திருச்சபை எதிர்ப்பு இயக்கம் – மார்க்ஸ்

163 ஆண்டுகளுக்கு முன்பு லண்டன் ஹைட்பார்க்கில் நடந்த தொழிலாளி வர்க்க ஆர்ப்பாட்டம் பற்றிய செய்தி அறிக்கை இது. முதலாளித்துவமும், மதமும் இயல்பான கூட்டாளிகளாக இணைந்து உழைக்கும் வர்க்கத்தை ஒடுக்குகின்றன.

ஆளும் வர்க்கங்களின் மதத்தின் பெயரிலான மோசடிகள், ஜனநாயகம் என்ற பெயரில் அரங்கேற்றப்படும் நாடாளுமன்ற நாடகங்கள், உழைக்கும் மக்களை பலி கொடுக்கும் முதலாளித்துவ போர்கள், 19-ம் நூற்றாண்டிலும் முதலாளித்துவ ஊடகங்கள் உழைக்கும் வர்க்கத்துக்கு எதிராக நடந்து கொண்டது ஆகியவை பற்றிய ஒரு சித்திரம் நமக்குக் கிடைக்கிறது.

இவற்றை இன்றைய நிலைமைகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் போது, மதவாதம், போலி ஜனநாயகம், போர்கள், ஊடகங்கள் போன்றவை முதலாளித்துவத்துக்கு சேவை செய்வதில் தமது பாத்திரத்தை மேலும் உயர்ந்த வடிவத்தில் தொடர்கின்றன என்று தெரிந்து கொள்ளலாம்.

திருச்சபை எதிர்ப்பு இயக்கம் – ஹைட்பார்க்கில் ஆர்ப்பாட்டம் – காரல் மார்க்ஸ் எழுதியது : ஜூன் 25, 1855, லண்டன்

ழக்கொழிந்துபோன சமுதாய சக்திகள், அதிகாரத்துக்குரிய எல்லா பெயரளவிலான அடையாளங்களையும் தம்வசம் வைத்திருப்பதும், அவற்றின் வாழ்நிலையின் அடிப்படையே உளுத்துக் கலகலத்துப் போய் வெகுகாலத்துக்குப் பின்னரும் இடத்தை விடாமல் பிடித்துக் கொண்டிருப்பதும், மிகவும் பழையதான, வரலாற்று பூர்வமாக நிரூபிக்கப்பட்ட உண்மைதான். மரண அறிவிப்பு அச்சிட்டு, உரிமை சாசனம் வாசித்து முடிக்குமுன்பே, சொத்துரிமைக்காகத் தமக்குள்ளே சண்டை பிடித்துக்கொள்ளும் வாரிசுகளைப் போன்று, இந்தச் சக்திகளெல்லாம் தமது மரணவேதனைக்கு முன்பு மீண்டும் ஒருமுறை பலத்தையெல்லாம் ஒன்றுதிரட்டி, தற்காப்பு நிலையிலிருந்து எதிர்த்தாக்குதல் நிலைக்கு மாறுவதும், வழி விட்டு ஒதுங்குவதற்கு பதிலாகச் சவால்விட்டுப் பார்ப்பதும், ஏற்கனவே கேள்விக்குள்ளாக்கப்பட்டதோடு மட்டுமல்லாமல், நிராகரித்து ஒதுக்கப்பட்டு விட்ட நிலைப்பாடுகளிலிருந்து மிகவும் தீவிரமான முடிவுகளுக்கு வர முனைவதும் உண்மைதான்.

இன்றைய ஆங்கிலேய ஆளும்கும்பலின் நிலை இதுதான். அதனுடன் ஒட்டிப் பிறந்த [ஆங்கில] திருச்சபையின் நிலையும் இதுதான்.

capitalism-religion-bedfellows

வழக்கொழிந்துபோன சமுதாய சக்திகள், அதிகாரத்துக்குரிய எல்லா பெயரளவிலான அடையாளங்களையும் தம்வசம் வைத்திருப்பதும், அவற்றின் வாழ்நிலையின் அடிப்படையே உளுத்துக் கலகலத்துப் போய் வெகுகாலத்துக்குப் பின்னரும் இடத்தை விடாமல் பிடித்துக் கொண்டிருப்பதும், மிகவும் பழையதான, வரலாற்று பூர்வமாக நிரூபிக்கப்பட்ட உண்மைதான்.

அதிகாரபூர்வ திருச்சபையினுள்ளே, பாரம்பரிய சபையிலும் சரி, சுவிசேஷ சபையிலும் சரி, புனரமைப்புக்கான எண்ணற்ற முயற்சிகளும், பிரிந்து சென்றவர்களோடு உடன்பாட்டுக்கு வருவதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்படுகின்றன; இவற்றின் மூலம், தேசத்தின் சமய மறுப்பு மக்கள் கூட்டத்தை எதிர்ப்பதற்கான ஒரு ஒன்றுபட்ட சக்தியை உருவாக்க முயற்சி செய்யப்படுகிறது. மதத்தின் பெயரால் மக்கள் மீதான கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் அடுத்தடுத்து வேகமாக வந்து கொண்டேயிருக்கின்றன. பக்திமான் ஷாப்ட்ஸ்பரி கோமான் (முன்னர் ஆஷ்லி பிரபு என்றழைக்கப்பட்டவர்) இங்கிலாந்தில் மட்டும் ஐம்பது லட்சம் பேர் திருச்சபையிலிருந்து மட்டுமல்லாமல் கிறிஸ்தவத்திலிருந்தே முழுமையாக துண்டித்துக் கொண்டு விட்டார்கள் என்ற உண்மையைப் பிரபுக்களின் சபையில் சொல்லியழுதார். “கட்டாய மதமாக்கம்” என்று அதற்கு பதிலளிக்கிறது அதிகாரபூர்வ திருச்சபை. தனது நெருக்கடியை தீர்க்கும் பணியை ஆஷ்லி பிரபு மற்றும் அவரையொத்த பிரிந்து சென்ற, குறுங்குழுவாத, வெறிபிடித்த பக்திமான்களிடம் அது விட்டிருக்கிறது.

மதக்கட்டுப்பாட்டின் முதல் நடவடிக்கையான பீர் மசோதாவின்படி ஞாயிற்றுக் கிழமையன்று மாலை 6 மணி முதல் 10 மணி வரை தவிர, மற்ற நேரங்களில் பொதுமக்களுக்கான அனைத்து கேளிக்கை விடுதிகளும் இழுத்து மூடப்பட்டிருக்க வேண்டும். இந்த மசோதாவானது மிகக் குறைந்தபேர் மட்டுமே பங்கேற்ற நாடாளுமன்ற அமர்வின் கடைசி தருணங்களில் திருட்டுத்தனமாக நிறைவேற்றப்பட்டது. உரிமம் வழங்கும் முறை தொடர்ந்து நீடிக்கும், அதாவது, பெருமூலதனம் தனது ஏகபோகத்தை தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ளும் என்று உறுதி அளித்து லண்டனிலுள்ள பெரிய மதுக்கடை உரிமையாளர்களின் ஆதரவை முன்பே வாங்கியிருந்தார்கள், பக்திமான்கள்.

பின்னர் கொண்டு வரப்பட்ட ஞாயிற்றுக்கிழமை வியாபார மசோதா மக்களவையில் மூன்றாவது இறுதி விவாதத்துக்கு பிறகு நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இரண்டு அவைகளையும் சேர்ந்த குழுக்கள் அதன் தனித்தனி விதிகளை விவாதித்து முடித்திருக்கின்றன. இந்தப் புதிய கட்டாயப்படுத்தும் நடவடிக்கையும் பெருமூலதனத்தின் ஆதரவை பெறுவது உறுதி. ஏனெனில், ஞாயிற்றுக்கிழமைகளில் சிறு கடைக்காரர்கள்தான் கடைகளைத் திறந்து வைக்கிறார்கள்; பெரிய கடைகளின் உரிமையாளர்கள் இந்தச் சின்னமீன்களின் ஞாயிற்றுக்கிழமை போட்டியை நாடாளுமன்ற நடவடிக்கைகள் மூலம் ஒழித்துக் கட்ட தயாராகவே இருக்கிறார்கள்.

இந்த இரண்டு விஷயங்களிலும், ஏகபோக மூலதனத்தோடு திருச்சபையின் கூட்டுச்சதி இருந்தாலும், இரண்டு விஷயங்களிலுமே மேட்டுக்குடியினரின் மனசாட்சியை அமைதிப்படுத்த அடித்தட்டு வர்க்கங்கள் மீது சமய குற்றச் சட்டங்கள் பிரயோகிக்கப்படுகின்றன.

பீர் மசோதா பிரபுக்களின் கிளப்புகளை எவ்வாறு பாதிக்கப் போவதில்லையோ, அதே போல ஞாயிறு வியாபார மசோதா கனவான்கள் சமுதாயத்தின் ஞாயிற்றுக்கிழமை செயல்பாடுகளை பாதிக்கப் போவதில்லையோ. தொழிலாளர்கள் தமது கூலியைச் சனிக்கிழமை பின்மாலையில்தான் பெறுகிறார்கள். அவர்களுக்காக மட்டும்தான் ஞாயிற்றுக்கிழமைகளில் கடைகள் திறந்து வைக்கப்படுகின்றன. அவர்கள் வாங்குகின்ற சாமான்கள் கொஞ்சமாக இருந்தாலும், ஞாயிற்றுக்கிழமைகளில் வாங்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் உள்ளவர்கள் அவர்கள் மட்டும்தான். எனவே புதிய மசோதா அவர்களை குறி வைத்துதான் இயற்றப்பட்டிருக்கிறது.

பதினெட்டாம் நூற்றாண்டில், ஆளும் பிரஞ்சுப் பிரபுத்துவ வர்க்கம் “வால்டேர் எங்களுக்கு; மதப்பிரசங்கமும், பத்தில் ஒரு பங்கு வரியும் மக்களுக்கு” என்று கூறியது; பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஆங்கிலேயப் பிரபுத்துவ வர்க்கம் “எங்களுக்கு பக்திமயமான உச்சரிப்புகள்; மக்களுக்கு கிறிஸ்தவ நடைமுறை” என்கிறது. கிறிஸ்தவத்தின் பாரம்பரிய புனிதர் மக்கள் பெரும்திரளின் ஆன்ம விமோச்சனத்துக்காக தனது உடலை வருத்திக் கொண்டார்; நவீன, படித்த புனிதரோ தனது சொந்த ஆன்ம விமோச்சனத்துக்காக மக்கள் பெரும்திரளின் உடல்களை வருத்துகிறார்.

தமக்குக் கிடைக்கவிருக்கும் கொள்ளை லாபத்தை கணக்கு போட்டு சாராய பெருமுதலாளிகளும், ஏகபோக மொத்த விற்பனையாளர்களும் ஆதரிக்கும் ஒழுக்கமற்ற, சீரழிந்து கொண்டிருக்கும், இன்ப வேட்டையாடும் பிரபுத்துவ வர்க்கம் திருச்சபையுடன் ஏற்படுத்திக் கொண்ட இந்த உடன்பாடுதான் நேற்று ஹைட்பார்க்கில் நடந்த ஒரு மக்கள்திரள் ஆர்ப்பாட்டத்துக்கான முகாந்திரமாக இருந்தது. “ஐரோப்பாவின் முதற் கனவா”னான நான்காவது ஜார்ஜ் மன்னனின் மரணத்துக்குப்* பின்னர் இதுவரையில் லண்டன் மாநகரம் இவ்வளவு பெரிய ஆர்ப்பாட்டத்தை கண்டதேயில்லை.

இந்த ஆர்ப்பாட்டத்தை ஆரம்பம் முதல் இறுதி வரை பார்த்துக் கொண்டிருந்த நாங்கள் “ஆங்கிலேயப் புரட்சி” நேற்று ஹைட்பார்க்கில் தொடங்கிவிட்டது என்று சொன்னால், அது மிகையாகாது. கிரீமியாவிலிருந்து வந்த சமீபத்திய செய்தியும் இந்த “நாடாளுமன்றமில்லாத”, “நாடாளுமன்றத்திற்கு அப்பாற்பட்ட”, “நாடாளுமன்ற எதிர்ப்பு” ஆர்ப்பாட்டத்துக்கு சரியான தூண்டுதலாக இருந்தது.

ஞாயிற்றுக்கிழமை வியாபார மசோதா முழுக்க முழுக்க ஏழை மக்களுக்கு எதிராகவே தயாரிக்கப்பட்டிருக்கிறது, பணக்கார வர்க்கங்களை பாதிக்கவில்லை என்று விமர்சிக்கப்பட்ட போது, அம்மசோதாவின் தந்தையான ராபர்ட் குரோஸ்வெனர் பிரபு “பிரபுத்துவ வர்க்கம் ஞாயிற்றுக்கிழமைகளில் குதிரைகளையும் பணியாளர்களையும் வேலை வாங்குவதை பெரும்பாலும் தவிர்த்தே வந்திருப்ப”தாக பதிலடி கொடுத்திருந்தார்.

சென்ற வாரத்தின் கடைசி சில நாட்களில் சார்ட்டிஸ்டுகளால் வெளியிடப்பட்டு லண்டன் நகரத்துச் சுவர்களிலெல்லாம் ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டி கொட்டை எழுத்துக்களில் பின்வருமாறு அறிவித்தது;:

“புதிய ஞாயிற்றுக்கிழமை மசோதா பத்திரிகை வாசித்தல், முகம் மழித்தல், புகைபிடித்தல், சாப்பிடுதல், குடித்தல் மற்றும் ஏழை மக்கள் இப்போது வரை அனுபவித்து மகிழும் உடல் மற்றும் உள்ளம் சம்பந்தமான அனைத்து வகையான பொழுதுபோக்கு மற்றும் புத்துணர்ச்சியூட்டும் நடவடிக்கைகளை தடை செய்கிறது. இந்நிலையில், பிரபுத்துவ வர்க்கம் வாராந்திர புனித ஓய்வு நாளை எவ்வளவு மத ஆச்சாரத்தோடு கடைப்பிடிக்கிறது என்பதையும், ராபர்ட் குரோஸ்வெனர் பிரபு குறிப்பிட்டவாறு, அந்த நாளில் குதிரைகளையும் பணியாளர்களையும், வேலை வாங்காமல் இருக்க எவ்வளவு கவனத்துடனிருக்கிறது என்பதையும் பார்க்க, கைத்தொழில் வினைஞர்கள், தொழிலாளர்கள் மற்றும் தலைநகரின் பொதுவான ‘கீழ் வரிசை’ மக்கள் அடங்கிய ஒரு திறந்தவெளிக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் ஹைட்பார்க்கில் நடைபெறும். இந்தக் கூட்டம் கென்சிங்டன் தோட்டத்தின் திசையில் செர்பென்டைனின் (ஹைட்பார்க்கிலுள்ள ஒரு சிறு நதி) வலது கரையில் மதியம் மூன்று மணிக்கு நடக்கவிருக்கிறது. ‘மேலோர்கள்’ அமைத்துத் தரும் முன்உதாரணத்தை உங்கள் குடும்பம் கற்று பயனடையும் வகையில், உங்கள் மனைவி மக்களையும் அழைத்து வந்து கூட்டத்தில் கலந்து கொள்ளுங்கள்”

religion-capitalism

“These oligarchs and capitalists allied with sanctimonious parsons wish to do penance by mortifying us instead of themselves”

பாரீஸ் மேன்மக்களுக்கு முக்கியமான இடமாக லாங்சாம்ப்ஸ் இருப்பதைப் போலவே, ஆங்கிலேய உயர்குடியினருக்கு ஹைட்பார்க்கிலுள்ள செர்பென்டைனையொட்டிய பாதை உள்ளது என்பதை கவனத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். அங்குதான், பிற்பகல்களில், குறிப்பாக ஞாயிற்றுக்கிழமை பிற்பகல்களில் மேட்டுக்குடியினர் தமது மகோன்னதமான குதிரை வண்டிகளை சர்வாலங்கார கோலத்தோடு பெரும் எண்ணிக்கையிலான பணியாட்கள் பின் தொடர அணிவகுத்துச் செல்வார்கள்.

மேற்கூறிய சுவரொட்டியிலிருந்து, இங்கிலாந்தில் நடந்த வேறுபல தீவிரமான போராட்டங்களைப் போலவே, மத ஆதிக்கத்துக்கெதிராக நடக்கும் போராட்டமும் பணக்காரர்களுக்கெதிராக ஏழைகளும், பிரபுத்துவத்துக்கெதிராக மக்களும், ‘மேலவர்’களுக் கெதிராக, ‘தாழ்ந்த வகுப்’பினரும் நடத்தும் ஒரு வர்க்கப் போராட்டத்தின் வடிவத்தை பெறுவதைத் தெரிந்து கொள்ளலாம்.

மூன்று மணி சுமாருக்கு ஹைட்பார்க்கின் விரிந்து பரந்த புல்வெளிகளில், செர்பென்டைனுக்கு வலது கரையில், அறிவிக்கப்பட்டிருந்த இடத்தில் 50,000 மக்கள் கூடிவிட்டார்கள். கூட்டம் மெல்லமெல்ல விம்மிப் பெருகி, மறுகரையிலிருந்து வந்தவர்களையும் சேர்த்து, கிட்டத்தட்ட 200,000 வரைக்கும் எட்டிவிட்டது. அலைமோதிக் கொண்டிருந்த மக்கள் கூட்டம் இங்குமங்கும் தள்ளப்பட்டுக் கொண்டிருந்ததை பார்க்க முடிந்தது. அங்கு குவிந்திருந்த ஆயுதம் தாங்கிய போலீஸ்காரர்கள் பூமியை நகர்த்துவதற்கு எதுவேண்டும் என்று ஆர்க்கிமிடிஸ் கேட்டாரோ அதனை, அதாவது நிற்பதற்கான ஒரு இடத்தை, அந்தக் கூட்டத்தை ஏற்பாடு செய்தவர்களுக்கு வழங்க மறுப்பதற்குப் பெரும்பாடு பட்டார்கள் என்று தெளிவாகத் தெரிந்தது.

இறுதியாக ஒரு மிகப்பெரிய மக்கள் திரள் உறுதியாக நிலை கொண்டு விட, அந்த பெரும் கூட்டத்தின் மத்தியில் ஒரு சிறு மேட்டின் மீது ஏறிய சார்ட்டிஸ்ட் இயக்கத்தைச் சேர்ந்த பிளை தன்னை தலைவராக அறிவித்துக் கொண்டார். அவர் தனது ஆவேசமான உரையை தொடங்கிய உடனே குண்டாந்தடிகளை சுழற்றிக் கொண்டிருந்த நாற்பது போலீஸ்காரர்களை தலைமையேற்று நடத்தி வந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் பேங்க்ஸ், பூங்கா முடியரசின் தனிச்சொத்து என்றும் எனவே அங்கு எந்த விதமான கூட்டமும் நடத்தக் கூடாதென்றும் விளக்கினார்.

தொடர்ந்து நடந்த வாக்குவாதத்தில் பூங்காக்கள் பொதுச் சொத்து என்று பிளை அவருக்கு விளக்க முனைந்த போது, பிளை தமது நோக்கத்தை நிறைவேற்றிக்கொள்ள முயன்றால், அவரை கைது செய்யுமாறு தனக்குக் கண்டிப்பான உத்தரவு இருப்பதாக பாங்க்ஸ் கூறினார். உடனே தம்மைச் சுற்றி நின்ற மக்கள் கூட்டத்தின் ஆரவாரத்துக்கு மத்தியில், பிளை பின் வருமாறு முழங்கினார் :

“ஹைட்பார்க் முடியரசின் தனிச்சொத்தென்றும், மக்கள் தமது கூட்டங்களை நடத்திக்கொள்ள மகாராணியார் தனது இடத்தை அளிக்க விரும்பவில்லையென்றும் மாட்சிமை தங்கிய மகாராணியின் போலீஸ் கூறுகிறது. எனவே நாம் ஆக்ஸ்போர்டு மார்க்கெட் பக்கமாக சென்றுவிடுவோம்.”

“கடவுள் மகாராணியைக் காத்தருள்க” என்ற கேலிக் கூச்சலோடு, மக்கள் கூட்டம் கலைந்து ஆக்ஸ்போர்ட் மார்க்கெட்டை நோக்கிச் செல்ல முனைந்தது. ஆனால் அதற்கிடையில், சார்ட்டிஸ்ட் நிர்வாகக் குழு உறுப்பினர் ஃபின்லென் ஒரு கூட்டம் பின்தொடர சற்றுத் தொலைவிலிருந்த ஒரு மரத்தை நோக்கி விரைந்தார்; கண்ணிமைக்கும் நேரத்தில் மக்கள் கூட்டம் நெருக்கமாகவும் இறுக்கமாகவும் அவரை வட்டமாக சூழ்ந்து கொண்டதால் அவரை பிடிக்க முயன்ற முயற்சியை போலீசார் கைவிட நேர்ந்தது.

“வாரத்தில் ஆறு நாட்கள் நாம் அடிமைகளைப் போல் நடத்தப்படுகிறோம். இப்போதோ ஏழாவது நாளில் நமக்கிருந்துவரும் கொஞ்ச நஞ்ச சுதந்திரத்தையும் தட்டிப்பறிக்க விரும்புகிறது, நாடாளுமன்றம். இந்த ஆளும் கும்பலும், முதலாளிகளும் புனித வேடதாரிகளான பாதிரிமாரோடு சேர்ந்து கொண்டு, கிரீமியாவில் உழைக்கும் மக்களின் புதல்வர்களை மனசாட்சிக்கு விரோதமாக பலிகொடுக்கின்ற மன்னிக்க முடியாத குற்றத்துக்காக தம்மை வருத்திக் கொள்ளாமல், நம்மை வருத்த நினைக்கிறார்கள்.” என்றார் அவர்.”

நாங்கள் இந்தக் கூட்டத்தை விட்டு விலகி இன்னொரு கூட்டத்தின் அருகே சென்றோம்; அங்கு தரைமீது நீட்டிக் கிடந்த ஒரு பேச்சாளர், அந்த கிடைமட்ட நிலையிலேயே மக்களை நோக்கி உரையாற்றிக் கொண்டிருந்தார்.

திடீரென்று “நாம் சாலைக்குப் போவோம். குதிரை வண்டிகள் போகும் பாதைக்கு செல்வோம்” என்று எல்லா திசைகளிலிருந்தும் கூச்சல்கள் எழுந்தன. குதிரைச் சவாரி செய்பவர்கள் மீதும் குதிரை வண்டிகளில் வந்தவர்கள் மீதும் ஏற்கனவே சரமாரியான வசைமாரிகள் பொழிய ஆரம்பித்திருந்தன. மாநகரிலிருந்து மேலும் மேலும் கூடுதல் படைகள் சேர்ந்து கொண்டிருக்க போலீஸ்காரர்கள் பாதசாரிகளை குதிரை வண்டி பாதைக்கு அப்பால் விரட்டியடித்துக் கொண்டிருந்தார்கள்; அதன் மூலம் செர்பென்டைன் கரையையொட்டி ஆப்ஸ்லே ஹவுஸிலிருந்து ராட்டன்-ரோ வழியாக கென்சிங்டன் கார்டன்ஸ் வரையிலும் சாலையின் இருமருங்கிலும் கால்மணி பயணத்துக்கும் அதிகமான தூரத்துக்கு, மக்கள் கூட்டம் நீண்டு நிற்க உதவி செய்தனர் போலீசார்.

பார்வையாளர்களில் மூன்றில் இரண்டு பங்கினர் தொழிலாளர்கள்; மூன்றில் ஒரு பங்கினர் நடுத்தர வர்க்கத்தினர். அனைவரும் மனைவி மக்களுடன் வந்திருந்தனர். மிடுக்கான சீமாட்டிகள் சீமான்களின் ஊர்வலம்; “பொதுமக்களும், பிரபுக்களும்” தமது உயரமான நான்கு குதிரைகள் பூட்டிய சாரட்டு வண்டிகளில், முன்னும் பின்னும் டவாலி உடைகள் தரித்த பணியாட்களுடன், குதிரை மீது சவாரி செய்த பெரிய மனிதர்கள் சிலர் ஒயின் போதையில் சிறிதளவு தள்ளாடியவாறு தொடர்ந்துவர ஊர்வலமாக சென்றார்கள். ஆனால் இந்த முறை அவர்கள் சுற்றுப்புறத்தை கண்டுகளிப்பவர்களாக வரவில்லை; மாறாக, அவர்கள் விரும்பாமலேயே இருபக்கத்திலிருந்தும் அடிவாங்கும் பாத்திரங்களாக சென்றார்கள்.

ஆங்கிலத்தைக் காட்டிலும் வேறு எந்த மொழியிலும் அவ்வளவு சிறப்பாகச் செய்ய முடியாத எகத்தாளமும், குத்தலும், ஒன்றுக்கொன்று சம்பந்தமற்ற வியப்பொலிகளும் சீக்கிரமே இரண்டு பக்கத்திலுமிருந்து அவர்கள் மீது ஆரவாரமாய்ப் பொழியத் தொடங்கின. அது தன்னெழுச்சியான கச்சேரியாக இருந்ததால், பின்னணி வாத்தியங்கள் எதுவும் இல்லை. அந்தக் கூட்டுகானம் தனது சொந்த உறுப்புகளை மட்டுமே பயன்படுத்த வேண்டியிருந்தது. மனிதக் குரலிசையை மட்டுமே சார்ந்திருக்க வேண்டியிருந்தது. எப்படிப்பட்ட சைத்தானின் இசையாக இருந்தது அது! கனைப்புகள், உஸ்ஸொலி, சீட்டியொலி, கீச்சுக்குரல், சச்சரவொலி, உறுமல், தவளைக் கத்தல், அலறல், முனகல், கடகடத்தல், ஊளையிடல், பற்களைக் கடித்தல் ஆகிய பல்வேறு ஓசை கலவையோடு கூடிய அபஸ்வரக் களஞ்சியம் அது. கல்லையும் கரைத்து விடும், கேட்பவரை பைத்தியமாக்கி விடும் இசை அது.

Karl Marx

“கிறிஸ்தவத்தின் பாரம்பரிய புனிதர் மக்கள் பெரும்திரளின் ஆன்ம விமோச்சனத்துக்காக தனது உடலை வருத்திக் கொண்டார்; நவீன, படித்த புனிதரோ தனது சொந்த ஆன்ம விமோச்சனத்துக்காக மக்கள் பெரும்திரளின் உடல்களை வருத்துகிறார்.” – Karl Marx

இத்தோடு, உண்மையான பழங்கால ஆங்கில நகைச்சுவை உணர்வும், பல நாட்களாக அடக்கி வைக்கப்பட்டிருந்த கொதிக்கும் கோபமும் சேர்ந்தன. “தேவாலயத்துக்கு போங்கள்” என்ற சொற்கள் மட்டும்தான் புரிந்து கொள்ளும்படியதாக ஒலித்தன.

கூட்டத்தை அமைதிப்படுத்தும் விதமாக ஆச்சாரமாக பைண்டு செய்யப்பட்ட ஒரு பிரார்த்தனைப் புத்தகத்தை ஒரு சீமாட்டி தன்னுடைய குதிரை வண்டிக்கு வெளியில் நீட்டினாள். “அதை உங்கள் குதிரைகளிடம் வாசிக்கக் கொடுங்கள்” என்று ஆயிரக்கணக்கான குரல்களை எதிரொலித்த பதில் இடி முழக்கம் போல் கேட்டது.
குதிரைகள் முரண்டு பிடிக்கவும், பின் வாங்கவும், பம்மவும் ஆரம்பித்து, இறுதியிலே தாம் சுமந்து சென்ற கண்ணியமான சுமைகளின் உயிர்களை அபாயத்துக்குள்ளாக்கும்படி தலைதெறிக்க ஓடத்தொடங்கியதும் வெறுப்பை உமிழும் அந்த ஆரவாரம் மேலும் அச்சுறுத்துவதாகவும், மேலும் இரக்கமற்றதாகவும் அதிகரித்தது.

ஒரு மந்திரியின் மனைவியான சீமாட்டி கிரான்வில்லி, பிரிவி கவுன்சிலின் தலைவர் உட்பட மாட்சிமை பொருந்திய பிரபுக்களும், சீமாட்டிகளும் தத்தமது குதிரை வண்டிகளிலிருந்து இறங்கி கால்நடையாகச் செல்ல வேண்டியதாயிற்று. அகன்ற விளிம்புடனான தொப்பியும் முற்று முழுதான மதவிசுவாசத்தில் தனது தனி உரிமையை காட்டிக்கொள்வது போன்ற உடைகளும் தரித்திருந்த வயது முதிர்ந்த கனவான்கள் கடந்து சென்ற பொழுது, ஒரு கட்டளைக்குக் கீழ்ப்படிந்தது போல் கோபாவேசமான பேரொலி அடங்கி, அடக்கமுடியாத சிரிப்பொலி ஆரம்பித்தது

அந்தக் கனவான்களில் ஒருவர் பொறுமை இழந்துவிட்டார். மெபிஸ்டோபில்ஸைப் போல் கௌரவமற்ற முறையில் தமது எதிரிகளை நோக்கி நாக்கைத் துருத்தினார். “அவர் ஒரு காற்றடைத்த பை, ஒரு நாடாளுமன்ற ஆசாமி, தனது சொந்த ஆயுதங்களைக் கொண்டே போராடுகிறார்” என்று சாலையோரத்திலிருந்து ஒரு குரல் கேட்டது. “அவர் தேவாலயத்தில் கீதம் பாடும் புனிதர்” என்று மறுபக்கத்திலிருந்து எதிர்ப்பாட்டு வந்தது.

இதற்கிடையில் ஹைட்பார்க்கில் ஒரு கலகம் வெடிக்கவிருப்பதாகவும், எனவே போலீஸாரெல்லாம் ராணுவ நடவடிக்கைகளுக்கான அரங்குக்கு வந்துசேர வேண்டுமெனவும் மாநகர தந்தி நிலையம் எல்லா போலீஸ் நிலையங்களுக்கும் தகவல் அனுப்பியது. சீக்கிரமே ஒன்றன்பின் ஒன்றாகப் படைப் பிரிவுகள் ஆப்ஸ்லே ஹவுஸிலிருந்து கென்சிங்டன் கார்டன்ஸ் வரையிலும் இருபுறத்திலும் நின்ற மக்கள் கூட்டத்தின் மத்தியிலே, ஒவ்வொன்றாக அணி வகுத்துச் சென்றன. ஒவ்வொரு படைப்பிரிவின் அணிவகுப்பும்

வாத்துக்கள் எங்கே?
போலீஸைக் கேள்!

கிளெர்க்கென்வெல்லில் ஒரு போலீஸ்காரன் சமீபத்திலே வாத்துக்களை திருடியது பற்றிய இழிபுகழ் செய்தியைப் பற்றிய குறிப்பே இது.

இந்தக் காட்சி மூன்று மணி நேரம் நீடித்தது. ஆங்கிலேய சுவாசப்பைகள்தான் இத்தகைய சாதனையை செய்துகாட்ட முடியும். அந்த நிகழ்ச்சியின் போது, “இது ஆரம்பம்தான்” “இது முதல் அடிதான்”, “நாங்கள் அவர்களை வெறுக்கிறோம்” என்பன போன்ற கருத்துக்கள் பல்வேறு குழுக்களிடமிருந்து கேட்டன. தொழிலாளர்களின் முகங்களில் கோபாவேசம் குடிகொண்டிருந்த அதே நேரம், நடுத்தர வர்க்கத்தினரின் முகபாவங்களில், அதற்கு முன்னர் என்றுமே கண்டிராத ஆனந்தமான ஆத்மதிருப்தி மிகுந்த புன்னகைகள் நிறைந்திருந்தன. முடிவதற்குச் சற்று முன்பு ஆர்ப்பாட்டத்தின் வன்முறை அதிகரித்தது. தடிகள் வண்டிகளை நோக்கி அச்சுறுத்தும் வகையில் உயர்த்தப்பட்டன. தெளிவற்று ஒலித்த எதிர்ப்பு குரல்களுக்கிடையே “அட, அயோக்கியர்களே” என்ற கூச்சலும் கேட்டது.
இந்த மூன்று மணி நேரமும் ஆர்வம் நிரம்பிய சார்ட்டிஸ்ட் கட்சி ஆண்களும் பெண்களும் கூட்டத்தாரிடையே புகுந்து சென்று வினியோகித்த துண்டுப் பிரசுரங்களில் பெரிய எழுத்துக்களில் பின்வருமாறு அச்சிடப்பட்டிருந்தது:

“சார்ட்டிஸத்தின் புனர்நிர்மாணம்”

“தலைநகரில் சார்ட்டிஸத்தைப் புனர்நிர்மாணம் செய்வதற்கான மாநாட்டுக்கு, பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுப்பற்காக அடுத்த வாரம் ஜூன் 26-ம் தேதி செவ்வாய்க்கிழமையன்று, டாக்டர்ஸ் காமன்ஸ், ஃபிரையர் தெருவிலுள்ள இலக்கிய, அறிவியல் கழகக் கட்டிடத்தில் ஒரு மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெறும். அனுமதி இலவசம்.”

இன்று வெளிவந்துள்ள பெரும்பான்மையான லண்டன் பத்திரிகைகள் ஹைட்பார்க் சம்பவங்களைப் பற்றி மிகவும் சுருக்கமாகவே செய்திகள் வெளியிட்டுள்ளன.
பால்மர்ஸ்டன் பிரபுவின் ‘மார்னிங் போஸ்ட்டை’த் தவிர வேறு எதிலும் இது குறித்து தலையங்கக் கட்டுரை வெளியாகவில்லை. அந்தப் பத்திரிகை “ஹைட் பார்க்கில் அவமானகரமானதும், மிக மிக ஆபத்தானதுமான, சட்டத்தையும் கண்ணியத்தையும் பகிரங்கமாக மறுக்கும், சட்டசபையின் சுதந்திரமான செயலில் வன்முறை மூலம் சட்ட விரோதமாகத் தலையிடுவதான ஒரு காட்சி நிறைவேறியுள்ளது” என்று இந்நிகழ்வைப் பற்றி கூறியது. “ஏற்கனவே அச்சுறுத்தப்பட்டிருப்பது போல அடுத்த ஞாயிறன்றும் இது போன்ற சம்பவம் மீண்டும் நடக்கவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்” என்றும் வலியுறுத்துகிறது அந்தப் பத்திரிகை.

அதே நேரம் இந்த சிக்கலுக்கு “வெறி பிடித்த” குரோஸ்வெனர் பிரபுவே முழு “பொறுப்பாளி” என்றும், அவரே “ஜனங்களின் நியாயமான கோபாவேசத்தை” தூண்டுவதற்கு காரணமாக இருந்தார் என்றும் அறிவிக்கிறது அந்த பத்திரிகை. குரோஸ்வெனர் பிரபுவின் மசோதாவை மூன்று விவாதங்களுக்குப் பிறகு நாடாளுமன்றம் நிறைவேற்றவில்லையா என்ன? அல்லது அவரும் “சட்டசபையின் சுதந்திரமான செயலில் வன்முறை மூலம் தலையிடும்” வகையில் தனது செல்வாக்கை பயன்படுத்தினாரோ என்னவோ!

திருச்சபை எதிர்ப்பு இயக்கம் – ஹைட்பார்க்கில் ஆர்ப்பாட்டம் – காரல் மார்க்ஸ் எழுதியது : ஜூன் 25, 1855, லண்டன்

ஆங்கில மூலம் Anti-Church Movement – Demonstration in Hyde Park by Karl Marx– Written: June 25, 1855, London Published: Neue Oder-Zeitung June 28 1855

Permanent link to this article: http://new-democrats.com/ta/religion-capitalism-and-working-class-not-much-changed-in-150-years-ta/

Leave a Reply

Your email address will not be published.

%d bloggers like this:
Read more:
லே ஆஃப், சரியா தவறா? – ஒரு கேள்வி, பல பதில்கள்

ஒரு கேள்வி, பல பதில்கள் - ஐ.டி நிறுவனங்களில் ஏன் ஆட்குறைப்பு நடக்கிறது? அதை பல்வேறு தரப்பினர் எவ்வாறு பார்க்கின்றனர்?

எளிய சோசலிச உண்மைகள் (1903) – பால் லஃபார்கே

உங்கள் உழைப்பில் உண்டான பணத்திலிருந்துதான், முதலாளி புதிய இயந்திரங்களை வாங்குகிறான். அந்தப் பணத்திலிருந்துதான் ஆலைகளைக் கட்டுகிறான். அந்த ஆலைகளிலும் இயந்திரங்களிலும் வேலை செய்வது நீங்கள், உங்களை வேலை...

Close