறது.
சகாரா தேடுதல் 2014 நவம்பர் 22-ம் தேதி நடைபெற்றது. அந்தத் தேடுதலில் குழுமத்தின் சேர்மன் அலுவலகத்திலிருந்து ரூ 137 கோடி ரொக்கமும், அவரது தனி உதவியாளரிடமிருந்து பல ஆவணங்களும், சில உதிரி காகிதங்களும், கணினி தரவுகளும் கைப்பற்றப்பட்டன. அந்த ஆவணங்களில் பல மூத்த அரசியல் தலைவர்களுக்கு லஞ்சம் கொடுக்க உத்தேசிக்கப்பட்ட மற்றும் பணம் கொடுக்கப்பட்ட விபரங்கள் கிடைத்தன.
கைப்பற்றப்பட்ட ஆவணங்ளில் ஒன்று விபரமான விரிதாள் (spreadsheet) தரவுகளின் அச்சுப் பிரதி. அதன் முதல் மூன்று நெடுவரிசைகளில் பல்வேறு தேதிகளில் பல்வேறு தரப்புகளிலிருந்து சகாரா குழுமம் பெற்றுக் கொண்ட ரொக்கம் பற்றிய விபரங்கள் பதிவாகியிருந்தன. அந்தத் தொகைகளின் கூட்டுத் தொகை ரூ 115 கோடி. அதன் பிறகு பல்வேறு நபர்களுக்கு பல்வேறு தேதிகளில் ரொக்கப் பணம் கொடுக்கப்பட்ட விபரங்களும், பணம் கொடுக்கப்பட்ட தேதி, இடம் போன்ற தகவல்களும், யார் பணத்தை பெற்றுக் கொண்டார் என்ற விபரமும் பதிவாகியிருந்தன. கைப்பற்றப்பட்ட அந்த ஆவணத்தில் ஒரு வருமான வரித்துறை அதிகாரியும், இரண்டு சாட்சிகளும், சகாரா அதிகாரி ஒருவரும் சான்று கையொப்பமிட்டிருந்தனர்.
அந்தத் தேடுதலில் இது போன்ற பல ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. சிறு சிறு வேறுபாடுகளுடன் இதே விபரங்களோடு பொருந்தும் இன்னொரு கோப்பும் இருந்தது. உதாரணமாக, முந்தைய கோப்பில் பணம் கொடுத்த ஒரு விபரக் குறிப்பு, “அகமதாபாதில் கொடுத்த பணம், மோடிஜி” (“cash given at Ahmedabad, Modiji”) என்று சொல்லப்பட்டிருந்தது பிற ஆவணங்களில் “குஜராத் சி.எம்-க்கு கொடுத்த பணம்” (“cash given to CM Gujarat”) என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அகமதாபாதில் மோடிஜிக்கு கொடுத்ததாக ரூ 40 கோடி, மத்திய பிரதேச முதல்வருக்கு கொடுத்ததாக ரூ 10 கோடி, சத்திஸ்கர் முதல்வருக்குக் கொடுத்ததாக ரூ 4 கோடி, டெல்லி முதல்வருக்குக் (அப்போது டெல்லி முதல்வராக இருந்தவர் திருமதி ஷீலா தீட்சித்) கொடுத்ததாக ரூ 1 கோடி என்ற குறிப்புகள் இருந்தன. இந்த பணப் பரிவர்த்தனைகள் அனைத்தும் 2013-க்கும் 2014 மார்ச்சுக்கும் நடுவே நடந்துள்ளன.
குற்றத்தை வெளிப்படுத்தும் இத்தகைய ஆவணங்களை கைப்பற்றிய பிறகும், அவை பல்வேறு மூத்த அரசியல் தலைவர்களுக்குக் கொடுக்கப்பட்ட தொகைகள் பற்றி விபரமாக சுட்டிக் காட்டியிருந்த போதும், வருமான வரித்துறை இது தொடர்பாக ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் புலன் விசாரணை நடத்தும்படி மத்திய புலனாய்வு ஆணையத்திடம் கோரவில்லை. வருமான வரித்துறை இது தொடர்பாக தயாரித்ததாக தெரிய வரும் மதிப்பீட்டு அறிக்கையில் இந்த ஆவணங்களைப் பற்றியும் பணப் பரிவர்த்தனைகள் பற்றியும் பேசப்படவில்லை என்றும் தெரிகிறது.
பிர்லா, சகாரா இரண்டு விவகாரங்களிலும் தொடர்புடைய, ஆவணங்களை இருட்டடிப்பு செய்த நபர் அப்போது வருமானவரித்துறை புலன் விசாரணை பிரிவின் தலைவராக இருந்த கே.வி.சவுத்ரி. அதன்பிறகு இந்த இருட்டடிப்புக்கு வெகுமதியாகவோ என்னவோ, அவர் மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்தின் தலைமைப் பொறுப்புக்கு நியமிக்கப்பட்டார். ஒரு மத்திய வருவாய்த் துறை அதிகாரி, அவர் மீது பல புகார்கள் இருந்த நிலையில், ஊழல் கண்காணிப்பு ஆணையாளராக நியமிக்கப்படுவது இதுதான் முதல்முறை. போன்டி சதாவின் வருமான வரித்துறை தாக்கல் ஆவணங்கள் தொடர்பாக முறைகேடு செய்ததாக இழிபுகழ் பெற்ற முன்னாள் மத்திய புலனாய்வுத் துறை இயக்குனர் ரஞ்சித் சின்ஹாவின் நுழைவு பதிவேடுகளில் சவுத்ரியின் பெயர் பலமுறை காணப்படுகிறது. இன்னும் விசாரணை நடந்து கொண்டிருக்கும் “பங்கு குரு” ஊழலிலும் (stock guru scam) அவருக்கு தொடர்பு இருந்திருக்கிறது. இதை எல்லாம் தாண்டி அவர் ஊழல் கண்காணிப்பு ஆணையராக நியமிக்கப்பட்டார்.
மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்திற்கு அவரும், இன்னொரு நபரும் நியமிக்கப்பட்டது தொடர்பாக நாங்கள் கேள்வி எழுப்பினோம். இந்தத் தகவல்களை மூடி மறைப்பதில் அவர் முக்கிய பங்காற்றினார் என்று எங்களுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் நாங்கள் ஒரு மனுவை தாக்கல் செய்தோம். அக்டோபர் மாதம் அந்த ஆவணங்கள் என் வசம் கிடைத்தவுடன் மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம், மத்திய நேரடி வரிகள் வாரியம், அமலாக்கத் துறை, மத்திய புலனாய்வுத் துறை மற்றும் கருப்புப் பணம் தொடர்பான சிறப்பு புலனாய்வு குழுவு ஆகியவற்றுக்கு நான் புகார் அனுப்பினேன். அந்தப் புகாரில், “குற்றம் நிகழ்ந்திருப்பது தொடர்பாக வலுவான ஆதாரங்களை இந்த ஆவணங்கள் சுட்டிக் காட்டுகின்றன. எனவே, ஜெயின் ஹவாலா வழக்கில் உச்சநீதி மன்றம் வகுத்துள்ள வழிகாட்டல்களின்படி இந்த வழக்குகள் தொடர்பாக புலன் விசாரணை நடத்தப்பட வேண்டும். பணம் கைமாறியதா, பணம் எதற்காக கொடுக்கப்பட்டது, அவை லஞ்சப் பணமா அல்லது வேறு நோக்கங்களுக்காக கொடுக்கப்பட்டதா என்று விசாரிக்கப்பட வேண்டும்” என்று கோரினோம்.
ஆனால் எதுவும் செய்யப்படவில்லை. இந்த விவகாரத்தை அத்தோடு மூடி மறைக்க முயற்சித்தனர். எனவே, கடைசியாக நாங்கள் உச்சநீதிமன்றத்தை அணுகி, மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையர் நியமனத்தை எதிர்த்து ஏற்கனவே தாக்கல் செய்திருந்த மனுவில் ஒரு கூடுதல் விண்ணப்பத்தை பதிவு செய்தோம். அந்த விண்ணப்பம் வெள்ளிக் கிழமை (நவம்பர் 25, 2016) விசாரணைக்கு வரவிருக்கிறது.
சகாரா டைரிக் குறிப்புகளில் பல பெயர்கள் குறிப்பிடப்பட்டிருந்தாலும் அரசியல்வாதிகள் யாரையும் நேரடியாக பெயர் சொல்லி சுட்டிக் காட்டவில்லை, உதாரணமாக டெல்லி முதல்வர், மத்திய பிரதேச முதல்வர் என்றுதான் குறிப்பிடுகிறது. இன்னும் வேறு பெயர்கள் இருக்கின்றனவா? பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள வேறு பிரபலமான அரசியல்வாதிகள் யார் யார்?
மத்திய பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான், அந்த நேரம் டெல்லி முதலமைச்சராக இருந்த ஷீலா தீட்சித், சத்திஸ்கர் முதல்வர் ரமண் சிங், அப்போது முதல்வராக இருந்த திரு மோடி ஆகிய பெயர்கள் உள்ளன. மோடியை தனிச்சிறப்பாக மோடிஜி என்று குறிப்பிட்டிருக்கின்றனர். சகாரா டைரிக் குறிப்புகளில் அவருக்கு ரூ 40 கோடிக்கும் அதிகமான பணம் கொடுக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. பிரதானமாக குறிப்பிடப்பட்டுள்ள இன்னொரு அரசியல்வாதி பா.ஜ.கவைச் சேர்ந்த சயினா என்.சி. சகாரா குழுமத்துக்கு எதிராக நிலுவையில் இருந்த வழக்கு (இது சில கடிதங்களில் பாம்பே வழக்கு என்று குறிப்பிடப்படுகிறது) ஒன்று தொடர்பாக தலையிடும்படி மகாராஷ்டிராவின் தலைமை அரசு வழக்கறிருக்கு அறிவுறுத்தும்படி கூறுமாறு அவரிடம் கேட்கப்பட்டதாக ஒரு ஆவணம் தெரிவிக்கிறது.
நீங்கள் ஏற்கனவே பல அரசு நிறுவனங்களுக்கு இது தொடர்பாக தகவல் கடிதம் அனுப்பியிருக்கும் நிலையில் மோடி அரசுக்கு இது ஏற்கனவே நன்கு தெரிந்த ஒரு விஷயம்தான். அரசிடமிருந்து உங்களுக்குக் எப்படிப்பட்ட எதிர்வினைகள் வந்தன?
10 நாட்களுக்குப் பிறகு, “நீங்கள்தான் இந்த புகாரை அனுப்பியிருக்கிறீர்கள் என்பதை உறுதி செய்யுங்கள்” என்று மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்திடமிருந்து ஒரு எதிர்வினை வந்தது. “நான்தான் அந்தப் புகாரை அனுப்பினேன்” என்பதை உடனடியாக உறுதி செய்தேன். ஆனால், அதன் பிறகு அவர்கள் அது குறித்து என்ன செய்தார்கள், எதையாவது செய்தார்களா என்பது பற்றி எனக்கு எதுவும் தெரியாது. துரதிர்ஷ்டவசமாக மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையரே, அவர் வருமான வரித்துறையின் புலனாய்வுப் பிரிவின் தலைமைப் பொறுப்பில் இருந்த போது இந்த ஆவணங்களை இருட்டடிப்பு செய்ததற்கு பொறுப்பாக இருந்திருக்கிறார்.
வருமான வரித்துறை 2015-லேயே தனது மதிப்பீட்டை தாக்கல் செய்து விட்டது. இப்போது இந்த விஷயம் தொடர்பாக மோடி அரசு எப்படி விசாரிக்க வேண்டும் என்று கருதுகிறீர்கள்?

மோடி (மற்றும் ரசிய அதிபர் புடின்) முன்னிலையில் எண்ணெய் ஒப்பந்தத்தில் கையொப்பமிடும் எஸ்ஸார் குழும முதலாளி ருய்யா
இந்த அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் எந்த அமைப்பின் விசாரணைக்கும் நம்பகத்தன்மை இருக்காது என்பது உறுதியானது. ஏனென்றால், இந்த அரசாங்கத்தின் தலைமை பொறுப்பில் உள்ள நபர்கள் பணம் பெற்றவர்களில் முக்கியமானவர்களாக குறிப்பிடப்பட்டுள்ளனர். இதை ஒரு சிறப்பு புலனாய்வுக் குழு அல்லது உச்சநீதிமன்றத்தின் கண்காணிப்பில் விசாரிக்க வேண்டும் என்று நாங்கள் கோருகிறோம்.
பணத்தை கொண்டு சென்றவர்களின் பெயர்களும் குறிப்பிடப்பட்டிருப்பதால் இந்த விவகாரம் தொடர்பாக விசாரணையை எளிதாக நடத்த முடியும். அவர்கள் சேர்மனின் தனிப்பட்ட உதவி ஊழியர்கள் என்று வருமான வரித்துறை அடையாளம் கண்டிருக்கிறது. உதய் சாவந்த், ஜெய்ஸ்வால் முதலான பெயர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. பயன்படுத்தப்பட்ட தொலைபேசி மற்றும் செல்பேசி எணகளும் அடையாளம் காணப்பட்டுள்ளன. பணத்தைக் கொண்டு சென்றதாக குறிப்பிடப்பட்டுள்ள நபர்கள் குறிப்பிட்ட இடங்களில் அந்த நாளில் இருந்தார்களா என்பதைக் கண்டறிவது எளிய விஷயம். அதை உறுதி செய்து, இந்த நபர்களை விசாரணைக்கு உட்படுத்த வேண்டும். பெறப்பட்டதாக காட்டப்பட்டுள்ள பணத்தை என்ன செய்தார்கள் என்பதற்கு அவர்கள் விளக்கம் அளிக்க வேண்டும்.
இது அனைத்தும் செய்யப்பட வேண்டும். அவர்கள் இதை எல்லாம் மறுக்கத்தான் செய்வார்கள். இருப்பினும், இது தொடர்பான எல்லா கோணங்களிலும் விசாரணை நடத்தப்பட வேண்டும். பணத்தைப் பெற்று, கொண்டு போய்ச் சேர்த்த நபர்கள் குறிப்பிட்ட இடத்தில் குறிப்பிட்ட நாளில் இருந்தார்களா என்பதை அவர்களது தொலைபேசி பதிவுகள் மூலம் சரிபார்க்க முடியும்.
பிர்லா ஆவணங்களில், ஹிண்டால்கோவுக்கு தேவையான சுற்றுச்சூழல் அனுமதி போன்ற சில சலுகைகளை பெறுவதற்காக சுறுறச் சூழல் அமைச்சருக்கு பணம் கொடுத்ததாக தெரிய வருகிறது. சகாரா ஆவணங்களிலும் கொடுக்கப்பட்ட பணத்துக்கு ஈடாக இந்நிறுவனங்கள் என்ன சலுகைகளை பெற்றன என்பது பற்றிய விபரங்கள் உள்ளனவா?
சகாரா ஆவணங்களில் அந்த விபரங்கள் குறிப்பிடவில்லை. உண்மையில், செல்வாக்கு படைத்த நபர்களை தமக்கு ஆதரவானவர்களாக வைத்துக் கொள்வதற்காக பொதுவாக கொடுக்கப்பட்ட பணம் என்று சில ஆவணங்களிலிருந்து புரிந்து கொள்ள முடிகிறது. தேர்தல் நேரத்தில் அரசியல் நன்கொடைகளாக கூட கொடுக்கப்பட்டிருக்கலாம். எப்படியிருந்தாலும் இந்த நபர்களில் பலர் மூத்த அரசு பொறுப்பில் இருந்தவர்கள். குஜராத், மத்திய பிரதேசம், சத்திஸ்கர், டெல்லி என்று இந்த அனைத்து மாநிலங்களிலும் சகாரா குழும நிறுவனங்கள் செயல்பட்டுக் கொண்டிருப்பது மறுக்க முடியாத உண்மை. பணத்துக்கு கைமாறாக ஏதாவது சலுகை வழங்கப்பட்டதா அல்லது அவை பொதுவான அரசியல் நன்கொடைகளா அல்லது அரசியல்வாதிகளின் அல்லது கட்சியின் கணக்கில் காட்டப்படாத கருப்புப் பண நன்கொடைகளா என்பது விசாரிக்கப்பட வேண்டும். பா.ஜ.க அலுவலகத்துக்கு ரூ 15 கோடி கொடுக்கப்பட்டதாகவும் சகாரா ஆவணங்கள் குறிப்பிடுகின்றன. இவை அனைத்தும் நடந்த நேரத்தில் மோடி பா.ஜ.கவின் பிரதமர் வேட்பாளராக நியமிக்கப்பட்டிருந்தார்.
இதிலிருந்து அரசியல்-அரசு-கார்ப்பரேட் தொடர்பு குறித்த பொதுவான பிரச்சனையை பேச வேண்டியிருக்கிறது. சில மாதங்களுக்கு முன்பு நீங்கள் எஸ்ஸார் தொலைபேசி பதிவுகளை அம்பலப்படுத்தினீர்கள். அதன்படி எஸ்ஸார் குழுமம் அரசிலும் பிற இடங்களிலும் பொறுப்பில் இருக்கும் பல்வேறு முக்கிய நபர்களின் தொலைபேசிகளை ஒட்டுக் கேட்டதாக தெரிய வந்தது. சில மாதங்களுக்கு முன்பு அம்பானி, அதானி மற்றும் பல்வேறு தனியார் நிறுவனங்கள் இறக்குமதி செய்த நிலக்கரியின் விலையை கூடுதலாக காட்டி அந்தக் கூடுதல் செலவை நேரடியாக நுகர்வோரின் மீது சுமத்தியது பற்றி தெரிய வந்தது. அதாவது மொத்தம் மூன்று ஊழல்கள். எஸ்ஸார் தொலைபேசி பதிவுகள் பற்றியும், நிலக்கரி இறக்குமதிகளின் மதிப்பு அதிகமாகக் காட்டப்பட்டது குறித்தும் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?
அவை அனைத்தும் பெரிய ஊழல்கள் என்பதில் சந்தேகமில்லை. எஸ்ஸார் தொலைபேசி பதிவுகள் மட்டுமின்றி எஸ்ஸார் மின்னஞ்சல்களும் உள்ளன. பல்வேறு துறைகளில், இடங்களில் மூத்த அரசு பதவி வகிக்கும் பெரும் எண்ணிக்கையானவர்களுக்கு திட்டமிட்டு முறையாக லஞ்சம் கொடுக்கப்பட்டது தொடர்பான ஏராளமான மின்னஞ்சல்களை எஸ்ஸார் நிறுவனத்தின் கார்ப்பரேட் அலுவலகத்தில் பணி புரியும் ஒரு காட்டிக் கொடுக்கும் நபர் கண்டுபிடித்து அம்பலப்படுத்தினார். இந்த லஞ்சம் கொடுக்கும் விவகாரமும் சகாரா விவகாரத்தைப் போன்றதுதான். அந்த மின்னஞ்சல்கள் அரசின் வசம் உள்ளன, அவை தொடர்பாக நான் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளேன். அதற்கு பதிலளிக்கும்படி அரசுக்கு உத்தரவிடப்பட்டது, இதுவரை எந்த பதிலும் அளிக்கப்படவில்லை. இப்போதைய ஆளும் கட்சியான பா.ஜ.க-வின் மூத்த தலைவர்கள் பலருக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டதாக சுட்டுவதால் அவர்கள் இந்த விஷயம் தொடர்பாக கமுக்கமாக உள்ளனர். சகாரா, பிர்லா ஆவணங்களைப் போலவே எஸ்ஸார் ஆவணங்களும் காங்கிரஸ் தலைவர்கள் மீதும் குற்றம் சுட்டுகின்றன, ஆனால் பா.ஜ.க தலைவர்கள் மாட்டிக் கொள்வார்கள் என்பதால் அரசு அவற்றை இருட்டடிப்பு செய்கிறது.
அது போல அதானி குழுமம் மற்றும் ரிலையன்ஸ் மற்றும் பிற நிறுவனங்கள் நிலக்கரி இறக்குமதியில் விலையை உயர்த்திக் காட்டி மோசடி செய்தது தொடர்பான விபரங்கள் வருவாய் புலனாய்வுத் துறையாலேயே கைப்பற்றப்பட்டன. அந்த ஆதாரங்களின்படி வரி ஏய்ப்பு சொர்க்கங்களில் பதிவு செய்யப்பட்ட உப்புமா நிறுவனங்கள் வழியாக இந்த விலை உயர்த்தும் ஊழல் செய்யப்பட்டிருப்பது தெரிய வந்தது. இந்த ஆதாரங்கள் அனைத்தும் அரசின் வசம் இருந்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
நான் மட்டுமே ஆவணங்களால் உறுதிப்படுத்தப்பட்ட இரண்டு புகார்களை அனுப்பியுள்ளேன். ஒன்று முகேஷ் அம்பானிக்கு எதிரானது. அதன்படி முகேஷ் அம்பானி குழுமத்துக்கு 100% சொந்தமான நான்கு நிறுவனங்களில் சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்ட உப்புமா நிறுவனத்தின் மூலமாக ரூ 6,500 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது. அந்த சிங்கப்பூர் நிறுவனத்துக்கு எந்தச் சொத்தும் கிடையாது, எந்த வருமானமும் கிடையாது, எந்த வணிகமும் கிடையாது, ஆனால் சிங்கப்பூரில் இருந்து வந்த மிகப்பெரிய நேரடி அன்னிய முதலீடு இந்த உப்புமா நிறுவனம் மூலமாக வந்திருக்கிறது.
இந்த அன்னிய நேரடி முதலீடு மிகவும் சந்தேகத்துக்குரியது என்றும் அது பற்றி விசாரணை நடத்த வேண்டும் என்று அந்த நேரத்தில் (2011-ம் ஆண்டு) சிங்கப்பூரின் இந்திய தூதரகம் நிதி அமைச்சகத்துக்கு எழுதியது. ஆனால், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு இது தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனக்கு இந்த விவகாரம் குறித்து தெரிய வந்த போது திரு மோடி அப்போதுதான் பிரதமர் ஆகியிருந்தார். இந்திய தூதரே எழுதிய இந்த ஆதாரத்தின்படி ரிலையன்ஸ் விலையை உயர்த்திக் காட்டுவதன் மூலம் அதன் நிறுவனங்களிலிருந்து பணத்தை மோசடி செய்திருக்கிறது என்று தெரிய வருகிறது. கிருஷ்ணா கோதாவரி படுகை தொடர்பான அறிக்கையில் தலைமை தணிக்கை அதிகாரியும் இதை பதிவு செய்திருக்கிறார். அதாவது, அவர்கள் வாங்கிய பல பொருட்களின் விலையை அதிகமாகக் காட்டி, மோசடி செய்த பணம் இந்த உப்புமா சிங்கப்பூர் நிறுவனம் வழியாக வெள்ளையாக்கப்பட்டு, மீண்டும் முகேஷ் அம்பானியின் நிறுவனங்களுக்குள் கொண்டு வரப்பட்டிருக்கிறது. ஆனால், இது தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதே விஷயம் தொடர்பாக அனில் அம்பானிக்கு எதிராகவும் நான் எழுதினேன். வருமான வரித்துறை சில புலன் விசாரணைகளை மேற்கொண்டது. சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்ட உப்புமா நிறுவனம் வழியாக சுமார் $75 கோடி (சுமார் ரூ 5100 கோடி) அனில் அம்பானிக்கு 100% சொந்தமான நிறுவனங்களில் முதலீடு செய்யப்பட்டுள்ளது. இவை இரண்டும் பணத்தை வெள்ளையாக்கும் வாடிக்கைக்கு சரியான உதாரணங்கள். இவை தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
கருப்புப் பணத்தை வெள்ளையாக்கி பங்குச் சந்தைகளில் முதலீடு செய்வதற்கான மிகப்பெரிய, அடையாளம் மறைத்த முதலீட்டுக் கருவிகளில் ஒன்று பங்கேற்பு குறிப்புகள் (participatory notes) என்பது பரவலாக அறியப்பட்ட உண்மை. பங்கேற்பு குறிப்புகள் அடையாளத்தை மறைப்பதால், அவற்றின் உரிமையாளர்கள் யார் என்பதை தெரிந்து கொள்ள முடியாது. அவை அன்னிய நிதி நிறுவனங்களால் இந்தியாவுக்கு வெளியில் விற்கப்பட்டு, வாங்கியவர்களின் பணம் இந்திய பங்குச் சந்தைகளில் முதலீடு செய்யப்படுகின்றது.
“கருப்புப் பணத்தை கட்டுப்படுத்துவதாக பேசிக் கொண்டிருக்கும் நீங்கள் குறைந்தபட்சம் அடையாளத்தை மறைக்கும் முதலீட்டு கருவிகளான பங்கேற்பு குறிப்புகளையும், வரியில்லா சொர்க்கங்கள் வழியிலான அன்னிய நேரடி முதலீடுகளையும் தடுத்து நிறுத்த வேண்டும்” என்று மோடி பிரதமர் ஆனவுடன் நான் அவருக்கு எழுதினேன். வரியில்லா சொர்க்கத்தைச் சேர்ந்த ஒரு நிறுவனம் இந்தியாவில் முதலீடு செய்யும்போது அந்த நிறுவனத்தின் மூலம் பலனடையும் முதலாளிகள் யார், அதன் பங்குதாரர்கள் யார் என்பதை தெரிந்து கொள்ள முடியாது. அதனால்தான், ஊழல் பணத்தை வெள்ளையாக்குவதற்கான சிங்கப்பூர் பாதை போன்றவை கொழிக்கின்றன.
பிரதமர் கருப்புப் பணத்திற்கு எதிராக துல்லிய தாக்குதல் நடத்த விரும்பியிருந்தால் அவர் இவை அனைத்துக்கும் எதிராக நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். எஸ்ஸார், அம்பானிகள், அதானிகள், பங்கேற்பு குறிப்புகளை வாங்கியவர்கள், வரியில்லா சொர்க்கங்கள் வழியாக வரும் முதலீடுகள் அல்லது ஸ்விஸ் வங்கிக் கணக்கு வைத்திருக்கும் நபர்கள் அல்லது பனாமா ஆவணங்களில் பெயர் குறிப்பிடப்பட்ட நபர்கள் மீது தாக்குதல் தொடுத்திருக்க வேண்டும். அதன் மூலம் பல லட்சம் கோடி கருப்புப் பணத்தை மீட்டிருக்க முடியும். அதுதான் பெருமளவு கருப்புப் பணம் வைத்திருப்பதாக அறியப்படும் நபர்கள் மீதான துல்லிய தாக்குதலாக இருந்திருக்கும்.
அதற்கு மாறாக புழக்கத்தில் இருந்த 86% நோட்டுகளை ரத்து செய்யும் நடவடிக்கை துல்லிய தாக்குதல் என்று விளம்பரப்படுத்தப்படுகிறது. இந்தியாவின் ஏழை மக்களில் பாதி பேருக்கு வங்கிக் கணக்குகளோ, ஏ.டி.எம் அட்டைகளோ கிடையாது. அவர்கள் தமது சேமிப்பை பணமாக வைத்திருக்கின்றனர். அவர்கள் தமது பணத்தை பயன்படுத்த முடியாது செய்த நடவடிக்கை மூலம் அவர்கள் கடும் நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ளனர்.
courtesy : thewire.in
மொழிபெயர்ப்பு : டார்வின்