திருடுவதே வெற்றியின் இரகசியம்!

ன்றைக்கு நாட்டின் மூலை முடுக்கில் எல்லாம் ஊடுருவி ஆதிக்கம் செலுத்துகிறது ரிலையன்சின் “ஜியோ” .

2 ஆண்டுகளுக்கு முன்பு ரிலையன்ஸ் குழுமத்தின் பேரக் குழந்தைகளான இரட்டைக் குழந்தைகள் ஈஷா அம்பானியும், ஆகாஷ் அம்பானியும் லட்சக்கணக்கான ரிலையன்ஸ் ஊழியர்கள் மத்தியில் “ஜியோ” தொடக்க விழாவை நடத்தினார்கள்.

“எங்கள் தாத்தா திருபாய் அம்பானியின் 83-வது பிறந்த நாளில், விழாவை குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைக்க எங்கள் பாட்டி திருமதி கோகிலா பென் அம்பானியையும், எங்கள் அப்பா திரு முகேஷ் அம்பானியையும், எங்கள் அம்மா திருமதி நீத்தா அம்பானியையும், கூடவே அண்ணன் அனந்த் ஆகியோரை மேடைக்கு அழைக்கிறோம்” என்று மாற்றி மாற்றி பேசினார்கள் இரட்டையர்கள்.

அதைத் தொடர்ந்து மேடையில் பாட்டி, அப்பா, அம்மா, மூத்த அண்ணன், குட்டி தம்பி, தங்கை அடங்கிய 6 பேர் கொண்ட குடும்பம் தாத்தா நினைவாக கூட்டாக குத்து விளக்கேற்றியது. குத்து விளக்கேற்ற ஒரு மெழுகுவர்த்தியை கேள்விக்குறி போல வளைந்து வந்து கொடுத்த ஒரு பெண்மணியை தவிர வேறு எந்த ஒரு ஈ காக்காய் மேடையில் தென்படவில்லை அல்லது அனுமதிக்கப்படவில்லை.

“தேங்க்யூ கோகிலா மம்மி, தேங்க்யூ, டாட், தேங்க்யூ மாம், தேங்க்யூ ஆனந்த்” என்றார்கள் இரட்டையர்கள். “லேடீஸ் அண்ட் ஜென்டில்மென் தேங்க்யூ சோ மச் ஃபார் ஜாய்னிங் அஸ்” என்று இந்த குடும்ப விளக்கேற்றும் நிகழ்வை முடித்து வைத்தார் ஈஷா அம்பானி. (வீடியோவை யூடியூபில் பார்க்கலாம்)

மேடைக்குக் கீழே இந்த குடும்பத்தின் பரிவாரங்கள் 35,000 பேர் நேரிலும், தொலை தொடர்பு மூலம் 90,000 ஊழியர்களும் தமது மகாராஜாவின் குடும்ப விழாவில் பங்கேற்று கொண்டார்கள். விழா நடக்கும் போதே தொலைக்காட்சிகளும், இணைய ஊடகங்களும், அடுத்த நாள் அச்சு பத்திரிகைகளும் இந்தியா முழுமைக்கும் இந்த விழா தொடர்பான விபரங்களை கொண்டு சேர்த்தார்கள்.

ஏனென்றால், அம்பானி குடும்பம் என்பது ஆனானப்பட்ட குடும்பம் இல்லை. 1960-களில் இந்த குடும்பத்தின் தாத்தா திருபாய் அம்பானியால் ரூ 5,000 முதலீட்டுடன் மும்பையில் 1 மேசை, 3 நாற்காலிகளுடன் தொடங்கப்பட்ட இந்த குழுமத்தின் இன்றைய மதிப்பு ரூ 7.2 லட்சம் கோடி. 2016-17ல் முகேஷ் அம்பானியின் தனிப்பட்ட சொத்து மதிப்பு $1530 கோடி (சுமார் ரூ 1 லட்சம் கோடி) அதிகரித்து ரூ 2.47 லட்சம் கோடியை எட்டியிருக்கிது. அம்பானி போன்ற 100 பணக்கார இந்தியர்களின் சொத்த மதிப்பு ரூ 31.13 லட்சம் கோடியாக அதிகரித்திருக்கிறது. இது சென்ற ஆண்டை விட 26% அதிகம் ஆகும்.

50 ஆண்டுகளுக்கு முன்பு ஆரம்பித்து படிப்படியாக செல்வத்தையும், அதிகாரத்தையும் தம் கையில் குவித்திருக்கும் அம்பானி குடும்பத்தின் வணிக சாம்ராஜ்யம், இந்தியாவின் பொருளாதார வாழ்வின் கேந்திரமான இடங்களை கட்டுப்படுத்துகிறது. (Mukesh Ambani’s Business Empire, How Big Is Reliance, Company, List)

சில்லறை வர்த்தகத்தில் மட்டும் ஆண்டுக்கு ரூ 33,765 கோடி வியாபாரம் செய்கிறது.

 • ரிலையன்ஸ் ஃபிரெஷ் – 80 நகரங்களில் 500-க்கும் மேற்பட்ட சூப்பர் மார்க்கெட்டுகள்
 • ரிலையன்ஸ் மார்ட் – மொத்த விற்பனைக் கடைகள் 37 நகரங்களில் 25 லட்சம் உறுப்பினர்களுடன்
 • ரிலையன்ஸ் டிஜிட்டல் – 1900 மின்னணு பொருட்கள் விற்பனை நிலையங்கள்
 • ரிலையன்ஸ் டிரெண்ட் – 190 நகரங்களில் நவீன, ஆடம்பர ஆடை அணிகளை விற்கும் 355 கடைகள்
 • ரிலையன்ஸ் ஜ்வெல்ஸ் – நாடு முழுவதிலும் நகை விற்கும் 40 கடைகள்
 • ரிலையன்ஸ் ஃபுட்பிரின்ட் – 25 மாநிலங்களில் 200-க்கும் அதிகமான செருப்புக் கடைகள்

என நடத்துகிறார் அம்பானி. ஆனால், சில்லறை வணிகத்தின் மூலம் கிடைக்கும் வருவாய் மொத்த குழும வருவாயில் வெறும் 8.8% மட்டுமே.

இந்த சில்லறை விற்பனை கடைகளை போல் இல்லாமல் கண்ணுக்குத் தெரியாமல் நமது வாழ்க்கையை கட்டுப்படுத்தும் பொருட்கள் மீதான ஏகபோகம் மூலம் ரிலையன்ஸ் தனது பெரும்பகுதி வருவாயை குவிக்கிறது.

1980-களில் ஜவுளித் துறையில் விமல் சூட்டிங், அதற்குத் தேவையான பாலியெஸ்டர் இழை, நூல் துறை என அம்பானி குழுமத்தின் ஏகபோகம் அடுத்தடுத்த துறைகளுக்கு விரிந்தது. அதற்கு அரசியல், ஊழல், ஊடகம், விளம்பரம் என்று அனைத்து உத்திகளையும் பயன்படுத்தினார் அம்பானி. உதாரணமாக, 1987-ல் இந்தியாவில் நடந்த உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான புரவலர் ரிலையன்ஸ் நிறுவனம்.

அடுத்து எண்ணெய் சுத்திகரிப்பு, பெட்ரோல் விற்பனை, எண்ணெய் எரிவாயு துரப்பணம் என்ற தனது கரங்களை விரித்தது அம்பானியின் வணிகக் குழுமம். இப்போது குழுமத்தின் மொத்த வருவாயில் 90.8% ஜவுளித் துறை, எண்ணெய்/எரிவாயு துறையில் ஈட்டப்படுகிறது.

1990-களில் எண்ணெய் சுத்திகரிப்பு போல இப்போது “அடுத்த எண்ணெய்” என்று கருதப்படும் “தரவு” வியாபாரத்தில் தனது ஏகபோக வலிமையை இறக்கியிருக்கிறார் முகேஷ் அம்பானி.

ரிலையன்ஸ் ஜியோ சேவை ஆரம்பித்த சுமார் ஒரு ஆண்டுக்குள் சுமார் 13 கோடி வாடிக்கையாளர்களை இணைத்துள்ளது. இலவச இணைய வசதி, மலிவு விலையில் தொலைபேசி கருவி என்று வாடிக்கையளர்களை தனது வலைக்குள் இழுத்திருக்கிறார் அம்பானி.
இதற்காக ரூ 1.5 லட்சம் கோடி வங்கிக் கடன் பெற்றிருக்கிறார். ஊடகங்களை ஒட்டு மொத்தமாக “ஜியோ” புகழ் பாட வைத்திருக்கிறார். சந்தை ஏகபோகத்தை கைப்பற்றி அடுத்த சில பத்தாண்டுகளுக்கு தனது குடும்பத்தின் ஆட்சியை உறுதி செய்திருக்கிறார், அம்பானி.

அம்பானி நமக்கு செய்திகள் சொல்வதாக , நம்மை மகிழ்விப்பதாக சொல்லும் ஊடக, திரைப்பட, தொலைக்காட்சி, இணைய நிறுவனங்களிலும் அம்பானி ஆதிக்கத்தை நிறுவியிருக்கிறார்.

2014-ல் ரூ 4,000 கோடிக்கு வாங்கிய நெட்வொர்க் 18 மூலம்

 • சி.என்.பி.சி – டி.வி 18, சி.என்.என்-நியூஸ் 18, ஐ.பி.என் 7, ஈ.டி.வி, சி.என்.பி.சி பஜர், ஐ.பி.என் – லோக்மத் போன்ற செய்தி/வணிக சேனல்களையும்
 • கலர்ஸ், ரிஷ்தே, ஹிஸ்டரி, டி.வி 18, எம்.டி.வி இந்தியா, நிக், சோனி, வி.எச்1, காமெடி சென்ட்ரல் (இந்தியா) போன்ற பொழுதுபோக்கு சேனல்களையும்
 • மணிகண்ட்ரோல், ஐ.பி.என் லைவ், பர்ர்ப், இன்.காம், ஃபர்ஸ்ட் போஸ்ட் போன்ற இணைய செய்தி நிறுவனங்களையும்
  ஹோம்ஷாப் 18, புக்மைஷோ.காம் போன்ற இணைய வணிக நிறுவனங்களையும்
 • ஃபோர்ப்ஸ் இந்தியா, ஓவர்டிரைவ், பெட்டர் இனடீரியர்ஸ், பெட்டர் ஃபோட்டகிராஃபி போன்ற பத்திரிகைகளையும்
  அம்பானி கட்டுப்படுத்தி இயக்குகிறார்.

இதற்கு மேல் முதலீடுகள் மூலம் நேத்ராடைன், யாத்ரா.காம் (பயணம்), டாப்பர் டி.வி (கல்வி சேனல்), வயாகாம் 18 மோஷன் பிக்சர்ஸ் (திரைப்பட நிறுவனம்), பாலாஜி டெலிஃபில்ம்ஸ் (பிரபல இந்தி தொலைக்காட்சி தொடர்களை தயாரிக்கும் நிறுவனம்) ஆகியவற்றையும் கட்டுப்படுத்துகிறார்.

இதற்கு மேல் ஓபராய், டிரைடன்ட் உட்பட 31 ஆடம்பர ஓட்டல்களை இயக்கு்ம நிறுவனத்தையும், கென்யாவில் ரியல் எஸ்டேட் நிறுவனம் ஒன்றையும் கைப்பற்றியுள்ளனர்.

கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு உலகத்தையும் அம்பானி குடும்பம் விட்டு வைக்கவில்லை. அம்பானியின் மனைவி நீத்தா சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் உறுப்பினராக இருக்கிறார். மும்பை ஐ.பி.எல் அணியையும் அம்பானி குடும்பம் சொந்தமாக வைத்திருக்கிறது. இங்கிலாந்தின் பிரபலமான லிவர்பூர் கால்பந்து அணியைக் கூட வாங்குவதற்கு முயன்று வருகிறார் அம்பானி.

மொத்தத்தில் நம் நாட்டை ராட்சச மலைப்பாம்பு போல் சுற்றி வளைத்து நெருக்கிக் கொண்டிருக்கும் இந்தக் குடும்பம்.
இதெல்லாம் எப்படி சாத்தியமானது?

 • கடுமையான உழைப்பு என்பார்கள் முதலாளித்துவ ஆய்வாளர்கள். என்னுடைய பக்கத்து வீட்டு வெல்டரை விடவா அம்பானி கடுமையாக உழைத்திருக்கிறார்?
 • அறிவாளி என்று புகழ்பாடுவோரும் உண்டு. ஐ.டி.ஐ துவங்கி ஐ.ஐ.டி வரை அசாத்திய தொழில்நுட்பத் திறன் கொண்ட பல்லாயிரம் பேர் இருக்கிறார்களே அவர்களை விடவா அம்பானி அறிவாளி?

அம்பானி உழைப்பால் உயர்ந்தவனும் அல்ல; அறிவால் வளர்ந்தவுன் அல்ல. மோசடி-பித்தலாட்டம் செய்து சமூகத்தின் சொத்துக்களை திருடிக் கொண்டவன்.

 • அந்நிய செலாவணி மோசடி, வரி ஏய்ப்பு, கணக்கு வழக்கில்லாமல் வாரி இறைக்கப்பட்ட வங்கிக் கடன்கள், இவையெல்லாம் அம்பானிக்கு படிக்கல்லாக இருந்தன.
 • போதாக்குறைக்கு முந்தைய காங்கிரசு அரசும், தற்போதைய மோடி அரசும், வாரி வழங்கிய மானியங்கள், வரிச் சலுகைகள், ஸ்பெக்ட்ரம் என்கிற அலைக்கற்றை, கனிமவளங்கள், எண்ணெய் வயல்கள் உள்ளிட்ட இயற்கை வளங்கள் ஆகியவை அம்பானியை ஒரு பேரரசனாக வலம் வர வைத்துள்ளது.

இந்த பேரரசு சமூகத்தின் சொத்துக்களைத் திருடி உருவாக்கப்பட்டதுதான். மக்களுக்குச் சொந்தமான சொத்துக்கள் மக்களுக்கு சேர்வதுதான் நீதி. அம்பானியின் சொத்துக்களை பறித்தெடுத்து, சமூக உடைமையாக்குவதுதான் சமூகநீதியை நிலைநாட்டும் வழி.

– குமார்

புதிய தொழிலாளி, டிசம்பர் 2012

 

Permanent link to this article: http://new-democrats.com/ta/reliance-ambani-family-riches-through-swindle/

Leave a Reply

Your email address will not be published.

%d bloggers like this:
Read more:
மின்னணு பணப்பை என்கிற டிஜிட்டல் கொள்ளை

சட்டைப்பையில் இருக்கின்ற பணம் கண்ணுக்கும் தெரியாமல், கையில் தொடவும் முடியாமல் மின்னணு பணப்பைக்கு போகின்றபோது என்ன நடக்கும்? மொபைல் வாலட் (செல்ஃபோன் பணப்பை) முறையை அமல்படுத்திய கென்யாவில்,...

தக்காளி : விவசாயியா, வியாபாரியா? யாருடைய உழைப்பு அதிகம்?

3 மாதம் உழைத்து தக்காளி விளைவித்தவர் சேர்த்த மதிப்பு கிலோவுக்கு ரூ 2, அதை வாங்கி கைமாத்தி விட்டவர் சேர்த்த மதிப்பு கிலோவுக்கு ரூ 40

Close