வாஞ்சிநாதனை விடுதலை செய்

க்கள் உரிமை பாதுகாப்பு மையத்தின் ஒருங்கிணைப்பாளரும், தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டக் குழுவின் சட்ட ஆலோசகருமான வழக்கறிஞர் வாஞ்சிநாதனை எடப்பாடி அரசு கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறது. அவர் செய்த தவறு என்ன? இந்த கைது தொடர்பாக நாம் செய்ய வேண்டியது என்ன?

கடந்த ஆண்டு மே மாதம் விப்ரோ உட்பட பல்வேறு ஐடி நிறுவனங்களில் கட்டாய பணி நீக்கம் நடைபெற்றது. அந்த சமயம் பு.ஜ.தொ.மு ஐ.டி ஊழியர்கள் பிரிவை தொடர்புகொண்ட சங்க உறுப்பினர்களும் உறுப்பினர் அல்லாதோரும் இதற்கு எதிராக ஏதாவது செய்ய வேண்டும் என்றனர். உடனடியாக பாதிக்கப்பட்டவர்களை தொடர்புகொண்டு அவர்கள் என்ன செய்யவேண்டும், சட்டம் வழங்கியிருக்கும் உரிமைகள் என்ன என்பது பற்றி வழிகாட்டினோம். அந்த வழிகாட்டலின் அடிப்படையில் சென்னை தொழிலாளர் நல அதிகாரியிடம் தொழிற்தகராறு சட்டம் பிரிவு 2K-ன் அடிப்படையில் தொழிற்தாவா தாக்கல் செய்தோம்.

அந்த தொழிற்தாவா வழக்கு நடந்து கொண்டிருக்கும் நேரத்தில் சம்பந்தப்பட்ட ஊழியர்கள் வேலையை விட்டு நீக்கப்படுவது தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. அவர்கள், இன்றுவரை நிறுவனத்தில் உள்ளனர். இது ஐ.டி துறையில் ஒரு சாதனையாகும். இதற்கு பிறகு பல சமயங்களில் பல நிறுவனங்களிலிருந்து தொடர்புகொள்பவர்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்ற வழிகாட்டலை வழங்கி வருகிறோம்.

இப்படியொரு சம்பவம் நடந்ததே இன்னமும் ஐ.டி ஊழியர்கள் பெரும்பாலானோருக்குத் தெரியாது. இன்னமும் ஐ.டி துறையில் சங்கம் வைக்க அனுமதியில்லை, சங்கம் வைத்தால் வேலை போய்விடும் என்ற பூச்சாண்டியை நம்பிக்கொண்டும் இருக்கின்றனர். ஆனால், சங்கத்தில் சேர்ந்ததால்தான் தமது வேலைக்கு பாதுகாப்பு கிடைத்தது என்பதற்கு சாட்சியாக பல ஊழியர்கள் இருக்கின்றனர். இந்த சாதனையை அவ்வளவு எளிதாக அடைந்துவிடவில்லை.

ஐ.டி துறையில் சங்கம் வைக்க அனுமதியில்லை என்ற வதந்தி பரவலாக இருக்கும் சமயத்தில், சங்கம் வைக்க எந்தத் தடையும் இல்லை என்று சட்டப்படியாக நிரூபிக்க கடுமையான போராட்டங்கள் நடத்தவேண்டியிருந்தது.

2015-ம் ஆண்டு பல்லாயிரக்கணக்கான TCS ஊழியர்கள் கட்டாய பணிநீக்கம் செய்யப்படுகிறார்கள், என்ன செய்வதென்று தெரியாமல் சக ஊழியராகவும் அடுத்து நாமாகவோ, நமது நிறுவனத்திலும் நடக்கலாமோ என்ற அச்சத்திலும் சிலர் பு.ஜ.தொ.மு தோழர்களை அணுகியபோது, தொழிலாளர் நலச் சட்டம் சார்ந்த வழக்கறிஞர்களும் பிற சங்க பிரதிநிதிகளும் இதற்காக பல நாட்கள் அயராது உழைத்து பழைய வழக்கு விவரங்களையும், சட்ட உரிமைகளையும், நிறுவனங்களின் பாலிசிகளையும் சேகரித்து அதனடிப்படையில் சங்கம் வைக்க எந்தத் தடையும் இல்லை என்பதை நிரூபித்தார்கள்.

இதில் தொழிலாளர்களுக்காக வாதாடும் சமூக அக்கறையுடைய சில வழக்கறிஞர்களின் பங்களிப்பு அளப்பரியது. அவர்களது உழைப்பு இல்லையென்றால் ஐ.டி துறையில் சங்கம் இந்த நேரத்தில் உருவாகியிருக்குமா என்பது கேள்விக்குறிதான்.

அன்றைக்கு அவர்கள் அளித்த பங்களிப்பு இன்றைக்கு பலநூறு ஐ.டி ஊழியர்களின் வேலையை காப்பாற்றியுள்ளது.

பொதுவாக வழக்கறிஞர்கள் என்றால் இருக்கும் கசப்பான அனுபவங்களின்றி சமூகத்தை நேசிக்கும் இதுபோன்ற வழக்கறிஞர்களது பங்களிப்பை கண்டு வியப்புற்றிருக்கிறோம். பணம் சம்பாதிப்பதை தூரமாக வைத்துவிட்டு சமூகத்தின் மீதான அக்கறையிலிருந்து வழிகாட்டுவதும், வழக்குகளை எடுத்து நடத்துவதுமான வழக்கறிஞர்களது பங்களிப்பு ஒவ்வொரு இடத்திலும் இன்றைக்கும் தேவைப்படுகின்றது.

22 ஆண்டுகலாக பல்வேறு கட்சிகளை, தன்னார்வ தொண்டு நிறுவனங்களை நம்பி ஏமாந்து தெருவில் நின்ற தூத்துக்குடியைச் சுற்றியுள்ள கிராம மக்களுக்கு, சாவதைத்தவிர வேறு வழியில்லை, போராடி சாவோம் அல்லது ஸ்டெர்லைட் நச்சுக்காற்றில் சாவோம், இதில் எதையாவது தேர்ந்தெடுத்தே ஆகவேண்டிய சூழலில் சட்டப்படியான வழிகாட்டல்களை வழங்கினார்கள் வழக்கறிஞர்கள். அந்த வழிகாட்டல்கள் காசுபணத்துக்காக அல்ல, அந்த மக்களின் மேலிருந்த அக்கறையால் வழங்கப்பட்டது. அந்த வழிகாட்டல்கள் பல கிராமங்களையும், நகரத்தையும் சாதி மதம் கடந்து இணைத்துள்ளது. இதுநாள்வரை தனது கட்டுப்பாட்டிலிருந்த போராட்டம் இன்றைக்கு வேறு பாதையில் சென்றுவிட்டதை உணர்ந்த நிர்வாகமும் அரசும் இதற்கு காரணமானவர்களை துரத்தி துரத்தி கைது செய்து சிறையிலடைக்கிறது. சட்ட உதவிகள் வழங்கியவர்களில் முக்கியமான நபர்தான் வாஞ்சிநாதன்.

தூத்துக்குடி மட்டுமல்ல, சாராயத்தால் பல குடும்பங்கள் நடுத்தெருவுக்கு வந்தபோதும் சாராயக்கடையை மூட நடந்த போராட்டங்களுக்கு சட்டரீதியான உதவிகள் வழங்கியுள்ளார். இதே தூத்துக்குடியில் தாதுமணல் கொள்ளையன் வைகுண்டராசன் பற்றி யாரும் பேசத் தயங்கிய சமயத்தில் பல்வேறு வழக்கறிஞர்கள் அமைப்புகளுடன் கள ஆய்வு செய்து உண்மையரியும் குழு அமைத்து பல உண்மைகளை வெளி உலகுக்கு கொண்டுவந்தார். மதுரை கிரானைட் கொள்ளையன் பழனிச்சாமிக்கு எதிராகவும் உண்மை அறியும் குழு அமைத்து பல்வேறு வழக்கறிஞர்களை உள்ளடக்கிய மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தின் வழியாக உண்மையை உலகறியச் செய்தார்.

சாமானிய ஒரு நபர் தனது தரப்பு நியாயத்தை பெறுவதற்கு பை நிறைய பணம் வைத்திருந்தால் சாத்தியம் என்ற சூழலில், மக்களுக்காக அக்கறையுடன் இயங்கும் இதுபோன்ற வழக்கறிஞர்களைத்தான் தற்போது அரசு வேட்டையாடி வருகிறது.

இதுபோன்ற வழக்கறிஞர்கள் மக்களுக்காக களத்திலிறங்கி வேலை செய்யும்போதும் பல்வேறு அச்சுறுத்தல்களை சந்திக்கத்தான் செய்கிறார்கள். தற்போது அரசே தொடுத்திருக்கும் அச்சுறுத்தலும், தாக்குதலும் கோரமானது. இந்த சமயத்தில் வாஞ்சிநாதன், மக்கள் உரிமை பாதுகாப்பு மையம் போன்ற வழக்கறிஞர்களை காக்கத் தவறினால் நமது நாட்டின் இயற்கை வளங்களின் அழிவும், நமது உரிமைகள் பறிபோவதும் மிக வேகமாக நடந்தேறிவிடும்.

வழக்கறிஞர்களாக, சமூகத்தில் அக்கறையுள்ளவர்களாக அவர்களது கடமையை அவர்கள் செய்துவிட்டார்கள். அவர்கள் மீதான அடக்குமுறையை எதிர்த்து நாம் வினையாற்ற வேண்டிய தருணம் இது.

– பிரவீன்

Permanent link to this article: http://new-democrats.com/ta/release-vanchinathan-immediately/

Leave a Reply

Your email address will not be published.

%d bloggers like this:
Read more:
முதலாளி மல்லையாவின் ஜேப்படியும், ஜேப்படி நீரவ் மோடியின் முதலாளித்துவமும் – மோடி அரசின் சாதனைகள்

மோடி அரசின் digital முகத்தை மோசமாக கிழித்திருக்கிறது நீரவ் மோடி – சோக்சி கும்பல். ஆனால், இத்தகைய ஜேப்படி நபருடன்தான் டாவோசில் நரேந்திர மோடி புகைப்படம் எடுத்துக்...

போராட்டக் களத்தில் கிராமப்புற அஞ்சலக ஊழியர்கள்

நாடெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான விவசாயிகளையும், கிராமப்புற தொழிலாளர்களையும் வங்கித் துறைக்குள் கொண்டு வருவது, அதன் மூலம் மக்களின் சேமிப்புகளையும், பண பரிவர்த்தனைகளையும் நிதித்துறை சூதாட்டத்துக்குள் ஈடுபடுத்த வசதி...

Close